எங்கம்மா, திருநெல்வேலிக்கு வந்து, இந்த வீட்டை வாங்கிறப்போ எனக்கு பத்து வயசு. ஒத்தப்புள்ள நானு. அப்பா ஏவகூடவோ போயி ரெண்டு வருஷமாச்சு.
இப்போ வயசு நாப்பத்தைஞ்சு.... தொழில் கொத்தனார்.
எனக்கும் ஒத்தைப் பையன். ஒழுங்கா பத்தாம் கிளாசுகூட முடிக்கல. ஆத்தாக்காரி ஓவர் செல்லம். நான் வாயே தொறக்க முடியாது.
என்னை ஏசினாலும் பரவாயில்லை. ஆனால், அப்பப்போ எங்கம்மாவ வையிறதுதான் எனக்கு வருத்தம்.
. தனியா இருக்கிற நேரத்தில எங்கம்மா சொல்லும்....
“உங்கப்பன்கிட்ட .... நான் பட்ட கஷ்டத்த உன் பொண்டாட்டி படவேணாம்.... உன்னைய புடிச்சுப்போயிதான் ஓங்கிட்ட வந்தாளு..... அத எப்பவுமே நெனைப்பில வெச்சுக்க....”
எங்கம்மாவுக்கும் இப்போ எழுவது நெருங்கிகிட்டிருக்கு. இருந்தாலும், கண்ணாடி போடாமலே பேப்பர் படிக்கும்.... கையில கம்புவெச்சு அழுத்தாமலே வெறுசா நடக்கும்....
யாராச்சும் டூரிஸ்கைடுக வெளியூர் கோயிலுக்கெல்லாம் போறப்போ, என்னதான் பிரச்சினையிருந்தாலும், ஏங்கிட்ட வந்து, துட்டுக்குடுலேன்னு சண்டைபோட்டு புடுங்கிகிட்டு தானும் டூர் போயிடும்.
. பக்கத்து ஊர்ல, முதியோர் காப்பகம் ஒண்ணு இருக்கு. மேனேஜர் பொறுப்பில இருக்கிறவரு ஞாயித்துக் கெழமையில நான் வீட்டில இருக்கிறப்போ வந்து பேசீட்டுத்தான் போவாரு. நேர்மையாவும் பழகுவாரு.
“ஏல மேனேஜர் தம்பி.... உங்க காப்பகத்தில சேருறதிண்ணா, துட்டுக் குடுக்கணுமா.... இல்லே பிரீயா.....”
எங்கம்மா கேட்டிச்சு.
எனக்கு கொஞ்சம் கடுப்பாகிரிச்சு.
“ஏம்மா..... இப்ப உனக்கு இதெல்லாம் அவசியமாம்மா.... நல்லா கேட்டுக்க.... காப்பகம்னா கண்டிப்பா டொனேசன் உண்டு....”
என்னோட அடுத்த தலைவலி, என் பையன்.
. வேலைவெட்டியும் இல்லாம, அஞ்சாறு தறுதலைகள் கூட பைக்கில இந்த தெருவெல்லாம் சுத்தோசுத்திண்ணு சுத்தவேண்டியது.
போதாக்குறைக்கு, மத்தப் பசங்க போல தனக்கும் ஒரு வண்டி வேணும்னு போன ஆறுமாசமா சண்டை வேற.
என் பொண்டாட்டி கேட்டாள்.
“ஏன்யா.... பேங்கில இந்த வீட்டுப் பத்திரத்த குடுத்து லோன் வாங்கி, அவனுக்குப் புடிச்ச வண்டி வாங்கிக் குடுத்திடலாமில்லியா ......
நம்ம புள்ளைக்கு நாளைக்கு பொறந்தநாள்.... ஞாபகத்தில இருக்காயா.... இருவத்தி ஒண்ணு ஆரம்பிக்கிது.... பிரியாணி செஞ்சு குடும்மான்னு, ஆசைப்பட்டுக் கேக்கான்..... இல்லேன்னா ரொம்பவும் மனசு ஒடைஞ்சு போயிடுவான்..... நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே.... அத்தை பிரியாணி சூப்பரா பண்ணுவாங்க இல்லியா....”
அவளை எரிக்கிறமாதிரி பாத்தேன்.
“ஏண்டி.... ஈட்டி மாதிரி எங்கம்மா மனசை அப்பப்போ கிழிச்சுப்புட்டு இப்போ எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு பேசிறே.... ”
“நான் ஏசினது வாஸ்தவம்தான்.... ஆனாலும், உங்காத்தா சொரணை கெட்டுப்போயி இங்கதானே கெடந்து திண்ணுகிட்டு கெடக்கு..... இந்தா பாருயா.... உங்காத்தாவுக்கும் முடியலைன்னு ஏதாச்சும் சொல்லிகிட்டிருந்திச்சினா, இது நாம எங்களுக்காக கேக்கல..... உங்க பேரன் ஆசைப்பட்டுக் கேக்கான் .... அப்பிடீன்னு செண்டிமெண்டா ஒரு போடு போடுயா...... ”
கிச்சன் ரூமைவிட்டு வெளிய வந்தேன்.
வாசலோடு அம்மா !
ரெண்டு கண்ணும் கொளமா நெறைஞ்சிருந்திச்சு.
என்னய பாத்ததும், கையைப் புடிச்சு வீட்டுக் கொல்லைப்பக்கமா கூட்டிப் போனிச்சு....
“ஏம்பா.... எம் பேரனுக்கிண்ணா நான் பண்ணமாட்டேனா.... இதில எதுக்கு பொய்யா செண்டிமெண்டு குடுக்கணும்.....
எம் புள்ளை வூட்டில், அதுவும் ஆம்புளைப் புள்ளை வூட்டில, நானு திங்கிற சோறு, சொரணைகெட்ட சோறாய்யா.......
என்னய பெத்தவளுக்கு காலம் பூராவும் சோறு போடவேண்டியது ஏங் கடமைன்னு சொல்ல உனக்கு நெஞ்சில தைரியம் வரல்லை இல்லியா....
என் துட்டில வாங்கின வூட்டில ஏம்புள்ளை கூட பேசிறதுக்கு தனியா கொல்லைப்புறம் வரவேண்டியிருக்கு... பாருயா விதியை.....”
‘’நான் என்னபண்ணணும்னு ஒண்ணுமே தோணலைம்மா....”
“நீ ஒண்ணுமே பண்ண வேணாம்.... நான் எடுக்கப்போற முடிவுக்கு எந்த இடைஞ்சலும் பண்ணாத .... அம்புட்டுத்தான்.....”
இப்போ அம்மா சாதாரண மூடுக்கு வந்திரிச்சு.....
“ஏம்பா.... நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே பிரியாணி பண்ணணும்..... நைட்டுக்கு ஒரு சாப்பாடு பண்ணாம ரண்டு வேளைக்கும் சேத்தே பண்ணிடுவோம்.... செலவுக்கு பைசா இருக்கெல்ல.....”
“அதுக்காகத் தாம்மா முழிச்சிட்டிருக்கேன்....”
“சரிசரி...... இந்தா ஏங்கிட்ட ஒரு ஐநூறு ரூபா இருக்கு.... கறி வாங்கு..... நீயும் வயிரார சாப்பிடு.... நானும் மனசார பாக்கணும் ..”
சேலையில முடிஞ்சு வெச்சிருந்த துட்டை எடுத்து குடுத்திச்சு.
“ஓம் பொண்டாட்டி, பேங்கில பேசி, இந்த வீட்டுப் பத்திரத்த வெச்சு லோன் கேக்கப் போறேன்னு சொன்னாளே.... வீட்டுப் பத்திரத்த நானு ஓம்பேரிலதானே எழுதிவெச்சிருக்கேன்.... அது அப்பிடியே இருக்கா.... இல்ல, எனக்குத் தெரியாம பொண்டாட்டிபேரில நீ மாத்திக் குடுத்திட்டியா.....”
திருட்டுப் பயலா முழிச்சேன்.
“முழிய பாத்தாலே புரியிதுப்பா.... அந்தளவுக்கு கூ(ழ்)முட்டை ஆகியிட்டே நீ.... உன்னய மாதிரி அவளும், மவன் பேரில மாத்தினாலும் யோசிக்க ஒண்ணுமில்ல..... ஒன்னய அந்த ஆண்டவனா பாத்துதான் காப்பாத்தணும்....”
மறுநாள் என் பையன், பிரெண்ட்ஸ் ன்னு சொல்லி அஞ்சுபேரை சாப்பிடக் கூட்டிக்கிட்டு வந்தான்.
“ஓ”ங்கிற சிரிப்பும் கும்மாளமும், போட்டுக்கிட்டு, ஒருத்தன் பிரியாணியை அள்ளி மத்தவன் வாயிலே திணிக்க, அதை அவன், இவன் மூஞ்சீல துப்ப, அப்புறமா ஒருத்தனுக்கொருத்தன் பாஞ்சு அடிச்சுக்க, குறுக்க போயி விழுந்தவங்களுக்கும் அடிவிழ.....
எங்கம்மா ஏங் கைய புடிச்சு, நைசா வெளிய இழுத்திட்டு வந்திரிச்சு....
“சீச் சீ..... அத்தனை பேரு வாயிலையும் பிராந்தி நாத்தம்..... ஓம் பையன், தாத்தாவுக்கேத்த பேரன்.....”
பேசி முடிக்கல. அதுக்குள்ள என் பொண்டாட்டி கதறியடிச்சுக்கிட்டு வெளிய ஓடிவந்தா.
“சண்டை போடாதீங்கப்பான்னு சொன்னேன். அதில ஒரு மொரட்டுப்பய, ஏங் கையபுடிச்சு இழுத்து, கண்ட எடத்திலயெல்லாம் கைய வெச்சுட்டான்.... அத தடுத்த நம்ம புள்ளைய அடிச்சுத் தரையில குப்புறப் போட்டுட்டு, ஆளை ஆள் ஏறி மிதிக்கிறாங்கையா.....”
அவள் சொல்லி முடிக்கிறதுக்குள்ள எங்க பையன் வெளிய ஓடிவந்தான்.
அடிபட்டு மூக்காலும், வாயாலும் இரத்தம் வந்துகிட்டிருந்திச்சு.
“பாருயா.... புள்ளைய போட்டு என்ன அடி அடிச்சிருக்காங்கண்ணு..... இவனுகளையெல்லாம் கம்பி எண்ண வைக்கணும்....”
பையன் குறுக்கை பேசினான்.
“லூசுத்தனமா பேசாதைம்மா..... அவங்க என் பிரென்ஸ்..... கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டாங்க..... மத்தப்படி நல்ல பசங்கதாம்மா.....”
மொதல் மொதலா என் பொண்டாட்டி மூஞ்சீல அதிர்ச்சிய பாத்தேன்….
எல்லாருமே வெளிய வந்தானுவ.
எம் பையனுக்கு பக்கத்தில வந்து....
“ மச்சான்.... சும்மா சொல்லக் கூடாது.... உங்கம்மா இப்பவும் செம கட்டையாத்தான் இருக்காங்க....;.”
என் பொண்டாட்டிய பாத்து சொன்னேன் .
“தப்பா அவங்களை எதுவும் பேசாத..... அப்புறம் நம்ம புள்ளை ரொம்பவும் மனசு ஒடைஞ்சு போயிடுவான்..... வீட்டுக்குள்ள போயி துட்டு எடுத்துக்கிட்டு வர்ரேன்.... ஆஸ்பிட்டலுக்கு போவோம்.....”
வீட்டுக்குள்ள போனேன். எங்கம்மா கஷ்டப்பட்டு செஞ்ச பிரியாணியால, தரைய மெழுகியிருக்கு.
------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வாரம் போயிரிச்சு.
அதிகாலையிலேயே கொஞ்சம் பரபரப்பாயிருந்திச்சு எங்கம்மா.
அப்புறம் என்னிய சாமியறைக்கு கூட்டிப் போனிச்சு.
திருநீறை எடுத்து என் நெத்தியில பூசிச்சு. கட்டிப் பிடிச்சு நெஞ்சோட அணைச்சு முத்தமும் குடுத்திச்சு.
என்னையறியாமலே உடம்பெல்லாம் பதறிச்சு. காரணம் தெரியாமலே கண்ணீர் பெருகிச்சு.
“இந்தா பாரப்பா.... அம்மா மதுரைக்கு கெளம்புறேன்..... எனக்குத் தெரிஞ்ச குடும்பம் ஒண்ணு, மதுரையிலயிருந்து நாளைக்கு காசிக்கு கெளம்புறாங்க.... காசீல உசிரைவிட்டா மோட்சம்ங்கிற ஆசைய மனசில வெச்சுக்கிட்டுத்தான் அம்மா கெளம்புறேன்..... யாருகிட்டயும் சொல்லாத.... அந்தக் குடும்பத்தோட அம்மா திரும்பி வரப்போறதில்லை.....
உனக்காக நான் செய்த கடமையெல்லாம் இந்த நிமிசத்தோட பூரணமாயிரிச்சு..... அம்மா இன்னும் எத்தினைநாள் இருப்பேன்னு தெரியாது.... அதனால உன்னய நான் பாக்கிறதும் பேசிறதும், இதுவே கடைசியாகக்கூட இருக்கலாம்.... ஆண்டவன் அருளாசி குடுத்தா அடுத்த ஜென்மத்தில நான் உனக்கு பிள்ளையாகூடப் பொறக்கலாம்.....”
என் கண்ணில நிண்ண கண்ணீர் எப்பிடி வத்திப்போச்சுன்னே தெரியல......... ஒரு ஜடமா நிண்ணேன்.
“ஏம்மா..... உன்னய நான் தடுக்கல........”
“சொல்லுப்பா........”
“ ஓங்கூட நானும் வந்திடுறேன் ....”
எங்கம்மா சிரிச்சிரிச்சு.
“ ஏம்பா.... உங்கப்பனை நம்பி வந்த என்னைய விட்டுப்பிட்டு, அந்தாளு போயிட்டான்.... உன்னய நம்பிவந்த ஓம் பொண்டாட்டிய விட்டுப்பிட்டு நீயும் போறேங்கிறே .....”
“ரெண்டுக்குமே உண்டான நோக்கங்க வேற வேற தானேம்மா ..”
“ஆனா, செயல்பாடு ஒண்ணுதானேப்பா.....
ஓம் புருசன் உன்னய விட்டுப் போனான்.... ஓம் புள்ள அவன் பொண்டாட்டிய விட்டுப் போனான்..... அதுக்கு நீயும் ஒடந்தை.....
இப்பிடியே சொல்லிச்சொல்லி எம் மனசாட்சியே என்னய கொல்லுமே .....”
எங்கம்மா என்னயவிட்டுக் கெளம்பியிரிச்சு.. போறப்போ “கேட்” டுக்கு பக்கத்தில நின்னு திரும்பி என்னய பாத்திச்சு.. கண்ணு கலங்கியிரிச்சு.
“இனி எங்கம்மாவ கண்ணால பாக்கப்போறதில்ல..”
நெஞ்சை கிழிச்சு இதயத்த புடுங்கின மாதிரி ஏதேதோ பண்ணிச்சு.
சாயங்காலம் நாலு மணிபோல, ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்திட்டான் எங்க பையன்.
.அப்பதான் என் பொண்டாட்டி நிமிந்து, எம் மூஞ்சிய பாத்தாள். நான் மத்தப்பக்கம் திரும்பியபடி பேசினேன்....
“நான் ஏதும் பேசினா, நம்ம பையன் ரொம்பவும் மனசு ஒடைஞ்சு போயிடுவான்.... யாருக்காச்சும் மானரோசம் இருந்தா போய் பேசட்டும்....”
என் பொண்டாட்டி பத்திரகாளி ஆகிட்டா.
“ஏல.... செருக்கி புள்ள.... அப்பிடியே திரும்பிப் போயிடு.....”
“ஏம்மா.... உனக்கென்ன கோட்டி (பைத்தியம்) புடிச்சிரிச்சா..... நல்லாத்தானே இருந்தே.... ஓ... பக்கத்தில இருக்கிற அந்தாளு உசார் குடுத்தாரா.....”
“அந்தாளு, இந்தாளுண்ணா செருப்பு பிஞ்சிடும்....வெளிய போலே நாயே....”
“நானு எதுக்கு வெளிய போகணும்..... இப்ப இது என் வீடு..... இவ ஏம் பொண்டாட்டி.... யாருக்குப் புடிக்கோ, அவங்க எங்ககூட இருங்க.... புடிக்காதவங்க வெளிய போங்க....”
“ஏல.... வேற வழியில்ல உன்னய போலீசில குடுத்து கம்பி எண்ண வெச்சாத்தான் சரிப்பட்டு வருவே......”
“போ....போ.... கடைசீல நீங்க ரெண்டுபேருந்தான் கம்பி எண்ணப் போறிய.....
நெலத்த மாத்திறத்துக்கு உண்டான எல்லா வேலையும் முடிச்சு, ஓங் கையெழுத்து வைக்கப்போற பத்திரங்களை வீட்டுக்கு கொண்டு வந்து நீ தூங்ககிறப்ப வெரல்ல மைய தடவி வேலய முடிச்சிட்டேன்.....
என் மவனும், கூடவந்த பொண்ணும் சிரிச்சுக்கிட்டே வீட்டுக்குள்ள போனாங்க.
.
இனியும் இந்த எடத்தில இருந்தா, என்னயபோல மானம் கெட்டவன் எவனுமே இல்லை.
வீட்டுக்குள்ள போயி, என்னோட துணிகளையும், பணத்தையும், சூட்கேஸ்ல எடுத்துக்கிட்டு,வெளிய வந்தேன்.
என் பொண்டாட்டி அலறியடிச்சுக்கிட்டு வந்து, கால்ல விழுந்தாள்.
“ என்னிய மன்னிச்சிடுயா .... உனக்கும், அத்தைக்கும் நான் ரொம்பக் கொடுமை பண்ணிப்புட்டேன்.... என்னிய கைவிட்டிடாதய்யா .....எங்கே போனாலும் ஓங்கூடவே வந்திடுரேன்....”
எதுவுமே பேசாம நிண்ணேன். புரிஞ்சுகிட்டு வீட்டுக்குள்ள ஓடிப்போயி, தன்னோட உடுப்புகளையும் சூட்கேசில வெச்சுக்கிட்டு வெளிய வந்தாள்.
வந்தவள், மெயின் வாசலுக்குக் கிட்ட வந்ததும், திரும்பி அந்த வீட்டை ஒருதடவை பாத்தாள். கையிலிருந்த சூட்கேசை தரையில வெச்சாள். மறுகணம் –
ரெண்டு கையாலும் மண்ணை அள்ளினாள்.
“எங்களைத் தெருவில விட்ட இந்தப் பயல் .... .. .. ”
சடாரென்று அவளின் வாயைப் பொத்தினேன்.
“வேணாம் .. .. .. பெத்தவங்க நம்ம வாயால திட்ட வேணாம்.. .. திட்டி, அடிக்க வேண்டிய நேரத்தில நீயும் செய்யல.. .. என்னையும் விடல்ல .. .. அதுக்கான பலனை அனுபவிச்சே ஆகணும்.. ..”
வெளியே வந்தோம் .
தெருவோரமா கொஞ்சம் தள்ளி நிண்ணுகிட்டிருக்கிற வேப்பமரத்து நெழல்லை உக்காந்தோம்.
காப்பகத்து மேனேஜர் சைக்கிளில் வந்து எறங்கினாரு.
“நடந்தது எல்லாத்தையுமே கேள்விப் பட்டேன் சார் .... வாங்க நம்ம காப்பகத்துக்கு.....”
“எங்கே.. காப்பகத்துக்கா.. நீங்க கூப்பிட்டதுக்கு நன்றி சார்.. டொனேஷன் குடுக்கிற அளவில எங்ககிட்ட துட்டு இல்ல..”
“தேவலை .. உங்க ரெண்டு பேருக்குமே லைப் டொனேஷன் குடுத்திட்டாங்க..”
அதிர்சசியாக இருந்தது.
“யாரு குடுத்தா..”
“எல்லாமே தெருவில பேசணுமா....”
பேசிட்டே நடந்தாரு. நாங்க பின்னாடி போனோம்.
காப்பகத்தில ஒரு கவரைத் தந்தாரு.
“பிரிச்சு படிங்க.... புரியும்....”
பிரிச்சேன் . அது எங்கம்மா எழுதியது . சத்தமா படிச்சேன்.
அன்பு மகனே..
நாங்கள் இருவரும் திருநெல்வேலிக்கு வரும்போது, கையில் கொண்டுவந்த முழுப் பணத்தையும் அம்மா செலவு பண்ணவில்லை. முப்பது பர்சன்டேஜ் பணத்தை பேங்கில டெபாசிட் பண்ணி வைத்திருந்தேன்.
மனதில நிறைய நினைத்திருந்தேன். பேரனின் பிறந்தநாள் சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது. அன்று எங்கள் யாரிடமும் சொல்லாமல், தனது பிரென்ட்சை கூட்டிவந்த உன்மகன், என்றாவது ஒருநாள், எவளாவது ஒருத்தியை இழுத்துவரப் போவதும் உங்களை தெருவில் விடப்போவதும் உறுதி. அப்போது உங்களுக்கு அடைக்கலம் தேவை. அதை நினைத்துதான் அந்தத் தொகையை காப்பகத்தில் அன்பளிப்பு செய்துவிட்டேன். உங்கள் வாழ்நாள் பூராவும் நிம்மதியாக இருக்கலாம்.
இப்படிக்கு,
உன் அம்மா..
கடிதத்தை படிச்சு முடிச்சப்போ என் பொண்டாட்டி தலையிலே அடிச்சடிச்சு கதறினாள். நான் தடுக்கவில்லை.
“நீ ஒரு தீர்க்கதரிசிதாம்மா ..”
மனசு பூராவும் நெறைஞ்சு நிக்கிது எங்கம்மா !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.