சொற்கள் அற்ற தொடர் அமைப்பே தகவல்தொடர்பியல் கூறாக அமைகின்றது. இதில் தன்னுடைய கருத்துக்கள், எண்ணங்கள், மனநிலை, அறிவு, நடத்தை போன்றவற்றை மற்றவரிடம் தெரிவிக்க இச்செய்தி பரிமாற்ற புலப்பாட்டு முறைமைகளைக் கையாளுகின்றோம். மேலும் உடலலைசவுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரலொலி போன்றவற்றின் மூலம் நேரடியாகவோ, தனியாகவோ (அல்லது) கூட்டமாகவோ செய்திகள் பரிமாற்றப்படுகின்றன. இது குறியீட்டு அடிப்படையில் படமாகவோ, சொற்களாகவோ, உடலசைவாகவோ இடம்பெறும். அடுத்தவரின் மனதைப் பாதிக்கச் செய்யும் செயல்முறைகள் இங்கு மிகுதிபட அமைகின்றன. ஆதியில்மனிதன் சீழ்க்கை ஒலி எழுப்புதல், கூவியழைத்தல், புகை எழுப்புதல், பறையடித்தல், மணியடித்தல், தீயம்புகளை வானில் எறிதல் போன்றவற்றின் வாயிலாகத் தனது கருத்தை எடுத்தியம்பினான். காலமாற்றத்தால் தகவல் தொடர்பியல் வழி இணையத்தின் வழி செய்திகள் விரைவில் பரிமாற்றப்பட்டு வருகின்றது. ‘திருக்கைலாய ஞான உலாவில்’ இடம்பெறும் தலைவியின் மனநிலை செய்திப் பரிமாற்ற அடிப்படையில் ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
கொடி –கருத்துப் புலப்பாடு:
ஆரம்பக் காலத்தில் ஓவியங்கள், சைகைகள் மூலம் செய்தி ஒலிபரப்பப் பட்டன. நாளடைவில் கொடிகள், படங்கள் முதலியன கொண்டு செய்திகள் பரிமாற்றம் செய்தனர். மன்னன் தனது வெற்றிச் சின்னமாகக் கொடிகளைக் கோட்டையில் ஏற்றினான். பலவண்ண நிறங்களில் கொடிகள் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றன. காமக்கடவுகாளகிய மன்மதன் ஐந்து விதமான அம்புகளும், மலர்களும் மற்றும் கொடிப்படைகளும் கொண்டு இருப்பது வழக்கமாகும். அதாவது தனது முதுகில் இடப்புறத்தில் அம்புகளை ஏந்தி இடது கையில் கரும்புவில்லைப் பற்றி, சங்கு போன்ற முன்கைகளால் மலர்க்கணைகளை வீசிவரும் காட்சி திருக்கைலாய ஞான உலாவில் பதிவாகி உள்ளது. இதனை,
“சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த – ஐங்கணையான்
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி”(பாடல் எண். 6.1.(39-40)
என்ற பாடல் விளம்புகின்றது. இங்கு ஐங்கணையானாகிய மன்மதன் தன்னுடைய கொடிப்படையுடன் வீதிஉலா வரும் சிவபெருமானோடு இயைந்து வரும் காட்சி தெளிவாகின்றது. மலர்க்கணைகள் கொண்டு காமஉணர்வைத் தூண்டும் செயல் இயல்பாக விளம்ப உள்ளது. கொடிப்படையின் மூலம் தனது வருகையைத் தெரிவிக்கும் மொழிசாரா செய்திப்பரிமாற்றம் ஈண்டு புலனாகிறது.
கலவிப்போர் வழி செய்திகளைப் புகட்டுதல்:
உள்ளக்கிளர்ச்சியின் முதிர்ச்சியாகவே கலவி புரிதல் நிகழ்கின்றது. ஆண், பெண் இருபாலரும் ஒருதலையாகக் காதல் கொள்ளும் போது மனநிலையில் நிறைய மாற்றம் ஏற்படுகின்றது. உதாரணமாக, வீதியில் உலா வரும் இறைவன் மீது ஏழுவகைப் பருவமகளிர் காதல் கொள்கின்றனர். பருவ வயது அடையாத சூழலில் இனம்புரியாத புத்துணர்வு மனதில் ஏற்படும். இத்தகு ஒருதலைக் காதல் உணர்வால் உடல் மெலிந்து மனம் ஏங்கும்நிலைக்கு ஆட்படுகின்றது. இந்நூலில் மகளிர் தங்கள் படுக்கை அறைகளை கலவிப்போர் நிகழும் இடமாக்கி மாற்றும் செயல்முறைகள் இதோ,
“……………….ஒள்ளிய
மாட நடுவில் மலரார் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் -கேடில்
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா –நலம்திகழும்
கூழையின் தாழவளை ஆர்ப்ப…………
அங்கம் பொருது அசைந்த ஆயிழையார்.” (பாடல் எண். 10.2.(62-65)
என்பதன் வழி அறியலாம். இப்பாடல் வாயிலாக சிவபெருமான் மீது ஒருதலைக் காதல் கொண்ட பெண் கலவிச்செயலில் ஈடுபடும் பாங்கினை நாம் அறியமுடிகின்றது. இரவில் படுக்கை அறையில் மலர்களைப் பரப்பி, சிலம்பினைப் பறையாக ஒலித்து, கண்புருவத்தை வில்லம்பாக வளைத்து, கூந்தலைக் கூழைப்படையாக்கி, வளை சங்கொலியாகி, கொங்கையில் பசலை படர கலவிப்போர் நிகழ்த்தி உள்ளனர். இவ்வாறு தனக்குத்தானே நடத்தை வழி உடலசைத்து கருத்தினைத் தெரிவிக்கும் செய்திநுட்பம் இடம்பெற்றுள்ளது.
வளை கழறுதல்:
தனிமனிதனைப் பாதிக்கும் நிகழ்ச்சி பெரும்பாலும் நடத்தையில் நாம் அறிந்து கொள்ளலாம். சங்ககாலத்தில் இருந்து தலைவனைப் பிரிந்த தலைவியின் மேனிமாற்றம் ஏற்படுவது இயல்பாகும். மனப் பாதிப்பினால் உடலில் தோன்றும் குறிப்புகள் கொண்டு பெண்ணின் உணர்வினை அறியமுடியும். காதல் மோகத்தால் தலைவியின் வளை கழறல், ஆடை நெகிழ்வுறல், பசலை படரல் போன்ற அங்க அசைவுகள் ஏற்படும். திருக்கைலாய ஞான உலாவில் வீதி உலா வரும் நபரின் முகவரி அறிய பருவமகளிர் தமது கைகளை நெரித்து செய்வதறியாது திகைக்கும் காட்சி சிறந்த செய்திப் பரிமாற்றத்திற்குச் சான்றாக ஏற்கலாம்.
“………காமவேள்
ஆம்என்பார் அன்றுஎன்பார் ஐயுறுவார் கைஎறிவார்
தாம்முன்னை நாணோடு சங்குஇழப்பார்….”(பாடல் எண். 10.4.(70-71)
என்ற பாடல் வழி திருவுலா வருபவர் காமனோ என ஐயுற்று கைஎறியும் செயல் சைகை வழி செய்திமுறையினை எடுத்துரைக்கின்றது. நாணமுற்று தன்னுடைய கைவளையல்கள் கழன்று விழ ஏங்கி தவிக்கின்றனர். உடலசைவுகள் வழி பிறருக்கு கருத்தினைப் புலப்படுத்தும் ஆற்றல் ஈண்டு புலனாகிறது. இன்னும் நாணத்தினால் பெண்கள் அணிந்துள்ள அலங்காரப் பொருட்கள் யாவும் நவிலும் காட்சி இதோ,
“……..நாண்தோற்று
நின்றறிவு தோற்று நிறைதோற்று – நன்றாகக்
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட” (பாடல்எண்.11.2.3.(98-99)
என்றபாடல் விளம்புகின்றது. காதல் மயக்கத்தால் சுயநினைவு தடுமாறி ஆடை அணிகலன்கள் பறந்தோட தலைவி நிலையற்று நிற்கும் காட்சி பெதும்பைப் பருவத்தின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. ‘கைவண்டும்’ என்ற சொல்லாடல் கைவளையல் கழறும் தன்மையினை எடுத்துரைக்கின்றது.
மலர் வழி துயரைப் புலப்படுத்தல்:
நறுமணம் வீசும் மலர்மாலைகள் அழகில் இன்பம் தருபவை. முற்காலத்தில் இருபாலரும் மலர்களைச் சூடி தமது கூந்தலை அலங்கரித்துள்ளனர். போர் வெற்றியின் குறியீடாக பூக்கள் இடம்பெறும். இன்ப, துன்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் குறியீடாக மாலைகள் அமைகின்றது. குறிப்பாக, உலாவரும் தலைவன் மீது காதல் கொண்ட மகளிர் அத்தலைவனையே மணம்புரிய எண்ணி ‘பொன்னரி’ (வாடாத) மாலையைக் கழுத்தில் அணிகின்றனர். மற்றவர்கள் ‘துன்னரி’(துன்ப) மாலையை அணிந்து கொள்வர். இக்கூற்றினை,
“……பூமன்னும்
பொன்னரி மாலையைப் பூண்பார் அப்பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார்……..” (பாடல் எண். 10.4.(71-72)
என்ற பாடலடி உணர்த்தும். இதில் தலைவனை வரைந்து கொள்ளும் மகளிருக்கு மட்டும் வாடாத பூக்கள் பயன்படுத்தும் உரிமை இருந்துள்ளது. பெண்கள் அணியும் பொன்னரி பூக்கள் கொண்டு காதல்குறிப்பினை அறிந்து கொள்ள இக்காட்சி ஏதுவாக உள்ளது.
முன்பு வறுமையில் வாடி வரும் பாணன் மற்றும் பாடினிக்குப் பரிசாக மன்னன் பொன்னரி மாலையை அளித்துள்ளனர். இதனை,
“பாடினி மாலை அணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே” (புறம்.319)
“வாடா மாலை பாடினி அணிய” (புறம். 364)
என்பதன் வழி துயரத்துடன் வருபவர்களுக்கு பொன்னாலாகிய வாடாத பொற்றாமரை பரிசளிக்கும் காட்சி இன்பம் தரும் குறியீடாக அமைகின்றது. இங்ஙனம் மாலைவழியாகச் செய்திகள் புலப்படுத்துவது சிறப்பாகும்.
பந்தும் - கிளியும்:
கிளிகள் பொதுவாக மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறப்புடன் இருப்பவை. இவை மனிதனைப் போலவே ஒலிகளை எழுப்பவும் செய்கின்றது. இதுபற்றி விலங்கியலாளர் தகவல் கூறுகையில்,
“ஆப்பிரிக்கன் ‘கிரேபேரட்’ எல்லா வகை கிளிகளை விட மிகவும் புத்திசாலி கிளியாகும். அந்த ஒரு கிளி மட்டுமே பயிற்சி கொடுத்தால் 120 மொழிகளைப் பேசும் என்பர்”. விலங்கியலாளர்.(தினமலர். அக்டோபர்.22, 2019)
அறிவியல் முறைப்படி விலங்கினங்களுக்குப் பேச்சாற்றல் அளிப்பது செய்திப் பரிமாற்றத்திற்கு உறுதுணைபுரியும் எனலாம். சங்கமகளிர் தினைப்புனக்காவல் புரியும் வேளையில் கிளி, மயில் உள்ளிட்ட பறவைகளை ஓட்டுவது மரபாகும். அதோடு மட்டுமின்றி தலைவி தன் மனநிலை ஆற்றாமையை வெளிப்படுத்த கிளியோடு உரையாடுவது உண்டு. தலைவன் வரவைக் குறிக்கும் நல்நிமித்ததை அறிவிக்க கிளிகளை முன்கையில் ஏந்தி மழலை மொழி பயிற்றுவிக்கும் தன்மையினை அகப்பாடல் பதிவுசெய்துள்ளன. சான்றாக,
“செந்தார்ப் பைங்கிளி முன்னை ஏந்தி
இன்றுவரல் உரைமோ…..
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண்நலம் பெறவே” (அகம். 34)
என்ற பாடல் மெய்ப்பிக்கின்றது. இந்நூலிலும் சிவன் மீது காதல் கொண்டு மங்கை கைகளில் இருக்கும் பந்தினை கிளி எனக் கருதி தவறாக மொழி பயிற்றுவிக்கிறாள். இதனை,
“………கிளிஎன்று
பண்ணாடிச் சொல்பந்து உற்றுரைப்பார் - அண்ணல்மேல்
கண்ணென்னும் மாசாலம் கோலிக் கருங்குழலார்”(பாடல் எண். 10.4.(74-75)
என்ற பாடல் விளம்புகிறது. இதில் தலைவனைப் பெற்றிட மகளிர் கண்ணால் வலைவீசும் தன்மை உடலசைவு சார்ந்த செய்திபரிமாற்றத்திற்கு ஏற்றதாகும். பேசும் மொழிகளைக் கற்றுத் தரும் காட்சி ஈண்டு காணமுடிகின்றது.
மேலும் நாகணவாய்ப் புள்ளினம் கொண்டு மங்கைப் பருவத்து இளம்பெண்கள் மொழி பயிலும் காட்சி இந்நூலில் பதிவாகி உள்ளது. தலைவன் வீதிஉலா வருகையில் தலைவி கைகளில் கிளியினை ஏந்தி கற்றுக்கொடுக்கும் காட்சி இதோ,
“ பொற்கூட்டில் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் நற்கோட்டு
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால் விடையை மேல் கொண்டு …” (பாடல் எண்.11.3.3.(106-107)
எனலாம். மேற்சுட்டிய பாடல் வழி ‘சொற்கோட்டி’ என்ற தொடர் வழி மொழிகளைக் கற்றுத் தரும் ஆற்றாமை உணர்வை அறியமுடிகிறது. பறவையினங்களை வளர்ப்பதற்குப் பொன்னால் ஆகிய கூடுகள் அமைக்கும் பல்லுயிரினப் பாதுகாப்புமுறை ஈண்டு சூழலியல்திறனுக்கு ஏற்றதாக உள்ளது. தலைவி மனதில் நினைக்கும் தலைவனது வருகையை உணர்த்த கிளி குறியீடாக அமையும் திறன் ஈண்டு புலனாகிறது.
பார்வையில் செய்திப்புலப்படுத்தல்:
“கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல” (குறள். 1100)
என்ற வள்ளுவரின் குறட்பாவிற்கு இணங்க பார்வையால் பேசி விட்டால் வாய்ச்சொற்கள் தேவையற்றுப்போகும் என்பது புலனாகிறது. கண்களே பொருளை உணர்த்தும் ஆற்றல் இருப்பின் சொற்களின் வெளிப்பாடு உணரவேண்டியதில்லை. வாலிபத்தின் தலைவாயிலில் நிற்கும் பருவ மங்கையர் ஆடவரைக் கவர பார்வையைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அதிலும் இறைவன் மீது ஒருதலைக் காதல் கொண்ட பெண் அவரது திருமார்பில் நீண்டநேரம் தனது பார்வையைப் பதிக்கும் காட்சி இதோ,
“……பேரருளான்
தோள் நோக்கும் தன்தோள் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கும் வைத்து நெடிது உயிர்த்து – நாண் நோக்காது
உள்ளம்உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத்திடை அழுந்தி வெய்து உயிர்த்தாள்….” (பாடல் எண். 11.3.3. (109-111)
இப்பாடல் மொழிசாரா செய்திப்பரிமாற்றத்திற்குச் சான்றாக அமைகின்றது. காதற் குறிப்போடு தலைவனை தலைவி நோக்கும் காட்சியானது ‘கண்கலவியாக’ வெளிப்படுகின்றது. இங்ஙனம் ஏக்கத்தின் வழி பெருமூச்சுவிடும் தன்மை உடலசைவோடு ஒத்துள்ளது.
இன்னும் இளைஞரின் மனதில் வெம்மைத் தாக்க மகளிர் கண்களால் உருவெடுக்கும் காட்சி இதோ,
“வெப்பம் இளையவர்கட்கு ஆக்குவதால் உச்சியோடு
ஒப்புஅமையக் கொள்ளும் உருவத்தாள்….”(பாட ல்எண். 11.6.1.(151)
என்ற பாடல் வழி உச்சிப்பொழுதிற்கு ஏற்ற வண்ணம் உள்ளத்தில் வெப்பமானது உருவெடுத்தது போன்று காமம் கைகூட பலவிதமான இடைச்செருகல்கள் தலைவியால் நிகழப்பெறுகின்றது. இதுவும் ஓர் உளவியல் ரீதியான மனபாதிப்பிற்கு ஏற்றதாகும்.
மற்றொரு பாடல் வழி தலைவி தன்னுடைய இரண்டு கண்களாலும் தன் கருத்தை வெளிப்படுத்தும் நுட்பத்தை,
“ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்துஇரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும்…”(பாடல் எண்.11.3.3.(145)
இப்பாடல் மெய்ப்பிக்கின்றது. இன்னும் வஞ்சகத்தன்மையோடு ஆடவரை பார்வையால் கவரும் காட்சி இதோ,
“வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்கு
அஞ்சனத்தை இட்டங் அழகாக்கி……..” (பாடல் எண்.11.2.2.(93)
இத்தொடர் வழி கண்கள் ஆடவரின் மனதைக் கவரும் குறியீடாக அமைகின்றது. கண்களுக்கு நோய்த் தாக்கம் ஏற்படா வண்ணம் அஞ்சனம் தீட்டும் வழக்கம் சிறந்த மருத்துவக் கூறிற்கு சான்றாக ஏற்கலாம்.
நினைவு வழிசெய்திப் புலப்படுத்தல்:
‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற பொன்மொழிக்கு இணங்க காதல் வயமுற்ற தலைவி நினைவுகளோடு செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் நிலையினை திருக்கைலாய ஞான உலா வழி அறியலாம். மகளிர் பெரும்பாலும் பாவை பொம்மைகளை வைத்து விளையாடுவது வழக்கமாகும். உறவு முறை அடிப்படையில் பொம்மைக்குப் பெயர் சூட்டி மகிழ்வுடன் விளையாடுவர். அந்த வகையில் பேதைப் பருவத்துப் பெண் ஒருத்தி தான் விளையாடும் பாவைக்கு தந்தை யார்? என வினவுகிறாள். அதற்குப் பதிலுரையாக தாய் தீக்கனலை உடைய சிவபெருமான் தான் தந்தை என்று விளம்புகிறாள். அவ்வேளையில் வீதிஉலா வரும் எம்பெருமானைக் கண்டதும் தலைவிக்கு தாய் கூறிய செய்தி நினைவுக்கு எட்டியது. இதனை,
“பந்தரில் பாவை கொண்டாடும் இப்பாவைக்குத்
தந்தை யார் என்று ஒருத்தி தான் வினவ – அந்தம்இல்சீர்
ஈசன் எரியாடி என்ன அவனையோர்………..தாய்சொன்ன
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்” (பாடல் எண்.11.1.2.(83-85)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. இங்கு மற்றவர்கள் முன்பு உரைத்த செய்தியை காட்சிவழியாக நேரில் காணும் திறன் புலப்படுகிறது. மொழிசார்ந்து நினைவுகள் வாயிலாக பேதைப்பருவப் பெண் தனது உள்ளக்கிளர்ச்சியை வெளிப்படுத்துகிறாள் எனலாம்.
யாழ் வழி காதல் புலப்படுத்தல்:
இசையே மனதை மகிழ்விக்கும் ஆற்றல் வாய்ந்தவை. மனித இனத்திற்கு அருமருந்தாக இசை அமைகின்றது எனலாம். அதாவது முன்பு நோய்வாய்ப்பட்டோருக்கு இசைக்கருவிகள் கொண்டு மருத்துவம் செய்து உள்ளனர் நமது முன்னோர்கள். மனம் இசையோடு இயைந்து கேட்கும் போது இலகுவாகி நம்மை புத்துணர்வு அடையச்செய்கிறது. திருக்கைலாய ஞான உலாவில் இசையினால் தலைவியின் உள்ளக்கிளர்ச்சி ஒருமுகப்படும் திறத்தினைப் பின்வருமாறு அறியலாம்.
“…..ஒண்ணுதலாள்
தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசுஎறிப்
பின்னுமோர் காமரம் யாழ் அமைத்து…..
மடல்வண்ணம் பாடும் பொழுதீண்டு…..”(பாடல்எண்.11.4.2.(122-124)
இங்கு தலைவன் மீது கொண்ட காதல் உணர்வை வெளிப்படுத்த யாழ்மீட்டும் தன்மையினை நாம் அறியலாம். மனமும் ஒருமுகப்படுவதால் இப்பாடல் இசைமருத்துவத்திற்கு சான்றாகவும் அமைகின்றது.
நெஞ்சோடு கிளத்தல்:
தனக்குத் தானே ஒருவன் பேசிக்கொள்ளும் துறையாக நெஞ்சோடு கிளத்தல் அமைகின்றது. நெஞ்சத்தை தூதாக விட்டு தன்மன ஆற்றாமையைப் போக்கும் பாடல் நிறைய இடைக்கால இலக்கியங்களில் பதிவாகி உள்ளன. அரிவைப் பருவமகளிர் ஒருத்தி தன் துயரைப் போக்க மனதோடு உரையாடும் காட்சி இந்நூலில் காணலாம். சான்றாக,
“……நாட்டார்கள்
எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று – மெல்லவே…
….தன்னுறுநோய்…………
சொல்லலுறும் சொல்லி உடைசெறிக்கும் …..
தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்னுருவம் கொண்டு புலம்புற்றாள்….”(பாடல் எண்.11.4.3.(127-132)
என்ற பாடலைக் கூறலாம். ஈசன் மீது காதல் கொண்ட தலைவி தனக்குத் தானே பேசுவதோடு மட்டுமின்றி ஆடை நெகிழ்வுறாமல் காக்கிறாள். முழு வயது பருவமுற்ற பெண் ஆகையால் இறைவன் சூடும் கொன்றை மலருக்கு ஆசையுற்று உடல்மெலிவோடு காட்சியளிக்கிறாள்.
இதே போல் பேரிளம் பெண் ஒருத்தி மனம் நொந்து தானாகப் பேசும் கையற்ற நிலையினைக் கீழ்க்காண்போம்.
“……….அண்ணலே
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று – நொந்தாள் போல்
கட்டுரைத்துக் கைசோர்ந்து அகம்உருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள்…….”(பாடல் எண்.11.7.5.(193-195)
இதில் எம்பெருமான் மேல் காதல் வசப்பட்ட தலைவி நெஞ்சம் உருகி உடல்நொந்து வாடுகிறாள். இப்பாடல் உடலசைவுகள் வழி உள்ளச்செய்திகள் பரிமாற்றப்படும் விதத்தினைக் விளம்புகின்றது.
முடிவுரை
இங்ஙனம் மாந்தர்கள் தமக்குத்தாமே நடத்தை வழி உடலசைத்து கருத்தினைத் தெரிவிக்கும் செய்திப் புலப்பாட்டு நெறியினை சிற்றிலக்கியப்பாடல் வழி அறிய முடிகின்றது. மனப் பாதிப்பினால் உடலில் தோன்றும் குறிப்புகள் கொண்டு ஆண் பெண்ணின் மன உணர்வினை வெளிப்படுத்துகின்றனர். அரிவைப் பருவமகளிர் ஒருத்தி தன் துயரைப் போக்க மனத்தோடு உரையாடும் காட்சி சிறந்த செய்திப்பரிமாற்றத்திற்குச் சான்றாகும். கண்கள் ஆடவரின் மனதைக் கவரும் குறியீடாகப் புலப்படுகின்றது. அன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொடர்பு முறைமையினை உடல்கூற்றியல் அடிப்படையில் வெளிப்படுத்துவதால் சாதனங்களின் பயன்பாடு தேவையற்றதாக அமைகின்றது எனலாம்.
துணைநூற்பட்டியல்
முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்., திருக்கைலாய ஞான உலா - இயல் பதிப்பகம், 23பி\ 2739, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தஞ்சாவூர்- 613001.
அகநானூறு மூலமும் உரையும்- கழக வெளியீடு,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18.
திருக்குறள் மூலமும் தெளிவுரையும்- மகேஸ்வரி ஆப்செட் காலண்டர்ஸ், சிவகாசி.
தினமலர் நாளிதழ்- அக்டோபர்.22, 2019
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.