- Damstredetஇல் உள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரத்திலான வீடுகள் -
பத்மநாதன் மாணவர்களுக்குத் தனிப்பட்ட ரியூசன் கொடுக்கும் அந்த அறையில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருந்தது. மகாஜனாக் கல்லூரியில் படிக்கும்போது அறிந்திருந்த டொக்டர் லிமல், கவிஞர் இளவாலை விஜேந்திரன் ஆகியோருடன், 9c Osloஒ குறும்திரைப்பட இயக்குநர் மற்றும் அந்தப் படங்களில் நடித்திருந்த சிலரையும், முகநூல் மூலம் அறிந்த சஞ்சயன் செல்வமாணிக்கத்தையும் அங்கு சந்தித்துப் பேசமுடிந்தது. அவர்கள் எவருடனும் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாதபோதிலும் பத்மநாதனுக்காக அவர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.
‘நடு’ கோமகன் மூலம் என்னைப் பற்றி அறிந்திருந்ததாகச் சஞ்சயன் குறிப்பிட்டார், சஞ்சயனின் முகநூற் பதிவுகள் சுவாரஸ்யமானவையாக இருப்பதால் நானே அவரை என் முகநூல் நண்பராகச் சேர்த்திருந்தேன். விஜித்தா என்பவரின் புற்றுநோய்க்கூடான வாழ்வு தொடர்பான அனுபவங்களை அவரது எழுத்துக்கூடாகச் சொல்லும் ‘தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு’ என்ற நூலையும், தன் அம்மாவின் மறதி நோய் பற்றிக் கூறும் ‘நினைவு மறந்த கதை’ என்ற நூலையும் அவர் தந்திருந்தார். விஜித்தாவின் முன்னுரை மனதைக் கலங்கவைப்பதாக இருந்தது. அவவின் அனுபவங்களை இலகுவான தமிழில் சஞ்சயன் அழகாக எழுதியுள்ளார். முன்னுரிமை எதற்குக் கொடுப்பது என்ற புரிதல் இல்லாத, நோய் பற்றிய அடிப்படை விளக்கமற்றவர்களுக்கு இந்த நூல் எவ்வளவு அவசியமானது என்பதை என் வாசிப்பு எனக்குப் புரியவைத்தது. (விஜித்தா ரதியின் உறவினராம் என அறிந்தபோது உலகம் சிறியதுதான் எனத் தோன்றியது). மறதிநோய் தொடர்பான யதார்த்தங்களை அம்மாவுடனான பாசத்துடன் கலந்து, ‘நினைவு மறந்த கதை’ என்ற நூலைச் சஞ்சயன் படைத்திருக்கிறார். இவை அவரின் முகநூலிலும் ஏற்கனவே பதியப்பட்டிருந்தன.
வன்முறைகளின் குரூரத்தை, அதன் வலியை, அது உருவாக்கும் உணர்வலைகளை இயல்பாகப் பேசுவதுடன், மனிதத்தின் அவசியத்தையும் உணர்த்தும், ‘எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது’ என்ற அவரது கவிதை நூலை இளவாலை விஜேந்திரன், தந்திருந்தார். பின்னர் எழுத்தாளர் நவமகனின் ‘போக்காளி’ என்ற நூலும் பத்மநாதன் ஊடாக எனக்குக் கிடைத்திருந்தது. என் நூல்களை நானாக கொடுப்பதில் எனக்குத் தயக்கமிருப்பதால் அவற்றை நான் எடுத்துச் சென்றிருக்கவில்லை. பின்னர் பத்மநாதனுக்கு ஒன்றைக் கொடுக்கும்படி ரதியிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தேன்.
‘போக்காளி’ அளவில் பெரிய புத்தகமாக இருந்தாலும், இலகுவாகவும் விரைவாகவும் வாசிக்க உதவும்வகையில் அதன் மொழி நடை, எழுத்துக்களின் அளவு, சொற்களுக்கு இடையேயான இடைவெளி என்பன இருந்தன. போரின் துயரங்கள், வாழ்க்கையில் எதிர்கொண்ட அலைச்சல்கள், புலம்பெயர்வின்போதான அவலங்கள், புலம்பெயர் வாழ்வின் போராட்டங்கள், வேறுபட்ட கலாசாரத்தில் வாழும் பிள்ளைகளுடான முரண்கள் என அனைத்தையும் இது தொட்டுச் செல்கிறது. சினிமாப் பாடல்கள், பழமொழிகள் என்பவற்றுடன் கலந்து, 1988 முதல் 2019 வரையிலான எங்களின் வரலாற்றையும் புலம்பெயர் வாழ்வையும் கூறும் இது, சில பிற்போக்கான விடயங்களையும் கருத்துக்களையும் காவி நின்றாலும்கூட, வரலாற்றினைக் கூறுமொரு சிறந்ததொரு நூலாக இருக்கிறது. இருப்பினும் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் ஒன்றும்விடாமல் சொல்ல முயற்சித்திருப்பதும், அவை தெரிந்தவிடயங்களாக இருப்பதும் சிலவேளைகளில் வாசிப்பை சுவாரஸ்சிமற்றதாக்கியது என்பதும் உண்மையே.
9c Oslo என்ற குறும்படத்தின் இயக்குநர் அதனை யூ ரியூப்பில் பார்க்கலாமெனச் சொன்னபடி இங்கு வந்ததும் அதைப் பார்த்தேன். பேய்கள் பற்றிய கதையாக இருந்தபடியால் அது என்னைக் கவரவில்லை, ஆனால் அவர்களின் சிற்பி என்ற பெண்ணியச் சிந்தனை கொண்ட குறும்படம் பாராட்டுக்குரியவகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. நாடகப் பாணியில் இல்லாமலிருந்தால், அது மேலும் சிறப்பாக இருந்திருக்கும். இப்படியாக இந்தச் சந்திப்பு இலக்கியத்துடன் தொடர்பானதாகவும் அமைந்திருந்தில் மகிழ்ச்சியாக இருந்தது.
பத்மநாதன் அங்கேயே வைத்துக் கரட் ஜூஸ் தயாரித்து, அதைப் பீசாவுடன் பரிமாறினார். கரட் ஜூஸ் சுவையாக இருந்தது, அது ஆரோக்கியத்துக்கும் நல்லதென்பதால், நானும் அப்படிச் செய்ய வேண்டுமென நினைத்தேன், ஆனால் இதுவரை செய்யவில்லை. பின்னர் விஜேந்திரன் மாமாவின் மகனின் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார். அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர், அவர்களுடன் பழைய கதைகளை மீட்டிவிட்டு நள்ளிரவில் படுக்கச்சென்றோம்.
- Vøyenfallene நீர்வீழ்ச்சி -
அடுத்த நாள் காலையில் பேராசிரியர் ரகுபதியைச் சந்திப்பதாக இருந்தது. நாள்முழுவதும் அவரை எங்களுடன் அலையவிடக்கூடாது என நினைத்ததால், Vøyenfallene நீர்வீழ்ச்சி, Opera house, Damstredetஇல் உள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரத்திலான வீடுகள், நூலகம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு மதியவுணவின் பின்னர் அவரைச் சந்தித்தோம்.
கற்காலத்தின்போது, கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் வரையப்பட்டிருந்த சித்திரங்களைக் காட்டுவதற்காக Ekebergக்கு எங்களை அவர் கூட்டிச்சென்றார். அங்கிருந்த 13 சிற்பங்களில், பத்து மான் போன்ற சில விலங்குகளையும், ஒன்று ஒரு நபரையும், இன்னொன்று பொறி ஒன்றையும், மற்றது பறவை ஒன்றையும் காட்டின. Ekebergஇன் உயர்வான பகுதியொன்றில் செதுக்கப்பட்டிருக்கும் இந்த அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் petroglyphs எனப்படுகின்றன. பெரும்பாலும் கிழக்கு திசையை நோக்கியவையாகவும் ஓடும் நீருக்கு அருகிலும் காணப்படும் இவை மனிதர்கள் மற்றும் கடவுள்களைப் பற்றிய எங்களின் முன்னோர்களின் பதிவுகள் என்று கருதப்படுகின்றன.
- Sculpture Park சிலையொன்று -
பின்னர் அதனருகிலிருந்த Sculpture Parkஐயும் பார்த்தோம். அங்கும் அழகான சிலைகள் வடிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்கள் மிக உயரமான இடத்திலிருப்பதால் அங்கிருந்து முழுமையான ஒஸ்லோவைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
விமானத்துக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் அங்கிருந்து அவசரமாக வெளிக்கிட வேண்டியிருந்தது. மீளவும் போகவேண்டிய ஓர் இடமென்றால் அது ஒஸ்லோதான், மீதி மியூசியங்களையும் பார்க்கவேண்டுமெனச் சங்கி சொல்லிக்கொண்டா.
ஐரோப்பாதான் Chocolatesக்குப் புகழ்பெற்ற இடமென்றார்கள், எனவே தாரளமாக அவற்றையும் வாங்கிக்கொண்டு ஶ்ரீகரனின் காரில் விமான நிலையத்தை அடைந்தோம்.
தெல்லிப்பழையில் எங்களின் எதிர்வீட்டுக்காரரான விமலைச் சந்திப்பதற்காக, எங்களின் பயணத்தை Copenhagen ஊடாக அமைந்திருந்தோம். தெல்லிப்பழை உப தபால் அலுவலகத்துக்கு அருகிலிருந்த ஒழுங்கையான நீலாவத்தையில் வாழ்ந்த நாங்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒன்றாக அங்கு சந்திக்கவேண்டுமென messenger ஊடாகக் கதைக்கும் போதெல்லாம் அவர் சொல்வார். அந்த அழகான கனவு, நனவானால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கற்பனை செய்வதைத் தவிர வேறு எதைத்தான் செய்யமுடியும்?
எனவே, Copenhagenஇலாவது அவரைச் சந்திக்கலாமென்ற எண்ணத்தை அவர் வரவேற்றிருந்ததுடன், விமானநிலையத்துக்கு வந்து தன் வீட்டுக்கு எங்களை அழைத்துச் செல்வேன் என உடனேயே உத்தரவாதமும் தந்திருந்தார். ஆனால் அவர் வாழுமிடத்தை அறிந்ததும் அவ்வளவு தூரத்திலிருந்து அவரை வரச்சொல்வது சரியல்ல எனச் சங்கி தயங்கினா. ஆனால் அவரோ அதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
அப்படியே இரண்டாவது மகன் கார்த்திகனுடன் விமானநிலையத்துக்கு முன்கூட்டியே வந்து எங்களுக்காகக் காவலிருந்தார். அப்போதுதான் அவரால் கார் ஓட்டமுடியாது என்பது தெரியவந்தது. அவரின் 23 வயது மகன் அப்பாவை விஞ்சிய விதத்தில் ஏனையோருக்கு மிகவும் அனுசரணையாக இருப்பதை அந்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில் (Great Belt Bridge over Great Belt Strait) அறியமுடிந்தது. நீர்நிலையின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீண்ட பாலம், கடற்கரை, சூரிய அஸ்தமனம் என அவர்களின் வீட்டுச் சூழலில் பார்க்கக்கூடிய இடங்களுக்கும் அவர் எங்களைக் கூட்டிச்சென்றார்.
விமலின் மனைவி காஞ்சனாவையும் அங்குதான் முதன்முதலாகச் சந்தித்திருந்தோம், இருப்பினும் நீண்ட நாள்கள் பழகியவர்போல அவர் நடந்துகொண்டார். வீட்டில்வைத்து எங்களை உபசரித்ததுமல்லாமல் அன்பளிப்புகளையும் தந்து எங்களை ஆச்சரியப்படுத்தினார். எங்களுக்கு Danish Pastry பிடிக்குமென்பதை அறிந்த அவர்கள் அதை நாங்கள் இரு தடவைகளாவது சாப்பிடுவதையும் உறுதிசெய்து கொண்டனர்.
அவர்கள் வீட்டின் பின்வளவில் இருந்த Walnut மரமும், அதில் காய்த்திருந்த பழங்களும், முன் வளவிலிருந்த முள்கள் எதுவுமற்ற ரோஜாச் செடியில் மலர்ந்திருந்த பெரிய ரோஜாப் பூக்களும் மிகுந்த பிரமிப்பைத் தந்தன. சென்ற வருட walnutகளையும் அவர்கள் அன்பளிப்பாகத் தந்தனர். அடுத்தநாள் அவர்களின் மூன்றாவது மகன் விக்னேஸ் பெற்றோருடன் எங்களை விமானநிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
81ஆம் ஆண்டிலேயே தெல்லிப்பழையை விட்டு நான் நீங்கிவிட்டதால் அந்த நேரம் சிறுவனான இருந்த விமலுடனும் அதிகம் பேசியதில்லை. ஆனால், இந்தப் பயணம் அவரையும் அவரின் குடும்பத்தினரையும் அறியவும், மனம்விட்டுப் பேசவும் வழிவகுத்த இனிய பயணமாக நோர்வேப் பயணம் அமைந்திருந்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.