சிறுகதை: வழியறியும் பாதங்கள் - ஶ்ரீரஞ்சனி -
* ஓவியம் - AI
வானத்தைக் கருமேகங்கள் முற்றாக ஆக்கிரமித்திருந்தன. மார்கழி மாதத்துக் குளிர் ஊசி துளைப்பதுபோல அவளைத் துளைத்தது. மழை நீர் குட்டைகளாக அங்கும் இங்கும் தேங்கியிருந்தது. சேறும் சகதியாக இருந்த தரையில், காலடிகளை ஒவ்வொன்றாகத் தூக்கித்தூக்கி மெதுமெதுவாக அவள் வைத்தாள். “கவனமப்பா, வழுக்கும். விழுந்திடாதையும்,” அவளுக்குள் ஒலித்த நாதனின் குரல் அவளின் கண்களைத் திரையிடச் செய்தது.
அந்த மப்பும் மந்தாரமுமான சூழலில்கூட, பின்வளவில் நாதன் பயிரிட்டிருந்த தக்காளியும், கத்தரியும், பிஞ்சு மிளகாயும் காய்த்துப் பொலிந்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. அதேநேரத்தில், எப்போதுமே நேர்த்தியாகவிருக்கும் அந்தத் தோட்டம், களைகளால் நிரம்பி அவளைப் போலவே சோகத்தை அப்பிவைத்துக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோற்றமளித்தது. தண்ணீர் பாய்ச்சுவதும், களைபிடுங்குவதும், பசளையிடுவதுமென செப்ரெம்பர் வரைக்கும் தினமும் நாதனின் மாலைநேரங்கள் அதற்குள்தான் கழிந்திருந்தன. அவன் நேசித்த அந்தத் தோட்டத்தைச் சற்றுச் சீராக்குவோமென்ற நினைப்பில் களைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கத் தொடங்கினாள். “குந்தியிருந்து பிடுங்காமல் ஒரு ஸ்ரூலிலை இருந்துகொண்டு செய்யுமன். முதுகு வலிக்கப்போகுது. அதோடை களையெண்டு நினைச்சுக் கீரையளையும் பிடுங்கிப்போடாதையும்,” மீளவும் அவன் அவளுடன் பேசினான். தோட்ட வேலைகள் என்று எதையும் அவள் இதுவரை செய்ததும் இல்லைத்தான். “நீர் விதைச்சா பெரிசா முளைக்கிறதில்லையப்பா, நான் செய்யிறன். நீர் போய் எனக்கொரு தேத்தண்ணி போட்டுக்கொண்டுவாரும்.” தூக்கிக் கட்டின சாரத்துடனும், முறுக்கேறிய மார்புடனும் வியர்க்க வியர்க்க நிற்கும் நாதனுக்குத் தேத்தண்ணியுடன் அவனுக்குப் பிடித்த கடலை வடையையோ அல்லது பகோடாவையோ சேர்த்து அவள் கொண்டுவருவதும், அவனின் கைகள் அழுக்காக இருந்தால் அந்தச் சிற்றுண்டிகளை அவளே அவனுக்கு ஊட்டிவிடுவதுமான காட்சி அவளின் மனதில் ஓடி மறைந்தது. கண்களை நிறைத்த கண்ணீரை தனது வலது முன்கையால் துடைத்துக்கொண்டவள், பூத்துச் செழித்திருக்கும் பயிர்களைப் பார்த்துப் பூரித்துப்போகும் அவனுடன் தானும் சேர்ந்து அகம் மகிழ்ந்துபோவதை நினைத்துக்கொண்டாள். “இண்டைக்கு எல்லாமே உங்கடை தோட்டத்திலை பிடுங்கினதுதான்,” எண்டுசொல்லியபடி அவள் பரிமாறும், மசித்த கீரைக்கறியையும், மாசிக்கருவாடு கலந்த கத்தரிக்காய் பால்கறியையும், தக்காளியுடன் தாளித்துச் செய்த வெந்தயக் குழம்பையும், பருப்புடன் அவன் ரசித்துச் சாப்பிடும்போது அவளுக்கு ஏற்படும் உவகைக்கு ஏதும் ஈடிருப்பதில்லை.