1
எதிர்பார்க்கப்பட்டாற்போல், 149 குடியரசு கட்சியினரும் (Republicans) 165 ஜனநாயக கட்சியினரும், இணைந்து, ஒருமித்தாற் போல், அமெரிக்க காங்கிரசில் வாக்களித்து, அமெரிக்கா உலகில் பெறக்கூடிய, “கடன் எல்லையை”, 31.4 ட்ரில்லியன் டாலருக்கும் மேலே பெறலாம், என்று உயர்த்தி உள்ளனர். இப்படி உயர்த்தி விட்டதால், இனி தமது ராணுவத்துக்கு, அல்லது நடந்து கொண்டிருக்கும் ஓர் உக்ரைன்-ரஷ்ய போரில், உக்ரைனுக்கு, “உதவி” என்ற பெயரில் தான் வழங்குவதாய் கூறிக்கொண்டிருக்கும் நிதியை தொடர்ந்து வழங்குவதில் எந்த ஒரு தடங்கலும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவு.
மொத்தத்தில், அமெரிக்க-ஆங்கிலேய-ஜெர்மனிய ஆயுத வியாபாரிகளின் பைகள் நிரம்ப போகின்றன என அவர்கள் மகிழ்ந்து கொள்ளும் நடைமுறையில். காசடிக்கும் இயந்திரங்களும், வட்டி வீதங்களை உயர்த்தும் வங்கிகளும், இறைமுறிகளை விற்று தீர்க்கும் மும்முரமும், ரொம்பவே, நேரமற்று, செயலில் இறங்க போகிறது என்பது தெளிவு.
சுருக்கமாக கூறினால், இந்த வாக்கெடுப்பு ஒற்றுமை நிலையானது, இவ்விரு கட்சிகளின் அரசியலானது, அடிப்படையில் போலித்தன்மை கொண்டது-போலியானது என்பதனையும், அது வேறு ஏதேனும் அரசியல் நலனை பிரதிபலித்து நிற்பது என்பதும்–எந்த ஒரு அடித்தள மக்களின் அரசியலையும் இது ஒரு சிறிதும் பிரதிபலிப்பது அல்ல–என்ற எண்ணப்பாடும், மேற்படி நடவடிக்கைகளால் (வாக்களித்ததற்கூடு) இன்று வெகுஜனமய படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசியல்தான், மேற்கின் அனைத்து வெகுஜன ஊடகங்களிலும், திறைசேரி அதிகாரிகளிலும் (Janet Yellen அம்மையார் உட்பட), மற்றும் வெளிநாட்டு கொள்கைகளிலும் பிரதிபலித்து நின்று–எப்படி ‘கோடிகளை’ திரட்டி தமக்கு பதவி தரும் ஆயுத வியாபார-கோடீஸ்வரர்களின் காலடியில் சமர்ப்பிப்பது என்பதற்கான, சதி திட்டத்தை உருவாக்கி கொள்கின்றன-இவற்றில் இருந்து வீசப்பட்டு, பொறுக்கி எடுக்கப்படும் எலும்பு துண்டுகளோடு, வாசம் நிகழ்த்துவது திருப்தி தருவதாகவே உள்ளது எனும் கூட்டமும் மகிழ்ந்திருக்க. ஆனால், இத்திட்டங்கள் அல்லது இவ் அரசியல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உகந்த சூழ்நிலை உலகில் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டி உள்ளது. இதன் ஒரு வெடிப்பே, உக்ரைன்-ரஷ்ய போர் என்பதையே இக்கட்டுரை தொடர் வாதிக்க முனைந்த விடயமானது.
ஆனால், ரஷ்ய போரினூடு, மிக உக்கிரமாய் வெளிப்படுத்தப்படும், இம்முன்னெடுப்பு, உலகலாவிய ரீதியில், தனது, தாக்கங்களையும்-செல்வாக்குகளையும் செலுத்தி, முழு உலகையும், இப்போர் நிலைமைக்கு அல்லது இவ் அரசியலுக்கு ஏற்ற வகையில், எதிர் விளைவுகளை உருவாக்கவே செய்துள்ளது. இது, இவ் அரசியலின், ஆணிவேரையும் இன்று அசைப்பதாகவும் உள்ளது.
2
சென்ற தொடரில் முக்கியத்துவம் தந்து கூறியிருந்தது போல, உக்ரைன்-ரஷ்ய போர், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், கணந்தோறும் வளர்ச்சி பெற்று, தன் வழியே ஓர் அணு ஆயுத பரிணமிப்பை நோக்கி அல்லது நேட்டோவிற்கு எதிராக ரஷ்யா செயல்பட தூண்டும் நடவடிக்கைகளை நோக்கி அல்லது வேறு வார்த்தைகளில் சுருக்கமாக கூறுவதென்றால், ஓர் மூன்றாம் உலகப் போரை நோக்கி, அறிந்தோ அறியாமலோ–பிரக்ஞையுடனேயோ அல்லது பிரக்ஞை அற்றோ–திடமாக முன்னேறி வருவதாகவே படுகின்றது.
தரப்புகளால் எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையும், அதற்கான ஓர் எதிர் நடவடிக்கையை, சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் உண்டுபண்ணி, விடயங்களின் கனதியை நாளுக்கு நாள், உக்கிரப்படுத்தி வருவதை நடப்புகள் காட்டுவதாயுள்ளன.
‘ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடை’ என ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடயமானது இன்று அர்த்தமற்ற நகைச்சுவையாக மாற்றி விட்டதில், இந்தியா சீனா போன்ற நாடுகளின் பங்கு கணிசமானது என பொருளியல் ஆய்வாளர்கள் அபிப்பிராயபட தொடங்கி உள்ளனர்.
உண்மையாக இருக்கலாம். ரஷ்ய எண்ணெய், இன்று, பூரண சுத்திகரிப்புக்கு உள்ளாகி, பதப்படுத்தப்பட்டு, அமைதியான முறையில், இந்தியாவால் மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது – ஐரோப்பாவிற்கே!. அதாவது, நேற்று நேரடியாக ரஷ்யாவிலிருந்து எண்ணையை கொள்வனவு செய்து கொண்டிருந்த ஐரோப்பா, இன்று எண்ணெய் -எரிவாயு குழாய்களையும் தகர்த்தெறிந்துவிட்டு (அல்லது அத்தகர்ப்புகளில் மௌனமாய் பங்கேற்று) இன்று, தன் வாழ்க்கை செலவை–பண வீக்கத்தை உயர்த்தி, தன் உற்பத்திகளை ப10ஜ்ஜியத்துக்கு கொண்டு வந்து சேர்த்து, தன் மக்களையும் வீதியில் இறங்கச் செய்துக் கொண்டு, செய்வதறியாது, உக்ரைன்-ரஷ்ய போரில் பங்கேற்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் குறிக்க தொடங்கி உள்ளனர்.
இதுவும் உண்மையாக இருக்கலாம். உதாரணமாய், ஜெர்மனிய நாட்டின் இன்றைய நிலைமையை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், எரிவாயு இன்றி, இனி, தனது பெரும்பாலான உற்பத்தி தொழிற்சாலைகளை மூட வேண்டிய இக்கட்டான நிலைமை இன்று அங்கு உருவாகி உள்ளது எனலாம். ஒன்று, அமெரிக்க எண்ணெய்-எரிவாயுவை ஜெர்மனிக்கு கொள்வனவு செய்தல் வேண்டும். ஆனால், அதுவும், கையடக்கமாக இல்லாத விலைகளால், எகிறி போகிற நிலையில், தனது தொழிற்சாலைகளை, அமெரிக்கா நோக்கி மூட்டைக்கட்டியாக வேண்டிய துர்பாக்கிய நிலையை அது எதிர் நோக்குகின்றது.
இனி, இந்த சிக்கல்கள், உள்நாட்டில் எத்தகைய வேலையில்லாதோர் பட்டாளங்களை உருவாக்கி, மக்களை வீதிகளை நோக்கி நெட்டி தள்ளும் என்பது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் கேள்வியாகின்றது. ஏனெனில், வீதியில் இறங்கும் மக்களை நையபுடைத்து தள்ள, மறுபுறம் பொலீசாரையும் இறக்க வேண்டி உள்ளது - இதற்குரிய சட்டங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது –சிறைச்சாலைகளையும் அதிகரித்து…
ஆனால், எந்த நாட்டின் தலைவிதியும், எக்கேடு கெட்டால் என்ன? உலகின் தலைவிதியும் எக்கேடு கெட்டால் என்ன–எமது காலடியில், தொடர்ந்து கொட்டும் டாலர்கள், தொடர்ந்தும் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது கோடீஸ்வரர்களின் கனவும், ஆதங்கமும் கூப்பாடும் ஆகின்றது.
இத்தகைய ஓர் சூழ்நிலையிலேயே, உக்ரைன்-ரஷ்ய போர் நிலைமைகள், நாளுக்குநாள் வலு பெற்று வருவதாய் அமைகின்றது. இது, ஓர் எதிர் விளைவாக, மேற்படி போக்குகளில் செல்வாக்குகளை செலுத்தாமலும் இல்லை – மறு அடியாய்.
3
உலக வரலாற்றில், பக்மூத் ஓர் பொறியாக, ஓர் மிக பெரிய ‘பொறியாக’ உருவாகியது என்பது சில யுத்த வல்லுனர்களின் அபிப்பிராயமாக இருக்கின்றது. மக்ரோகர், போன்ற போர்முனை நிபுணர்கள், ‘பக்மூத்’ சண்டையை, இரண்டாம் உலக யுத்தத்தின் ‘ஸ்டாலின்கிராட்’ சண்டையுடன் ஒப்பிடுகின்றார்கள். பிரமாண்டத்தின் அளவில் ‘ஸ்டாலின்கிராட்’ சண்டையானது ‘பக்மூத்’ சண்டையுடன் ஒப்பிடப்பட முடியாது, என்பது தௌளத் தெளிவானது என்ற போதிலும், ‘ஸடாலின்கிராட்’ சண்டையே ஹிட்லரின் தோல்விக்கும் அடித்தளமாக அமைந்தது அல்லது இரண்டாம் உலக யுத்தத்தின் அல்லது நாசிகளின் தோல்விக்கு ஏற்ற திருப்பு முனையாக அமைந்தது என்ற அடிப்படையில், இவ்வாதம் ஓர் சிறிது ஒப்பு நோக்கத்தக்கதுதான்.
கிட்டத்தட்ட, 50,000 உக்ரைனிய வீரர்களை பலி கொள்ளவும் மேலும் ஓர் 85,000 உக்ரைனிய வீரர்களை படுகாயங்களுக்குள்ளாக்கியதுமான – ‘பக்மூத்’ யுத்தம், ஒரு ‘பொறியாகவே’ தொழிற்பட செய்தது என்பதில் மாற்று கருத்தில்லை.
அதாவது, ‘பக்மூத்’ நகரில் இருந்து பின்வாங்குதல் அல்லது அகன்று விடுதல் என்பது, நடைமுறையில், ஓர் உக்ரைனிய ‘தேசிய அரசியலை’ சாகடிப்பதில் சென்று முடிந்து விட கூடும் என்ற அச்சத்தில் உழன்ற உக்ரைனிய தலைமைகள், மேலும் மேலும் இப்பொறியை நோக்கி, தம் போராளிகளை ஏவியப்படியே இருந்தனர். (எமது ‘இறுதி கண’ அவலங்கள் மீட்டு பார்க்கத்தக்கதே).
மறுபுறத்தில், ரஷ்யாவோ, ஓர் அடி தானும் முன்னேறாமல், (அல்லது முன்னேறுவதாக நடித்தபடி), பொறிக்குள் வரும் போராளிகளை அடித்து நிர்மூலமாக்குவதில், கவனம் செலுத்தி, போராளிகள் உள்நுழைய, ஓர் பாதையையும் திறந்து விட்டு காத்திருந்தது–பாரா முகத்துடன். அதாவது, மேலும் போராளிகளை அனுப்பினாலும் சிக்கல். அனுப்பாவிட்டாலும் ஆபத்து (தமது தலைமைக்கு) போன்ற இக்கட்டான சூழலில் ஸெலன்ஸ்கி செயல்பட நேர்ந்தது, பக்மூத்தின் சிறப்பம்சம் எனலாம்.
கிட்டத்தட்ட, ஒன்பது மாதங்களாய், நீண்ட இவ் பக்மூத் யுத்தம், ஓர் கச்சிதமான பொறியாக செயல்பட்டு, தனது தோல்வியுடன் முடிவடைந்த ஒரு தருவாயில், ஸெலன்ஸ்கி G-7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் அழைக்கப்பட்டிருந்தார்.
4
G-7 மாநாட்டின் முடிவுகள், யுத்தத்தின் மற்றுமொரு திருப்புமுனையாக அமையலாம் என வல்லுனர்கள் கருதினர்.
காரணம், அமெரிக்கா மேலும் 375 மில்லியன் டாலர் நிதி உதவியை, உக்ரைனுக்கு வழங்க தீர்மானித்துள்ளது என்ற அறிவிப்பு அவ்வளவு முக்கியத்துவம் அற்றிருந்தாலும் F-16 போர் விமானங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்ற தீர்மானமே முக்கியத்துவம் வாய்ந்தது என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். (இந்நிதி, தற்போது 300 மில்லியன் டாலராக குறைவடைந்து, மாற்றமடைந்துள்ளது என்பதும், வார்த்தைகளின் விளையாட்டு தொடர்பில் இங்கு அவதானிக்கத்தக்கதே).
இவ் F-16 விமானங்களை, செலுத்த, பலமாதகால பயிற்சி தேவையுறும் என்பதால், ஓய்வுபெற்ற அமெரிக்க விமானிகள், அல்லது ஒப்பந்த பணியில் உள்ள அமெரிக்க விமானிகள், விமானத்தை ஓட்ட கேட்கப்பட கூடும் எனவும், இவ்விமானங்களை தாக்கும் முடிவை, கைகொள்ளும் ரஷ்யா, எத்தகைய முடிவுகளை எடுக்க நேரிடும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் என்பது இவர்களின் கருத்தாகின்றது.
சுருக்கமாக கூறினால், எந்த ஒரு நடவடிக்கையும், அதன் எதிர் நடவடிக்கையை பிறப்பித்து கொள்ளும் என்பதற்கிணங்க, ஓர் உக்ரைன்-ரஷ்ய யுத்தத்தில், F-16 இன், புதுவரவு, எப்புள்ளியை நோக்கி, இனி உக்ரைன்-ரஷ்ய யுத்தத்தை நகர்த்தி செல்ல போகின்றது என்பது கேள்வியாகின்றது.
ஏனெனில், புட்டினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த பிடி ஆணைக்கு (வாரண்ட்) எதிராக, ரஷ்யா, குறித்த சர்வதேச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகவும் நீதிமன்றின் வழக்கு தொடுனருக்கு எதிராகவும் கைது உத்தரவுகளை பிறப்பிப்பது தொடர்பில் பின் தங்கவில்லை என்பதனையும், யுரேனிய குண்டுகளின் வழங்கலுக்கு எதிராக தொடுத்த தாக்குதல்களையும் கருத்தில் கொண்டால், தற்போதைய உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், F-16 இன் வழங்கலின் பின், எந்த நிலை நோக்கி இனி, நகரக்கூடும் என்பது கேள்வியாகின்றது.
5
உக்ரைனிய-ரஷ்ய யுத்தமானது கிட்டத்தட்ட ட்ரோன்களுக்கு எதிரான ட்ரோன்களின் யுத்தம் என யுத்த வல்லுனர்களால் வர்ணிக்கப்படுகின்றது.
டென்மார்க்கை சேர்ந்த ஓர் பல்கலைகழகமும், RUSI என்றழைக்கப்படுகின்ற ROYAL UNITED SERVICES INSTITUTE என அழைக்கப்படும் இங்கிலாந்தின் ஆய்வு மையமும் தனித்தனியே வெளியிட்ட ஓர் அறிக்கையின் பிரகாரம், ரஷ்யா சராசரியாக ஒரு மாதத்தில், 10,000 உக்ரைனிய ட்ரோன்களை அழித்தது என கூறப்படுகின்றது- அதாவது நாள் ஒன்றுக்கு, சராசரியாக ஓர் 300 ட்ரோன்கள். (22.05.2023: FORBES,
NEWYORK POST, BUSINESS INSIDER).
இவ் உண்மைகள், ஏன் இத்தினங்களில், இவ் அமைப்புகளால், தேர்ந்து வெளியிடப்பட்டன, (சூதுவாதற்ற தன்மை கொண்டதாய்) என்பது கேள்வியாகின்றது. G-7 மாநாட்டின், F-16 மற்ற 375 மில்லியன் டாலர் புது கடன் உதவிகள் போன்ற வாக்குறுதிகள் நோக்கியா அல்லது எதிர்வரும் கடன் எல்லையை நீடிக்க, காங்கிரஸின் இருகட்சிகளுக்குமிடையில், ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடனா இச்செய்திகள்-புள்ளிவிபரங்கள்-வெளியிடப்பட்டன என்பதெல்லாம் தனித்து வாதிக்கதக்கவைதான்.
ஆனாலும், விடயம், ரஷ்யா 10,000 ட்ரோன்களை மாதமொன்றுக்கு அழித்துள்ளது என்பதும் மறுதலையாக, உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக 10,000 ட்ரோன்களை சராசரியாக, மாதமொன்றுக்கு விட்டது என்பதும் உண்மையாகவே செய்கின்றது.
வேறுவார்த்pதையில் கூறுவதானால், மேற்கின் அல்லது நேட்டோவின் ஒருமித்த யுத்தம், ரஷ்யாவுக்கு எதிராக, நடத்தப்படுகின்றது என்பதும் - ரஷ்யா இந்நாடுகளின் கூட்டு எதிர்ப்புக்கு அதற்கு முகம் கொடுக்கும் தயார் நிலையில் தன்னை கட்டி வளர்த்துள்ளது என்பதுமே விடயமாகின்றது.
6
ரஷ்யா, தனது எல்லை முழுவதுமாய், ஆறு மைல்களுக்கு, ஒரு, இலத்திரனியல்-மின்-வேலியை கட்டுவித்துள்ளதாகவும் (ELECTRO-MAGNATIC FIELD) இவை மிக நுணுக்கமாய் செயல்பட்டு (SHIROVINK- AERO), தாங்கிகளையும், BAYRAKTAr-TB2 ஏவுகணைகளையும் அழித்தொழிப்பதில் மும்முரம் காட்டி வருவதாகவும் நம்பப்படுகின்றது. துருக்கியில் தயாரிக்கப்படும் BAYRAKTAr-TB2 ட்ரோன்கள் ஒவ்வொன்றும் 5 மில்லியன் டாலர் செலவுடையது என்பதும் குறிக்கத்தக்கதே.
போதாதற்கு, உக்ரைன் விடக்கூடிய ஒவ்வொரு ஆர்ட்டிலரி குண்டுக்கும் (HIMARS முதலானவை) மறுமொழியாக ரஷ்யா, 9-10 ஆர்ட்டிலரி குண்டுகளை மழைப் போல பெய்து வருகின்றது என்பதும் மக்ரோகர் போன்ற வல்லுனர்கள்களால் எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
இவை, இரு கேள்விகளை முன்னோக்கி நகர்த்துகின்றன. ஒன்று, இப்போருக்கான முஸ்தீபுகளை அல்லது தயாரிப்புகளை புட்டின் எப்போது முதலில் தொடங்கினார் என்பதும், இப்போர் நிலைமையானது, ரஷ்யாவை இன்று எதனை நோக்கி, எத்தன்மை கொண்டதாய் மாற்றி அமைத்துள்ளது என்பதும் கேள்வியாகின்றது. அதாவது, ரஷ்யாவின் முகம் இன்று மாறுதலுக்குள்ளாகி உள்ளதா என்பதே இரண்டாம் கேள்வியில் சாரமாகின்றது.
7
MINSK ஒப்பந்தங்கள் (05.09.2014É 12.02.2015) குறித்து பேசும் போது முன்னால் ஜெர்மன் அதிபர் எஞ்செலா மார்கஸ், இவ் ஒப்பந்தங்கள், உக்ரைனுக்கு தேவைப்படும் நேரத்தை பெற்று தரவே செய்யப்பட்டன-(தயாரிப்புகளை மேற்கொள்ள) மற்றப்படி உண்மை அமைதியை நாடியவை அல்ல என்ற உண்மையை அன்னார் போட்டுடைத்திருந்தார் (09.12.2022).
ஜெர்மனியும், பிரான்ஸ{ம் பங்குதாரர்களாய் நின்று, ஒரு அமெரிக்க செல்வாக்கின் பின்னணியில், ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் இடையே அமைதியை கொண்டுவரும் நோக்கத்துடன் செய்வதாக கூறப்பட்ட இவ் ஒப்பந்தம் முற்றும் முழுதும் போலியானது –உக்ரைனுக்கு ‘தேவையான’ நேரத்தை பெற்றுத்தரவே செய்யப்பட்டது என்று முன்னை நாள் உக்ரைன் அதிபரான PETRO POROSHENKOவும் (2014-2019) கூறத் தவறவில்லை. (01.06.2022: TFI GLOBAL).
இவ்விருவரின் கூற்றுக்களும், உக்ரைன் என்ற நாடு, ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுக்கும் ஒரு யுத்தத் திட்டத்தின் அடிப்படையில், கடந்த 10-15 வருடங்களாகவே, ஈடுபட வைக்கப்பட்டிருந்தது, திட்டமிட்டு, தயாரிப்புகளில், அது, அடி அடியாக, அடியெடுத்து வைக்க தூண்டப்பட்டிருந்தது, என்ற திடுக்கிடும் உண்மைக்கு இட்டு செல்ல, வழி சமைப்பதாகவே இருந்தன. இருக்கலாம், ஆனால் அண்மித்த ரஷ்ய நிகழ்வுகளை நுணுக்கமாக ஆய்வோமானால், உக்ரைன் ஒரு 10-15 வருடங்கள் யுத்த தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது என்பது போக, ரஷ்யா, தனது யுத்த தயாரிப்பில், குறைந்தது 2015, மின்ஸ்க் ஒப்பந்தத்தின் முதற்கொண்டே, ஈடுபட்டிருந்தாக வேண்டும், என்பதனை அண்மை நிகழ்வுகள் காட்டுவதாயுள்ளன. ஏனெனில், ரஷ்யாவின் முடிவடையா ஏவுகணை தாக்குதல்களும், ஆர்ட்டிலரி தாக்குதல்களும், இறக்கிவிடப்பட்டிருக்கும் நவீன ட்ரோன் வகைகளுக்கும் இத்தயாரிப்புகளுக்கு கட்டியம் கூறுவதாய் உள்ளன.
உதாரணமாக, ரஷ்யாவின் ஹைபர்சோனிக் ஏவுகணைகளும், குரூஸ் ஏவுகணைகளும் ஒரு 500 வீத அதிகரிப்பை காட்டுகின்றன என ஓர் அறிக்கை கூறுவதாயுள்ளது. இதன் மிகை தன்மை கேள்விக்குட்படுத்தகூடியதாக இருந்தாலும், களத்தில், ரஷ்யா-ஏனைய அனைத்து வல்லரசுகளுக்கும் எதிராக (சீனாவை தவிர்த்து) பிரயோகிக்கும் ஆயுதங்களின், அளவு பரிமாணங்களை நோக்கும் போது, இப்புள்ளி விபரங்கள் குறைந்தபட்சம், ஓர் சில உண்மைகளை சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது என குறிக்கலாம். அதாவது, ரஷ்யா தனது ஆயுத உற்பத்தியை, 2015இல் இருந்தே, கடுமையாக முடுக்கி விட்டுள்ளது என கருத இடமுண்டு.
மறுபுறம், ரஷ்யாவின் தேசிய உணர்வு உயரிய மட்டத்தை நோக்கி வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கணிக்கும் அதே பொழுதில், ரஷ்யாவின் தற்போதைய ராணுவத்தின் வளர்ச்சியும், ராணுவ தொழில்நுட்ப வளர்ச்சி முறைமைகளும், வரலாறு காணாத ஓர் மட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிக்க செய்துள்ளனர். அவர்களின் கருத்துப்படி, இரண்டாம் உலக யுத்தத்தில் ஈடுபட்ட ரஷ்ய ராணுவமோ அல்லது அதற்கு பின்னரான ரஷ்ய ராணுவமோ இன்றில்லை - புதிதாய் உருகொண்டுள்ள ஒரு ரஷ்ய ராணுவமே, இன்று, காட்சி தருகின்றது என்பது அவர்களது கருத்தாகின்றது.
சுருக்கமாக கூறினால், தன் ஆயுத தொழிற்சாலைகளை மும்முரமாய் உற்பத்தியில் ஈடுபட செய்தது. மறுபுறம், ஏவுகணைகள் உட்பட்ட பல்வேறு ஆயுத தொழிநுட்பங்களை உயர்த்தியது. மறுபுறம், மிக முக்கியமாக, தன்னை அறியாது, தன்முகத்தை மாற்றி அமைத்து கொண்டது - இவை இப்போரின் நேரடி விளைவெனலாம்.
உக்ரைனிய ராணுவம், 2022இல், அதாவது போர் தொடங்கிய நேரத்தில் கிட்டத்தட்ட ஏழு லட்ச நிரந்தர போர் வீரர்களை கொண்டதாயும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் துணை படையினரை தனது முதுகெலும்பாக கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டு, ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறங்க தூண்டிவிடப்பட்டதாயிற்று.
இதற்கு பதிலாக, ரஷ்யாவும், முதுகெலும்புகளை, உடைக்கும் வண்ணம் தகுந்த தயாரிப்பில், குறைந்தது ஐந்து வருடங்களுக்கு மேலான ரகசியமான முறையில் ஈடுபட்டிருப்பதற்கான, சாத்தியகூறுகளையே மேற்படி உண்மைகள் வெளிப்படுத்தியதாய் இருக்கின்றது.
இது, ரஷ்யாவின் முகத்தை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மாற்றி அமைத்திடுமா அல்லது இம்மாறிய முகம், ஐரோப்பா-அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்பில் மாத்திரம், செல்லுபடியாகுமா என்பது கேள்வியாகின்றது.
8
ரிஷிசுனாக் தனது SAND STORM ஏவுகணைகளையும், யுரேனிய தாங்கி குண்டுகளையும், தாங்கிகளையும் உக்ரைனுக்கு வழங்க போவதாக அறிவித்ததும் உலகம் அதிர்ச்சி அடைந்தது. (பைடன், இன்று, கு-16 பொறுத்து அறிவித்தது போல).
மேலும், ரிஷி சுனாக், உக்ரைனுக்கும் விஜயம் செய்ய, தான் அனுப்பிய பிரமாண்டமான தாங்கிகள் முன்னால் ஸெலன்ஸ்கியுடன் நின்று, போட்டோ பிடித்து கொண்ட காட்சியும் ஊடகங்களை அலங்கரிக்கவே செய்திருந்தன. ஆனால், ரஷ்யா இதனை மௌனமாய் வேடிக்கை பார்த்ததே தவிர, இப்படங்கள் குறித்து வேறெந்த கருத்தையும் அது வெளிப்படையாய் தெரிவித்ததாய் இல்லை. ஆனால், இரு கிழமைகளின் முன்னால், 14.05.2023 அன்று KHMELNITSKYயில் ரஷ்யா, உக்ரைனின் ஆயுத கிடங்குகளின் மீது நடத்திய தாக்குதல் உலகின் கவனத்தை ஈர்த்தது.
போலாந்தின் எல்லையில் அமைந்திருந்த, இக்கிடங்கின் மீதான தாக்குதலை அடுத்து ஒரு காளான் மேக மூட்டம், (ATOMIC MUSHROOM) உக்ரைனிய வான்பரப்பில் உருவாகி விட்டதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டி இருந்தனர். அப்பகுதியின் அயன்-மாசுபடுதல், இரட்டிப்பாகி உள்ளதையும், தாக்குதலின் பின் உருவாகிய நெருப்பு கோளங்களை அணைப்பதில், உக்ரைன், ஆளற்ற ரோபோக்களையுமே, ஈடுபடுத்தியதையும் இவ் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டாமலும் இல்லை. உருவாகிய ‘அணுக் காளான் மூட்டம்’ மெதுவாக அண்மையிலிருந்த போலாந்து நகரை நோக்கி நகர, மக்கள்-முக்கியமாக செல்வம் படைத்த மக்கள்- நகரிலிருந்து பதற்றத்துடன் அகல முற்பட்டனர். அவர்கள், வழமையான அரசு செய்திகளையும் நம்ப தயாரில்லாது போயினர்.
அதாவது பொது ஊடகங்களின், நம்பக தன்மையை அவர்கள் ஏற்க தயாரில்லாமல் போனார்கள். பொதுவில், ஒரு தனித்த யுரேனிய குண்டு, இத்தகைய ‘காளான் மேக மூட்டத்தை’ கொண்டிருக்குமா அல்லது ‘அயன்-மாசுபடுதலை’ உருவாக்கி இருக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியானதே.
ஆனால், நூற்றுக்கணக்கான குண்டுகள் சேமிக்கப்பட்டிருந்த இக்கிடங்குகள், ஒரே கணத்தில், வெடிபட்டது, இதற்கான காரணத்தை தருவதாக இருக்கலாம். கூடவே, பாதுகாப்பினை வழங்கிய பெட்ரியாட் குண்டுகளும், அமைப்புகளும் தாக்கப்பட்டதும், நடந்த வெடி விபத்துக்கு, உக்கிரம் சேர்த்ததாகவும் இருக்கலாம். (மேலதிக விவரங்களை சென்ற கட்டுரை தொடரில் காணலாம்).
ஆனால், இதன் காரணமாகவோ அன்றி தன் மக்களை சாந்தப்படுத்தும் திட்டத்துடனோ, இத்தாக்குதலை அடுத்து, உடனடியாக போலந்து -சீனத்திடம் ஓர் உடனடி வேண்டுகோளை விடுத்தது– உக்ரைன்-ரஷ்ய போரை ஓர் முடிவுக்கு கொண்டு வரும்படி. (19.05.2023: Reuters).
தொடரும்……….
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.