தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை! - அருண்மொழிவர்மன் -
ஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது. மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள். இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள். இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன்.
“எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த கேள்விக்கு “எனது தொடக்கம் புதுமைப்பித்தன் எழுத்துக்களோடேயே ஆரம்பித்தது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். கலித்தொகைக் காட்சிகள் போன்ற இலக்கியக் கட்டுரைகள் எழுதிவந்த என்னை இத்தகு நவீன இலக்கிய வாசிப்பும், பத்திரிகைத் துறைப் பிரவேசமுமே எழுத்தாளன் ஆக்கிற்று என்றால் தப்பில்லை” என்று பதிலளிக்கின்றார் தேவகாந்தன். தமிழில் எழுதும் ஒருவருக்கு பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் என்பது பெரும் வரம். அது எழுத்தினை செழுமைப்படுத்துவதுடன் ஆழமானதாகவும் ஆக்கும். தேவகாந்தன் சங்க இலக்கியம் பயிலும் நோக்குடன் பாலபண்டிதருக்குப் படித்திருக்கின்றார். பின்னர் அப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தில் இணைந்து சமஸ்கிருதமும் கற்றிருக்கின்றார். சென்ற வருடம் அளவில் மகாபாரதம் தொடர்பாக முகநூலில் நடந்த உரையாடல் ஒன்றில் ரஞ்சகுமார் அவர்கள் தேவகாந்தன் குறித்துக் அவரது சமஸ்கிருத பயிற்சியையும் பற்றிக் குறிப்பிட்டிருந்ததுடன், மகாபாரதத்தை விரிவாகப் பேசக்கூடியவர் தேவகாந்தன் என்றும் குறிப்பிட்டிருந்தார். மறுநாள் தேவகாந்தனிடமே அதுபற்றி நேரடியாகவே கேட்டேன், அப்போது அவர் கூறிய தகவல்களூடாக தேவகாந்தனை இன்னும் ஒரு படி நெருக்கமாக அறியமுடிந்தது.