முன்னுரை
மீன்களை நன்னீரில் வாழ்பவை என்றும், கடல் நீரில் வாழ்பவை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கெண்டை மீன், கெழுத்திமீன், நெத்திலி மீன், வஞ்ஜ்ரமீன், விலாங்குமீன், செண்ணாங்குனிமீன்,மோவல் மீன், சங்கரா மீன், கிழங்கா மீன், பாறை மீன், விரால்மீன், மத்தி மீன், சால மீன், சீலா மீன் என்று பல வகையான மீன்கள் காணப்படுகின்றன. கம்ப ராமாயணத்தில் கெண்டைமீன்,பனைமீன், கயல்மீன், வாளைமீன், விரால்மீன், இறால் மீன், சேல்மீன், திமிங்கிலம், திமிங்கிலம் ஆகிய மீன்கள் குறித்தும், மீன்களின் தன்மை, இயல்பு குறித்தும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
உலகின் உயிர்களுக்கு அன்பை விளைவிக்கும் கடவுளான மன்மதனின் கொடி ‘மீன்கொடி’. மூவேந்தர்களில் பாண்டியர்களின் கொடி மீன்கொடி ஆகும்.
மீன்கள் முட்டையிட்டு தம் பார்வையாலேயே குஞ்சு பொறிக்கும் இயல்புடையன.
1.கெண்டைமீன்
தேரையானது தெங்கின் இளம் பாளையை நாரையென்று நடுங்குவதாகவும், கெண்டைமீன் கூரிய நுனியையுடைய ஆம்பல் கொடியை சாரைப்பாம்பு என்று நினைத்துப் பயந்ததாகவும் கம்பர் குறிப்பிடுகின்றார்.
" தேரை வன் தலைத் தெங்கு இளம் பாளையை
நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ
தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று புலம்புவ தேரையே”
(ஆறுசெல் படலம் 927)
உலாவியற் படலத்தில் வெட்டப்பட்டதால், மேலும் தழைக்க முடியாத கரும்பை வில்லாகப் பெற்றுள்ள மன்மதன் செலுத்திய அம்புகள் பாய்ந்தமையால் ஏற்பட்ட புண்கள் நீங்கப் பெறாத நூலிழையும் இடையை செல்ல முடியாமல் நெருங்கிய இளமையான முலைகளை உடைய ஒருத்தி, காதணியில் மோதிப் பிரகாசிக்கும் கெண்டைமீனைப் போன்ற கண்கள், மேகத்தைப் போல நீர்த்திளிகளைச் சிந்த, சோர்வடைந்து, மேகத்தில் பொருந்தாமல் தேகத்தில் பொருந்திய மின்னலைப் போன்ற நுண்ணிடை துவள்வது போலத் துவண்டு நின்றாள்.