மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தீவிர இலக்கிய ஆர்வலர்கள் எப்படி ஒரு எழுத்தாளனின் படைப்பை நினைவில் வைத்திருப்பார்களோ, அதே போல அந்தப் படைப்புக்கு உயிரூட்டிய ஓவியனையும் கட்டாயம் நினைவில் வைத்திருப்பார்கள்.
பிரபல இதழ்களுக்கு ஓவியம் வரைந்த மாருதியின் முதலாவது ஓவியம் குமுதம் இதழில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்தது. மாணவப் பருவத்தில் தமிழக நூல்களை வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டதால், அதில் வரும் கதைகளுக்கு வரையப்படும் ஓவியங்களைப் பார்த்து நான் வியப்பதுண்டு. நானே ஒரு கதை எழுதி அதற்கு ஓவியர் மாருதி, ஓவியர் ஜெயராஜ் போன்றவர்கள் படம் வரைந்தால் எப்படி இருக்கும் என்று சில சமயங்களில் கற்பனை செய்து கனவுகூடக் கண்டிருக்கின்றேன். ஆனால் எதிர்பாராமல் அந்தக் கனவு ஒருநாள் நினைவாகிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
விகடன் பவழவிழா கொண்டாட்டத்தின் போது, ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற எனது குறுநாவல் தெரிவாகிப் பரிசு பெற்ற போது, ஓவியர் மாருதி, ஜெயராஜ், ராமு, அர்ஸ், பாண்டியன் ஆகிய ஐந்து ஓவியர்களும் அந்தக் கதைக்கு ஓவியம் வரைந்ததன் மூலம் என்னை ஆச்சரியப் படுத்தியிருந்தனர். அப்பொழுது விகடன் ஆசிரியராக இருந்த வியெஸ்வி மூலம் தான் எனது கனவு நினைவானது, அதன் பின் அவர் மூலம்தான் எனக்கு ஓவியர் மாருதியின் அறிமுகம் கிடைத்தது. ஆனந்தவிகடனில் வெளிவந்த எனது கதைகளில் அனேகமான கதைகளுக்கு ஓவியர் மாருதியே ஓவியம் வரைந்திருந்தார். கற்பனைக் கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, அந்தப் பாத்திரங்களை வாசகர்கள் மனதில் இடம்பிடிக்க வைத்ததில் ஓவியர்களுக்கும் முக்கிய பங்குண்டு என்றால் மிகையாகாது.
கதையில் வரும் பாத்திரங்களின் முகபாவனையை அப்படியே எடுத்துக் காட்டுவதில் இவரது ஓவியங்கள் சிறப்பானவை. குறிப்பாகப் பெண் பாத்திரங்களை அப்படியே மனதில் நிலை நிறுத்தி விடக் கூடியது இவர் வரையும் பெண்களின் ஓவியங்கள். குறிப்பாக விகடனில் வெளிவந்த ‘சார் ஐ லவ்யூ’ என்ற எனது கதையின் இளம் கதாநாயகியையோ, நீர்மூழ்கி நீரில் மூழ்கி கதையில் வந்த கதாநாயகியையோ, அல்லது ரோசக்காரியில் வந்த சுபத்ரா என்ற பாத்திரத்தையோ மறக்க முடியாதவாறு ஓவியம் வரைந்திருந்தார். ரோசக்காரியில் தானே சுபத்ரா என்ற பாத்திரத்தோடு பூங்காவில் உட்காரந்து உரையாடுவது போல அவரது ஓவியம் வித்தியாமான கோணத்தில் அமைந்திருந்ததால் பலரின் பாராட்டையும் அப்போது பெற்றிருந்தார். 'பாட்டிற்கு இசை என்றால் கதைக்கு ஓவியம்!'
‘ஓவியக் கலைமாமணி’ என்ற விருது பெற்ற, ஓவியர் மாருதி உயிரூட்டிய எனது சில கதாபாத்திரங்களின் படங்களை இங்கே தருகின்றேன். நேற்றிருந்தார் இன்றில்லை என்பதற்கிணங்க, அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களது துயரத்தில் நாங்களும் கலந்து கொள்கின்றோம். ஓம் சாந்தி!.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.