இந்த உயர்வு மனப்பான்மை , தாழ்வு மனப்பான்மை பற்றிய எனது பார்வையை, இன்றுங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இந்த நீண்ட கட்டுரையை நீங்கள் பொறுமையாக , முழுமையாக வாசிக்க வேண்டுமென்று, அன்போடு வேண்டிக் கொள்கின்றேன். இந்த உயர்வு மனப்பான்மையும் , தாழ்வு மனப்பான்மையும் , ஓர் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றதே.
உயர்வு மனப்பான்மை
இங்கு உயர்வு நிலையில் உள்ள அமெரிக்கா , உலகில் தன் முதன்மை நிலையைத் தக்க வைத்திட எடுக்கும் முயற்சிகளை நாம் காண்கின்றோம். வணிகப் போட்டியில் சீனா தங்களை முந்திவிடாதிருக்க, அமெரிக்கர் எடுக்கும் பிரயத்தனங்களையும் நாம் காண்கின்றோம். சீனாவுடன் 5G வர்த்தகத்தை இங்கிலாந்து எடுக்காதிருக்க , அமெரிக்கா இங்கிலாந்திற்குக் கொடுக்கும் அழுத்தம் பற்றியும் நாம் உணர்கின்றோம். இது , உயர்நிலையில் உள்ள ஒரு அரசு , தனது முக்கியத்துவத்தை இழந்து விடாதிருக்கச் செய்யும் செயற்பாடுகள். இது பற்றிய பல்வேறு கருத்துப் பரிமாறல்கள், உலகளாவிய ரீதியில் நடக்கின்றன. பொதுவாகப் பல நடுநிலையாளர்கள் , அமெரிக்காவின், முக்கியமாக அமெரிக்க அதிபரின் , இத் தன்மையான செயற்பாடுகளை எதிர்க்கின்றார்கள்.
மறுபக்கம் இஸ்ரேலியர் , தமது மக்களில் 6 இலட்சம் மக்கள் யேர்மனிய நாசிகளால் , கிட்டலரின் கட்டளைப்படி கொலை செய்யப்பட்ட 75 ஆம் ஆண்டு நினைவை , அண்மையில் உலகத் தலைவர்கள் பலரை அழைத்து, நினைவு கூர்ந்தார்கள். இஸ்ரேல் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக , மத்திய கிழக்கில் , அமெரிக்க வல்லரசின் முழு ஆதரவுடன், வல்லாண்மை மிக்க நாடாகத் திகழ்கின்றது. இந்த மேலாண்மையை , தன் உயர்மனநிலமையை இழக்க அது விரும்பவில்லை. இதனடிப்படையில் இந்நாடு இம்மியளவும் பாலஸ்தீனர் பிரச்சனையில் விட்டுக்கொடாமல் , உலக நாடுகளின் மென்போக்கான எதிர்ப்பையும் மீறி , பல அத்துமீறல் குடியேற்றத் திட்டங்களை , பாலஸ்தீனப் பகுதியில் அமைத்துத், தன் மேலாண்மையை நிலை நாட்டி வருகின்றது. இங்கு இஸ்ரேல் தான் பல்லாண்டுகளாக உலகின் பல நாடுகளில் , அகதிகளாகத் தஞ்சம் புகுந்து வாழ்ந்த அவல நிலைமையை , மீள மீள நினைவு கூர்ந்து , அந்த நிலை தங்களுக்கு மீண்டும் வந்திடாதிருக்க , தாம் பல்லாண்டுகளாக அனுபவித்த கொடுமைகளையே , பாலஸ்தீன மக்களுக்கும், கடந்த 75 வருடங்களாக இழைத்து வருகின்றது.
ஆக இது உயர்வுநிலையில்- உயர்வு மனப்பான்மையில் வாழும் இஸ்ரேலிய அரசு, மற்ற அரபு நாடுகள், தன்னை ஒடுக்கி , தன்னைத் தன் பழைய நிலைக்குத் தள்ளி விடுமோ என்ற பயத்தில், மத்திய கிழக்கில் தன் மேலாண்மையை நிலை நாட்டிட , தன்னைச் சூழவுள்ள அரபு நாடுகளை அடக்கி ஆள எடுக்கும் பல நடவடிக்கைகள் மூலம் எமக்கு உணர்த்துகின்றது. இதனை உலக நாடுகள் பல தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை , அமெரிக்க அரசு இஸ்ரேல் அரசிற்கு கொடுக்கும் வெளிப்படையான ஆதரவை மனதில் கொண்டு, மென்போக்கில் தெரியப் படுத்தி உள்ளன. உதாரணமாக பாலஸ்தீன மக்கள் மேல், இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை , நடுநிலையாளர்கள் பலர் எதிர்க்கின்றார்கள். ஆக இங்கே இரு வேறு அரசுகளான அமெரிக்க உலக வல்லரசும், மத்திய கிழக்கில் அணு ஆயத வல்லரசான இஸ்ரேலும் , தம் உயர்மனநிலமையை , வெவ்வேறு பயங்களினால் தக்க வைக்க முயல்கின்றன. இம் முயற்சியில் இவ்விரு நாடுகளும் எடுக்கும் பல முடிவுகளை , உலகப் பொது மக்கள் விரும்பவில்லை - ஏற்கவில்லை என்பது வெளிப்படை. இதைத்தான் நான் தவறான Superiority complex ஆகக் காண்கின்றேன்.
இனி நான் ,ஏன் இக் கட்டுரையை இன்று எழுத முற்பட்டேன் என்ற விடயத்திற்கு வருகின்றேன்.
தாழ்வு மனப்பான்மை.
தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையினால் பீடிக்கப்பட்டுள்ளார்களா? தமிழர்கள் தம் முன்னைய பெருமைகளை எடுத்துக் கூறுவது, அவர்கள் தாழ்வு மனப்பான்மையைப் போக்கிக் கொள்ளவா? இவ்வாறு சிலர் , தமிழர்கள் பலர் தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டு, பழம் பெருமைகளைப் பேசுவதாகக் கூறுகின்றார்கள்.! சரி. தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையில் இருந்தால், அதில் இருந்து மீள அவர்கள் என்ன செய்ய வேண்டும்? தாழ்வு மனப்பான்மை என்பதிலும் விட , தமிழர்களின் இன்றைய இயலாமை , அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை - அநீதிகளை- அநியாயங்களை, தட்டிக் கேட்க , உலகில் எந்தவொரு நாடும் முன்வராத நிலமை. உலகில் வாழ்கின்ற எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு , சொந்த அரசுரிமையோடு ஒரு நாடில்லா நிலைமை,. உலகின் பல நாடுகளிலும் சிதறுண்டு தமிழர்கள் வாழ்கின்ற நிலைமை. இவ்வாறு சிதறுண்டு வாழ்கின்ற நாடுகளிலும் கூட , அவர்களின் இழப்புகள், அவர்களுக்கு இணைக்கப்பட்ட அநீதிகள், அந்தந்த அரசுகளால் உணரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படா நிலைமை, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் கொலைக்கு , இன்னமும் ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கிடைக்கா நிலைமை.
தமிழகத்தில் , கீழடியில் தமிழரின் சங்ககால இலக்கியங்களின் உண்மைத் தன்மையை , 2600 வருடங்களுக்கும் முற்பட்ட தமிழரின் அடையாளங்களை, உறுதிப்படுத்தும் அகழ்வாராய்ச்சியில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளைக் களைய முடியா இயலாமை. தமிழ் மன்னனால் , தமிழ்ச் சிற்பியால் , தமிழர்களால், தமிழகத்தில் கட்டப்பட்டு , ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக , தமிழரின் கோவில் கட்டிடக் கலையின் சிறப்பைப் பறைசாற்றி நிற்கும் , தஞ்சைப் பெருவுடையார் கோவிலில், வரும் 5.2 2020 நடக்கவுள்ள குடமுழுக்கு விழாவைத் , தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் , தமிழில் நடத்த முடியா இயலாத் தன்மை. என்பன , தமிழ் மக்களை தாழ்வு மனப்பான்மைக்கு உட்படுத்துகின்றன என்றால் அதில் பிழையில்லை .
நசுக்கப்படும் ஓர் இனம், அழிக்கப்படும் ஓர் இனம், தன் இனத்தின் பாரம்பரிய நிலங்களைப் பறிகொடுக்கும் ஓர் இனம், தன் மொழியை தன் சொந்த நிலப்பரப்பில் அரச கரும மொழியாகப் பாவிக்கத் தடை விதிக்கப்படும் ஓர் இனம், தன் மொழியால் தான் நம்பும் தன் மதத்தில் கடவுளை வழிபடத் தடை விதிக்கப்படும் ஓர் இனம், தன்னை மீட்டுடெடுக்க , தன் இருப்பை , தன் மொழியை, தன் நிலத்தை, தன் பண்பாட்டை, தன் விழுமியங்களைத் தக்க வைக்க , போராட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்தப் போராட்டத்திற்கான மனவுணர்வை , உறுதியை, ஊக்கத்தைப் பெற்றிட , தம் முன்னைய பெருமைகளைப் பற்றிப் பேசிப் பகிர்ந்து , அதன் மூலம் தம் முன்னைய பெருமைகளை உணர்ந்து , இன்றைய நிலமையை எண்ணி ஏங்கி , வருந்தி, இன மீட்சிக்காய் , இன விடிவிற்காய் , வீறு கொண்டெழுந்து , அறப்போர் ஆற்றிடும் உள வலுவைப் பெற்றிட , எம் முன்னைய சிறப்புகளும் , ஏற்றங்களும் எமக்கு வித்திடுகின்றது. கைதட்டலிற்காகவும் , கூட்டத்தில் பாராட்டுப் பெற்றிடவும் , அரசியல் லாபத்திற்காகவும் , இங்கு பழம்பெருமை பேசுவோரைப் பற்றி நமக்கு அக்கறையில்லை. ஆனால் இன்று உலகெங்கும் சிதறுண்டு , சொந்த பந்தங்கள் ஒவ்வொன்றும் உலகின் ஒவ்வோரு மூலையிலும் வாழும் சூழலில், பெற்று வளர்த்த அன்னை - தந்தையைக் கூட ஆண்டுக் கணக்கில் காணாமல், குடும்பத்தில் ஏற்படும் இரத்த உறவுகளின் இறுதிக் கிரிகைகளைக் காணொளியில் கண்டு தம்மை ஆற்றிக் கொள்கின்ற பரிதாப நிலமை, ஏன் ஈழத் தமிழனிற்கு வந்தது ?
உறவுகளை - ஊரவர்களை- நண்பர்களை- உற்ற உத்தியோகத்தை- விரும்பியா உதறித் தள்ளி நாம் வெளிநாடு வந்தோம்? முன்பு , தாம் ஆண்ட காலனித்துவ நாடுகளிலும் , தம் நாட்டிலும், பெருங் குற்றம் புரிந்தோரை, கண் காணா நாடுகளிற்கு நாடு கடத்துவதை, ஆங்கிலேயர் செய்தார்கள்! நாமும் அவ்வாறு தானே , தமிழனாய் பிறந்த ஒரே குற்றத்திற்காக , நமக்கு நாமே தண்டனை கொடுத்து , நாடு விட்டு , உலகின் பல நாடுகளில் குடி புகுந்தோம். நாளை நாம் குடிபுகுந்துள்ள நாடுகளிலிருந்தும், வந்தேறு குடிகளெனக் கூறப்பட்டு , நாம் விரட்டி அடிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை!
இன்று (31.01.2020) பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் ,தான் 70 வருடங்களாக இணைந்திருந்த இருப்பை நீக்கும் முதலடியை எடுத்து வைத்துள்ளது .இது எனி வருங்காலங்களில் என்னென்ன விளைவுகளை , இங்கு வந்தேறுகுடியாக வாழும் பல இனங்களுக்கு ஏற்படுத்த உள்ளது என நாம் சிந்திக்கும் நிலமை வந்துள்ளது. எம் கண்முன்னேயே , இற்றைக்கு 75 வருடங்களுக்கு முன்னர், யூத மக்களில் ஆறு இலட்சம் மக்களுக்கு , கிட்லர் செய்த காரியம் பற்றி நாம் அறிவோம். ஏன் பத்து வருடங்களுக்கு முன்னர் , தமது சொந்த மண்ணிலேயே, முள்ளிவாய்க்காலில், பல்லாயிரக் கணக்கான , தமிழ் மக்களுக்கு நடந்ததை நாம் கண்டோம். பத்து வருடங்களுக்கும் மேலாக , இக் கொலைகளுக்கான நீதி , ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப் படாது உள்ளதையும் , உலக அரசியல் நிகழ்வுகளை விலாசித் தள்ளும் , அறிவுடை தமிழ் சமூகம் கண்டுகொண்டு தானுள்ளது. இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள். தம் சமூகத்தோடு , தம் இளந் தலைமுறையோடு , தமிழர்களின் இன்றைய நிலைமை பற்றி எடுத்துரைத்தல் அவசியமல்லவா?
அதேசமயம் இன்றைய எமது இயலாமையைப் பற்றி உணர்கையில் , எம் முன்னைய பெருமைகளை, சிறப்புகளை, ஆதாரத்துடன் எமது இளையோர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்கள் தம் முன்னோர்களின் சிறப்புக்களை , வீரத்தை, ஆட்சிச் சிறப்புக்களை, அற நூல்களின் அருமையை, கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, மருத்துவம், வானியல், கணிதவியல், வணிகவியல், அரசியல் ஆகியவற்றில் அவர்கள் கொண்டிருந்த சிறப்பை , கீழடி ஆய்வின் முக்கியத்துவத்தை , அதன் வரலாற்றுச் சான்றாதாரங்களை உணர்ந்திட வைத்தல் , மிக மிக அவசியமல்லவா?
தம் முன்னோரின் பெருமைகளை , அவர்கள் ஆவணப் படுத்திச் சென்றுள்ள அரும்பெரும் நூற் செல்வங்களை, அறிந்து, உணர்ந்து, இச் சிறப்புமிக்க மொழிக்கு நாம் சொந்தக்காரர் என்ற பெருமையை அடைந்து, நமது இன்றைய இழிநிலை கண்டு, தாழ்வு மனப்பான்மையால், தாம் தமிழர் எனக் கூற வெட்கி நிற்கின்ற இந்த இளையோர், தம் பெருமைகளை அறிந்து, நாம் தமிழர் என்ற பெருமையோடு, நான் தமிழன் என உயர்வாகக் கூறி, தன் இனத்தின் மீட்சிக்காய், விடிவிற்காய், உயர்விற்காய் , உறுதியோடு அறப்போர் ஆற்றிட வைத்திடல் நம் கடமையன்றோ!
தமிழை அறிந்தவர்கள் - பண்டைத் தமிழர் வரலாறுகளை உணர்ந்தவர்கள், இன்றைய தமிழர் தாழ்வு கண்டு வருந்துவார்களே ஒழிய , தாழ்வு மனப்பான்மையால் தளர மாட்டார்கள். மாறாக உலகிற்கு பல அழியா அறிவுச் செல்வங்களான திருக்குறள், தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, பரிபாடல், திருமந்திரம் , திருவாசகம் , அகநானூறு , புறநானூறு, சித்தர் பாடல்கள்,, ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற பல நூற்றுக்கணக்கான நூல்களை, கல்லணை , மாமல்லபுரக் கற்கோவில்கள், மதுரை மீனாட்சி , தஞ்சைப் பெருவுடையார், கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம், காஞ்சி கைலாயநாதர் போன்ற , கட்டிடக் கலையின் சிறப்பைப் பறை சாற்றி நிற்கும் , ஒரு இனத்தின், ஒரு மொழியின் சொந்தக்காரர் என்னும் பெருமையோடு , எம்மின மீட்சிக்காய் அறப்போர் ஆற்ற , மிடுக்கோடு, நாம் தமிழர் என்று தலைநிமிர்ந்து வருவார்கள்.
நாம் தமிழரென எண்ணி நாம் என்றும் தாழ்வு மனப்பான்மை அடையத் தேவையில்லை. நாம் இத் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் , எம் முன்னோரின் வரலாற்றுப் பெருமைகளை, இவ் உலகிற்கு நம் முன்னோர் வழங்கிச் சென்றுள்ள அறிவுச் செல்வங்கள்- ஆன்மிகச் சிந்தனைகள் என்பனவற்றை நினைந்து - நினைந்து உயர்வுமனநிலமை - Superior feeling கொண்டு, எம் இனத்தின் உயர்விற்காய் உழைக்க வருகையில், இந்த உயர்மனநிலமையை நான் வரவேற்கின்றேன். உலகின் மூத்தகுடி, உயர் நாகரிகப் பண்பாட்டு விழுமியங்களை உலகிற்கு அளித்த மொழி , அது எம் தாய் மொழி . தமிழ் மொழி.
'தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்'.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.