ஒரு வைத்தியருடன் நோயாளர் கொண்டுள்ள அன்புறவு என்பது எல்லா வைத்தியர்களாலும் இலகுவில் பெறக்கூடியதல்ல. முதலில் டாக்டராக சந்திக்க வரும் நோயாளர் நீண்ட காலத்தின் பின்னும் உறவாக நினைத்து 'அந்த முகத்தை ஒருக்கா பாத்திட்டு போவம்' என்ற உணர்வுடன் சந்திக்க வருவதும், தமது நோய்நிலை மறந்து மகிழ்வதும், டாக்டர். எம். கே. முருகானந்தன் அவர்களின் மருத்துவ அனுபவங்களில் உன்னதமான ஒரு பகுதி. பெருமை கொள்ளலாம். அவர் எழுதிய நூலின் தலைப்பு மட்டுமே 'டாக்டரின் தொணதொணப்பு'. மற்றப்படி நோயாளரின் மனதில் அவர் பற்றிய நினைவுகள் அருமருந்து.
இவரது சிறப்பான மருத்துவ அம்சமாக , தன்னுடைய நோயாளரின் நோய்நிலைத் தகவல்களை 1999 ம் ஆண்டில் இருந்தே கணினி மயப்படுத்திப் பாதுகாப்பதைக் கூறலாம். நோயாளரின் நம்பிக்கையை வலுப்படுத்தும் இந்த நடைமுறையை இன்றும் இலங்கையில் சிலரே கைக்கொள்கின்றனர்.
புத்தகத்தின் ரசனைக் குறிப்பில் திரு.இ.து.குலசிங்கம் அவர்கள் கூறியிருப்பது போல 'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாக்காதல் நோயாளன் போல் ..' எனும் குலசேகர ஆழ்வார் பாசுரத்தினை ஒத்ததாக, இந்த டொக்டரின் மேல் காதல் கொண்ட நோயாளர் மிக அதிகம் என உணர்கிறேன். அதுவே அவரது இளமைக்கும் வெற்றிகளுக்கும் காரணமாகலாம். இவர் வைத்தியராக மட்டுமன்றி சிறந்த எழுத்தாளராகவும் இருப்பது மேலதிக சிறப்பு.
வைத்திய தர்மநெறிகளை மீறாமல், எந்தவொரு நோயாளியினதும் தனிப்பட்ட ஆளடையாளங்கள் இன்றி, பொதுவான சில நோய்நிலைகள்; அதன் அறிகுறிகள்; தம்மைப் பாதுகாத்தல்; மற்றும் தொற்று நோய்களை ஏனையோருக்கு பரப்பாது பாதுகாத்தல் என்பன பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதே இத்தொகுப்பின் பிரதான நோக்கம். இதனை படைப்பாளர் தனது 'நுழைவாயில் தொணதொணப்பில்' தெளிவாகக் கூறியுள்ளார். அட்டைப்படப் பெண்ணின் முகம்கூட தெரியாமல் காட்டப்பட்டுள்ளது நோயாளர் பற்றிய ரகசியம் பேணலின் சிறப்பு அம்சமாகவே கருதலாம்.
வாசகரின் நேர்த்தியான உணர்தலுக்காக, ஒத்திசையும் பல நோயாளரின் நோய் நிலைகள், ஒரு தலைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன என்பது டாக்டரின் உரையில் இருந்து தெளிவாகிறது.
அதாவது ஒரு தலைப்பில் உள்ள கட்டுரையில் வெவ்வேறு நோயாளரின் அனுபவங்கள் சேர்த்தல், பிரித்தல்,ஒட்டல், கற்பனை, நிஜம் என்ற கலப்புடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. நோயாளரின் யதார்த்தமான பிரதேச வழக்கு கட்டுரைகளுக்கு மேலும் சுவை சேர்க்கிறது. நம்பிக்கை அளிக்கும் விதமான நேரம்ச உரையாடல்களுடன் கலந்து வரும் நகைச்சுவை உணர்வு நோயாளர்களுக்கு பிணிதீர்க்கும் மருந்தினை விட மேலானது.
டொக்டரின் மருந்துச் சிட்டையின் மகத்துவம் பற்றிய கட்டுரை, சற்று மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவையே எனினும் அதில் மிகுந்த உண்மையும் உண்டு. சில மருந்துச்சிட்டைகளை வாசிப்பதற்கு சக மருத்துவர்களாலும், மருந்தகங்களில் பணிபுரிவோராலும் முடிவதில்லை என்பது வருந்தத்தக்க யதார்த்தம். இதுபோலவே நோய் கண்டறிதலில், வைத்தியர் தவறு செய்யும் சந்தர்ப்பங்களும் உண்டு என்பதையும், இந்த நியாயமான 'டொக்டர்' சுட்டிக் காட்டத் தவறவில்லை. எனினும் மருத்துவம் மிக வளர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில் மருத்துவத் தவறுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன.
வைத்தியத் துறையில் பணியாற்றிய அனுபவங்கள் கொண்டு, படைப்பாளரின் எண்ண ஓட்டங்களை அவர் சார்பிலும் நோயாளர் சார்பிலும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மருத்துவத் தொழில் நுட்பங்கள் உச்சம் தொட்டிருக்கும் இக்கால கட்டத்திலும் நோயாளர்களின் அறிகுறிகள்,உணர்வுநிலை, உடல்மொழி கொண்டு நோய் நிலையைக் கணிக்கும் திறமை வைத்தியர்களுக்கு அவசியமான ஒரு வரம் என்பதில் சந்தேகமில்லை.
- டாக்டர். எம். கே. முருகானந்தன் -
பாராட்டுகளைப் போலவே, நோயாளரால் வைத்தியர்கள் மீதும் மருந்துகள் மீதும் முன்வைக்கப்படும் குறைகளையும் குற்றச் சாட்டுகளையும் பொறுத்துச் செல்லும் மனச்சமநிலை வைத்தியர்களுக்கு அதிகம் வேண்டப் படுகிறது என்ற கருத்து, இத்தொகுப்பின் பலசந்தர்ப்பங்களில் கூறப்பட்டு உள்ளது.
நோயாளர் தாமே வைத்தியராக மாறி எடுக்க வேண்டிய மருந்துகளைக் குறைப்பதும் ஒறுப்பதும், இதன் காரணமாக நோய்நிலை அதிகரித்தவுடன் வைத்தியர் மேலும் மருந்துகள் மேலும் பழியைச் சுமத்தும் சந்தர்ப்பங்களும் சுவையுடன் விபரிக்கப்பட்டு உள்ளன.
அத்துடன் 'தலைமுடி உதிரும்' என்ற காரணத்துக்காக கான்சர் நோய்க்கு அளிக்கப்பட இருந்த Chemotherapy எனும் அவசிய சிகிச்சையை மறுத்து, பின் உயிருக்கு ஊசலாடும் பெண்ணின் நிலைமையும் ,வேறு நோய்நிலைகளின் போது உயா் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கட்டுப் படுத்தலுக்கான மாத்திரைகள் கைவிடப்படுவதும் அறியாமையின் உச்சமாகக் கருதலாம். மருந்தோடு இணைத்து சமயம் சார்ந்த நம்பிக்கைகளைப் புறந்தள்ளாத வைத்தியரின் பெருந்தன்மை பாராட்டுக்கும் உரியது.
டொக்டரின் தொணதொணப்பில் பாலகர்,வளரிளம் பருவம், இளமை, முதுமை சம்பந்தமான பொதுவான நோய்நிலைகளும் மனநிலைகளும், பருவநிலை பால்நிலை சார்ந்து அலசப் படுகின்றன. பல உணர்வு பூர்வமாகவும் சில வாய்விட்டுச் சிரிக்கும் படியான நகைச்சுவை உணர்வுடனும் கூறப்பட்டு உள்ளன. பாலியல் சார்ந்த சில நோய்நிலைகளையும் விரசமில்லாது எழுதுவதில் டாக்டர் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் நலமான மானுட வாழ்வுக்கான சில வழிமுறைகள் நோயாளரின் அனுபவங்களின் ஊடாகச் சொல்லப்பட்டு உள்ளன.
முக்கியமான கட்டுரை சிறுவர்கள் பற்றியது. சிறுவர்களுக்கு கல்வி சார்ந்த போட்டி மனநிலைகள் எத்தகைய உளநெருக்கீட்டைத் தரும் என்பதை அனேகமான பெற்றோர் உணர்ந்து கொள்வதில்லை. Hyper ventilation என்னும் மிக விரைவான சுவாசம் இதிலொன்று. Asthma என நினைக்க வைக்கும் மாயத் தோற்றத்தினை இது தரும் .
முதுமையின் கொடுமையை விளக்கும் சில கட்டுரைகள் உண்டு.புலம் பெயர்வு தந்த சாபங்களில் ஒன்று தனிமையில் வாடும் பெற்றோர். 'சாக மருந்து தாங்கோ' என்ற மனநிலையில் வாழ்கின்றனர். காதுகேளாமை பல வயோதிபர்களின் பிரச்சனை. காது கேளாதிருந்த முதியவர் புதிதாக நவீன காதொலிக்கருவி(Hearing aid ) ஒன்றைப் பொருத்தி இருக்கிறார் . வீட்டாரிடம் சொல்லவில்லை. அவர் டாக்டரிடம் சொல்கிறார், தனக்கு காது கேட்பது லாயருக்கு நல்ல சந்தோசம் என்று. இவரைப் பற்றி வீட்டார் என்ன கதைக்கிறார்கள் என்பதைக் கேட்டு உயிலை நாலுதரம் மாத்தி எழுதினால் லாயருக்கு சந்தோஷம் தானே என்கிறார். நகைச்சுவையாக கூறினாலும் முதியவரின் ஏக்கப் பெருமூச்சு அவரது மனதின் பெருவலியை வெளிக்காட்டுகிறது.
முதுமையின் நினைவு மறதிகள் அதன் மூலமாக உண்டாகும் பிரமைகள் பற்றியும் சில கட்டுரைகள் கூறுகின்றன. முதுமையில் வலியில்லாத மரணம் என்பது விரும்பிய போது பெறமுடியாத ஒன்றாக இருப்பதே இறைநம்பிக்கையின் ஆணிவேராக உள்ளதா? மரணத்தை எங்கு வைத்தானோ, இறைவன் தன்னையும் அங்குதான் வைத்தான் என்று கூறப்படுவது உண்மைதான்.
குழந்தைப்பருவம், முதுமைப்பருவத்து பிரச்சனைகள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் வளரிளம் பருவத்து ஆண்பிள்ளைகளின் உணர்வுகளுக்கு பெண்களின் பருவமடைதல் போல முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. 'தன் கையே தனக்குதவி' என தனக்கு இருக்கும் மனப்பயங்களை வெளியில் சொல்லமுடியாது அனுங்கிக் கொண்டிருக்கிறான் 'சுயமைதுனம்' செய்யும் இளைஞன் ஒருவன். இத்தகைய விடயங்களை பலரும் அறிவதில்லை. இப்பழக்கத்தினால் எதிர்கால திருமணவாழ்வில் பிரச்சனை வராது, கெடுதலாக ஏதும் இல்லை என உறுதி கூறி அவனது மனப்பயத்தைத் தீர்க்கிறார் வைத்தியர்.
உண்மையில் சுய இன்பம் காணுதல் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் குறைந்த சதவிகிதத்திலேனும், பெண்களுக்கும் பொதுவானது. உடலியக்க ரீதியிலும் மனநலரீதியிலும் இது வாலிபப் பருவத்தினை கடந்து செல்லும் ஒரு நிலையாகும். ஆனால் இப்பழக்கத்தை நோய்நிலையாகவோ குற்ற உணர்வாகவோ கருதி தாழ்வுச் சிக்கலால் அவதிப்படும் இளைஞரை, குணப்படுத்துவதாகக் கூறி பணம்பறிக்கும் போலி வைத்தியர்களும் உண்டு என்பதை இளைஞர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவுநோய், பெண்களுக்கு பாலியல் வாழ்வில் ஏற்படுத்தும் பிரச்சனையை விட, ஆண்களுக்கு சிக்கலான பிரச்சனையைத் தருகிறது. 'சுடாத துப்பாக்கி' என்னும் தலைப்புக்குரிய சம்பவம் நகைச்சுவையாகவே எழுதப் பட்டிருந்தாலும் , தாம்பத்திய வாழ்வினைத் தீவிரமாகத் தாக்கும் பிரச்சனை. ''My gun is not firing'' என வரும் ஒரு ஆண் சிரிப்புக்கு உரியவரல்ல. தீவிர சிகிச்சைக்கு உரியவர். கட்டுப் பாட்டில் இல்லாத நீரிழிவு அவரது ஆண்உறுப்பின் விறைப்புத் தன்மையை இல்லாமல் ஆக்கியுள்ளது. சோகம்.
அது போலவே 'எலி எலியைக் கடித்து விட்டதாக' எண்ணப்பட்டதும் இத்தகைய நீரிழிவினால் வந்த பங்கஸ் பிரச்சனைதான். 'சிரித்துக் கொண்டே அழ' வேண்டிய சூழ்நிலைகளாயினும் மருத்துவம் சரியான தீர்வுகளைத் தரும் என்கிறார் டாக்டர். இங்கு ஒரு மனைவி, 'இது ஒரு பாலியல் நோயா' என கணவன் மேல் சந்தேகப்படாத நிலையில், வைத்தியருடனான தம்பதியின் உரையாடல் அமைந்துள்ளமை மனதுக்கு நெகிழ்வாக அமைந்திருந்தது.
அதே சமயம் பெண்களின் இவ்வாறான உளவியல், உடலியல் சிக்கல்களின் போது, ஆணும் அவனைச் சார்ந்த பெண்களும் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பது விநோதமானது.
வெளிநாட்டில் வாழும் தனது மகன் தூய்மையானவனா என சந்தேகம் கொள்ளாத ஒருதாய், மணமுடித்து ஒருவாரமே ஆன தன்மகனின் புத்தம்புது மனைவிக்கு வாந்தி, வயிறு சரியில்லை என்றதும் மருமகளின் ஒழுக்கத்தில் சந்தேகம் கொள்கிறார். அதுபோலவே 'நான் அப்படியான பொம்பிளை எண்டால்...' சம்பவத்தில் ஒவ்வாமையால் ஒரு பெண்ணுக்கு தொடை இடுக்குகளில் வந்த கரும் படர்த்தியை, பாலியல் நோயோ என கணவன் சந்தேகம் கொள்கிறான்.
இவை ஆணாதிக்கம் சார்ந்ததென்றோ, பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகின்றாள் என்றோ வருந்துவதை விட எப்போதும் பெருமளவில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர் என்ற நிலை மாற்றம் பெற வேண்டும் என்ற நினைவே மேலோங்குகிறது.
'கண்டதும் தின்று “குண்டு”கையானாள்' என்ற கட்டுரையில் பிரஷர் மற்றும் கொலஸ்ரோல் மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளாத ஒரு பெண் இதய செயல் இழப்புக்கு ஆளாகிறார். காரணம், கணவர் பிரிந்து விட்டதால் ஏற்பட்ட பொருளாதார வறுமை; உறவினரில் தங்கியிருத்தல்; மறுமணம் செய்ய குடும்ப கெளரவம் இடங்கொடாமையால் வந்த மனவிரக்தி; அதன் வெளிப்பாடான அடங்காத பசி; அது பரிசளித்த உடல்பருமன் என துன்பியல் தொடரான ஒரு பெண்ணின் வாழ்வு அந்திமத்தை நெருங்கும் போது....
அவள் கண்களில் இருந்து சிந்திய கண்ணீரை தன்னால் துடைக்க முடியவில்லையே என்று வருந்தும் இதயம், ஒரு டாக்டரின் இதயமாக இருப்பதில் நானும் பெருமை அடைகிறேன். மனிதாபிமானம் மிகுந்த டாக்டர்களின் இதயம் இரகசியம் காக்கும் சுரங்கங்கள் மட்டுமல்ல பலரின் துன்ப நினைவுகளைச் சேகரித்து வைக்கும் காலப் பெட்டகங்களும் ஆகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.