என் பால்ய, பதின்மப் பருவத்தில் எதிர்பட்ட அழியாத கோலங்களாக நிலைத்து விட்ட ஆளுமைகளில் ஒருவர் விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை) . கொரோனாப் பெருந்தொற்றின் ஆரம்பத்தில் பிரான்ஸில் அதற்குப் பலியானவர்களில் ஒருவர். முன்னாள் வடகிழக்கு மாகாண அமைச்சரும், அரசியல் அறிஞருமான வரதராஜா பெருமாளின் முகநூற் பதிவொன்றின் மூலமே அவரது மறைவு பற்றியும், அவர் பிரான்ஸில் வசித்தது பற்றியும் அறிந்துகொண்டேன். அப்பொழுது 'அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (பிரான்ஸ்)' என்னும் முகநூற் பதிவொன்றினையும் இட்டிருந்தேன். அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது சகோதரர் யோகநாதன் சிதம்பரப்பிள்ளை (Yoganathan Sithamparapillai) விஜயனின் நினைவு மலரை அனுப்பியிருந்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நினைவு மலர்.
அம்மலரை கூகுள் டிரைவில் பகிர்ந்துள்ளேன். அதற்கான இணைப்பு
இம்மலரில் முகநூலில் விஜயன் அவர்கள் பற்றிய என் பதிவினையும் 'பழைய நினைவுகள் அதிலும் பால்ய , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை. அக்கோலங்களில் ஒன்றாக நிற்பவை..' என்னும் தலைப்பில் உள்ளடக்கியுள்ளார்கள். அதற்காக விஜயன் குடும்பத்தினருக்கு நன்றி. அக்கட்டுரையில் எனக்குத் தெரிந்த அக்கால விஜயனின் தோற்றத்திலிருக்கும் புகைப்பட,மொன்றினையும் உள்ளடக்கியுள்ளார்கள்.அத்துடன் அப்பதிவுக்குரிய மேலும் சில புகைப்படங்களையும் உள்ளடக்கியுள்ளார்கள். அதனைப் பார்த்ததும் மீண்டும் நினைவுகள் யாழ் நகரில் அலைந்து திரிந்த எழுபதுகளுக்கே சென்று விட்டது.
விஜயன் பற்றிய என் முகநூற் பதிவினை மீண்டுமொரு தடவை பகிர்ந்துகொள்கின்றேன்.
(முகநூற் பதிவு) அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை)
ஒவ்வொருவருவருக்கு அவரவர் பால்ய, பதின்ம வயதுப் பருவங்களில் வந்து போன மறக்க முடியாத ஆளுமைகள் சிலர் இருப்பார்கள். சந்தித்திருப்பார்கள். அவ்வாளுமைகள் அவர்கள் வாழ்வில் வந்து போயிருப்பார்கள். ஆனால் பல்வேறு காரணங்களினால் அவர்கள் மறக்க முடியாதவர்களாக தடம் பதித்துச் சென்றிருப்பார்கள். என் வாழ்விலும் அவ்விதமான ஆளுமைகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர்தான் இவர்.
எழுபதுகளில் யாழ் இந்துவில் க.பொ.த.சாதாரண தரம் படித்துக்கொண்டிருந்த போது பதின்ம வயதுக்கேயுரிய கனவுகளுடன் வாழ்க்கை உற்சாகமும், கும்மாளமுமாகச் சென்று கொண்டிருந்தது. எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம். சந்திக்குச் சந்தி பல்வேறு இளைஞர்கள் குழுக்களின் சாம்ராச்சியம். அக்காலகட்டத்தில் கே.கே.எஸ்.ரோட், பிரப்பங்குளம் ரோட், பீ.ஏ.தம்பி லேன் உட்பட யாழ் நகரத்தின் பல வீதிகள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருந்தன. கே.கே.எஸ்.வீதியில் கில்னர் வீதியும் , கே.கே.எஸ்.வீதியும் சந்திக்குமிடத்தில் , கிழக்குப்பக்கத்தில் நான்கு அல்லது ஐந்து கடைகளைக் கொண்ட கடைத் தொகுதியொன்றிருந்தது. அக்கடைத் தொகுதியில் வடக்கு மூலையில் ஒரு முஸ்லீம் கடை , அடுத்து ஒரு தேநீர்க்கடை, அடுத்து இன்னுமொரு முஸ்லீம் ஒருவரின் தகரக்கடை (தகரங்களால் பல்வேறு சமையலுக்கு வேண்டிய உபகரணங்களையெல்லாம் உருவாக்கித் தரும் தொழில்) அதையடுத்து இன்னுமொரு கடை..இவ்விதமாக அக்கடைத்தொகுதி அமைந்திருந்தது.
அக்கடைத்தொகுதி அக்காலகட்டத்தில் 'டேபிள் டென்னிஸ்' & 'பாட் மிண்டன்' விளையாட்டில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஜெயராஜ் என்பவரின் குடும்பத்துக்குச் சொந்தமாகவிருந்தது. அக்கடைத்தொகுதியிலிருந்த தேநீர்க் கடையின் உரிமையாளர்கள் மாறிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருமுறையும் இளைஞரொருவர் அதைப்பொறுப்பெடுத்து நடத்திக்கொண்டிருப்பார். நானும் நண்பர்களும் அடிக்கடி செல்லும் தேநீர்க் கடைகளில் அக்கடையும் முக்கியமானதொன்று. அடுத்தது நாவலர் ரோட்டுக்கு அண்மையிலிருந்த சந்திரா கஃபே (அதன் உரிமையாளரான செல்லையாவின் பெயரால் செல்லையா கபே என்றும் கூறுவார்கள்). சந்திரா கஃபே பல்வேறு குழுக்களைச் சேர்ந்த இளைஞர் குழுக்கள் கூடுமிடங்களிலொன்றாக விளங்கியது. இனஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளையின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது அவர் தன் அதிகாரத்தைக்காட்டப் பயன்படுத்திய இடங்களிலொன்று அச்சந்திரா கஃபே.
சரி விடயத்துக்கு வருவோம். கில்னர் வீதியும், கே.கே.எஸ் வீதியும் சந்திக்கும் தேநீர்க் கடையில் நண்பர்கள் நாம் கூடும் சமயங்களில் அங்கு அடிக்கடி வருவார் ஒருவர். எப்பொழுதும் பெல் பாட்டமும், நீண்ட முடியுடன் ஸ்டைலாகக் காட்சியளிக்கும் ஓரிளைஞர் வருவார். அவர் பீ.ஏ.தம்பி லேன் பக்கம் வசிக்கும் இளைஞரொருவர். எங்களை விட மூத்தவர். அவர் திரியும் இளைஞர் குழுவைச் சேர்ந்தவர்கள் பலரும் நாமறிந்தவர்களே. அவர்களில் இவர் மட்டுமே அத்தேநீர்க் கடைக்கு அடிக்கடி வருவார்.
அவர் வரும் சமயங்களில் நாமிருந்தால் அவர் எங்களுடன் வந்திணைந்துகொள்வார். எங்களுக்கும் ஒருவிதத்தில் அவர் வருகை விருப்பத்துக்குரியவராகவிருந்தது. அதற்கு முக்கியமான காரணமொன்றிருந்தது. அவர் எம்முடன் இணையும் சமயங்களிலெல்லாம் அவர் பார்த்த ஆங்கிலத் திரைப்படங்கள் பற்றி, அவர் ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற ஆங்கில சஞ்சிகைகளில் வாசித்த திகிலூட்டும் அல்லது விறுவிறுப்பான கட்டுரைகள் பற்றியெல்லாம் மணிக்கணக்கில் சுவையாக எடுத்துரைப்பார். அவருக்கு நாம் தேநீர் வாங்கிக்கொடுப்போம். தேநீரை அருந்தியபடியே அவர் கூறும் கதைகளை நாம் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருப்போம். முதன் முதலாக நாம் 'எமில்' சவுந்தரநாயகம் பற்றிக் கேள்விப்பட்டதே அவர் மூலம்தான். ஒரு முறை அவர் ஆங்கிலச் சஞ்சிகையொன்றில் வாசித்த கட்டுரையொன்றிலிரிந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் எமில் சவுந்தரநாயகம் பற்றிய கதைகளைக் கூறியதை நாம் ஆர்வத்துடன் செவி மடுத்துக்கொண்டிருந்தோம்.
பின்னர் நாம் உயர் கல்வி, பல்கலைக்கழகம் , கொழும்பு , கனடா என்று காலச் சுழலுக்குள் அகப்பட்டு திக்குக்கொன்றாகச் சிதறி விட்டோம். நானும் அதன் பின் அவ்விளைஞரை என் வாழ்வில் சந்திக்கவேயில்லை. ஆனால் அவ்வப்போது நினைவுக்கு வந்துபோவார். எங்கிருப்பார் என்று எண்ணுவதுண்டு. அநேகமாக ஐரோப்பிய நாடொன்றில் இருக்கக்கூடுமென்று எண்ணுவேன். பெல் பாட்டமும், நீண்ட தலைமுடியுடன் பார்ப்பதற்கு பாப் பாடகர் போன்ற தோற்றமுடன் காட்சியளித்த அவர் எங்களுக்கு அக்காலகட்டத்தில் பிரமிப்பைத் தந்த இளைஞர்களிலொருவராக விளங்கினார். அவர் தான் அண்மையில் பிரான்ஸில் மறைந்த விஜயன் சிதம்பரப்பிள்ளை. இவரது மரணத்தைப்பற்றி முன்னாள் வடகிழக்கு மாகாண அமைச்சராக விளங்கிய வரதராஜப்பெருமாள் தனது பதிவொன்றில் தன் நண்பர் விஜயனுக்கு அஞ்சலி செலுத்தியபோதுதான் என் நினைவுக்கு நானறிந்த விஜயன் வந்தார். வரதராஜப்பெருமாள் தன் பதிவில் வண்ணார்பண்ணை விஜயன் என்று கூறியதுதான் என் கவனத்தை ஈர்த்தது. ஆனால் வரதராஜப் பெருமாள் கூறியது போல் விஜயன் 72 காலகட்டத்தில் இரவிரவாக சுவர்களில் சுலோகங்கள் எழுதிய விடயங்கள் எனக்கு அக்காலகட்டத்தில் தெரியாது. இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்.
வரதராஜப்பெருமாள் பகிர்ந்திருந்த விஜயனின் முதுமைத்தோற்றம் நானறிந்த இளைஞர் விஜயனை நினைவு படுத்துவதைச் சிறிது தாமதிக்கச் செய்தாலும் , அந்த முகமும், கண்களும், புன்னகை தவழும் முகமும் அவர் அதே இளைஞர் விஜயன் என்பதை எடுத்துரைத்தன. நண்பர் பரதனும் அக்காலகட்டத்தில் அப்பகுதியில் அலைந்து திரிந்தவர். என் இன்னுமொரு நண்பரின் நண்பராக விளங்கியவர். அதனால் எனக்கும் அறிமுகமானவர், அவரிடம் கேட்டபோது அவரும் பிரான்சில் இறந்த விஜயனும் நான் அறிந்த இளைஞர் விஜயனும் ஒருவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
இளைஞர் விஜயனின் மறைவு என் வாழ்வின் ஒரு பருவத்து நினைவுகளைப் படம் பிடிக்க வைத்து விட்டது. பழைய நினைவுகள் அதிலும் பால்ய , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை. அக்கோலங்களில் ஒன்றாக நிற்பவைதாம் இளைஞர் விஜயன் பற்றிய நினைவுகளும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.