பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையும் கிறிஸ்தவ மிஷனரிகளின் தீவிரச் செயல்பாடுகளும் ஒன்றுசேர்ந்து சைவ, வைணவ மதத்தின் சனாதன அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கின. இந்தக் காலக்கட்டத்தில் நுழைந்த நவீனக்கல்வி முறைகளால் நகரங்கள் முன்னேற்றமடைந்தாலும் சாதி, சமய அடிப்படைகளை மீறிய சிந்தனைக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. மாறாகச் சமய அடிப்படையிலான சமூக முன்னேற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது. அதேநேரத்தில் காலனியத்தின் எதிர்வினைகள் காரணமாகச் சீர்த்திருத்த மரபுகள், இயக்கங்கள் போன்றவை பல புதிய போக்குகளையும் கொள்கைகளையும் தம்மிலிருந்து உருமாற்றிக் கொண்டன. அந்த வரிசையில் மரபைக் கட்டுடைத்து ஆன்மீக வழியில் சன்மார்க்கத்தையும் சமதர்மத்தையும் தேடியவராக வள்ளலார் காட்சியளிக்கிறார்.

பல தனிநபர் இயக்கங்களும், ஆசாரச் சீர்திருத்த முயற்சிகளும் தங்களின் சித்தாந்தங்களின் வழியாகச் சமூக மீட்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலில் தோன்றியவர்தான் இராமலிங்கனார். அவர் எந்தவிதச் செல்வாக்கும் இன்றிச் சமய ஆதிக்கத்துக்கு எதிராக ஒரு புதிய ஆன்மீக வழிமுறையே கட்டமைத்து இருக்கிறார். அவர் தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட நபரில்லை என்றாலும் சமயவாதிகளாலும் மிஷனரிமார்களாலும் விமர்சனத்துக்கு ஆளானார். ஆத்திக மரபில் தோன்றி சக ஆத்திகர்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று பழித்தூற்றப்பட்டார்.

வடக்கே பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண மிஷன், தெற்கே இராமலிங்கரின் சன்மார்க்க சங்கம், ஆறுமுக நாவலரின் சைவ வித்யா சாலை, சென்னை வர்த்தகச் சீர்த்திருத்த சபை, பத்திரிக்கைகள் போன்றவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கிய முன்னெடுப்புகளாக அமைந்திருந்தன. இவற்றில் ஐரோப்பிய கிறிஸ்தவ சமயம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின் தாக்கங்களும் பாதிப்புகளும் அதிகமாக இருந்தது. மேற்கண்ட எதிர்வினைகள் பெரும்பாலும் இரண்டு வகைகளில் செயலாற்ற முடிந்தது. ஒன்று மதம், சாதி ஆசார அடிப்படையிலான இந்து சமயம் (தற்கால பெயரில்) தனது நடைமுறைக்கு அப்பாற்பட்ட கிறிஸ்தவ மதம், பாதிரிமார்கள், மிஷினரிகள் அவர்களது பத்திரிக்கைகள், பள்ளிக் கூடங்கள், மத மாற்ற முயற்சிகள் ஆகியவற்றை எதிர்த்துத் தன்னை நிலைநாட்டிக் கொள்வது. மற்றொன்று மேற்கத்திய பண்பாட்டின் நவீன மதிப்பீடுகளுக்கு ஏற்ற மாதிரியே சுதேசியப் பண்பாட்டில் காலத்திற்கேற்றாற் போல சீர்த்திருத்தங்களை முன்னிறுத்தி அமைப்பு ரீதியாக படிப்பாளி வர்க்கமாகக் கட்டமைத்துக் கொண்டது. இத்தகைய அறிவாளி மரபினை பிரிட்டீஷ் அரசாட்சி திட்டமிட்டே உருவாக்கியது என்பதும் கவனிக்கத்தக்கது.

சமகாலத்தில் சைவ சமயத்தைப் பழைய கால நிலைமைக்கு இழுத்துச் செல்ல விரும்பிய ஆறுமுக நாவலர் நவீன மாற்றங்களிலிருந்து தன்னையும் தனது ஆசாரம் சார்ந்த மதத்தையும் மீட்டெடுக்க பல வழிகளில் பாடுபட்டார். இதன் வெளிப்பாடாக வேறு கலாச்சார அரசியல், பண்பாட்டினை எதிர்ப்பதோடு நிறுத்தாமல் சைவ நூல்களைப் பதிப்பித்தல், செய்யுள் நூல்களை எளிமையான வசன நடையில் பிரசுரித்தல், பத்திரிக்கை நடத்துதல், சைவ வித்தியா சாலைகளைத் தொடங்குதல் எனச் சைவத்தை மீட்டெடுக்க உதவினார். மிஷினரி பள்ளிகளுக்குப் போட்டியாகவே சைவ வித்தியா சாலைகளைத் தொடங்கினார் நாவலர்.

இந்தக் காலகட்டத்தில் இலக்கிய செல்நெறி பெரும்பாலும் மரபான செய்யுள் நடையைப் பின்பற்றியதாக இருந்தது. வித்துவான்கள் மிராசுதார்களைப் பற்றி பாடி பரிசில் பெற்று அதன் பெருமையில் திளைத்திருந்தனர். திண்ணைப் பள்ளிகளில் பெரும்பாலும் பாடல்கள் எழுதக் கற்றுக்கொடுப்பது அதனைக்கொண்டு நினைத்த மாத்திரத்தில் பாடல் புனைவது என்று அறிவு சார்ந்த கண்ணோட்டம் பழைய மரபில் இருந்து மீண்டுவராத நிலைப்பாட்டினையே கொண்டிருந்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதற்கொண்டு பழைய வடிவிலான பதிகம் இயற்றுவதில்தான் அன்றைய கல்வியாளர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். தமிழ்மொழியின் அறிவு முறையும் இலக்கியத்தின் அனுபவத்தில்தான் அன்றைக்கிருந்தது. சமயச் சாயல்கள், தனிமனிதர் பெருமைகள், புராண இதிகாசங்களைப் பாடல்களாக இசைப்பது போன்றவை வள்ளலாரின் காலத்தின் நடைமுறைகளாயிருந்தன.

மரபானவர்களுக்கு நவீன மாற்றங்களால் விளைந்த அறிவுமரபினைக் கண்டு சிறு பதற்றம் அந்தக் காலகட்டத்தில் தொற்றிக்கொள்ளவே செய்தது. மிஷினரிகளின் அச்சுப்பணிகள், பத்திரிக்கைகள் போன்றவற்றை நாவலர் எதிர்த்தோடு அதே பாணியில், சைவ மதம், சாதி சமூகம், ஆசார ஒழுக்கங்களை விளக்கி வசனத்தில் பிரசுரிக்கவும் செய்தார். வினா-விடை உக்தியில் கிறிஸ்தவர்களுக்குப் போட்டியாக சைவ-வினா விடை வெளியிட்டார். இத்தகைய முரண்களுக்கிடையில் கருங்குழி, வடலூர், மேட்டுக்குப்பம் பகுதிகளில் சுத்த சன்மார்க்கக் கொள்கையின்படி புதிய ஜீவகாருண்ய ஒழுக்கம், மரணமிலாப் பெருவாழ்வு, ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை, ஒளி வழிபாடு, சாதி சமய மத சாத்திர ஒழிப்பு என்று சங்கம், சாலை, சபை மூலமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த வள்ளலாரைச் சைவ மடங்கள் மதித்து ஏற்றதாகத் தகவல்கள் இல்லை.

மதச் செயல்பாடுகளில் மாற்றங்கள், மறுவிளக்கங்கள் கொடுப்பது, சமயத்தின் அடிப்படையில் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வது போன்றவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிந்தனை போக்காக இருந்தது. இந்த அடிப்படையில் இராமலிங்கரையும் வைத்து புரிந்து கொள்ளல் என்பது பிழையாகும். முருகப் பக்தனாக இருந்து, சிவ வழிபாட்டில் தன்னைக் கரைத்துக்கொண்டு சன்மார்க்க நெறிக்கு வந்து சேர்ந்த இவரின் பரிணாமம் ஆய்விற்குரியது. காலகட்டத்தையொட்டி ஏற்பட்ட அனுபவங்கள் மென்மை, கருணை தன்மை போன்றவை இவரைச் சமயத்தின் நீட்சி நிலைக்கு இட்டுச்சென்று பொதுசிந்தனைக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் இத்தகைய சிந்தனை வியப்பையளிக்கலாம். இவரது அறிவுத்தளம்தான் நவீன நோக்கிற்கு இட்டுச் சென்றிருக்கின்றது.

இராமலிங்கர் பல இடங்களில் ஓதாது உணர்ந்தவன் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார். வித்துவானிடம் செலவு செய்து கற்றுகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் இவர் திருமந்திரம், திருவாசகம், தேவாரம், பெரியபுராணம் முதலிய சைவ சித்தாந்த சாத்திர நூல்களையும் அருணகிரியார், பட்டினத்தார், தாயுமானவர் பாடல்கள், இலக்கண நூல்கள், அணி நூல்கள் முதலியவற்றை நன்கு கற்றுணர்ந்தவர்.

தொடக்கத்தில் எந்தச் சமயத்தை, வேதத்தை, ஆகமத்தை, கோயில் வழிபாட்டைச் சிரமேற்கொண்டு போற்றினாரோ அவற்றை 1869 - க்குப் பிறகு தூக்கி எறிகிறார். ‘இறைவனை சோதியாகவும், கருணையாகவும், வெளியாகவும் வழிபட்டது, சாதிமத சமய விகற்பங்களை வெறுத்தது, உடலைப் பேணி யோக நெறியில் நிற்க சொன்னது, இறைவனின் அருளுக்காக ஏங்கிய அவரது ஆன்ம உருக்கம், வேத, ஆகம, வேதாந்த சித்தாந்த சமரசம் கண்டது, இறுதியில் இவற்றை நிராகரித்தது, ஏகான்மவாதத்தை மறுத்து ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தியது, செத்தாரைப் புதைக்கச் சொன்னது போன்ற பல்வேறு கருத்துக்களில் ஒரு நீண்ட நெடிய தொடர்ச்சி இருக்கிறது" (ராஜ் கௌதமன், கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக…, 2012, ப. 41) இந்தத் தொடர்ச்சியை அறிந்து கொண்டால்தான், ஏன் மரபான நிலைப்பாட்டிலிருந்து புதிய தடத்தை உண்டாக்கினார் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

இத்தகைய பரிணாம மாற்றத்தில் வள்ளலாருக்கு மாணிக்கவாசகர், பட்டினத்தார், திருமூலர், தாயுமானவர், அப்பர், சுந்தரர், அருணகிரியார், சித்தர்மரபு, யோக நெறி, கிறிஸ்தவ நடைமுறை போன்றவை என்று பல தாக்கங்கள் இருந்திருக்கின்றன.

மாணிக்க வாசகர் = இராமலிங்கர்

திருவாசகத்தின் கருத்துகளும் இராமலிங்கரின் சிந்தனையில் பொதிந்து இருக்கினறன. ‘அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே! (சதகம் 1:6) என்ற மாணிக்கவாசகரின் பாடல் அடியானது இராமலிங்கரிடம் ‘உள்ளம் கவர் கள்வன்’ என்று வெளிப்பட்டு நிற்கிறது. அதேபோல அருளமுதம் புரியாயேல் வருந்துவன்… (சதகம் 2:13) என்ற மாணிக்கவாசகரின் கருத்தானது, இறைவனிடம் காட்சிதரவில்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் என்று இராமலிங்கர் இறைவனிடம் புலம்வுதற்கு ஒப்பாக இருக்கிறது.

‘சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் நாயேன்… (கண்டபத்து, 5) என்று மாணிக்கவாசகர் சாதி, குலம், பிறப்பு என்னும் உலக எதார்த்தங்களை வினைக் கொள்கையின்படி பிறவிக் சுழிக்குள் அடக்கிப் பார்த்தார்’ (மேலது., ப. 44) இவ்வாறே இராமலிங்கரும் சாதி, குல, சமய வேறுபாடுகளை மனிதரின் சமத்துவத்துக்கு இடையூறாகப் பார்க்கிறார்.

திருமூலர் = இராமலிங்கர்

ஞானிகள் சமாதியான பிறகு அவர்களுடைய உடலை எரிக்கக் கூடாது. அவர்களைப் புதைப்பதே புண்ணியம் என்றார் திருமூலர். செத்தாரை எரிக்கக் கூடாது, புதைக்க வேண்டும், அப்போதுதான் சிவன் உலகிற்கு வரும்போது செத்தாரை உயிரோடு எழுப்புவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற இராமலிங்கர், 1869 க்குப் பிறகு இது சத்தியம் எனத் திரும்ப திரும்ப அறிவிக்கிறார்.

திருமூலரின் காலத்தில் வடமொழி×தென்மொழி, வடநாடு×தென்னாடு போன்ற விவாதங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. சிவனுக்குத் திருமாலும், பிரம்மனும் அந்நியர் அல்லர். இந்த மூவரும் ஒருவரே என்று சமய சச்சரவுக்கு ஒரே தெய்வம் (ஏகம்) மூலம் முடிவுகட்ட முயல்கிறார். ‘இதில்தான் ஒன்றே குலம்’ ஒருவனே தேவன் என அறிவிக்கிறார். இராமலிங்கரோ சாதி, மத, சமய சச்சரவுகளுக்கு முடிவுகாண அனைத்தையும் நிராகரித்து மாற்றைத் தேடுகிறார். தனக்கு முன்னால் உள்ள நீண்ட பாரம்பரியத்தை மறுத்து சுத்த சன்மார்க்கிகளை இணைத்து ஜீவகாருண்யத்தால் இறையருள் பெற்று ஒளி வழிபாடு செய்து மரணமிலா பெருவாழ்வு வாழும் புதிய கருத்தை முன்வைக்கிறார்.

அருணகிரிநாதர்= இராமலிங்கர்

அருணகிரிநாதர் வாழ்ந்த பதினைந்தாம் நூற்றாண்டில் சமயக் காழ்ப்பினால் ஏற்பட்ட சண்டைகளும் விவாதங்களும் சாதாரணமான நிகழ்வுகளாக நடந்தேறியது. சொற்போராட்டங்கள், விவாதங்கள் போன்றவை தங்களது நிலையை அடையாளப்படுத்திக் கொள்ள நடத்தப்பட்டன. இராமலிங்கரும் இம்மாதிரியான விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார்.

முருக பக்தரான அருணகிரிநாதர் விலைமாதர்களையும் காம இச்சை போன்றவற்றையும் கடிந்துள்ளார். இராமலிங்கரும் தனது செய்யுள் பாடல்களில் இத்தன்மையை விட்டாரில்லை. தமிழ் மரபில் வந்த நிலையாமை கருத்தாக்கத்தோடு பல காலங்கள் இவ்வாறு தொடர்ந்து பாடுவது இருந்து வந்தது. ‘இறைவனைப் பாடாத பாட்டெல்லாம் பாட்டல்ல என நம்பினார்கள். ‘முத்தமிழை ஓதித் தளராதே (1082) (மேலது., ப. 51) என்ற அதே பாணியில் இராமலிங்கர் இறைவனை விடுத்து வேறு எதையும் பாடியதாகத் தெரியவில்லை.

பட்டினத்தார் = இராமலிங்கர்

இராமலிங்கர் சைவ சமயவாதியாக இருந்த காலத்திலும் உடலை வெறுத்துப் பாடிய சித்தர் மரபில் தோய்ந்து போயிருந்தார். அந்த வகையில் சித்த வைத்தியம், மூலிகை மருந்து தயாரித்தல், உடலைப் பொன்னைப் போலப் பராமரிக்கச் சொல்லுதல், உடம்பு ஆதாரம் என வலியுறுத்துதல் போன்ற செயல்பாட்டினைக் கைக்கொண்டார். சித்தர் வழிபாட்டில் கோயில், விக்கிரகம் ஆராதனைப் போன்றவை நிராகரிக்கப்பட்டன. பட்டினத்தார் வெளிப்படையாகவே உருவ வழிபாட்டை எதிர்த்தார். ‘உளியிட்ட கல்லையும், ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்’ (61) (மேலது.,ப. 52) எனக் கல், சுதை, செம்பு ஆகியவற்றால் செய்த தெய்வ உருவங்களை வெறுக்கிறார்.

இராமலிங்கர் கருங்குழியில் இருந்தபோது உருவவழிபாடு, சிதம்பரம் கோயிலுக்குச் செல்லுதல் போன்றவற்றை மேற்கொண்டவர்தான். பின்னர் சிதம்பரத்திற்குப் போவதை நிறுத்திவிட்டு சிதம்பரத்திற்கு மாற்றாக வடலூரில் சத்திய ஞான சபையை உருவாக்குகிறார். சபையின் மூலையிலிருந்து பார்க்கும்போது சிதம்பரம் கோயில் தெரிவதாக அவரே குறிப்பிடுகிறார். இறைவனை ஓர் உருவமாகப் பார்க்காமல் அருட்பெருஞ்சோதி - கருணை வடிவமாகப் பார்க்கிறார்.

தாயுமானவர் = இராமலிங்கர்

‘திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்’ தலைப்பிலுள்ள தாயுமானவரின் பாடல்கள் இறை குறித்து புது விளக்கத்தைத் தருகின்றன. இறைவனை எங்கும் நிறைந்த ஒளியாக, அருளாக, மனம், வாக்கு, செயல், வடிவம் முதலிய காரணங்களுக்கும் எந்தச் சமயத்துக்கும் எட்டாத சித்துவாக, மௌன உருவாகத் தாயுமானவர் வழிபடுகிறார். இது சைவத்தையும், சித்தர் மரபையும் சார்ந்தவையாக உள்ளது. இராமலிங்கரின் சுத்த சன்மார்க்க வழிபாட்டு நெறிக்குத் தாயுமானவரின் கருத்தியலே அடிப்படையாக அமைந்துள்ளது. இவர் சாதி வேறுபாடுகளில் சமரசம் செய்து கொண்டதாகத் தெரியவில்லை. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றில் இவ்வாறு இறைவனைப் புது வடிவத்தில் பார்க்கின்ற நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இராமலிங்கர் சாதி, சமய, மத, சாத்திர வேறுபாடுகளை நீக்கி அருட்பெருஞ்சோதி வடிவில் சிவனைப் பார்க்கின்றார். இவருக்கு முன்னிருந்த சிவனடியார்களில் இருந்து முற்றிலும் இது வேறுபாடானது.

இராமலிங்கனாரின் கருத்தியல்கள்

இராமலிங்கர் தமது மெய்யான சன்மார்க்கத்தில் வந்து சேருமாறு உலகத்தவரை அழைக்கிறார். இவருடைய மரபு எல்லாவற்றிலும் இருந்து வேறுபடுகிறது.

அழியும் உடலை இறையுடன் சேரும் சிந்தனையை முன்வைக்கிறார். சொர்க்கம் - நரகம் பற்றிய கருத்துக்கள் இவரிடம் இல்லை. பிராமணர்களை ஒருபோதும் இவர் எதிராக நினைக்கவில்லை. ஆசாரங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும், விக்கிரகம், கோயில் போன்றவற்றுக்கும்தான் எதிராக நிற்கிறார். ஆனால் பிரமணர்கள் இவரை எதிரியாகக் கருதியிருக்கின்றனர்.

யோகம் கைவரப் பெற்றவராகத் தெரிகிறார். பிராமணர் முதற்கொண்டு கடைநிலை சாதிவரை இவரது சபையினராக இருந்தனர். ஆனால் சைவ வட்டாரத்தில் இவர் பிள்ளைமார் கணக்கர் குலத்தில் பிறந்த காரணத்தால் தன்னை உயர்த்திக்கொள்ள இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்கிறார் என்ற கருத்து நிலவியது. ஆனால் இராமலிங்கர் தன் பெயருக்குப் பின்னால் இருந்த பிள்ளை என்ற சாதிப்பெயரைக்கூட இறைவனுக்குத் தான் பிள்ளை என்ற பொருளில் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்.

சாதி வேறுபாடுகளைக் களைந்து சன்மார்க்கத்தினை வலியுறுத்தும் இவர் அனைத்து நாயன்மார்களையும் பாடிப் புகழ்ந்துவிட்டு ‘திருநாளை போவார்’ நந்தனாரை மட்டும் பாடாமல் விட்டது நெருடலாகப் படுகிறது. அனைத்து அடியார்களையும் பாட வேண்டிய தேவையில்லாமல் இருக்கலாம் என்ற பொதுவான கேள்விகளுக்குள் நந்தனார் மட்டும் விடுபட்டது கேள்விக்குரியது. ஆன்மா, மறுபிறவி இவற்றைப் பற்றிய கருத்துக்களுக்கே இவரது பாடல்கள் இடம்தராமல் இத்தகைய வீண்பேச்சுக்களைப் ‘பிள்ளை விளையாட்டு’ (திரு.அ. 4172) என ஒதுக்கிவிடுகின்றன.

மொழி பற்றிய கருத்தியலில் அதிகப் பற்றுடையவராகத் தெரியவில்லை. எல்லாம் தமிழின் சிறப்பு எனக் குறிப்பிடும் அவர் வடமொழியையும் உயர்வாகப் பேசுகிறார். சமஸ்கிருதத்தைக் கொண்டு விண்ணப்பங்கள் பாடியுள்ளார்.

சைவ சித்தாந்த சாத்திரங்களில் "இரும்பு பொன்னானாற்போல்" எனச் சுட்டப்படும் உருமாற்றம் நோக்கத்தக்கது. சைவ சமயக் குரவர் நால்வரும் திருவருளினால் பொன்னுடல் பெற்று எல்லையற்ற வியப்பாகப் பெரு வெளியில் ஒளிமயமான வரம்பற்ற பரம்பொருளின் சச்சிதானந்த சொரூபத்தில் அடங்கிய வியபாப்பியமாக முக்தி பெற்றவர்கள்" (சோ.ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம், (தொ. 3), 2003, ப. 407) இதிலிருந்து இராமலிங்கரையும் சைவ வெள்ளத்திற்குள் இழுத்துக்கொள்ளும் காரணங்கள் இருந்ததாகப் பின்னால் வந்த சமயப் பெரியோர்கள் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

இவர் பிறவி என்பதனை மறுபிறவியாகக் கொள்ளாமல் சாகாவரம், மரணமிலா பெருவாழ்வு எனக் குறிப்பிடுகிறார். மரணத்தை எட்டாமல் நித்திய நிலையில் (யோகம் சார்ந்த குறியீடு) இறைவனை அடைவதே இவரது கருத்தியலாக இருக்கிறது.

சிவன் தன்னுள் இருந்து பேசுவதாகவும், சிவன் காட்சியளித்ததாகவும் எல்லா நேரங்களிலும் இறைவன்மீது மனதைக் குவித்துச் சிந்திப்பவராகவும் இருந்திருக்கிறார். திரு அருட்பாவின் முதல் ஐந்து தொகுதிகளில் இத்தகைய தீவிரமான உளவியல் நடவடிக்கைகள் காணாமல் ஆறாவது தொகுதியில் புது மனிதராகத் தெரிகிறார். சித்திகள் பெற்ற சமூகப் புரட்சியாளர், அற்புதங்கள் செய்யக்கூடியவர், உரு வழிபாட்டை விடுத்து ஒளி வழிபாட்டினைக் கொண்டுவந்தவர் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவப் பின்னணியில் இருந்து ஒரு சமூகப் புரட்சியாளராகிய இவரை மற்ற சிந்தனை மரபிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

‘இராமலிங்கரின் ஆசை இனிய உணவு, பெண், காசு பணம், மண் ஆகியவற்றில் எப்போதுமில்லை; தற்போது அவரிடம் உள்ள ஒரே இச்சை உலகத்து உயிர்க்கெல்லாம் இன்பம் செய்வது’ (திரு. அ., பா. 3401) என்பதிலிருந்து இறைவன்மீது பக்தி, உயிர்கள்மீது கருணை என இரண்டையும் ஒன்றாகப் பாவிக்கும் மனப்பாங்கு கொள்கிறார். யோக நெறியில் ஊன்றிய பிறகு சாதி, சமய, மத பேதங்களையும் வேத-ஆகமங்களையும் சமரசத்திற்கு இடமின்றி வெறுக்கிறார். உயிர்கள் மீது கொள்கின்ற இரக்கத்திற்கு மேற்கண்ட காரணங்கள் தடையாக இருப்பதனால் சைவ மத்தின் கரணங்களான தாச, சற்புத்திர, ஞான, சன்மார்க்க நெறியின் நான்காவது நெறியான சன்மார்க்கத்துக்கு வந்து சேருகிறார்.

‘நரகக்குழிக்கு இணையாகச் சாதிக்குழி, சமயக்குழி இருக்கிறது’ (திரு. அ., பா. 4729) ‘பொருளாதார ஏற்றத்தாழ்விற்கும் இங்கே கருணை இன்மையே காரணம்’ (திரு. அ., பா. 5564) ‘கருணையும், இரக்கமும் மனிதரிடத்தில் அதிகமாகும்போது பிரச்சினைகள் ஒழியும். மரணமிலா பெருவாழ்வும், ஒருமைப்பாடும் சாத்தியமாகும்’ (திரு. அ., பா. 3538) இந்தக் கருத்தியல்தான் இராமலிங்கரை சன்மார்க்கவாதியாக அடையாளப்படுத்துகிறது.

சன்மார்க்கம் என்பது சைவத்தின் நான்கு வகை மார்க்கங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அறிவுநெறி எனக் குறிப்பிடுகின்றனர். சன்மார்க்கம் மற்றதைவிட உயர்ந்ததாக இறைவனோடு உயிர்கள் இணைவதைக் குறிப்பதாக இராமலிங்கர் ஒரு புதுப் பொருளைக் கூறுகிறார். ‘எல்லா உயிர்களையும் தன்னைப்போல் பாவித்தல்’ என்பதே சன்மார்க்கம் என்கிறார். ‘மரணமெலாம் தவிர்ந்து சிவமயமாகி நிறைதல்’ (திரு. அ., பா. 3377) என்பதில் மரணப் பயத்தை விடுத்து உயிர்கள் இறைவனோடு கலக்கும் என்ற பொருளில் எல்லா உயிர்களும் என்ற முரண்பட்ட கருத்துநிலையே இராமலிங்கருடையதாக இருக்கிறது.

‘சன்மார்க்கத்திற்குத் தகுதியுடையவர்கள் புலால் மறுத்தவர்’ (திரு. அ., பா. 4163) எனக் குறிப்பிடும் இராமலிங்கர் புலால் உண்ணும் மனிதரிடத்திலும் கருணை காட்ட வேண்டும், பசியைப் போக்க வேண்டும் என்கிறார். இந்தச் சிந்தனை அந்தக் காலக்கட்ட பஞ்சம், வறுமை, பசி, பட்டிணி, ஆதிக்க மனப்பான்மையைப் பார்த்து வந்ததின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

இறைவனை அடைவதற்கான கருவியாக ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வரையறுக்கிறார். உனது வருகைக்காக ஒருவேளை பட்டிணி கிடக்கிறேன். நீ வரவில்லையெனில் என் பக்தர்கள் எனை ஏளனம் செய்வார்கள். எப்போதும் நடப்பதற்கு முன்னமே கற்பனை செய்து பாடுவது என் வழக்கம் எனவும் குறிப்பிடுகிறார். இறைவன் காட்சியளித்தாக ஆனந்தத்தில் பாடிவிட்டு, எப்போதுதான் வருவாயோ? வருகிற சமயம் இதுவே என்று வேறு இடத்தில் குறிப்பிடுவது இவரது வழக்கமாக உள்ளது. இவருடைய சிந்தனை முழுவதும் இறைவனை சுற்றியே அமைகிறது.

‘அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன்’ (திரு. அ., பா. 3788) என்று இறைவனோடு கலக்கக்கூடிய தருணத்தை எதிர்ப்பாத்திருந்த இராமலிங்கரின் மனநிலை சமூக நன்மைக்காகச் சங்கம், சாலை, சபை நிறுவி அவற்றை முழு ஈடுபாட்டோடு இயக்கிக் கொண்டிருந்தாலும் உலக நிலையிலிருந்து விடுபடுவதையே எதிர்ப்பார்த்திருக்கிறார்.

பட முடியாது இனித் துயரம் படமுடியாது…
பட்டதெல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து
இப்பொழுது என்உடல் உயிராதியெல்லாம் நீ
எடுத்துக்கொண்ட உன்உடல் உயிராகி
யெல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்    (திரு. அ., 3802)

இந்தப் பாடலில் இராமலிங்கர் உலகத்தின் ஒட்டுமொத்த சிக்கல்களையும் மனதில்கொண்டு அதற்காக வருத்தப்படுபவராக இருக்கிறார். இயல்பிலேயே மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவர். எல்லாவற்றையும் வெறுமனே பேசிவிட்டுச் செல்பராக இல்லாமல் சிறந்த செயல்பாட்டினைக் கொண்டவராக இருக்கிறார்.

வடலூரில் 1872 இல் சன்மார்க்கச் சங்கம் தொடங்கிய ஆறுமாதத்திலேயே தனது சகாக்களின் செயல்பாடுகளும் நடைமுறைகளும் பிடிக்காமல் அதனை மறுவரைறை செய்கிறார். சமரச வேத சன்மார்க்கம் என்ற பெயரை சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையென்று மாற்றுகிறார். சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையென்றும் சங்கத்திற்குச் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கமென்றும் பெயர் வழங்குகிறார். ‘வேத’ என்ற சொல்லையெடுத்துவிட்டு ‘சுத்த’ என்ற சொல்லைப் பொருத்தி சத்திய என்ற பதத்தைப் புதிதாகச் சேர்த்துள்ளார். தமது சீடர்கள் எளிமையான வழிபாடுகளையும், வருணாசிரம சிந்தனையிலிருந்து விடுபடவும் இவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்.

நான் இதுநாள் வரை வேத ஆகமங்களிலும் விக்கிரக வழிபாட்டிலும் உழன்று திரிந்தேன் அப்போது எனக்கிருந்த அறிவு ‘அற்ப அறிவாக’ இருந்தது என்கிறார்.

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே (திரு. அ., 4742)

என்று வெளிப்பாடையாகச் சாதி சமய நடவடிக்கைகளைப் பேசிய இராமலிங்கருக்கு எதிர்ப்பு வருவதில் வியப்பில்லை.

"அருட்பா - மருட்பா" மோதல் இராமலிங்கர் மறைவிற்குப் பிறகும் வெகுகாலம் நடந்தது. 1904 இல் வெளிவந்த பாலசுந்தர நாயகர் எழுதிய "மருட்பா மறுப்பு" நூல் பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இதில் "இராமலிங்க பிள்ளையினது பாட்டுக்களைக் கண்டித்து அவர் காலந்தொடங்கி இதுகாறும் வெளியிட்டவை" என்று பதினெட்டு நூல்களும் பத்திரிகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்படி எதிர்ப்பு இயக்கம் நடத்துகிற அளவுக்கு இராமலிங்கரின் சிந்தனைகள் ஒன்று ஒரு பகுதி தமிழ் மக்களிடம் சென்றடைந்திருக்கின்றன என்பதையும் இதிலிருந்து உணர முடிகிறது" (அருணன், தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம், 2004, ப. 84) இன்று வரை பகுத்தறிவாளர்கள் மத்தியிலும்கூட சீர்திருத்தவாதி என்ற அடையாளத்தோடு அவர் சைவப்பற்றாளர் என்ற கருத்தியலும் இணைந்தே காணப்படுகிறது. மரபான சைவப் பாரம்பரியத்தில் இருந்து, சனாதனம் முறையாகக் கடைபிடிக்கப் பட்ட காலத்தில் புது மாற்று மரபினைக் கொண்டுவந்தது இராமலிங்கருக்கு இருந்த சமகாலத்தில் அறிவு தாக்கங்களும், அனுபவங்களும் காரணமாக அமைந்திருக்கின்றன.

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரையறை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதிகாரக்
கேடரைப் பொய்யால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்த போதெல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை உலகநடை எலாங்கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய்    (திரு. அ., 3546)

என்று அரசியல் நடவடிக்கைகளையும் கவனித்தவராகயிருக்கிறார். நாவலர் இவரைச் சாடும்போது கிறிஸ்தவ மிஷனரிகளின் தாக்கத்தால்தான் வெள்ளை உடையணிந்து காலில் பூட்சு அணிந்து, நாத்திகம் பேசுகிறார். மிஷனரிகளின் செயல்பாடுகளால்தான் நாத்திகம் பேசுபவர்களெல்லாம் வளர்ந்திருக்கிறார்கள் என்று இவருக்கு எதிர்ப்புகள் இருந்துகொண்டேயிருந்தது. விதவைப் பெண்கள் தாலி கழட்ட வேண்டாம், பூசாரி என்பவர் ஞானசபைக்குத் தேவையற்றது, தகரத்தால் ஆன ஒளிக் கூடம் மட்டுமே வழிபாட்டுக்குரியது, பித்தளை விளக்குகள் ஆகாது, பிணங்களை எரித்தல்கூடாது, விக்கிரக வழிபாடு வேண்டாம், சாதி பேத, வேத, ஆகம வேறுபாடு இல்லா சன்மார்க்கம், யோக தாக்கம், சித்தர் நெறி மிஷனரியின் காலத் தேவை இவை அனைத்தும் இராமலிங்கரின் தத்துவக் கொள்கைகளுக்கு விளக்கங்களாக இருந்தன.

முடிவுரை

சித்தர் காலத்திற்குப் பின் இவ்வளவு காட்டமான எதிர்ப்பு காட்டியவர் இராமலிங்கரே. சமூகச் சீர்த்திருத்தமானது சமயம் சார்ந்து இருந்த சூழலில் அந்த வரையறையை விழ்த்தி மாற்றுச் சிந்தனையைக் கொண்டு வந்தார். வைகுண்டர், வள்ளலார் போன்று தனித்துவ மனிதர்களுக்கு நிகழ்ந்த கதி பின்னர் அவர்களே தெய்வமாகக் கருதப்பட்டதுதான். இராமலிங்கரின் பரிமாணம் ஜீவகாருண்யம் ஆன்மநேய ஒருமைப்பாடு, சாதிமத விகற்பங்களைக் கடந்து பொதுநிலை காணுதல் ஆகியவற்றால் ஒரு பொது நெறி என்ற மாற்றத்திற்குள் கடைப்பிடித்துள்ளார். மரித்தவரை சிவன் உயிர்ப்பிக்கப் போகிறார் என்ற கருத்தினை மட்டும் கடைசி வரை அவரின் சாவிலும் அவரால் நிரூபிக்க இயலவில்லை. நேரில் காட்சி தரும் காலம் எப்போது என்று சதா கேள்விக்கேட்ட அவருக்கே அந்த நிகழ்வில் முழு நம்பிக்கை இல்லாத மனநிலையே இருந்திருக்கிறது. பண்பாட்டுச் செயல்பாடுகளிலும் பகுத்தறிவு புரிதலோடு இயங்கிய இவர் தன்னைமீறிய ஒரு அதீத சக்தி என்ற மாயையை மட்டும் கைக்கொள்ளாமல் இருந்திருந்தால் இராமலிங்கரே ஒரு மிகச் சிறந்த பகுத்தறிவு வாதியாகவும், நாத்திகராகவும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார்.

துணை நூல்கள்

1.அருணன், தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம், 1999, வசந்தம் வெளியீட்டகம், சிம்மக்கல், மதுரை-625001.
2.இராமலிங்க அடிகளார், திரு அருட்பா, ஊரன் அடிகள் மற்றும் சன்மார்க்க தேசிகள் (ப.ஆ), சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர்-607303.
3.சோ.ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம், (தொ. 3), 2003, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்
4. ராஜ் கௌதமன், கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக…, 2012, நியூசென்சுரி புத்தக நிலையம், சென்னை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R