எழுத்தாளர் என்.சரவணன் அவர்கள் ஜூன் மாத 'தாய்வீடு' பத்திரிகையில் யாழ் நூலக எரிப்புப் பற்றி ஒரு கட்டுரை 'யாழ் நூலக எரிப்பில் ரணில் விக்கிரமசிங்க' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில் அவர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 ,1981 என்றே உறுதியாக எழுதியுள்ளார். ஆய்வாளரான அவரது இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது.
அப்போது யாழ் நூலகராகவிருந்த ரூபவதி நடராஜா தனது 'யாழ்பபாணப் பொது நூலகம் அன்றும் இன்றும் ' என்னும் நூலில் தெளிவாக நூலகம் எரிக்கப்பட்டது ஜுன் 1 இரவு என்றே குறிப்பிட்டிருக்கின்றார். 20.6.1981 வெளியான ஈழநாடு பத்திரிகைச் செய்தியிலும் யாழ் மாநகரசபை ஆணையாளர் சிவஞானமும் அவ்விதமே கூறுகின்றார். பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அமிர்தலிங்கம் அவர்களும் அவ்விதமே குறிப்பிடுகின்றார். இந்நிலையில் சரவணன் அவர்கள் நூலகம் எரிக்கப்பட்டது மே 31 என்று கூறும்போது ஏன் மேற்படி தகவல்கள் எல்லாம் தவறானவை என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஏன்?
சரவணனின் தாய்வீடு கட்டுரையினை வாசிக்க - https://thaiveedu.com/pdf/23/June2023.pdf#page=09
ஜூன்1 ,1981 ஈழநாடு வெளியாகியிருந்தது. அதில் நாச்சிமார் கோயிலடி வன்முறையும், யாழ் நகரில் கடைகள் எரிக்கப்பட்டதும் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. நாளை விரிவாக விபரங்கள் வெளியாகுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாள் ஈழநாடு வெளியாகவில்லை. ஜூன் 6 அன்றே அடுத்த ஈழநாடு வெளியானது., காரணம் ஜூன் 1 இரவு ஈழநாடு காரியாலயமும் எரிக்கப்பட்டதுதான். மே 31 நூலகமும், ஈழநாடும் எரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் ஜூன் 1 ஈழநாடு வெளியாகியிருக்க முடியாது. யூன்1 ஈழநாடு பத்திரிகையை வாசிக்க - https://noolaham.net/project/800/79985/79985.pdf
13.6.1981 ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் தெளிவாக ஜூன்1 இரவே நூலகம் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. https://noolaham.net/project/800/79990/79990.pdf
சரவவனின் முகநூல் எதிர்வினை:
வணக்கம் கிரிதரன். உண்மையில் அது யூன் 1 தான் எரிக்கப்பட்டது. நீங்கள் கூறுவது சரி. இந்தக் குழப்பம் இன்றும் நீடித்தே வருகிறது. ரணில் விக்கிரமசிங்க பற்றிய விபரங்களை எழுதுவதற்கு எடுத்த தகவல்களின் போது அப்படியே 31 என்று தவறுதலாக வந்து விட்டது. ஆனால் அது முதலாம் திகதி தான் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன். முதலாம் திகதி தான் என்பதை உறுதி படுத்தும் ஒரு கட்டுரை கூட இரு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன். அதனை இத்தோடு இணைத்திருக்கிறேன். யாழ் நூலக எரிப்பு குறித்து எனது கட்டுரைகளின் தொகுப்பு நூலாகிறது. அதில் இதனை திருத்திவிடுவேன். உரையாடலாக எடுத்தது மகிழ்ச்சி. இன்னும் பலர் மேலதிகமாக உறுதி செய்யும் பதிவுகளை செய்வார்கள். http://www.namathumalayagam.com/2021/05/31-1.html