ஓடியே ஒளிவதைத் தவிர்ப்போமே
தவறைச் சுட்டிக் காட்டிட வேண்டுமே.
தப்பைத் தட்டிக் கேட்டிட வேண்டுமே.
இவற்றை செய்யாது இருப்போரே
இவ்வுலகில் அதிகம் பேராவார்.
அறம் பிழைக்குது நாளுமிங்கே.
அதை தடுத்திட வருவாரில்லை.
மறம் கொண்டே இயங்கிடும்
மனிதர் இன்றெம்மிடை இல்லையே.
வீட்டினுள் வீரம்பேசிடுவர் பலர்.
வெளியில் அநீதி கண்டு ஒதுங்கிடுவர்.
நாட்டினில் இவர்போல் பலர் உளதால்
நாளும்பல தப்புகள் நடக்குதுவிங்கு.
அடுத்தவர்க்கு நடக்கும் அநீதி
அதைக் கண்டும்காணாது செல்வர்.
அடுத்தது தமக்கும் நடக்கு மெனவிவர்
அறியாது இருப்பதே கொடுமையடா.
வருமுன் காப்பது முறமையன்றோ.
வந்தபின்அழுதுதானென்ன பயன்?
ஒருமுறை சிந்தித்துப் பார்ப்போமே.
ஓடியே ஒளிவதைத் தவிர்ப்போமே.
திடமாய் நின்றே வெற்றிகள் காண்பீர்
இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல.
இறப்பும் பிறப்பும் இயற்கையே.
இன்பத்தை எண்ணி மகிழுங்கள்.
துன்பத்தை மறந்து செயற்படுங்கள்.
வாழ்வு என்பது நீண்ட பயணம்.
வளமும் வறுமையும் இயல்பேயாம்.
தாழ்வுவருகையில்தளர்வடையாதீர்.
திடமாய் நின்றே வெற்றிகள் காண்பீர்.
நிம்மதியாய் வாழ்வோம்!
நிம்மதியின் இரகசியம் இதுவாம்.
நினைவினில் கொள்ளல் நன்றாம்.
எம்மதியும் இதனை ஏற்கின்றதே.
எம்முணர்வோ அதை மீறுகின்றதே.
மனமதனை அடக்கிடல் வேண்டுமே.
முயற்சியினை நாளும் செய்வோமே.
உள்ளத்தில் இவ்வுறுதி கொண்டிடில்
உலகத்தில் நிம்மதியாய் வாழலாமே .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.