சந்திரயான் - 3 வெற்றிகரமாகச் சந்திரனின் தென் துருவத்தில் இறங்கியதன் மூலம் அப்பகுதியில் இறங்கிய முதலாவது நாடு என்னும் பெருமையினை இந்தியா பெற்றுள்ளது. இது இந்தியாவின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இசுரோ'வுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. மானுட குலத்துக்கே கிடைத்த வெற்றி. வாழ்த்துகள்.
மானுட குலத்துக்கு விண்வெளி ஆய்வு மிகவும் முக்கியமானது. இது தொலை நோக்கான பார்வையின் வெளிப்பாடு, பூமியில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மனிதரின் எதிர்மறைச் செயற்பாடுகளால் சூழல் மாசடைந்து வருகின்றது. இவ்விதமான சூழலில் எதிர்காலத்தில் ஏனைய கிரகங்களில், செயற்கையாக உருவாக்கப்படும் விண்வெளி நகரங்களில் மக்கள் வாழும் சூழல் நிச்சயம் ஏற்படும். மானுட குலம் இப்பிரபஞ்சத்தில் தொடர்ந்தும் தப்பிப்பிழைப்பதற்கு இவ்விதமான விண்வெளி நோக்கிய குடி பரம்பல்கள் மிகவும் அவசியம்.
அது மட்டுமல்ல என்றோ ஒரு நாள் பூமியில் மட்டுமல்ல, சூரிய மண்டலத்திலேயே மனிதர் வாழ முடியாத சூழல் உருவாகும். அக்காலம் மிகவும் தொலைவிலுள்ளது. பல பில்லியன் வருடங்களுக்கு அப்பால் நடக்கப்போகும் நிகழ்வாக அது இருப்பதால் தற்போது நாம் அஞ்சத்தேவையில்லை. ஆனால் அந்நிலையிலிருந்து தப்பி மனிதர் சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள கிரகங்களில் , அல்லது அங்கு உருவாக்கப்படும் விண்வெளி நகரங்களில் வாழும் நிலை உருவாகும். அதற்கு மனிதரின் விண்வெளி ஆய்வுகள் மிகவும் முக்கியம். இன்று மனிதர் மேற்கொள்ளும் அனைத்து விண்வெளி ஆய்வுகளும், சாதனைகளும் ஆரம்பப் படிக்கற்கள். இந்தப்பின்னணியிலேயே சந்திராயன் 3 வெற்றியை நோக்க வேண்டும். இவ்வெற்றியின் மூலம் இந்தியா அமெரிக்கா, ருஷ்யா, சீனாவுக்கடுத்த சந்திரனின் தரையிறங்கிய நாடாக உருவெடுத்துள்ளது. மீண்டும் வாழ்த்துகள்.
- விக்ரம் தானிறங்கி -
விக்ரம் தரையிறங்கியை வெற்றிகரமாகச் சந்திரனில் இறக்கிய வெற்றியைத் தொடர்ந்து பிரகியான் தரையூர்தியும் தன் பணியினை வெற்றிகரமாகத் தொடருமென நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.
- பிரகியான் தரையூர்தி -