இரவுகளில் அமைதியாகக் காரில் பயணிக்கையில், அல்லது தொலைதூரப்பயணங்களில், அல்லது இரவுகளின் தனிமையில் படுக்கையில் புரண்டிருக்கையில் கேட்பதற்குத் துணையாக வரும் குரல்களில் முக்கியமானதொரு குரல் பாடகர் உன்னிமேனனின் குரல். 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவிசங்கரின் வரிகளில், சிற்பியின் இசையில் ஒலிக்கும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள் நான் கூறுவதன் அர்த்தம் புரியும். இதயத்தை வருடிச் செல்லும் குரல் உன்னிமேகனுடையது. நடிகர் மனோஜ் ஆர்ப்பாட்டமில்லாத சிறந்த நடிகர். தமிழ்த் திரையுலகில் அவரால் சோபிக்க முடியாது போனது துரதிருஷ்ட்டமே.
இப்பாடலில் பிடித்த வரிகள்:
"மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா "
' இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன? காதல் எனக்கு போதும் அம்மா ' - உண்மைக்காதல் இப்படித்தான் இருக்கும். அற்புதமான வரிகள்.
இப்பாடலின் நடன அமைப்பும் சிறப்பானது. கேரளத்து கதக்களி நடனத்தைச் சிறப்பாக இணைத்து நடன அமைப்பு உருவாக்க்கியுள்ளார்கள். கதக்களி நடன அசைவுகள் இலங்கைச் சிங்களவர்கள் மத்தியில் நிலவும் கண்டிய நடன அசைவுகளை நினைவு படுத்தியது. கேரளத்தின் சிங்களச் ச்முதாயத்தின் மீதான பாதிப்பை உணர முடிகின்றது.
https://www.youtube.com/watch?v=knkNX-_Zp5w