- சமாதிகள் அமைந்திருக்கும் சூழல் -
அறிமுகம்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தொன்மையும் அருட்பெருமையும் வாய்ந்தது. இவ் ஆலய வரலாற்றுடன் சித்தர்களும் இணைத்துப் பேசப்படுகின்றனர். செல்வச்சந்நிதிக்கு அருகில் தெற்குப் புறமாக கரும்பாவளியில் அமைந்துள்ள சித்தர்களின் சமாதிகள் இவற்றை உறுதி செய்கின்றன. செல்வச்சந்நிதி ஆலயத்தின் தொன்மை, அதன் வழிபாட்டு முறை, அங்கு வாழ்ந்த சித்தர்கள், அவர்களின் சமாதிகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
ஆரம்பகாலத்தில் ஆலயத்தின் அருகே ஓடிய ஆறு ‘வல்லியாறு’ என அழைக்கப்பட்டது. இது சோழர் வரலாற்றுக்குப் பின்னரே ‘தொண்டைமானாறு’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. ‘படைக்கோயில்’ ஆகிய கதிர்காமத்துடன் தொடர்புபடுத்தி சந்நிதியும் நோக்கப்படுவதன் ஊடாக வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக்கம் முருக வழிபாடு இங்கு நிலவி வந்துள்ளமையை இப்பிரதேசத்தின் இயற்கைச் சூழமைவும் வெளிப்படுத்துகின்றது.
ஈழத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆகமமரபு சார்ந்தும் ஆகமமரபு சாராமலும் இரண்டு வகையான வழிபாட்டு மரபுகள் நிலவி வந்துள்ளன. கதிர்காமம், செல்வச்சந்நிதி, மண்டூர் கந்தசாமி ஆகியவை ஆகம மரபு சாராத பூசை முறைகளைக் கொண்டமைந்தவை. செல்வச்சந்நிதியில் அந்தணர் மரபல்லாதவர்கள் பூசை செய்கின்றனர். கதிர்காமத்தில் சிங்கள வேடுவர் பரம்பரையினர் பூசை செய்கின்றனர். இவர்கள் ‘கப்புறாளைமார்’ என அழைக்கப்படுவர். “மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் இன்னுமொரு முருகன் ஆலயம் சித்தாண்டிக் கந்தசுவாமி கோயிலாகும். இதுவும் ஒரு திருப்படைக் கோயிலாகும். இக்கோயிலை ஆரம்பத்தில் வேடுவரும், பின்னர் சித்தர் எனப்படும் ஆண்டியும் வழிபாடு செய்து வந்தமையினால் சித்தாண்டி எனப் பெயர் பெற்றதாக ஒரு ஐதீகம் நிலவுகின்றது.” (1) இவ்வகையில் இம்மூன்று முருகன் கோயில்களிலும் ஆகமம் சாராத வழிபாட்டு மரபு நிலவி வருவதோடு அவை அந்தணர் அல்லாதவர்களால் பூசை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடற்பாலது.
- அறையும் சிவலிங்க வடிவுமுடைய சிறிய சமாதி -
1.2 வழிபாட்டு முறை
செல்வச்சந்நிதி கோயில் வரலாறு ஐதீகங்களுடனும் புராணங்களுடனும் தொடர்புபட்ட வகையிலேயே பின்னிப் பிணைந்துள்ளது. முருகன், சூரனுடன் போர்புரிவதற்கு முன்னர் வீரபாகுதேவரை சூரனிடம் தூதாக அனுப்பினான். அதன்போது வீரபாகுதேவர் கல்லோடையில் தரித்து வழிபட்ட இடமே செல்வச்சந்நிதி எனக் கூறப்படுகிறது. இதனால் சந்நிதி முருகன் ‘கல்லோடைக் கந்தன்’ எனவும் அழைக்கப்படுகின்றான். ஆற்றங்கரையில் அமைந்த காரணத்தினால் ‘ஆற்றங்கரையான்’ எனவும் விளிக்கப்படுகின்றான். கோயிலின் உள்ளே உள்ள பிள்ளையார் மாணிக்கப் பிள்ளையார் என அழைக்கப்படுவார். அதன் முன் உள்ள தீர்த்தக்குளம் மாணிக்க கங்கை எனப்படுகிறது.
மற்றொரு ஐதீகம் சிகண்டி - ஐராவசு கதையூடாகச் சொல்லப்படுகிறது. சிகண்டி முனிவரால் சாபம் நீங்கப்பெற்ற ஐராவசு என்ற கந்தர்வன் வணங்கித் தியானம் செய்து முத்தி அடைந்த இடமே சந்நிதியாகும். அதன் அடையாளமாகவே இன்றும் சந்நிதியின் தலவிருட்சமான பூவரசு வணக்கத்திற்குரியதாக அமைந்துள்ளது.
16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் மருதர் கதிர்காமரால் புனரமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இது பற்றி குல சபாநாதன் தரும் கூற்றை நோக்கலாம்.
“அநாதி மல முத்தனாகிய முருகப் பெருமான் சந்நிதியில் எப்பொழுது கோயில் கொண்டெழுந்தருளினார் என்ற சரித்திர ஆராய்ச்சியில் சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய மக்கள் ஈடுபட்டு உண்மை காண்பதரிது. பண்டைக்காலத்தில் ஈழத்தில் சைவசமயம் சிறப்புற்று ஓங்கியபொழுது, செல்வச்சந்நிதி முருகன் கோயில் பல வீதிகளுடைய சிறந்த ஆலயமாக விளங்கியது. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் (டச்சுக்காரர்) இலங்கையில் ஆட்சி புரிந்த காலத்தில் தத்தம் சமயக் கொள்கையைப் பரப்பியதுமன்றி சைவக்கோயில்களைத் தகர்த்து அவை இருந்த இடமும் தெரியாமல் தரைமட்டமாக்கிவிடும் கைங்கரியத்திலும் ஈடுபட்டிருந்தனர். கதிர்காமத்தை இடிக்கச் சென்ற ஒல்லாந்தர் வழி தடுமாறி மயங்கிக் கடைசியில் அதனை அடைய முடியாது திரும்பி வந்துவிட்டதாக ஒல்லாந்தரே எழுதிய சரித்திரத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர். அதுபோலவே சந்நிதியிலும் ஒரு திருவிளையாடல் நடைபெற்றது. செல்வச்சந்நிதி முருகன் கோயிலை இடிக்கச் சென்ற ஒல்லாந்தர் அதனை முற்றாக இடிக்க முடியாது திரும்பிவிட்டனர்.” (2)
வேல் வழிபாடு இடம்பெறும் சந்நிதியில் தீபவழிபாடும் முதன்மை பெற்றிருக்கின்றது. நெய்த்தீபம், அடுக்குத்தீபம், புருஷா மிருக தீபம், கற்பூர தீபம், பஞ்சாரத்தி ஆகியவை பூசையின்போது காட்டப்படுகின்றன. இவற்றில் கற்பூரதீப வழிபாடு மிக விசேடமானதாகும். செல்வச்சந்நிதியில் 65 ஆலம் இலைகளில் அமுது படைக்கும் வழக்கம் உள்ளது. அந்த அமுது கிடைத்தால் அது ‘சந்நிதி மருந்து’ என அழைக்கப்படுகிறது. (சந்நிதி மருந்து என்பது ஆலம் இலையில் படைக்கப்பட்ட பச்சரிசி அமுதும் பயிற்றங்கறியும் ஆகும்)
‘சந்நிதி மருந்து’ என்பதுபோல சந்நிதி தொடர்பான வேறு சில சொல்லாடல்களும் கவனத்திற்குரியன. அன்னதானக் கந்தன், மாவிளக்கு, ஆண்டியப்பர் பூசை, வாய்கட்டிப் பூசை செய்தல், வள்ளிக் கிழங்கு, தலவிருட்சம் பூவரசு, வேல் அனுப்புதல், பயணப்பிட்டு (உழுத்தப்பிட்டு), நெய் விளக்கு, தேனும் தினைமாவும், பயற்றம் துவையல், இளநீர் பால் றொட்டி முதலானவை முக்கியமானவை. இச்சொல்லாடல்களின் பின்னால் வழிபாடு, நேர்த்திக்கடன், நம்பிக்கை சார்ந்த விரிவான அர்த்தப்பாடுகள் உள்ளன.
‘மதசனநாயக நிலை’ சந்நிதியின் பிரதான மத அனுபவ அம்சம் என்று செல்வச்சந்நிதி வழிபாட்டில் சமூகம் தொடர்பாக பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.
“இக்கோயிலின் மிகப்பெரிய சிறப்பு, இங்குவரும் பக்தர்கள் முருகனுடன் நடத்திக்கொள்ளும் சொல்லாடலாகும். அவனுடன் பேசுவது போன்ற ஒரு பாவனை. அவனும் தங்களுக்குச் சொல்கின்றான் என்ற நம்பிக்கை, ஆத்மார்த்தமான சொல்லாடலுக்கு இங்குள்ள பூசை மரபுகள் இடைநிற்பதில்லை. கோயிலடியில் நின்றாலே அந்த இணைவு ஏற்படுகின்றது. இந்த மரபு சந்நிதியில் பேணப்படுவது முக்கியம். அதனை வளர்ப்பதற்கு எவ்வெவற்றைச் செய்யலாம் என்று பார்ப்பதிலும் பார்க்க, அந்த மரபை ஊறு செய்வதற்கு எவ்வாறு இடம் கொடாது விடலாம் என்று பார்ப்பது முக்கியம். அதுவே தலையானதாகும். சந்நிதியின் பிரதான மத அனுபவ அமிசம் அதன் ‘மதசனநாயக’ நிலையாகும். இங்கு ஒதுக்கப்பாடுகள் இல்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி சகலரும், சந்நிதி முருகனைத் தங்கள் நிலைநிற்கும் தெய்வமாகவே கருதி வழிபடுகின்றனர். அதேவேளையில் இந்த ஸ்தலம் ஞானிகள் சித்தர்கள் வாழ்கின்ற ஒரு மையமாகவும் உள்ளது. நமது மத காலத்தில் இரண்டு அலைவரிசைகள் இங்கு அற்புதமாக இணைந்துள்ளன.” (3)
- அறையும் உள்ளே சிவலிங்க வடிவமும் அமைந்த சமாதி வைரமுத்து சுவாமிகளுடையது -
1.3 மடங்கள்
செல்வச்சந்நிதிச் சூழலில் பல மடங்கள் இருந்துள்ளன. இம்மடங்கள் சந்நிதியின் கோயிற்பண்பாட்டில் இரண்டறக் கலந்துள்ளன. (விரிவுக்குப் பார்க்க : ந. அரியரத்தினம், சந்நிதியில் சித்தர்கள், 2018) 1960-70 களில் 40ற்கும் மேற்பட்ட மடங்கள் சந்நிதியில் அன்னதானச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.
“மடமாவது பெரியோர்கள் இருந்து கொண்டு கல்வியறிவொழுக்கத்தையும் சமயத்தையும் வளர்த்தற்கு உரிய இடமாகும். மடத்திலே செபம், பூசை, தியானம் முதலியவற்றிற்கும் வேதாகமத் திருமுறைகளை வைத்துப் பூசை செய்தற்கும், வேதாகமங்களைப் படித்தல், படிப்பித்தல்களுக்கும் சமையல் போசனை முதலியவற்றிற்கும் பரிசாரர்களும் அதிதிகளும் இருத்தற்கும் வெவ்வேறிடங்கள் விதிப்படி கட்டப்பட்டிருத்தல் வேண்டும்.” (4) என்று குறிப்பிடப்படுகிறது.
சத்திரம் என்பதும் மடம் என்பதும் சிறிய வேறுபாடுகளைக் கொண்டனவாக அமைந்துள்ளன. மடம் என்பதிலிருந்து சத்திரம் வேறுபட்டது. “சத்திரமாவது ஞானிகள் துறவிகள் முதலிய பெரியோர்களுக்கும் தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியில்லாதவர்களாகிய குருடர், முடவர், வியாதியாளர், வயோதிகர், சிறுபிள்ளைகள் என்பவர்களுக்கும் அன்னதானம் நடத்தற்கும் வழிப்போக்கர்கள் தங்குவதற்கும் உரிய இடமாகும்” (5) என்று ஆறுமுகநாவலர் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் அமைந்திருந்த மடங்களில் சில சத்திரங்களாகவும் சில மடங்களாகவும் செயற்பட்டிருக்கின்றன என்பது புலனாகின்றது. தற்போது இயங்குகின்ற மடங்களில் சந்தியான் ஆச்சிரமம் சத்திரமாகவன்றி மடமாகவே செயற்படுகிறது. (விரிவுக்குப் பார்க்க : ஞானச்சுடர்)
“நோய்வாய்ப்பட்டு மடங்களிலே வந்திருக்கும் மக்கள் நாளாந்தம் ‘மாணிக்க கங்கை’ என்னும் தீர்த்தக் குளத்தில் நீரிலே நீராடினால் நோய் குணமாகும் என நம்பினர். தொடர்ந்து ஏழு நாட்கள் தொண்டைமானாற்றிலே முழுகி எழுந்தால் நோய்கள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்தது. நோயாளர் மடங்களிலே தங்கியிருக்கும்போது அவர்களுக்குத் தேவையான உடல் ஓய்வும் உள ஓய்வும் கிடைக்கக் கூடியதாகவிருந்தது. பார்வையாளர் தொந்தரவின்றிப் படுக்க முடிந்தது. காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஆற்றங்கரையானைத் தரிசித்து அவனருள் பெற்றுப் பலர் நோய் குணமாகினர்.” (6) இதுமட்டுமன்றி பல்வேறுவிதமான நேர்த்திக் கடன்களைக் கழிப்பதற்காகவும் மடங்களில் அன்னதானப் பணியினையும் செய்து வந்துள்ளனர்.
அன்னதான நடைமுறை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததற்கு “கருணாகரத் தொண்டைமான் தொண்டைமானாற்றை வணிக நோக்கில் வெட்டினான். தொண்டைமானாற்றுத் துறையிலே பெருந்தொகையான வணிகர்கள் வந்திறங்கிப் போன காரணத்தால் அவர்களுக்கு, முருகனுக்குக் குவியலாகச் சோற்றினைப் படைத்து. பின்னர் பகுத்துக் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கவேண்டும். இந்நடைமுறைக்கு இவ்வணிகர்களே பொருளுதவியும் செய்திருக்கலாம்.” (7) என்று கருதுவதும் பொருத்தமுடையதாக அமைந்திருக்கிறது. ஏனெனில் தொண்டைமானாற்றுப் பிரதேசம் சோழர்கால அரசியற் பின்புலத்தில் முக்கியத்துவமுடையதாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி செட்டிமாரின் பங்களிப்பும் ஆலய வரலாற்றுடன் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வகையில் பெருமளவு மடங்கள் இயங்கி அன்னதானப் பணி இடம்பெற்றமைக்கு அடியார்களின் நேர்த்திக்கடன் - நம்பிக்கை தொடர்பான பண்பாட்டு அம்சங்கள் மட்டுமன்றி அரசியல் பொருளாதாரக் காரணிகளும் ஆதாரமாக இருந்திருக்கலாம். இதற்கூடாகவே மடங்கள் இயங்கியிருக்கின்ற பின்புலத்தையும் புரிந்து கொள்ளவேண்டும்.
- அறையும் உள்ளே பீடமும் அமைந்த சமாதிகள் நாகமுத்து ஐயர் அவரது துணைவியாருடைய சமாதிகள் -
1.4 கரும்பாவெளிப் பிரதேசச் சூழல்
கரும்பாவெளிப் பிரதேசச் சூழல் ஒர் இயற்கை அமைவிடமாக ஆதிகாலத்திலிருந்து நிலவியிருக்கிறது. இப்பிரதேசம் மரபுரிமைச் சின்னங்கள் நிறைந்த இடமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. உடுப்பிட்டியைச் சேர்ந்த குமாரசுவாமி பெண் வீராத்தை வெட்டுவித்த கேணி, ஆவுரோஞ்சிக்கற்கள், குண்டுக் கிணறுகள் அமைந்துள்ளன. இப்பிரதேசம் மக்களின் போக்குவரத்திற்குரிய வண்டிற் பாதையாகப் பயன்பட்டிருக்கிறது என்று பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் கரும்பாவளிக் கேணியில் அமைக்கப்பட்டிருந்த ஆவுரோஞ்சிக் கல்லின் எழுத்தாதாரத்தைக் கொண்டு குறிப்பிட்டுள்ளார். (விரிவுக்குப் பார்க்க: ஆறு, தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூற்றாண்டுவிழாச் சிறப்புமலர், 2012) நன்னீரேரி, பறவைகள் சரணாலயம், ஆறன் கிணறு, மயானம், ஆநிரைகளின் மேய்ச்சல்தரை, மூலிகைத்தாவரங்கள் முதலானவை உள்ளடங்கியதே கரும்பாவெளி ஆகும். மக்களின் பேச்சுவழக்கில் இப்பிரதேசம் ‘கரும்பாளி’ என அழைக்கப்படுகின்றது. கரம்பைச் செடி அதிகம் இருந்த காரணத்தாலும் இப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருக்கலாம். செல்வச்சந்நிதி கோவிலுக்குத் தெற்காக நீரேரியை அண்மித்ததாக 15ற்கும் மேற்பட்ட சித்தர்களின் சமாதிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசம் மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பிரதேசமாக இருந்தமையும் சித்தர்கள் இங்கு உலாவந்தமைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இப்பிரதேச மூலிகைத் தாவரங்கள் பற்றி குறிப்பிடும்போது “யாழ் குடாநாட்டில் வேறு எங்கும் பெற முடியாத மூலிகைச் செடிகள் இங்கே காணப்படுகின்றன. இயற்கை மருத்துவம் சார்ந்த ஊர்ப்பெரியவர் ஒருவரின் தகவற்படி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஒளடதமாக அமையும் சுமார் 100 வகையான மூலிகைகளை இங்கு அடையாளம் காட்டமுடியும் எனக் குறிப்பிடுகின்றார். முட்புல்லாந்தி, சிவனார் வேம்பு, எருமைமுல்லை, பிரண்டை, ஆவரசு, காரை, துவரை, தூத்துமாங்கொடி, சாத்தாவாரி, குன்றிமணி, பால் அறுகு, குமிழ், நிலப்பருத்தி, நீர்மேல்நெருப்பு, கீழ்க்காய் நெல்லி, புல்லாந்தி, காட்டுப்பலா, நொச்சி, எருக்கலை போன்றன அவற்றுள் சிலவாகும். இவை இப்பகுதிக்குள் காணப்படுகின்றன என்பது வைத்தியர்கள் உட்பட பலரும் அறிந்திராத ஒரு விடயமாகும்.” (8)
1.5 செல்வச்சந்நிதியுடன் தொடர்புடைய சித்தர்கள்
சித்தி என்றால் வெற்றி பெறல், அடைதல் என்று பொருளாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பெரும் சித்துக்களும் பெற்றவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். “சாதாரண மனிதர்கள் சித்தர் கல்வி கற்று, வாசி யோகம் செய்து சித்தி பெற்று அதன்பின் 10 ஆண்டுகள் சிவயோகம் என்ற தசதீட்சை செய்து சித்தி பெற்றுச் சித்தர் ஆகிறார்கள். மனித உடலுடன் மனிதர்களாக வாழ்பவர்கள். மக்களோடு மக்களாக வாழ்பவர்கள் சிலர் குகைகளில் வாழ்பவர்கள். இவர்கள் தமது மூச்சுக் காற்றை அதன் வழியில் இயக்காமல் மூச்சுக் காற்றைத் தமது விருப்பம்போல் இயக்குபவர்கள். இது அவர்களை அடையாளப்படுத்தும். தூய தியானத்தில் சமாதி நிலையில் இருப்பவர்கள். இறைவனுடன் ஒன்றி ஒளி உடம்பு பெற்றவர்கள். இவர்கள் ஒளி வடிவில் தரிசனம் தருபவர்கள்” (9) என்று சித்தர்களாகும் நிலையையும் அவர்கள் எந்த வடிவில் காட்சி கொடுப்பார்கள் என்பதையும் சித்தர் யோகம் சொல்கிறது.
செல்வச்சந்நிதி சித்தர் பரம்பரையில் முதற்சித்தராக ஐராவசு சித்தர் குறிப்பிடப்படுகிறார். சந்நிதியின் தலவிருட்சமாக அமைந்துள்ள பூவரசு மரத்தடியில் அவர் சமாதியடைந்தார் எனவும் கருதப்படுகிறது. ஐராவசு, யானையாக உலாவந்து துன்புறுத்தியபோது சிகண்டி முனிவர் வெற்றிலை நுனியை எறிய அது வேல் போல் யானையைத் தாக்கி ஐராவசுவின் சாபத்தை நீ;க்கியது. “சிகண்டி முனிவரால் வேல் வடிவிலான வெற்றிலை நுனியினால் மதங்கொண்ட யானையை அடித்து கந்தர்வனை முக்தி அடையச் செய்த வரலாற்றை நினைவு படுத்தும் முகமாகவே இன்றும் எழுந்தருளி வேலின் முகப்பில் வெற்றிலை நுனி வைக்கப்பட்டு வருகின்றது.” (10) என்று ஐராவசு சித்தர் சந்நிதி வரலாற்றுடன் தொடர்புபடுத்தப்படுகின்றார்.
தொண்டைமானாறு கரும்பாவளிப் பிரதேசம் சித்தர்கள் உலாவிய இடம் என்பதனை ந. அரியரத்தினம் அவர்கள் குறிப்பிடும்போது,
“கரம்பாவெளிப் பிரதேசம் ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தின் தெற்குத் திசையில் அதன் எல்லையை அடுத்துள்ள பிரதேசமாகும். இந்தப் பிரதேசம் ஆன்மீக ஈடேற்றத்திற்குத் தம்மை பக்குவப்படுத்துபவர்களுக்கு வேண்டிய மன அமைதியையும் சாந்தியையும் ஏற்படுத்தக்கூடிய சூழலைக் கொண்டமைந்துள்ளது. இந்த இயற்கைச் சூழலை எம்மைவிட சிறப்பாகப் பயன்படுத்திப் பயனடைந்தவர்கள் சித்தர்களே. எமது நாட்டைச் சேர்ந்த மயில்வாகனம் சுவாமிகள் மற்றும் கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்த ஜேர்மன் சுவாமிகள், பிரித்தானியாவிலிருந்து வந்த ஆனைக்குட்டி சுவாமிகள், புலிக்குட்டி சுவாமிகள், பன்றிக்குட்டி சுவாமிகள் ஆகியோரும் இந்தக் கரம்பாவெளிப் பகுதியில் தனிமையில் உலாவந்து தம்மை தவ வாழ்க்கைக்கு பக்குவப்படுத்தியுள்ளனர். ஜேர்மன் சுவாமிகள், ஆனைக்குட்டி சுவாமிகள் ஆகியோர் இங்கே வந்து மௌனமாகத் தவமிருந்த இடங்களையும் நாம் நன்கு அடையாளம் கண்டு கொள்ளமுடிந்துள்ளது. அத்துடன் வைரமுத்து சுவாமிகள் உட்பட பல சுவாமிகளின் சமாதிகளும் இங்கே உள்ளன.” (11)
சந்நிதியில் சித்தர்கள் என்ற நூலில் செல்வச்சந்நிதியுடன் தொடர்புடைய 30ற்கும் மேற்பட்ட சித்தர்கள் மற்றும் அருளாளர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் மறைந்தவர்கள் மட்டுமன்றி இன்று சந்நிதியில் நடமாடுவோரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐராவசுச்சித்தர், மருதர் கதிர்காமர், இடைக்காட்டுச் சித்தர், வைரமுத்துச் சுவாமிகள், நடராசா சாமியார் (அடியார் மடம்), அருளாளர் விநாசித்தம்பி, ஜேர்மன் சுவாமிகள், ஆனைக்குட்டிச் சுவாமிகள், நரிக்குட்டிச் சுவாமிகள், பன்றிக்குட்டிச் சுவாமிகள், முருகேசு சுவாமிகள், சடைவரத சுவாமிகள், மயில்வாகனம் சுவாமிகள், சிவயோக சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள், செந்தில் சாமியார், கொல்லிமலைச் சித்தர், வைரமுத்துச் சாமி, தம்புசாமி, நடராசா சாமியார் (மணியம் மடம்) தம்பையா சாமியார், புதுக்குடியிருப்பு சுவாமிகள், இணுவில் சாமியார், புங்குடுதீவுச்சுவாமிகள், பாபாச் சாமிகள், கைதடிச் சுவாமிகள், தியாகராசா சாமியார், சின்னத்தம்பி சாமிகள், மௌனகுரு சுவாமிகள், மலர் அம்மா, அருளாளர் குமாரசாமி ஐயர் ஆகியோரை சந்நிதிச் சூழலுடன் தொடர்புபடுத்தி ந. அரியரத்தினம் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
பூசகர்கள் வாய்கட்டிப் பூசை செய்கின்ற வழிபாட்டு நடைமுறைக்கும் சந்நிதியில் சித்தர் பரம்பரையொன்று தழைத்தோங்கியதற்கும் தொடர்பு கூறலாம். அதாவது சித்தர்கள் சில வழிபாட்டு நடைமுறைகளை எதிர்த்தவர்கள். இலக்கியத்தில்கூட சித்தர் பாடல்கள் எதிர்ப்புக் குரலாக ஒலிப்பதை நாம் அறிந்துள்ளோம். அவ்வகையில்
“வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினஞ் செபிக்கு மந்திரம்
முந்து மந்திரத்திலோ மூலமந் திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்தியங்குமோ?”
என்ற சிவவாக்கியரின் சித்தர் பாடல் கூறுவதுபோல் சித்தர்களுக்கு சடங்கு கிரியை முதலானவற்றில் நம்பிக்கையில்லை. இதனாலே ஆகமமரபு சாராத வழிபாட்டு முறையில் வந்த செல்வச்சந்நிதியும் சித்தர்கள் பரம்பரையொன்று நீண்ட நெடிய மரபில் தழைத்தோங்குவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கவேண்டும். இதனை ஆற்றங்கரையான் நூலிலும் அ. சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் எடுத்துரைத்துள்ளனர்.
இவ்வகையில் சந்நிதியுடன் தொடர்புடைய சித்தர்களில் சந்நிதிச் சூழலில் சமாதியடைந்தவர்களையும் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட கரும்பாவளி சித்தர்மேட்டில் அமைந்துள்ள சித்தர் சமாதிகளையும் இனங்காணும் முயற்சிகள் சிலவற்றை நோக்குவோம். (இது தொடர்பில் கலாநிதி சு. குணேஸ்வரன், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செ. சுதர்சன், தனு பதிப்பக நிறுவுநர் வே. பவதாரணன் ஆகியோர் இணைந்து சமாதிகளை இனங்காணும் முயற்சியிலும் அதனுடன் தொடர்புடைய மரபுரிமைச் சின்னங்களை வெளிப்படுத்தும் வகையிலும் களப்பயணம் மேற்கொண்டு எழுதப்பட்ட கட்டுரையை பதிவுகள் இணைய இதழில் வாசிக்கலாம்.)
1960, 70 களில் அடியார் மடத்தில் அன்னதானப் பணியை முன்னெடுத்தவரே வைரமுத்து சுவாமிகள். மடத்திற்குள் வேல் வைத்து வழிபட்டவர். அதற்கென வழிபாட்டு அறை ஒன்றைப் பேணியவர். வைரமுத்துச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தின் தெற்குத் திசையில் அமைக்கப்பட்டுள்ளது. செட்டியவூர் தொண்டைமானாற்றில் வாழ்ந்து வரும் கறுப்பையபிள்ளை, வைரமுத்து சுவாமிகளின் சமாதியை கட்டுரையாளரின் நேரடித் தரிசிப்பின்போது அடையாளம் காட்டியுள்ளார். சுவாமிகளின் குருபூசைத் தினத்தில் பூசை செய்து படையல் படைத்து ஆதரித்து வருகின்றார். வைரமுத்து சுவாமிகளின் சமாதி கரும்பாவளியில் கிழக்குப்பக்கமிருந்து இரண்டாவது சமாதியாக அமைந்துள்ளது. (தகவல் : கறுப்பையாபிள்ளை, வயது 80, செட்டியவூர் தொண்டைமானாறு) இவரின் சமாதி சிறிய அறையாக அமைக்கப்பட்டு உள்ளே சிவலிங்க வடிவம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.
“தினமும் மாலை நேரங்களிலும் மற்றும் ஓய்வாக இருக்கும் காலங்களிலும் தேவார திருவாசகங்கள் மற்றும் கந்தபுராணம் போன்றவற்றை ஆழமாகக் கற்றுணர்ந்து சைவசமய சீலராக வாழ்கின்ற செயற்பாட்டிலும் இவர் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார். ஒருபுறம் அடியார்கள் பசி போக்குகின்ற அன்னதானப் பணியை மேற்கொண்ட அதேநேரம் மறுபுறம் தன்னை ஞானநிலைக்கு பக்குவப்படுத்துகின்ற வகையிலும் இவரது அருள் வாழ்க்கை அமைந்திருந்துள்ளது. வைரமுத்து சுவாமிகளின் சமாதி ஆலயத்தின் தெற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது.” (12) என்பதனூடாக வைரமுத்து சுவாமிகளின் சமாதி கரும்பாவளி சித்தர் மேட்டில் அமைந்துள்ளமை உறுதியாகின்றது.
ஜேர்மன் சுவாமிகள் 1907 இல் ஜேர்மனியில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் பீற்றர் யேச்சிம் ஸ்கொன் பெல்ட் 1930 இல் (27 வயதில்) இந்தியாவுக்கு ஆன்மீகப் பயணம் செய்து பின்னர் இலங்கை வந்தவர். இலங்கை தென்பகுதியில் பௌத்த துறவிகளுடன் சேர்ந்து பௌத்தம் பற்றி அறிந்தார். பின்பு இந்தியா சென்றார். பின்னர் கதிர்காமத்தில் பல ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டார். யாழ்ப்பாணம் வந்து ஸ்ரீலங்கா புத்தகசாலையில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிவயோக சுவாமிகள் அங்கு வந்து புத்தகத்தை இழுத்துப் பறித்து, “சும்மா இரு” என்று கூறினார். அன்றிலிருந்து அவரைக் குருவாகக் கொண்டு கதிர்காமத்திற்கு மட்டும் பல தடவைகள் சென்று வந்தார். சந்நிதியிலிருந்து கதிர்காமம் செல்லும் பாதயாத்திரைக்கு வித்திட்டவரும் இவரே. இவரின் தலைமையில் செல்வச்சந்நிதியில் இருந்து பல அடியார்கள் கதிர்காம யாத்திரை சென்றுள்ளனர். பல நூல்களைப் படித்து ‘சும்மா இரு’ என்ற தத்துவத்தைத் தேடியுள்ளார். செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் அமைந்திருந்த ஆனந்தா ஆச்சிரமத்தின் ஆதரவு இருந்தது. ஆனந்தா ஆச்சிரமத்திற்கு அருகில் பன்னசாலை அமைத்து வாழ்ந்தார். “சும்மா இருக்கச் சூத்திரம்” என்ற தொகுப்பு நூலையும் வெளியிட்டார். தொண்டைமானாற்றிலேயே சமாதி அடைந்தார். இவரது உடல் அக்கினியில் எரியூட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
150 வருடங்களுக்கு முன்னர் தொண்டைமானாறு ‘சின்னப்பரியாரி’ என்று அழைக்கப்படும் புலவர் ஆண்டியப்பர் என்ற முருக அடியாரினால் பாடப்பட்ட எச்சரிக்கையும் பராக்கும் இன்றும் மரபு மாறாமல் பாடப்பட்டு வருகிறது. இதனூடாக பரியாரியார் மரபு ஒன்று இருந்திருக்கிறது எனவும் அவர்கள் புலமை மிக்கவர்களாகவும் முருகன் மீது பக்திகொண்ட அடியார்களாக இருந்துள்ளார்கள் என்பதும் தெரியவருகின்றது. இதனை அடியொட்டி கரும்பாவளி சமாதி மேட்டில் அடையாளம் காணக்கூடிய சமாதிகளில் ஒன்றாக பரியாரி ஆ. சுந்தரம் (சுந்தரப்பா) அவர்களது சமாதியைக் குறிப்பிடலாம். அவரின் பேரனாரான துரையர் சண்முகசுந்தரம் (வயது 60, சந்நிதி கிழக்கு, தொண்டைமானாறு) அவர்களுடனான நேரடியான உரையாடலினூடாக கட்டுரையாளரால் உறுதிப்படுத்தவும் அடையாளப்படுத்தவும் முடிந்தது.
ஆழ்வான் சுந்தரம் ஆயுர்வேத வைத்தியராகவும் கால்நடை வைத்தியராகவும் இருந்தவர். ஏட்டிலே எழுதிப் படித்தவர். ஞான சிந்தனை உடையவர். தனது வீட்டில் வேப்ப மரத்தின் கீழ் அம்மியும் குளவியும் வைத்து அம்மன் வழிபாட்டை மேற்கொண்டவர். உடுக்கு வாசிக்கக் கூடியவர். அண்ணாவியாராக அறியப்பட்டவர். நாடகங்கள் நடிப்பதிலும் மேடையேற்றுவதிலும் ஈடுபட்டவர். குடுமி வைத்த ஆன்மீகவாதிகள் அருளார்களுடன் தொடர்பு வைத்திருந்தவர். தனது இறப்புக்குப் பின்னர் தனது உடல் புழு பூச்சிகளுக்கும் இந்த மண்ணுக்கும் பயன்படவேண்டும் அதனால் தன்னை எரியூட்டக்கூடாது என்று விரும்பியவர். 18.08.1969 இல் வைரமுத்துச் சுவாமிகளின் சமாதி அருகே இவரது சமாதி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த சமாதியில் 1969 என்ற ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் : செல்வச்சந்நிதி சித்தர் மடம் மறைந்தனவும் மறைக்கப்பட்டனவும், த. தயாபரன் ப33)
வீரசைவ மரபில் சமாதியடைந்தவர்களை எரிக்கும் வழக்கம் இல்லை. “சிவலிங்கப் பெருமானை புறத்தில் வைத்துப் பூசித்து மனம் நிறைவுறாது, அங்கத்தில் அணிந்த வீரசைவர் சிவனுக்கு ஒப்பாவர். வாழ்நாள் முழுவதும் சிவசின்னம் தாங்கிச் சிவனை மறவாச் சிந்தையுடன் வாழும் வீரசைவரின் ஆன்மா, சிவமெனவே கருதப்படுகிறது. அவ்வான்மா பிரிந்த உடல் சிவன் கோயிலுக்கு ஒப்பானது. சிவனைப் பிரதிட்டை செய்த சிவன் கோயிலுக்கு யாரும் நெருப்பு வைப்பதில்லை. அவ்வாறே அகக்கோயிலில் சிவலிங்கத்தைப் பூசித்த ஒருவரின் உடலுக்கு தீ வைத்தல் கூடாது. பஞ்சபூதங்களினால் ஆகிய உடலை அப் பஞ்ச பூதங்களும் உள்ள பூமியிற் புதைத்தாலே பூதங்கள் ஐந்து அவ்வவ் கூறுகளுடன் சேரும் என்பது அறிவியல் துணிபு. சமய நோக்கும் அறிவியல் நோக்கும் இசைவுற அமைந்ததே வீரசைவரின் சமாதி வைக்கும் முறையாகும்.” (13) என்ற கூற்றும் கவனத்திற்குரியது.
- சமாதிகளின் அருகில் மேற்கில் தொண்டைமானாறு நீரேரி -
ஜேம்ஸ் ராம்ஸ் பொதம் என்ற இயற்பெயர் கொண்ட ஆனைக்குட்டி சுவாமிகள் ஆனந்தா ஆச்சிரமத்தில் தங்கியிருந்தவர். இவர் சந்த சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர். சோல்பரி பிரபுவின் மகன். யோகர் சுவாமிகளுடன் கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் தங்கியிருந்து அவரைக் குருவாகக் கொண்டிருந்தார். பின்னர் செங்கலடி சிவதொண்டனில் பன்னிரண்டு வருடம் பணி புரிந்தார். பின்னர் பிரித்தானியா திரும்பிச் சென்றார்.
வரி ஓவன் வின்சன் என்ற இயற்பெயருடைய நரிக்குட்டி சுவாமிகள் 1930 இல் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். 1950 இல் இலங்கை வந்தவர். இவரும் ஆனந்தா ஆச்சிரமத்தின் அருகில் பன்னசாலை அமைத்துத் தங்கியிருந்தவர். 1994 இல் திருவண்ணாமலையில் சமாதி அடைந்தார்.
பன்றிக்குட்டி சுவாமிகள் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழர். ஆனந்தா ஆச்சிரமத்தில் தங்கியவர். இவரும் பன்னசாலை அமைத்து வாழ்ந்தவர்.
வேலுப்பிள்ளை முருகேசு என்ற இயற்பெயரைக் கொண்டவர் முருகேசு சுவாமிகள். 23.05.1920 இல் தும்பளையில் பிறந்தார். தீராத நோயால் பீடிக்கப்பட்டு முருகன் திருவருளால் நோய் நீங்கப் பெற்றார். அன்றிலிருந்து முருகன் அடியவரானார். 1990 ஆம் ஆண்டு முதல் சந்நிதியான் ஆச்சிரமத்தின் சகல செயற்பாடுகளிலும் முன்னின்றவர். காசிக்குச் சென்று தனக்குத்தானே சகல கிரியைகளும் செய்து பூர்வக் கிரியைக்குரியவராகத் திரும்பினார். இவர் 16.03.1997 இல் மறைந்தார். மக்கள் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியபோதுமுருகேசு சுவாமிகள் தனது தொண்டர்களின் துணையுடன் பங்குனி மாதம் சந்நிதியானின் கும்பாபிஷேகத்தை செய்து முடித்தவர். அவர் சமாதியடைந்ததும் பங்குனி மாதம்தான். அவருடைய நினைவுநாள் அவரது அடியவர்களாலும் தொண்டர்களாலும் வருடந்தோறும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சடைவரத சுவாமிகள் 1950 - 60களில் சந்நிதியில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அடியார் மடம், தொண்டர் மடம் ஆகியவற்றைத் தாபித்தவர். இந்த மடம் பின்னர் வைரமுத்துச் சுவாமிகள், நடராச சுவாமிகள் ஆகியோரால் நடாத்தப்பட்டது. இவர் தீவுப்பகுதியைச் சேர்ந்த முருகேசு சுவாமியாரால் உபதேசம் பெற்று சடைவரதர் என்ற தீட்சாநாமம் பெற்றார். இவரின் சீடர்களில் ஒருவராகிய அருளானந்தசிவத்தின் அழைப்பின்பேரில் ஏழாலை நால்வர் மடாலயத்தில் தங்கிய மறுநாள் பத்மாசனத்தில் இருந்தவாறே சமாதியடைந்தார். இவரது சமாதி ஏழாலையில் அமைந்துள்ளது. கச்சேரியடியில் அமைந்திருந்த கோயில் ஒன்றில் ஆடு மாடு பலியிடப்பட்டு வந்ததை நிறுத்தியமை சடைவரத சுவாமிகளின் செயற்பாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
மயில்வாகனம் சுவாமிகள் 1913 இல் ஆனைப்பந்தியில் பிறந்தவர். 1936 ஆம் ஆண்டில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர். மணியம்மடத்தில் சில காலந் தங்கினார். 1940 முதல் 1985 வரை ஆனந்தா ஆச்சிரமத்தை நடாத்தினார். மயில்வாகனம் சுவாமிகள் இரத்தினசாமி ஐயரின் தென்னங்காணிக்குள் ஒரு கொட்டில் அமைத்து அன்னதானப்பணி புரிந்துவந்தவர். அப்போது செட்டிமார்கள் மண்டபம் கட்டிக் கொடுத்தார்கள். ஆனந்தா ஆச்சிரமத்தையொட்டி அன்னதானப்பணி மட்டுமல்லாமல் பல ஆன்மீகப் பணிகளும் இடம்பெற்றுள்ளதை வரலாறு காட்டுகிறது. இறுதியில் 1985 இல் சமாதி அடைந்தார். இவரின் சமாதி அடையாளம் காணப்படவில்லை. “ஆலயத்தின் தெற்குத் திசையில் சிறிது தூர விலகி ஆட்கள் நடமாட்டமற்ற அந்தப் பகுதிய பரந்து விரிந்து புல்வெளியாகவும் பறவைகள் சரணாலயமாகவும் இயற்கைக் காடுகள் நிறைந்த மனதைக் கவரும் ரம்மியமான பகுதியாகவும் காணப்படுகிறது. இந்த இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் உலாவந்து இயற்கையின் எழிலை உள்வாங்கி மனதை ஒரு நிலைப்படுத்தும் செயற்பாடுகளில் ஏற்கனவே மயில்வாகனம் சுவாமிகள் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.” (14) என்ற கூற்றும் கரும்பாவளிப் பிரதேசத்தையே குறிக்கின்றது.
இவரால் அமைக்கப்பட்ட ஆனந்தா ஆச்சிரமத்தையொட்டி பல இறைபணிச் செயற்பாடுகள் நிகழ்ந்துள்ளன. “எனது மறைவுக்குப் பின் நீ எங்குமே போகவேண்டாம். முருகன் காலடியிலேயே இந்த அன்னதானப் பணியையே தொடர்ந்து செய்துவா. முருகன் துணை நிற்பான்” என்று ஆனந்த ஆச்சிரம நிர்வாகியாக இருந்த மயில்வாகனம் சுவாமிகளின் அறிவுரையே சந்நிதியான் ஆச்சிரமத்தின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தது என்று மயில்வாகனம் சுவாமிகளின் சீடராக இருந்த மோகனதாஸ் சுவாமிகள் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கரும்பாவளியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய சமாதி நாகமுத்து ஐயருடையதும் அவரின் மனைவியினதுமாகும். இவற்றை விட அடையாளம் காணமுடியாத பல சமாதிகள் கரும்பாவளியில் அமைந்துள்ளன. சந்நிதிச் சூழலுடன் தொடர்புடைய ஏனைய சித்தர்கள் சமாதியடைந்த இடங்களை ந. அரியத்தினம் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். அதனால் அவை பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை. இந்த வகையில் சந்நிதிச் சூழலில் இயற்கையடைந்த ஜேர்மன் சுவாமிகள், முருகேசு சுவாமிகள், மயில்வாகனம் சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்கு சமாதி வைக்கப்பட்ட தகவல்களை அறியமுடியாதுள்ளது. வைரமுத்து சுவாமிகள், பரியாரியார் சுந்தரப்பா, தம்புச்சாமி, கொடிகாமம் சுவாமி, நாகமுத்து ஐயர் முதலானோரின் சமாதிகளே இனங்காணப்பட்டுள்ளன.
சின்னக்குட்டி வல்லிபுரம் சாத்திரியாரின் மாமன் மாமி (பெயர்கள் அறியப்படவில்லை) இருவரும் சந்நிதியில் சிவதொண்டர்களாக இருந்துள்ளார். இவ்விருவரின் சமாதிகளுடன் கொடிகாமம் மடத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவரினதுமாக மூன்று சமாதிகள் அருகருகே பீடமும் சிவலிங்க வடிவத்தையும் ஒத்தனவாக அமைந்துள்ளன. இவற்றுடன் வைரமுத்துச் சாமிகளின் சமாதி அருகே அறையும் பீடமும் அமைந்த சமாதி தம்புச்சாமியினது என அடையாளம் காணப்பட்டுள்ளது. (தகவல் : து.சண்முகசுந்தரம், வயது 60, சந்நிதி கிழக்கு, தொண்டைமானாறு) இச்சமாதி அண்மையிலே இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இச்சமாதியின் அருகிலேயே ஜேர்மன் சுவாமிகளதும் மயில்வாகனம் சுவாமிகளினதும் உடல்கள் அக்கினியில் எரியூட்டப்பட்டன. ஆனால் அவர்களுக்கு சமாதி அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
கரும்பாவளிச் சூழலில் ஒருபகுதி மயானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் சமூகவேறுபாடு பாராட்டும் வகையில் மயானங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் கவனத்திற் கொள்ளத்தக்கது, செல்வச்சந்நிதி ஆலயத்துடன் தொடர்புபட்ட பூசகர்களை எரியூட்டி அடக்கம் செய்வதற்காக ஆற்றோரத்தை அண்டிய மேற்குப்புறமும் அதன் அருகில் சித்தர்களின் சமாதிகளுக்கு ஒரு புறமும் ஒதுக்கப்பட்டிருந்தன. உடுப்பிட்டிப் பிரதேச மக்களின் மயானம் ஒரு புறத்தில் அமைந்துள்ளது. அம்மயானம் தனியாகச் சுற்றுமதில் அமைக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது. தொண்டைமானாறு பிரதேச மக்களின் மயானம் கிழக்குப்புறமாக அமைந்துள்ளது.
இக்கட்டுரையில் பெயர் குறிப்பிட்டு எழுதப்பட்ட சித்தர்கள் தவிர்ந்த சிலரின் வரலாறு பற்றியும் அவர்கள் இறுதியில் சமாதி அடைந்த இடங்கள் பற்றியும் ந. அரியரத்தினம் அவர்கள் “சந்நிதியில் சித்தர்கள்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கரும்பாவளி தவிர்ந்த ஏனைய இடங்களில் சமாதி அடைந்தவர்கள் பற்றி இக்கட்டுரை கவனஞ் செலுத்தவில்லை. அதனால் அவர்கள் பற்றிய பதிவும் தவிர்க்கப்பட்டுள்ளது.
- சதுரபீடமும் சிவலிங்கவடிவமும் அமைந்த பரியாரியார் சுந்தரப்பாவின் சமாதி -
1.6 கரும்பாவளி சமாதிகளின் அமைப்பு
இறந்தபின் உடலை அடக்கம் செய்யும் முறை சமாதி எனப்படுகிறது. அதாவது சமம்+ஆதிஸ்ரீ சமாதி. இறைவனுக்குச் சமமாதல் என்பது இதன் அர்த்தமாகும். சமாதிகளை மூன்று வகைப்படுத்தி நோக்குவர். ஒன்று இறந்தபின்னர் செய்யப்படும் சமாதிகளாகிய நில சமாதி, ஜலசமாதி, அக்கினிசமாதி ஆகியன. இரண்டாவது ஜீவசமாதி என அழைக்கப்படும். மீண்டும் பிறவாமல் முக்தி அடைய தானே உருவாக்கிய கல்லறையில் சமாதி அடைதலே ஜீவசமாதி என்று அழைக்கப்படும். இதற்கு ஏழாலையில் அமைக்கப்பட்டிருக்கும் சடைவரதசுவாமிகளின் சமாதியைக் குறிப்பிடலாம்.
மூன்றாவது இருத்தி முக்தி சமாதி என அழைக்கப்படும். “உயிருடனும் உடலுடனும் இறைவனுக்குச் சமமாக இருந்து பேரின்பம் அடைதல் அல்லது முக்தி அடைதல். அஷ்டாங்க யோகத்தில் எட்டாம் நிலையில் அடையும் யோக சமாதி. இதன்படிக் கிடைக்கும் முக்திக்கு இருத்தி முக்தி என்று பெயர்” (15) இதற்கு உதாரணமாக இராமானுஜரைக் குறிப்பிடுவார்கள்.
கரும்பாவளியில் உள்ள சமாதிகளை நோக்கும்போது இறந்தபின்னர் உடலை அடக்கம் செய்யும் நிலசமாதிகளாகவே அதிகமானவை அமைந்துள்ளன. மேலே இனங்காணப்பட்ட சித்தர்கள் மற்றும் அருளாளர்களுக்கான சமாதிகள் அவ்வாறுதான் அமைக்கப்பட்டன. ஜேர்மன் சுவாமி முதலான சிலரை அக்கினியில் எரியூட்டி சாம்பரை புனித நீரில் கரைத்த தகவல்களும் உள்ளன. ஆனால் அவர்கள் நினைவாக எழுப்பட்ட சமாதிகளும் உள்ளனவா என்ற தகவல் அறியமுடியவில்லை.
இங்கு அமைந்திருக்கும் சமாதிகள் பல்வேறு வடிவங்களை உடையனவாகக் காணப்படுகின்றன.
சதுரமாக பீடம் அமைக்கப்பட்டு மேலே சிவலிங்கத்தை ஒத்த கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்டவை.
அறையும் உள்ளே பீடமும் அமைக்கப்பட்டவை.
அறையும் உள்ளே சிவலிங்கத்தை ஒத்த கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்டவை.
அறையுடன் கூடிய பெரிய சமாதிகள்.
சதுர பீடமும் மேலே சிவலிங்க வடிவத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டவற்றுள் இனங்காணப்பட்ட சமாதிகளில் ஒன்று பரியாரியார் சுந்தரப்பாவினுடையதாக அமைந்துள்ளது. வடக்கு நோக்கிய அறை அமைத்து சிவலிங்க வடிவம் வைத்துக் கட்டப்பட்ட சமாதிகளில் ஒன்று வைரமுத்து சுவாமிகளுடையதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. பெரிய அறையுடன் கூடிய சமாதி நாகமுத்து ஐயருடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சமாதிகள் பல்வேறு பட்ட வடிவமுடையனவாக அமைந்திருப்பதற்கும் அவற்றின் அளவுப் பிரமாணத்திற்கும் ஏதும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. குறித்த குடும்பத்தினரின் விருப்பம் மற்றும் பொருளாதார வசதி கருதி அவை அமைக்கப்பட்டுள்ளன என கருதலாம்.
வீரசைவ மரபில் சமாதிகள் வைக்கப்படும் முறை பற்றி வீரசைவ மரபியல் என்ற நூலில் சோ. பரமசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதனையும் இங்கு தொடர்புபடுத்தி நோக்கலாம்.
“உயிர்நீத்த வீரசைவரின் உடலை அதிக செலவின்றிப் பூமியில் நல்லடக்கம் செய்வதாயின், பூமியினுள்ளே நாலடிச் சதுரமாய்க் குடையப்பெற்ற கிடங்கினுள் அடியிலே உப்பைப் பரவியபின், பத்மாசனத்தில் இருத்திய உடலை வலிமையுள்ள துணியில் வைத்துக் கீழே இறக்கி, உரிய இடத்தில் அதனைக் கொண்டுபோய் வைக்கவேண்டும். பின்பு உடலைச் சுற்றி உப்பு, நெல், விபூதி என்பவற்றால் கழுத்து வரையில் நிரப்புதல் வேண்டும். கண்டத்திலிருந்து தலைக்கு மேல் வரையிலாவது தனி விபூதியால் மூடி நிரப்பிய பின் அதன் மேல் சட்டியோ குண்டானோ கவிழ்த்துக் குழியை முற்றாக மூடி விடுதல் முறையாகும். ….. அவ்விதம் நிரப்பப்பட்ட குழி மண்ணினாலும் சாந்தினாலும் மூடிக் கட்டப்படும். சமாதி கட்டப்பட்ட உடலின் தலைஉச்சிக்கு மேல் உயரமாக ஒரு பீடம் அமைக்கப்படும். அப்பீடத்தில் நினைவுக் குறியாக நடுகல், அல்லது சிவலிங்கம் ஒன்றை வைத்துப் பிரதிட்டை செய்வது வழக்கம்.” (16)
இது வீரசைவர்களின் சமாதி வைக்கும் முறையாகும். வீரசைவர்கள் லிங்க வழிபாட்டை மேற்கொள்பவர்கள். ஆனால் செல்வச்சந்நிதியில் வாழ்ந்த சித்தர்களை வீரசைவ மரபிற்குள் வைத்து நோக்கவேண்டிய அவசியம் இல்லையென எண்ணுகிறேன். ஆனால் சமாதிகள் வைக்கும் பொது அமைப்பில் சில ஒன்றுமைகள் இருப்பதைக் குறிப்பிடலாம். இங்கு கவனிக்கத்தக்க ஒரு விடயம் சமாதி வைக்கப்பட்ட சித்தர்களின் அமைவிடத்தில் உயரமாகப் பீடம் அமைத்து அதன்மேல் சிவலிங்கம் வைப்பது. இதே அமைப்பில் பல சமாதிகள் கரும்பாவளியிலும் அமைந்துள்ளன.
1.7 முடிவுரை
சந்நிதியான் ஆற்றங்கரையான் என்றழைக்கப்பட்ட தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம், ஆகமமரபு சாராத பூசை முறைகளுக்கு ஊடாக இலங்கையில் அமைந்திருக்கும் முருகன் ஆலயங்களிலே தொன்மையான ஆலயமாக விளங்குகின்றது. 1947 ஆம் ஆண்டு இந்து சாதனம் தருகின்ற குறிப்பின்படி இங்கு இரண்டு சமாதிகள் இருந்தன என்று குறிப்பிடுகின்றது. மிக அதிகமான அன்னதான மடங்களைக் கொண்டதாக அமைந்த காரணத்தால் அன்னதானக் கந்தன் என்றும் அழைக்கப்பட்டான். இவையெல்லாம் ஏனைய ஆலயங்களில் இருந்து சமூக பொருளாதார பண்பாட்டுப் பின்னணியில் செல்வச்சந்நிதியைத் தனித்துவமாகக் காட்டுகின்றன. ஐராவசு சித்தருடன் தொடங்கிய சித்தர் வரலாறு 30ற்கும் மேற்பட்ட சித்தர்கள் செல்வச்சந்நிதிச் சூழலில் உலாவந்ததற்கு ஆதாரமாகியுள்ளது. இன்று கரும்பாவளியில் காணப்படும் சித்தர் சமாதிகளையும் இவ்வாறுதான் தொடர்புபடுத்தி நோக்க முடிகின்றது. அங்கு காணப்படும் சமாதிகளில் சிலசமாதிகள் மட்டுமே அடையாளங் காணப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏனைய மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருப்பதாலும் இந்துப் பண்பாட்டின் வழிவந்த சித்தர்களின் சமாதிகள் அமைந்திருப்பதாலும் பேணப்பட வேண்டியவையாக உள்ளன. இங்கிருக்கும் சமாதிகள் படிப்படியாக அழிவு நிலையை நோக்கிச் செல்கின்றன. எதிர்காலத்தில் நிறுவனம் சார்ந்து இவற்றைப் பராமரித்துப் பாதுகாத்துப் பேணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக இந்தச் சித்தர் பரம்பரையினரின் அற்புதங்கள் அவர்களின் அருள்வாக்கு மொழிகள் என்பன தேடியறிந்து தொகுக்கப்படவும் ஏனைய சமாதிகளை இனங்காணவும் வேண்டிய பணிகள் எம்முன்னால் உள்ளன. இதனூடாக செல்வச்சந்நிதி என்பது ஆகமமரபு சாராத வழிபாட்டு மரபுடனுடனும் ஆத்மீக ஞானம் சார்ந்த சித்தர் மரபுடனும் தொடர்புபட்டதாக அமைந்துள்ளது. இந்த அம்சம் எமது சமூக பண்பாட்டு மரபில் தனித்துவமானது. இதனாலேயே பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் சந்நிதி பற்றி எழுதும்போது இரண்டு அலைவரிசைகள் அற்புதமாக இங்கு இணைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.
(இக்கட்டுரையாக்கத்தின்போது மேலதிக தகவல்களுக்கு உதவிய தி. செல்வமனோகரன், வே.பவதாரணன், து. சண்முகசுந்தரம் ஆகியோருக்கு நன்றி)
அடிக்குறிப்புகள்
1. அனந்தராஜ். ந. வல்வை, (2001) சந்நிதிச் செல்வம், நந்தி பதிப்பகம், ப.8.
2. மேலது, ப.18.
3. சிவத்தம்பி. கா, (2000 புரட்டாதி) ஞானச்சுடர், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை, தொண்டைமானாறு.
4. ஆறுமுகநாவலர், (1865) 4 ஆம் பாலபாடம், ப.151.
5. மேலது, ப.159.
6. சண்முகதாஸ். அ. பேராசிரியர், மனோன்மணி சண்முகதாஸ், (1989) ஆற்றங்கரையான், வாராவொல்லை வெளியீடு – 3, ப.75.
7. மேலது, ப.129.
8. அரியரத்தினம். ந., (2019 ஜனவரி) மண் காப்போம் : கரம்பாவெளி, தாய்வீடு, கனடா.
9. https://siddharyogam.com
10. சந்நிதிச் செல்வம், ப.18.
11. அரியரத்தினம். ந., (2019 ஜனவரி) மண் காப்போம் : கரம்பாவெளி, தாய்வீடு, கனடா.
12. அரியரத்தினம். ந., (2018) சந்நிதியில் சித்தர்கள், தொண்டைமானாறு, ப.42.
13. பரமசாமி. சோ., (1995) வீரசைவ மரபியல், திருநெறிய தமிழ்மறைக் கழகம், இணுவில்.
14. அரியரத்தினம். ந., (2018) மேலது,
15. https://siddharyogam.com
16. பரமசாமி. சோ., (1995) மேலது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.