கடந்த ஒன்பது மாதங்களாக விண்வெளி ஆய்வுக்கூடத்தில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் எலன் மாஸ்கின் 'ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்' ((SpaceX Dragon) பத்திரமாகப் பூமி திரும்பினர். திட்டமிடாத வகையில் திரும்ப வேண்டிய போயிங்கின் விண்வெளிக் கப்பலில் ஏற்பட்ட ஹீலியம் ஒழுக்கு காரணமாகத் தொடர்ந்தும் விண்வெளி ஆய்வுக்கூடத்திலேயே அவர்கள் இருவரும் தங்க வேண்டியேற்பட்டது. பத்திரமாக பூமி திரும்பும் இருவரையும் , அவர்களுடன் கூடத் திரும்பும் மேலுமிரு விண்வெளி வீரர்களையும் வருக வருக என வரவேற்கின்றோம்.
இத்தருணத்தில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய வரவேற்புக் கவிதையையும் பகிர்ந்து கொள்கின்றோம்:
நல்வரவு சுனிதா வில்லியம்ஸ்
- வ.ஐ.ச.ஜெயபாலன் -
வருக சுனிதா.
பைன் மரக்காடென கூந்தல் உயர
வெளியெங்கும் பறந்தும் முக்குளித்தும்
கடல்கன்னியாய் மிதக்க எங்கு கற்றாய்?
சுனிதா, அங்கு அருகிருக்கும்
தேவர் உலகத்து இணையம் கிடைக்கிறதா?
*
மாட்டியதாய் சொன்னார்கள்
என்னாச்சடி சுனிதா?
தேடி விண்ணுக்கும் நீளுமோ
மனிதன் விதிக்கரங்கள்?
*
நிலம் வீழ்ந்த உறவுக்காய் காக்கை
வான் நிறைந்து அரற்றுதல்போல்
வான் தொலையும் உனக்காக நாங்கள்
மண் நிறைந்து பிரார்த்தித்தோம்.
உன் வருகை கேட்டுத்தான்
மீள மனசு உயிர்க்கும்
*
நாமிங்கு
கண்ணில் தொலைக்காட்ச்சி
கையில் ஆரத்தியென பரபரப்பாய்.
உன்னைக் கைவிட தெய்வமல்ல
நாங்கள் மானிடர்கள்.
வா தோழி
உன்னை அரவணைக்க பூமித்தாய்
இருகையும் விரித்தபடி.