சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அதற்கேற்ற அட்டவணைப்படி சேவை நலன் கொண்டு இயங்குகின்றது.
கனடாவில் வசிக்கும் சண்டிலிப்பாய் மக்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து ஒன்று கூடியிருந்தனர். பொதுவாக இப்படியான நிகழ்வுகளுக்கு இளந்தலைமுறையினர் வருவதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இங்கே பல இளந்தலைமுறையினரைக் காணக்கூடியதாக இருந்தது. காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி ஆகியன பரிமாறப்பட்டன. ஓவ்வொரு குடும்பத்தினரும் ஏதாவது ஒரு உணவை வீட்டிலே தயாரித்துக் கொண்டு வந்திருந்தனர். உறவுகளையும், நண்பர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது. வந்தவர்கள் எல்லோருக்கும் ஏற்ற வகையில் பலவிதமான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று பரிசுகளும் கொடுக்கப்பட்டன.
சங்கத்தினால் போர்க்காலத்திலும், அதன்பின் கோவிட்-19 காலத்திலும் ஊர் மக்களின் நன்மைகருதிச் சங்கத்தினால் பல மருத்துவப் பட்டறைகள் சண்டிலிப்பாயில் ஏற்படுத்தப்பட்டு மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன. சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கும், தமிழ் கலவன் பாடசாலைக்கும் கல்வி சார்ந்த மேலதிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. கோவிட்காலத்தில் உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மானிப்பாய் அரசமருத்துவ மனைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சண்டிலிப்பாய் அமைந்திருக்கின்றது. சண்டிலிப்பாய் பொதுவாக வயலும் வயல் சூழ்ந்த பகுதிகளையும் கொண்ட மருத நிலமாக இருக்கின்றது. வழுக்கை ஆறும், கூவல் என்று சொல்லப்படுகின்ற தெப்பக்குளமும், இங்குள்ள கோயில்களும் புராதன வரலாற்றைக் கொண்டவை. கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்பதற்கிணங்க, மிகப் பழமைவாய்ந்த பல வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாகக் கண்ணகி அம்மன் ஆலயம் போன்றவை இங்கேதான் இருக்கின்றன. வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, கல்வி அறிவூட்டும் கல்விக் கோயில்களும் இங்கு இருக்கின்றன. இங்கே உள்ள கல்வளை பிள்ளையார் பற்றித்தான் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் ‘கல்வளை அந்தாதி’ பாடினார். அங்கணாக்கடவை கண்ணகி அம்மன் கோயிலும், மீனாட்சி அம்மன் கோயிலும் அருகருகே இருக்கின்றன. சீரணி அம்மன் கோயிலையும் சேர்த்தால் மூன்று அம்மன் கோயில்கள் இங்கே இருக்கின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.