- ரீஜன்ஸ்பேர்க் நகரக் காட்சி -
எங்களது பயணத்தில் அடுத்ததாக வரும் நாடு ஜெர்மனி : அதாவது ஜெர்மனியின் கிழக்குப் பகுதியான பவேரியா மாநிலம். ஒரு முக்கியமான விடயம் இங்கு சொல்ல வேண்டும். ஜெர்மனியின் வடக்கு பிரதேசங்கள் ஸ்கண்டினேவியா நாடுகள் போல் புரட்ஸ்டான்ட் மதத்தை தழுவியவர்கள். ஆனால், பவரியா மற்றும் தென்பகுதியினர் கத்தோலிக்க மதத்தினர். இங்கு இன்னமும் இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வரி செலுத்துகிறார்கள்.
டானியுப் நதியில் நாங்கள் சென்ற அடுத்த நகரம் மிகவும் முக்கியமானது . பவேரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பழைய தலை நகரமான ரீஜன்ஸ்பேர்க் (Regensburg) நதியோரத்தில் உள்ளது.
இங்கே காலையில் படகிலிருந்து இறங்கி, வழிகாட்டியுடன் நதிக்கரையோரமாக நடந்தபோது, அது பழமையான நகரமாகவும், அதே நேரத்தில் அந்த பழமை பாதுகாப்பாகவும் உள்ளது. புதிய கட்டிடங்களும் எங்களால் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. புதுமையும் பழமையும் அழகாக இணைந்து இருந்தன. பழமையை பேணியபடி, புதுமையை உருவாக்குவது எப்படி என்பதை ஐரோப்பியர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கிய பாடமாகும்.
- 16 வளைவுகள் கொண்ட பிரசித்தி பெற்ற கற்பாலம் டானியுப் நதிமீது -
எங்களுக்கெதிரே 16 வளைவுகள் கொண்ட பிரசித்தி பெற்ற கற்பாலம் டானியுப் நதிமீது இருந்தது. அந்தப்பாலம் அக்காலத்தில் ஜெருசலேமில் நடந்த சிலுவை யுத்தத்திற்காகப் படைகளும் குதிரைகளும் டானியுப் நதியைக் கடந்து தெற்கே செல்வதற்கு, நதிமேல் கட்டப்பட்டதாகும். இது மிகவும் அழகான கற்பாலம் என்பதுடன் பாலத்தின் ஒரு பக்கத்தில் கலங்கரை விளக்கம் உள்ளது.
- பியரை குடித்தபடி உயரமான சிங்கத்தின் சிலை -
பாலத்தின் அருகே உள்ள மியூசியத்திற்குள் சென்றபோது அங்கு பியரை குடித்தபடி உயரமான சிங்கத்தின் சிலை இருந்தது . பியருக்கு யார் சிலை வைப்பார்கள் ?
ஜெர்மனியரைத் தவிர!
இந்த நகரத்தில் ஆறு முக்கிய பியர் தயாரிப்பு சாலை உள்ளது. அதிலொன்று கத்தோலிக்க மதகுருமாரகள் நடத்துவது அத்துடன் கறுத்த பியர் (Stout) இந்த இடத்தில் விசேடமானது என்றார்கள் அதைவிட இங்குள்ள மது விடுதிகளும் பிரபலமானவை என்றார்கள்.
ரீஜன்ஸ்பேர்க் நகரம் ஏன் முக்கியமானது?
சில கட்டிடங்களை மட்டும் அல்ல, ரீஜன்பேர்க் முழுமையான நகரமே மியூசியமாக யுனெஸ்கோவால் தற்போது பாதுகாக்கப்படுகிறது. ஜெர்மனியின் பல நகரங்கள் இரண்டாம் உலக சண்டையில் அழிந்த போதும் இந்த நகரம் அழிவிலிருந்து தப்பிவிட்டது.
இந்த நகரத்தில் ரோமானியர்கள் தங்களது படையை கி.பி 179 வைத்திருந்தபோது அவர்கள் படை வீடுகளாக கட்டியிருந்த கற்கட்டிடங்களின் சில பகுதிகள் இன்னமும் காணக்கூடியதாக இருந்தது. ரோமர்கள் தங்கள் படை வீரர்களை வைத்திருந்த காலத்தில், ஜேர்மனியர்கள் பல குழுக்களாக இங்கு இருந்தார்கள். அவர்கள் நதியின் மறுபுறத்திலிருந்தும், புதர் மறைவுகளிலிருந்தும், ரோமானிய வீரர்களது உடைகளையும் படைக்கலன்களையும் வேடிக்கை பார்த்தார்கள். இவர்களை ரோமர்கள் (White Barbarians) எனச்சொல்வார்கள் என்றபோது ஐரோப்பாவில் ரோமர்களது தாக்கம் எப்படி இருந்தது என வியப்புடன் நினைக்க வைத்தது . அவர்களது கட்டிட எச்சங்கள் மட்டுமல்ல கலாசார எச்சங்களும் இன்னமும் உறுதியாக உள்ளது.
நாங்கள் பார்த்த கற்பாலம் ஆரம்பத்தில் மரப்பாலமாக இருந்து, பிற்காலத்தில (1135-46) லுயிஸ் (Louis V11) என்ற அரசன் இரண்டாவது சிலுவை போருக்கு சென்றபோது கற்பாலமாக கட்டப்பட்டது. இந்த பாலம் பிற்காலத்தில் லண்டன் மற்றும் பிராக் என பல ஐரோப்பிய நாடுகளில் பாலங்கள் கட்ட முன் உதாரணமாக இருந்தது. ஐரோப்பிய கண்டத்தில் நடந்த பல போர்களைக் கடந்து 800 வருடங்களாக, 16 வளைவுகளைக் கொண்ட இந்த கட்டுமானம் நமக்கு வரலாற்றை உரைக்கிறது.
சிலுவை யுத்தத்திற்கு படைகள் ஜெருசலோம் போவதற்காக இந்த பாலம் கட்டுப்பட்டது என்ற போது என்னால் கிட்டத்தட்ட 200 வருடங்கள் நடந்த சிலுவை யுத்தத்தைப் பற்றி அசை போடாது இங்கிருந்து நகர முடியாது.
2௦௦ வருடங்களுக்கு ஜெருசலேமை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்ற நடந்த போரை பாப்பாண்டவரும், கத்தோலிக்க திருச்சபையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைகளை ஆசீர்வதித்து சண்டையிட அனுப்பினார்கள்.
தற்போது மத்திய கிழக்கில் நடக்கும் இஸ்லாமிய -யூத , தென் கிழக்கு ஆசியாவில் நடக்கும் புத்த – இஸ்லாமிய , இந்து -முஸ்லிம் என இந்தியாவில் நடக்கும் எல்லா மத சச்சரவுகளின் தொடக்கமே மேற்கு ஐரோப்பியர் நடத்திய இந்த சிலுவை யுத்தம். இது பிற்காலத்தில் நிறுத்தப்பட்டாலும் இதுவே மத்திய காலத்தில் மேற்கு ஐரோப்பிய அரசுகளின் கொள்கைகளை மட்டுமல்ல மனிதர்களது சிந்தனையையும் வடிவமைத்தது.
ஜெருசலேமைக் கைப்பற்ற சிலுவை யுத்தம் கி.பி 1095 தொடங்கியது.
எப்படி சிலுவை யுத்தம் தொடங்கியது ?
ஐரோப்பா – ஆசியா- ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் பரந்து இருந்த ரோமராச்சிய மன்னன் கொஸ்ரானரைன் இறந்த பின்பாக இரண்டாகப் பிரிந்து தற்போதைய துருக்கியில், கிரேக்க மொழி பேசும் பைசான்ரியம் (Byzantium) என்ற பெயரில் ஆயிரம் வருடங்கள் சாம்ராச்சியமாக இருந்தது. இது தற்போதைய துருக்கி, கிரேக்கம் மற்றைய பால்கன் வளைகுடா , மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த காலத்தில், அரேபியாவில் இஸ்லாமிய இராச்சியங்கள் உருவாகின. இதன் விளைவாக மத்திய ஆசியர்கள் இஸ்லாமைத் தழுவி, அவர்கள் பைசான்ரியம் அரசைத் தாக்குகிறார்கள். தங்களை அழிவிலிருந்து பாதுகாக்க பைசான்ரியம், ஜெருசலோமை இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாப்பரசரிடம் வைக்கிறார்கள். இந்த அறைகூவலால் சிலுவை யுத்தம் தொடங்குகிறது.
முதலாவது சிலுவை யுத்தத்தை ஆரம்பித்தவர் ஜேர்மனிய இளவரசர்.(அக்காலத்தில் ஜெரமன் பல சிறிய நாடுகளாக இருந்தது) அதைத் தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்து அரசர்கள் என சண்டையில் பங்கெடுத்தார்கள். சிலுவை யுத்தம் 1272 வரையும் எட்டு யுத்தங்கள் நடத்தினார்கள் . இதை விட பல சிறிய சிலுவை யுத்தங்களும் நடந்தன.
அக்காலத்தில் தற்போது இஸ்லாமியர்கள் மக்கா போவதுபோல் கத்தோலிக்க குடும்பங்களில் , பிரபுக்களிலிருந்து மற்றும் சாதாரணமானவர்கள்வரை ஜெருசலோமை மீட்க போருக்கு செல்வதை தங்கள் புனித மதக் கடமையாக செய்வார்கள். அப்படி போகுமுன்பு தங்கள் சொத்துகளை ரெம்பிளர் என்பவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஜெருசலோம் செல்வார்கள். பலர் வழியில் மரணமடைவதும் வரலாறு. இக்காலத்தில் தேவாலங்களில் ஏராளமான சொத்துக்கள் குவிந்தன. அந்த செல்வத்தில் மதகுருமார்களும் கத்தோலிக்க சபையும், பல தேவாலயங்களையும் மதகுருக்கள் மடங்களையும் கட்டினார்கள். சிலுவை யுத்தம் இறுதியில் தோல்வியடைய, ஜெருசலேம், முஸ்லிம்கள் கைகளில் சென்றது. கடைசியான சிலுவை யுத்தத்தை முன்னின்று நடத்தியது ஆங்கிலேய மன்னனே.
இந்த சிலுவை யுத்தங்களுக்குப் பின்னால் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கம் எப்படி முடிவுக்கு வந்தது என நாம் பார்த்தால் அதற்கு காரணம் புரட்ஸ்டான்ட் மதத்தின் தோற்றமாகும் . இங்கு ஆரம்பத்தில் இருந்த மதரீதியான வெறி பிற்காலத்தில் பணமாக மாறுகிறது . சிறிய அரசுகள் பெரிய அரசுகளாக மாறி பலம் பெறுகின்றன. இங்கு ஒரு முக்கிய விடயம் நிரந்தரமான இராணுவம் இங்கு தேவையாகிறது. அதற்கு வரி விதிக்கவேண்டும். அதற்கு முன்பான வரிகளில் கத்தோலிக் திருசபைக்கும் பங்குள்ளது. ஆனால், புரட்டஸ்தாந்து அரசு வந்ததும், அரசுகள் திருச்சபையிலிருந்து சுயாதீனமாக பிரிகின்றன. இதன் பின்பே காலனிய விஸ்தரிப்பு , அடிமை வியாபாரம், காலனியஆதிக்கம் என்பன தொடங்குகிறது.
கற்கள் பதிக்கப்பட்ட ரீஜன்ஸ்பேர்க் நகரின் நடை பாதைகளில் நடந்து போனபோது பல பித்தளை பட்டயங்கள் அந்த கற்களிடையே புதைக்கப் பட்டிருந்ததைக் கண்டேன் அவற்றில் பெயர் மற்றும் பிறந்து திகதியும் எழுதப்பட்டிருந்தது. சில வீடுகளின் முன்பாக நான்கு மூன்று பட்டயங்கள் இருந்தன. எழுத்தை காலால் மிதிக்கக் கூடாது என்று எனது ஆச்சி பழைய காலத்தில் சொல்லியதை நினைவு வைத்து அந்த இடங்களை தவிர்த்து நடந்தேன். இறுதியில் விசாரித்தபோது, யூதர்கள் அக்காலத்தில் இந்த வீடுகளில் இருந்தார்கள் என அறியக்கூடியதாக இருந்தது. அவர்கள் நாஜிகளால் இழுத்துச் சென்று வதை முகங்களில் கொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் முகமாக பாதையில் இந்தப் பட்டயங்கள் வைத்திருக்கிறார்கள் என்றார்கள்.
- டான்யுவான் ஒவ் அஸ்திரியா ( Don Juan de Austria)-
ரீஜன்ஸ்பேர்க் நகரத்தின் மத்தியில் உயர்த்திய ஒரு வாளுடன் ஒருவனது சிலையைக் காட்டி வழிகாட்டி டான்யுவான் ஒவ் அஸ்திரியா ( Don Juan de Austria) என்றபோது எனக்குப் புரியவில்லை. அந்த டான்யுவான் என்ற பெயர் பெண் பித்தர்களை ஆங்கிலத்தில் சொல்லும் வார்த்தை . மேலும் அந்த வழிகாட்டி அங்கிருந்த ஒரு பெரிய வீட்டைக் காட்டி இங்கு தான் டான்யுவான் ஒவ் அவுஸ்திரியா, பாபரா என்ற இளம் பெண்ணுக்கு பிறந்தவன் என்று மேலும் கூறியபோது, எனக்கு இது வரலாற்றில் வேறு ஒருவன் எனப் புரிந்தது. வழிகாட்டி கூறிய கதையையும் பின்பு சில வரலாற்றைச் சிறிது படித்தபோதும் புரிந்த கதையை இங்கு எழுதுகிறேன் .
அக்காலத்து ஜெர்மனியைச் சேர்ந்த மன்னர் சார்ஸ் என்பவர் ரீஜன்ஸ்பேர்க் நகர் வந்திருந்தபோது தனது பிரதானியின் வீட்டில் தங்கினார். அப்பொழுது அந்த பிரதானியின் அழகிய மகள் பாபரா, சங்கீதம் பாடுபவராகவும் மன்னருக்கு உபசாரம் செய்பவராகவும் நியமிக்கப்பட்டபோது மன்னரால் பாபரா கருவுற்று குழந்தை பிறந்தது.
மன்னர் பாபராவிற்கு மீண்டும் திருமணம் செய்து வைத்ததுடன் அந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து மூன்றாவது வயதில் தனது நண்பரது வீட்டில் வளர்த்தார். பிற்காலத்தில், ஜோன் என்ற அந்த பிள்ளைக்குப் பல மொழிகளும் போர் தொழிலும் பழக்கியதுடன் தனது பட்டத்துக்குரிய மகனாகிய பிலிப்பிடம் (Philip II of Spain) (ஸ்பானிய கிரீடத்தை) கொடுத்துவிட்டு இளைப்பாறும்போது ஜோனைப்பற்றிய உண்மைகளைக் கூறியுள்ளார். இதன்பின் பிலிப், ஜோனை அழைத்து உனது இரத்தமும் எனது ரத்தமும் ஒன்று தெரியுமா? எனக் கூறி பல பதவிகளை ஜோனுக்கு அளித்துள்ளார்.
இங்கே சிலை வைப்பதற்கு முக்கியமான காரணம் இந்த ஜோன் (ஸ்பானிசில் யுவான்) அக்காலத்தில் (துருக்கியின்) ஓட்டமான் கப்பல் படைகளிடமிருந்து கத்தோலிக்க இராச்சியங்களான ஸ்பெயின் போர்த்துக்கல், ஏன் முழு ஐரோப்பாவையும் இஸ்லாமியப் படைகளிடமிருந்து பாதுகாத்த நன்றிக்கடனாக சிலை வைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கதை பேரரசன் ஒருவனது நேர்மையான நடவடிக்கை என மனத்தில் பதிந்துக் கொண்டது. கத்தோலிக்க மதத்தில் திருமணமாகாமல் குழந்தை பெறுவது தடை செய்யப்பட்டிருந்த காலம் அது மேலும் சால்ஸை அக்காலத்தில் புனிதரோம பேரரசன் (Holy Roman Emperor) என்பார்கள்.
இதேபோல் இன்னொரு நிகழ்வு : இங்கிலாந்து அரசனாகிய எட்டாவது ஹென்றி தனது முதல் மனைவி அழகில்லை என தனது திருமணத்தை ரத்துச் செய்ய அனுமதி கோரியபோது, அக்கால பாப்பாண்டவர் மறுத்துவிட்டார். காரணம் அக்கால புனித ரோமன் அரசராக இருந்தது இந்த ஜோனின் தந்தையான சார்ல்ஸ் V அதாவது நமது புனித ரோமப் பேரரசன் மருமகளே கத்தரின் என்ற அழகற்ற பெண்ணாவார். அதன் விளைவே இங்கிலாந்து திருச்சபை (Church of England) இங்கிலாந்து அரசனாகிய எட்டாவது ஹென்றியால் உருவாக்கப்பட்டு அதன்பின் திருமணம் புதிய திருச்சபையின் ஆதரவோடு ரத்து செய்யப்பட்டது.
இதன் மூலம் எமக்குத் தெரிவது என்ன?
மதச்சட்டங்கள் அரசர்களால் தேவையேற்படும்போது மீறப்படும். அதேபோல் இங்கிலாந்து திருச்சபை என்பது எட்டாவது ஹென்றியால் தனது தேவைக்கு உருவாக்கப்பட்டது.இப்படியாக வரலாற்றுக்குள் செல்லும்போது நமக்குப் பல விடயங்கள் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
நகரின் மத்தியில் பிரமாண்டமான இரட்டை கோபுரங்கள் அமைந்த தூய பீட்டர் தேவாலயம் அமைந்திருந்தது. 500 வருடங்கள் முன்பாக கட்டி முடிக்கப்பட்ட தேவாலயம். பழைய கட்டிடத்துடன் மீண்டும் புதிதாக அதே இடத்தில் கட்டப்பட்டதால் வெளியிலிருந்து பார்க்கும்போது இரண்டு தேவாலயங்களாக தெரியும். நாங்கள் சென்றபோது பல புனருத்தாரண வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
[தொடரும்]