- கோலோன் நகரின் எந்த பகுதியில் நாம் நின்று பார்த்தாலும் தெரிவது
கோலோன் கதீற்றலின் கோபுரங்கள் -
கோலோன், ஜெர்மனியின் முக்கிய நகரமாகவும், எங்கள் படகு தரிக்கும் இறுதி ஜெர்மன் நகராகவும் இருந்தது. நாங்கள் படகை விட்டு இறங்கியபோது மழை பிடித்துக்கொண்டது . குடையுடனே எங்கள் நடை இருந்தது.
சிறு வயதிலிருந்தபோது எனக்கு அடிக்கடி காய்ச்சல் வரும் என்பதால் எங்கள் வீட்டில் எப்பொழுதும் ஒடிக்கொலோன் இருக்கும். தலையிடித்தால் துணியில் ஒடிக்கொலோன் தேய்த்து இரண்டு பக்க நெற்றியிலும் அம்மா வைப்பார். அதேபோல் இருமல் , நெஞ்சில் சளி வந்தால் நெஞ்சில் துணி நனைத்துப் பூசுவது வழக்கம் . பிற்காலத்தில் சட்டை கொலரில் எனது நண்பர்கள் ஒடிக்கொலோன் போடுவதை கண்டிருந்தேன் . அல்ககோலுடன் சில தைலங்கள் கொண்டது இந்த ஒடிக்கலோன் . பிற்காலத்தில் பல முக்கிய வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டு வணிக்பொருளாகி, ஆரம்பத்தில் ஐரோப்பாவில் கொள்ளை நோய்யைக் (Bubonic plaque) குணப்படுத்த இதைக் குடித்தார்கள் என அறிந்தேன் . இப்படியாக வீடெங்கும் இருக்கும் ஒடிக்கொலோனை ஆரம்பத்தில் உருவாக்கிய இடம் ரைன் நதிக்கரையில் உள்ள கோலோன் நகரம் .
கோலோன் நகரில் இறங்கியதும் நதியின் மேல் உள்ள பாலத்தில் அடிக்கடி ரெயில் செல்வது தெரிந்தது. ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேலாக ரயில்கள் இந்தப் பாலத்தில் செல்லும் என்றார்கள். என்னைக் கவர்ந்த முக்கிய இடமாக நகரின் மத்தியில, அக்கால ரோமர்களால் போடப்பட்ட கற்பாதை இருந்தது. அந்த ஒரு பகுதியை இன்னமும் பாதுகாத்து வருகிறார்கள். இந்த நகரம் 2000 வருடங்கள் வரலாறு (AD 50) கொண்டது. ரோமர்கள் மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஐரோப்பாவின் பல பகுதிகளையும் இப்படியான கற்பாதைளால் ஒன்றாக இணைத்திருந்தார்கள்.
- கதீற்றலின் கொதிக் முறைக் கட்டடக்கலைப்பாணி வளைவுகள் -
கோலோன் நகரின் எந்த பகுதியில் நாம் நின்று பார்த்தாலும் தெரிவது கோலோன் கதீற்றலின் கோபுரங்கள் . இது கத்தோலிக்க மதத்தவர்களுக்கு முக்கியமானது. மத்தியுவின் வேதாகமத்தின் பிரகாரம் யேசு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தபோது, மூன்று கனவான்கள் (Three wisemen) அவரை ஆசீர்வதிக்கக் கிழக்கே இருந்து வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் அரசராக்கப்பட்டார்கள். அவர்களது எலும்புகள் இந்த கதீற்றலின் பலி பீடத்தில் பேழை ஒன்றில் உள்ளது .
இந்த கதீற்றலின் கீழ்ப்பகுதியில் இன்னமும் ரோமர்களின் படைவீடுகள் இருந்த அடையாளங்கள் உள்ளன. ஏற்கனவே நான் கூறிய ரோமர்களின் பாதையும் கதீற்றலின் அருகே உள்ளது. கதீற்றல் உள்ளே கிட்டத்தட்ட இரு மணி நேரங்கள் இருந்து பார்த்தேன் அதிகம் வரலாறு , கட்டிடக்கலை பற்றித் தெரியாத போதிலும் உட்புறமும் வெளிப்புறமும், ஜெர்மானிய கொதிக்முறையில் ( Gothic) கட்டப்பட்டது என்பதை என்னால் சொல்ல முடியும். 20ஆம் நூற்றாண்டில் புதிதான பல மாடிக்கட்டிடங்கள் வருவதற்கு முன்பாக இந்த கதீற்றலே உலகத்தின் உயரமான கட்டிடமாக இருந்தது. அதாவது எகிப்தின் பிரமிட்டை விட உயரமானது. கதீற்றல் சாரங்கள் கட்டப்பட்டு தொடர்ச்சியாகப் பராமரிக்கப்படுகிறது. யுனஸ்கோவால் கலாச்சார முக்கியத்துவம் பெற்ற கட்டிடமாக அங்கீகரித்த இந்த கதீற்றலின் பின்னணி வரலாறு நாவல்போல் சுவையானது . ஜெருசலேமிலிருந்து எப்படி மூன்று மன்னர்களது எலும்புகள் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்து கோலோன் நகருக்கு வந்தது என்பதே இங்கு நமக்குத் தேவையானது.
- அக்கால ரோமர்களால் போடப்பட்ட கற்பாதை -
இந்த எலும்புகள் உண்மையா அல்லது மூன்று கனவான்கள் வந்தார்களா என்பதெல்லாம் எனது ஆய்வு இல்லை. மதம் அதற்கு வேதநூல் தேவை . அதன்பின் வரும் சம்பவங்கள் கட்டிடங்களின் தூண்போல் மதத்தை நிறுத்தி வைப்பன. அவை காலம் காலம் வாய் வழியாக வருவதும் மக்கள் அவற்றை நம்புவதும் பலகாலம் நடக்கிறது. அக்காலத்தில் புதைபொருள் ஆய்வாளர்கள் இல்லை. நன்றாக கதை சொல்பவர்கள் உருவாக்கிய கதைகள் சம்பவங்கள் ஆகின. இதில் கத்தோலிக்கர்களும் இந்துக்களும் முதன்மையானவர்கள். இந்த கதைகளை வைத்து நமது கலைகள், கட்டிடங்கள், சிற்பங்கள், சித்திரங்கள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன. உதாரணமாக மாயா யதார்த்தம் என்ற இலக்கிய வடிவம் கத்தோலிக்க மதத்தின் வெளிப்பாடு . அதேபோல் பரதம், கட்டிடக்கலை நமது இந்திய இந்துமதத்தின் பின்னணியிலே உருவாகின.
ரோம அரசன் கொன்ரன்ரைன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி 4ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரசமதமாக அங்கீகரித்தான். கொன்ரன்ரைன் தாய் பெயர் ஹேலினா (Helena), 70 வயதில் ஜெருசலோமிற்கு புனித யாத்திரை சென்று அங்குள்ள கல்லறைகளைத் தோண்டினார். அப்படியாக அவர் தோண்டிய ஒன்றே இந்த மூன்று அரசர்களைப் புதைத்த இடம். அங்கிருந்த எலும்புகளை மாபிள் பெட்டியில் கொன்ரன்ரி நேப்பிலுக்கு( Istanbul) கொண்டு சென்றபோது, அங்கு மன்னர் கொன்ரன்ரைன், வெனிஸ் நகர பிஷப்பிடம் அதைக் கையளித்தார். வெனிஸ் பிஷப் அதை 2000 கிலோமீட்டர்கள் மாட்டு வண்டியில் கொண்டு வருவது இலகுவான காரியமில்லை. மிலான் நகரத்தின் வாசலில் வண்டி மாடுகள் இறந்துவிட்டன . அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டு 700 வருடங்கள் மூன்று மன்னர்களது எலும்புகள் மிலானில் இருந்தன. 1162 இல் பேரரசன் ஃபெடரிக்1 (Holy Roman Emperor) மிலானை முற்றுகையிட்டு தன்னோடிருந்த கோலோன் பிஷப்பிடம் மூன்று மன்னர்களது எலும்புகள் கொண்ட பேழையை கொடுத்தான்.
இங்கே கொண்டுவரும்போது ஒரு பிரச்சனை: வெனிசிலிருந்து கோலோனுக்கு இந்த சின்னங்கள் வருவது தெரிந்துவிட்டது . யாராவது வழியில் கொள்ளை அடித்துவிடுவார்கள் என்பதற்காகத் தொற்று நோயால் இறந்த ஒரு முக்கியமானவரது சடலம் என வழியெங்கும் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பாக வந்த மூன்று மன்னர்களது எலும்புகள் வைப்பதற்காகக் கோலோன் கதீற்றல் ரைன் நகிக்கரையில் கட்டப்பட்டது .ஒரே முறையில் முழுக் கதீற்றலும் கட்டப்படவில்லை பல தடவை இடை நிறுத்தப்பட்டது. 1248 இல் தொடங்கி இதை முடிக்க 632 வருடங்கள் எடுத்தது. இந்த கதீற்றல் ஐரோப்பாவில் ஒரு முக்கிய புனித யாத்திரைக்கான ஒரு இடமாக மாறியது .
- கோலோன் நகரக் காட்சியொன்று -
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் நெப்போலியனது படையெடுப்பின்போது இந்த கதீற்றலில் பிரான்ஸிய நாட்டு வீரர்களது படை வீடாகியது. அது மட்டுமல்ல, அவர்களது குதிரைகள் கட்டும் லயமாகவும் மாறியது .நெப்போலியனும் ஜோசப்பினும் இந்த இடத்திற்கு வந்தார்கள் என்ற வரலாறும் உள்ளது. இரண்டாம் உலகப் போரில் கோலோன் தாக்கப்பட்டபோது இந்த கதீற்றலின் சில பகுதிகள் உடைந்தன .
இப்படிப் பல வரலாற்று விழுப்புண்களைச் சுமந்தபடி கம்பீரமாக இந்த கதீற்றல் நிற்கிறது. ஒரு நாளைக்கு 28000 பேர் வந்து போவதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்பொழுது உள்ளே செல்லும் மக்களது தொகையை மட்டுப்படுத்துகிறார்கள். மழையின் காரணமாக அதிகம் கோலோனில் பாரக்க முடியவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.