- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
- சமூக அரசியற் செயற்பாட்டாளர் ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) என் பதின்மப் பருவத்திலிருந்து அறிமுகமான நண்பர்களில் ஒருவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். அவர் அண்மையில் 'டொரோண்டோ'வில் நிகழ்ந்த நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'அரங்கக் கட்டுரைகள் கட்டுரைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றியெழுதிய சிறப்பான முகநூற் பதிவிது. - வ.ந.கி -
பாலேந்திராவின் நாடக பயணத்தின் 50 வருட காலத்திற்கு மேலான பயணத்தின் அனுபவங்களை ஆவணமாக்கும் முயற்சியாக அவரால், அவரின் இணையர் ஆனந்தராணியுடன் இணைந்து உருவாக்கி புத்தக வெளியீடும் விமர்சன அரங்கும் கனடாவின் ரொறன்ரோவில் கடந்த வாரம் நிகழ்ந்தது. தற்போது எல்லாம் இவ்வாறான பொது நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்பவர்கள் மிக அரிதாகிப் போன சூழலில்... இந்நிகழ்வில் பல கருத்து வேறுபாடு உள்ளவர், அமைப்புகள்களைச் சேர்ந்தவர்கள் தனி நபர்கள் என்று வழமையை விட ஐந்து மடங்கு பார்வையாளர்கள் கலந்து கொண்டது பாலேந்திராவின் நாடக உலகப் பயணதிற்கு சமூகத்தில் கிடைத்த அங்கீகாராமாக பார்க்க முடிகின்றது. அவைக்காற்றுக் கலைக்கழகத்தை தனது கட்டப்பெத்தை பல்கலைக் கழக மாணவர் வாழ்வில் அத்திவாரம் போட்டவர்.
இலங்கை பரப்பில் தலை நகரிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகத்தை பார்க்க நாம் போயாக வேண்டும் என்பதாக பல ஊர் மக்களையும் அரங்கத்திற்கு அழைத்த பெருமை பாலேந்திராவை சாரும். ஆரம்பத்திலேயே குறிபிட்டும்விடுகின்றேன் இந்த நாடகப் பயணத்தின் வெற்றி ஆனந்தராணி இல்லாவிட்டால் நிச்சயம் முழுமைபெற்றிருக்க முடியாது. இதனை அருகில் இருந்த அல்ல தூரத்தில் இருந்து பார்த்து வந்த பலரில் நானும் ஒருவனாக இருந்தாலும் அன்று புத்தக வெளி யீட்டில் இருவரும் தம்மால் உருவாக்கப்பட்ட 70 இற்கும் மேற்பட்ட நாடங்களில் சிலவற்றில் இருந்து ஒவ்வொரு காட்சியை பாடலுடன் நடிப்பை சபையில் முன்வைத்த போது என்னால் இன்னும் அதிக உணரமுடிந்தது. பாடல்களுக்கான உயிர்ப்பை.... இனிமையை... தாளம் போடும் அளவிற்கு பின்னணி இசையான அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் யாழ் கண்ணன் இல்லாமலே எம் முன்னே கொண்டு வந்தனர். அவர்களின் பாடலுடன் இணைந்து நடிப்பை நான் தாளம் போட்டுத்தான் கேட்டேன். வாசுதேவன் என்ற கவிஞரின் கவிகளும் வலுவாக இருந்தன.
நிகழ்விற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அவரின் ஆரம்ப காலத்து பல்கலைக் கழக சகாக்கள், நாடக நடிகர்களாக சிலர் வந்திருந்தது அதுவும் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு என்பதாக அது இருந்ததும் இந்த ஐந்து மடங்கு பார்வையாளர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை நிறுவுவதற்கு போதுமான ஆதாரத்தை கொண்டிருந்து.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய துஷி ஞானப்பிரகாசம் புத்தகம் பற்றிய மதிப்பீட்டுரை செய்த இருவரும் அளவாக அருமையாக தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செய்ததாக உணர்ந்தேன். அதுவும் மதிப்பீட்டுரை செய்த இரண்டாமர் (நவம் என்று நம்புகின்றேன்) அவரின் சொல்லாழுமை கருத்தாழுமை(இதனை அவரிடம் நேரடியாகவும் தெரியப்படுத்தினேன்) ஆனந்தராணி பாலேந்திரா இணையர்களின் நாடக வரலாற்றுப் பயணம் அவர்களால் நடாத்தப்பட்ட நாடகங்கள் அது பற்றி பொது வெளியில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் என்று பலவற்றையும் உறுதியான கருத்தின் மூலம் அவர்களின் செயற்பாட்டிற்கு ஏற்புடமை செய்தாக அமைந்தது சரியானதும் வலுவானதுமாக இருந்தது.
வங்காள பாதர் சர்க்கார், கர்நாடக கிரிஷ் கர்னாட், தமிழ்நாட்டின் இந்திதிரா பார்த்தசாரதி போன்ற நாடக ஆசிரியர்களின் தாக்கமும் அவர்களின் இடதுசாரிக் கருத்தியலும் பாலேந்திராவின் நாடக அரங்கியல் சமூகம் சார்ந்தாக உருவாகுவதற்கு காரணங்களாக இருந்ததாக என்னால் உணரப்படுகின்றது. இது வரவேற்கத்தக்கதும் பாராட்டிற்கும் உரியதாகும்.
இவ்வாறான தாக்கங்களில் இருந்து செழுமையடைந்த பாலேந்திராவின் நெறியாள்கையில் விளிம்பு நிலை, குரலற்ற மக்களின் உரிமையிற்காக போராடும், பெண்கள் உரிமையிற்காக குரல் கொடுக்கும் கருத்தியலைக் கொண்டதாக பயணித்த நாடகங்களே அதிகம். இதனை அவர் இன்றுவரை தொடருவதாகவும் அறிய முடிகின்றது.
கிராமங்கள் தோறும் அரச கதைகளும், புராணத்துக் கதைகளும் என்றாக பயணித்த எம் கிராமத்து நாடக அனுபவங்களில் நகைச்சுவை நாடகங்களாக அது பின் தொடர்ந்தது இருந்ததே அதிகம். இதற்கும் அப்பால் ஒவ்வொரு கிராமத்திலும் நிலவும் சில சம்பவங்களை மையப்படுத்தி ஒவ்வொரு கிராமங்களும் தனித்துவமான நாடகங்களை நாம் பார்த்து வந்ததே எமது இளமைக்கால அனுபவங்கள்.
கிராமத்திலும், பொதுவாழ்க்கை வீதி நாடகங்கள் சிலவற்றிலும் பணியாற்றிய, நடித்த மிகச் சில அனுபவங்களின் அடிப்படையில் என் பார்வையை இங்கு முன் வைக்கின்றேன். இதற்கும் அப்பால் ஈழத்தில் சமூகம் சார்ந்த நாடகங்கள் என்று பலதும் அதிகம் கவனம் செலுப்படாத சூழலில் இந்த தளத்தை தனது கதைக்களமாக்கி சமான்ய மக்களின் வாழ்வியலை பேசவிளைந்தது பாலேந்திரா ஆனந்தராணியின் நாடகப் பங்களிப்பை மகத்தானதாக்கி இருக்கின்றது.
இதில் மொழி பெயர்ப்பு நாடகங்களை உள்வாங்கினார் அதிகம் என்ற விமர்சனங்கள் அடிபட்டுப் போனதற்கு அவர் எடுத்துக் கொண்ட கதைக்களமே பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது. அது இலங்கை வானொலி, திரைப்படம் என்ற வரைக்கும் விரிந்து இன்று பிரித்தானியாவில் தளம் அமைத்து பல புலம் பெயர்நாடுகளிலும் களம் கண்டு வருகின்றது சிறப்பு. தரையில் இருந்து திரை விலகலைப் பார்த்த மக்களை கதிரையில் இருந்து திரைவிலகலை எதிர்பார்க்கச் செய்தவர்களும் இவர்கள்தான் என்று கூறுவது மிகையானது அல்ல. அது பம்பலபிட்டி கதிரேசன் மண்டபம் யாழ் வீரசிங்க மண்டபம் என்றாக விரிந்தன. இதில் இளைஞர்கள் உட்பட குழந்தைகளும் இணைவது ஒரு ஆரோக்கியமான முன்னோக்கிய நகர்வு இதனை பாலேந்திராவின் ஏற்புடமை கருத்துரையில் இருந்து அறிய முடிந்தது.
இவை எல்லாவற்றையும் வெறும் 2 மணி நேர நிகழ்வில் புத்தக வெளியீடு, விமர்சனம், நாடங்களின் காட்சிகளை நடித்துக் காட்சிப்படுத்தியது, நிகழ்விற்கு நன்றியாக ஏற்புடமை செய்தது, நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் அளவளாவி புகைப்படம் எடுத்துக் கொண்டது ஆகிய இருவரது செயற்பாடுகளும் ஒரு முழுமையான நிகழ்வை பார்த்ததான உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது.
முகநூல் மூலம் 'சிவா முருகுப்பிள்ளை' ஆக தெரிந்த என்னை நானே அறிமுகப்படுத்தி அவர்களுடம் சில நிமிட உரையாடலும் புகைப்படமும் ஏடுத்தக் கொண்டது மகிழ்வான நிறைவான தருணங்கள்தான். இந்த நிகழ்வில் ஆனந்தராணி பாலேந்திரா இருவரிடமும் நான் கண்ட மிகச் சிறப்பான பண்பு ஒன்று அதனைச் சொல்லியும் ஆக வேண்டும்... அது அறிவுச் செருக்கு என்பது அவர்கள் இருவரிடமும் துளியளவும் காண முடியவில்லை. அத்துணை பண்பாளர்கள்.
நாடகம் என்பது காட்சியும் கானமும் உடல் மொழிகளால் மக்களுடன் நேரடித் தொடர்பாடல் மூலம் வெளிபடுத்தும் கலையாக பார்க்கப்படுகின்றது. இதனால் அது அதிகம் மக்களை அதிகம் ஈர்க்கும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இதில் பார்வையாளன் தன்னையும் ஒரு பாத்திரமாக உணருவதாக நாடகம் அமையும் போது அந்த நாடகம் வெற்றியடைந்தாக போற்றப்படும். கொண்டாடப்படும். அதற்குத் தேர்ந்த உரையாடலும் காட்சிகளும் இசையும் அவசியமாகின்றன. இதற்குள் பல மௌன மொழிகளும் பல கதைகளும் பேசியாக வேண்டும் . இதற்குச் சிறந்த துல்லியமான ஒளியமைப்பு தேவையாகின்றது என்ற என் புரிதலின் அடிப்படையில் இந்த நிகழ்வு சம்மந்தமான பதிவைச் செய்திருக்கின்றேன்.
நன்றி: புகைப்பட உதவு - ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை)