என் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு, 2020 ஏப்ரலில் Costa Ricaவுக்குப் போகலாமென எங்கள் நான்குபேருக்குமான விமானச் சீட்டுகளையும் மூத்த மகள் கொள்ளவனவு செய்திருந்தா. ஆனால், அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகச் சொல்லிக்கொள்ளாமல் வந்த கொரோனா எங்களின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. சரி, அறுபத்தைந்தாவது பிறந்தநாளுக்காவது அங்கு போகவேண்டுமென நினைத்தோம். ஆனால், அதைவிட மேலான சந்தோஷங்களைத் தருகிறேன் என வாழ்க்கை முன்வந்தது. கர்ப்பமடைந்திருக்கும் மூத்த மகளும், மருத்துவப் பயிற்சியில் இருக்கும் சின்ன மகளும் கொஞ்சக் காலத்துக்குப் பயணம்செய்ய முடியாதென்றானபோது, தானாவது எங்காவது என்னைக் கூட்டிச்செல்வது வேண்டுமென மற்ற மகள் விரும்பினா.
அதன்படி ஒரே பிறந்தநாளைக் கொண்ட நாங்கள் இருவரும் மட்டும் பயணம் செல்வதென முடிவானது. எங்கே செல்லலாம் என்றபோது பயணத்துக்காகச் செலவழிக்கும் நேரம் குறுகியதாகவும், போகுமிடம் உறையவைக்கும் ரொறன்ரோவின் காலநிலைக்கு எதிரான காலநிலையைக் கொண்டதாகவும் இருக்கவேண்டுமென நினைத்தோம். அதற்குப் பொருத்தமானதாக இடமாக Aruba இருந்தது. சில தேடல்களின் பின் பயணசீட்டுக்களையும் மகள் வாங்கிவிட்டா. இருந்தாலும், அதுவும் சாத்தியப்படுமா என்ற ஐயத்தைத் தலைகீழாக விழுந்துபோன விமானமும், ரத்துச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த விமான சேவைகளும் வலுவாக ஏற்படுத்திக்கொண்டிருந்தன.
ஆனாலும், முடிவில் Aruba here we come எனப் புறப்பட முடிந்திருந்தது. ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டிருந்தாலும்கூட, சேர வேண்டிய நேரத்துக்கு எங்களைக் கொண்டுபோய் சேர்ந்திருந்தார் அந்த விமானி. எங்களின் விமானம் முழுவதும் Aruba சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது என்றால், விமான நிலையமோ சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிவழிந்தது. குடிவரவுக்குச் செல்வதற்கான வரிசை முடிவில்லாத வளைவுகளுடன் மிக நீண்டிருந்தது. போக்குவரத்து நெரிசலிருக்கும் நேரங்களில் Don Valley Parkway இல் இருப்பதுபோல, அந்த வரிசையும் அசைவற்று நின்றிருந்தது. Skip the line? என்ற பதாகைகளுடன் உத்தியோகபூர்வமான உடைகளில் அங்குமிங்குமாக மாறிமாறி சிலர் நடந்துகொண்டிருந்தனர். விசாரித்தபோது, நாங்கள் நிற்குமிடத்திலிருந்து குடிவரவுப் பிரிவுக்குச் செல்வதற்கு 1 ½ மணி நேரத்துக்குக் கிட்டவாகச் செல்லுமென்றும், ஒருவருக்கு US$155 செலுத்தினால், காத்திருக்கத் தேவையில்லை என்றும் சொன்னார்கள். வித்தியாசமான வகையில் லஞ்சம் வாங்கும் ஊழலென எனக்கு அந்த நாட்டின் மீது சற்றுக் கோபம் வந்தது. மகளின் அந்தக் காத்திருப்பு நேரத்துக்கு அந்தக் காசு worthஆ என்று கேட்டேன். அதற்கு அவ, விடுமுறைக்காகத்தானே வந்திருக்கிறோம், எந்த அவசரமும் இல்லை என்றா. முடிவில் அடுத்த 20 நிமிடத்தில் விமானநிலையத்தை விட்டு வெளியேறிவிட்டோம். அதை அறிந்தால் US$155 கொடுத்து முன்சென்றவர்கள் கவலைப்படுவார்களா என்று யோசித்தேன் (ஆனால் பயணத்தின்முடிவில் அப்படிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது விளங்கியது, அங்கு வந்திருந்தவர்களில் பலர் அத்தனை பணம்படைத்தவர்கள்தான் இருந்தார்கள்).
40 செமீ பனியைவிட்டு விலகி Aruba மண்ணில் காலடிவைத்த எங்களை வெய்யில் சுட்டெரித்தது. ஐனவரி, பெப்ரவரியில்தான் Arubaஇல் வெப்பம் குறைவென்கின்றனர். ஆனால், அது எங்களுக்கு வெக்கையாகத்தான் இருந்தது. அங்கிருக்கும் இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்கு கார் அவசியமென கார் ஒன்றைப் பதிவுசெய்திருந்தா மகள். குளிர்காலத்தில் வட அமெரிக்கர்கள் அடைக்கலம் தேடி ஓடும் இடங்களில் Aruba முக்கியமானதாக இருந்ததால் கார் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு அவ செலவழித்திருந்த நேரம் மிக அதிகமெனலாம். முடிவில் அவவுக்குக் கிடைத்திருந்த கார் விமானநிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்ததால் அவ்விடத்துக்கு எங்களை அழைத்துச்செல்ல அக்கார்களை வாடகைக்கு விடும் அந்த நாட்டுக்காரர் விமானநிலையத்துக்கு வந்திருந்தார்.
அவரின் மகன் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில் மின்கணினியுடன் தொடர்பான கற்கைநெறியில் பயின்று கொண்டிருப்பதாகச் சொன்ன அவர், Aruba இல் நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிடக்கூடிய இடங்கள் எவை, பார்க்கவேண்டிய இடங்கள் எவை எனக் கதைத்துக்கொண்டே வந்தார். அத்துடன் அன்றிரவு Aruba's favorite carnival parade ஒன்று நிகழ்வதாகவும் அதைப் போய்ப் பார்க்கும்படியும் கூறினார். அவர் போவாரா எனக் கேட்டதுக்கு இல்லை, அலுத்துவிட்டதென்றார். ஒவ்வொரு நாளும் என்ன செய்யப்போகிறோம், எங்கே சாப்பிடப்போகிறோம் என இணையத்தில் ஆய்வுசெய்து முன்கூட்டியே மகள் திட்டமிட்டிருந்தபோதும் உதவிசெய்யும் அவரின் ஆர்வத்துக்கு மதிப்பளித்து அவருடன் பேசிக்கொண்டிருந்தா. ஆனால், அவர் அப்படியாகக் கதைத்துக்கொண்டு கார் ஓட்டும்போது ஏதாவது விபத்து வந்துவிடுமோ என எனக்குப் பீதியாகவிருந்தது. அதற்கு அவரின் ஓட்டமல்ல காரணம். அந்த வீதிகளின் விதிமுறை என்னை அச்சுறுத்தியது. ஒரு இடத்திலும் Streetlight கிடையாது. எங்குமே roundaboutsதான். அவை மிகச் சிக்கலானவையாக இருந்தன. நேரே போகலாம், வலது பக்கம் திரும்பலாம், இடது பக்கம் திரும்பலாம், U அடிக்கலாம் என எல்லாவற்றுக்கும் ஒரு roundaboutஇல் வழியிருந்தது. நல்லவேளையாக நான் ஓட்டத்தேவையில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது. ஐரோப்பாவிலும் roundabouts ஊடாகச் செல்லும் வாகனங்களில் பயணித்திருக்கிறேன். ஆனால் அவை இப்படிச் சிக்கலானாதாக இருந்ததில்லை. இருப்பினும் இந்த roundabouts போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவுகின்றது என்பது உண்மைதான். எங்களின் வாடகைக் காரைத் தந்தவர் காருக்குள் மணல் வராமலும், காரில் செடி கொடி கீறாமலும் பார்த்துக்கொள்ளச் சொன்னார். அத்துடன் களவென்று நடப்பதில்லை, என்றாலும் தெரியத்தக்கதாக பெறுமதியான பொருள் எதையும் காருக்குள் வைத்தால் களவு போகலாம் என்ற எச்சரிக்கையும் தந்தார்.
- முருங்கைக் காய்களுடன் கூடிய அந்த முருங்கை மரம் -
ஊரில் உள்ள ஒழுங்கைகள் போன்ற கல்லும் மண்ணும் கலந்த ஓர் ஒழுங்கையில் அமைந்திருந்த இரண்டு அறைகளைக் கொண்ட எங்களின் Airbnb condo மிகவும் அழகானதாகவும் வெகு சுத்தமானதாகவும் இருந்தது. பல்கனியிலிருந்து சூரிய அஸ்மனத்தைப் பார்த்து ரசிக்கலாமெனச் சொன்ன அதன் சொந்தக்காரர் என்ன தேவையோ தயங்காமல் அழையுங்கள் என்றார். பின்னர் இரவு நிகழும் carnivalஐயும் போய்ப்பாருங்கள், அழகாயிருக்கும், ஆனால் காரில் போகாதீர்கள் என ஆலோசனையும் தந்தார். அத்துடன் அவற்றுக்கெல்லாம் இப்போது தான் போவதில்லை என்று அவரும் கூறினார்.
குளித்து உடைமாற்றிக்கொண்டு இரவுச் சாப்பாட்டுக்காக El Patio Tacos and Tequila க்குச் சென்றோம். கார் தரிப்பிடம் ஒன்றை, அதுவும் இலவசமாக எடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. உணவகத்தின் இருக்கையில் போயிருந்ததும், என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. தாவரங்கள் எதையும் காணமுடியாதா எனச் செல்லும் வழியெங்கும் ஏங்கிய என் கண்களுக்கு என் முன்னே இருந்த பல முருங்கைக் காய்களுடன் கூடிய அந்த முருங்கை மரம் பெருவிருந்தாக அமைந்திருந்தது. மிகுந்த பரபரப்புடன் அதைப் பல தடவைகள் படமெடுத்துக் கொண்டேன். பயணத்தின் முதலாவது highlight அதுதான். மற்றும்படி cactusதான் அங்கு எங்கும் நிறைந்திருந்தது.
- இரவுச் சாப்பாட்டுக்காக El Patio Tacos and Tequila க்குச் சென்றோம்.-
எங்களின் இருக்கைக்குப் பக்கத்திலிருந்த தம்பதிகள் எங்களுடன் நட்பாகப் பேசினார்கள். தாங்களும் ரொறன்ரோதான் என்றவர்கள், No-frills grocery chain ஒன்றை இங்கே வைத்திருந்தார்கள் என்றும், இப்போது ஓய்வுபெற்றபின் அங்கே ஒரு condoவைச் சொந்தமாக்கி வருடத்தில் ஆறு மாதம் அங்குதான் வசிக்கிறார்களாம் என்றும், தங்களின் அனுபவத்தில் இலங்கைத் தமிழர்கள் நல்ல உழைப்பாளிகள் என்றும் கூறினார்கள். பின்னர் அந்த உணவகத்தின் Baja fish tacoவும், Spicy Mango Margaritaவும் மிகவும் சிறப்பாக இருக்குமெனப் பரிந்துரைத்தார்கள். மகள் அசைவம் சாப்பிடுவதுமில்லை, cocktails/மதுபானம் குடிப்பதுமில்லை, ஆனால், நான் அவற்றை ருசிக்கவேண்டுமென எனக்கு ஓடர்பண்ணினா. ஒருதடவை (மருத்துவராகா இருக்கும் உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பின்போது அவரின் prescription என வழங்கப்பட்டிருந்த cocktail உள்ளடங்கலாக எனக்குப் பிடித்த cocktail களையும் ருசித்த பொழுதுகளையும் விரல்விட்டு எண்ணலாம். அப்படியான ஒருபொழுதாக அந்தச் சிபாரிசுகள் இரண்டையும் மிகவும் ரசித்துச் சாப்பிடவும், அருந்தவும் கூடியதாக இருந்தது.
- அந்த உணவகத்தின் Baja fish tacoவும், Spicy Mango Margaritaவும் மிகவும் சிறப்பாக இருக்குமெனப் பரிந்துரைத்தார்கள்.
பின்னர் அச்சூழலில் காலாற நடந்தோம். அப்பகுதி சுற்றுலா விடுதிகளைக் கொண்டிருந்ததால் நிறைய மரங்களும், அலங்காரங்களும், ஒளியமைப்புகளுமென அழகாக இருந்தது. அப்படியே கடற்கரையோரமாக நடந்து காருக்குச் சென்ற நாங்கள் வழியில் உள்ளூர்க் கடையொன்றுக்குச் சென்று சில பழங்களையும், காலைச் சாப்பாட்டுக்கான பொருள்களையும் வாங்கினோம். அங்கும் விலைகள், கனேடிய டொலருக்குக் கிட்டத்தட்டச் சமனான அவர்களின் நாணயமான Florinஇலும் US$இலும் போடப்பட்டிருந்தன. வெட்டி வைத்திருந்த பப்பாப் பழம் இளம்சிவப்பு நிறத்தில் இலங்கையில் சாப்பிட்டதுபோல மிகவும் ருசியானதாக இருந்தது. ரொறன்ரோவில் ஒருநாளும் அத்தனை சுவையான பழம் கிடைத்ததில்லை.
- Arubaவின் பிரபல்யமான களியாட்டங்களில் ஒன்றான Lighting Parade -
Caribbean Carnival எதையும் முன்பு பார்த்திருக்கவில்லை என்பதால் Arubaவின் பிரபல்யமான களியாட்டங்களில் ஒன்றான Lighting Paradeஐப் பார்ப்போமென முடிவெடுத்தோம். காரில் போனால் தரிப்பிடம் தேடுவது சிரமம் என மற்றவர்கள் சொல்லியிருந்தாலும், இரவு 10 மணிக்குப் பின் கார் இல்லாவிடில் சிரமமென நினைத்த நாங்கள் காரிலேயே அதற்குச் சென்றோம். கார் தரிப்பிடத்தையும் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் Hotel Renaissance அருகே 10 மணிக்கு வருமென்ற Parade அரை மணி நேரம் சென்றும் வருவதாகக் காணோம். அங்கிருந்த பொலிஸ் உத்தியோகர்களிடம் விசாரித்தபோது அது வர இன்னும் 1½ மணி நேரத்துக்கு மேலாகும் என்றனர். வெண்ணிறத் துணிகளால் அமைக்கப்பட்ட குடில்களில் பாடுபவர்களும், வாத்தியங்கள் இசைப்பவர்களும், உணவுப்பொருள்களை விற்போரும், களியாட்டத்தைக் காணக் காத்திருப்போருமென அந்தத் தெரு அல்லோல கல்லோலப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் குவிந்திருந்தனர். இரைச்சல் என்றால் எனக்கு அலர்ஜி. எனவே Parade வரும் வழியில் அதனைக் காண முயற்சிப்போமா என மகளைக் கேட்டேன். அவவும் சரியென்றா. ஆனால் வழி முழுவதும் வாகனங்கள் நிரம்பியிருந்தன. போக்குவரத்து மிகவும் சிரமமாக இருந்தது, பாதைகளுக்குக் குறுக்காகக்கூட வாகனங்கள் தரிக்கப்பட்டிருந்தன. மீளவும் எங்களின் இருப்பிடத்துக்கே போவோமென்றா மகள். எப்படியாவது பார்க்க முயற்சிப்போம் என்றேன் நான். அது களியாட்டத்தில் எனக்குள்ள ஆர்வத்தினாலல்ல. மகள் பார்க்கவேண்டுமென விரும்பி வந்ததால் அவ பார்க்கவேண்டுமென்ற நினைப்பும், நேரம் செலவழித்ததுக்குப் பயன்வேண்டுமென மேலும் நேரம் செலவழிக்கும் என் இயல்பும்தான் அதற்குக் காரணம். முடிவில் பழைய இடத்துக்கே மீளவும் 11:20 அளவில் சென்றோம். நேரம் பற்றிய எந்தவிதக் கரிசனையுமில்லாமல் பல்லாயிரக்கணக்கானோர் ஆறுதலாகக் காத்திருந்தனர். 11:30 அளவில் ஆட்டமும் பாட்டமுமாகப் Parade வந்துசேர்ந்தது. படங்கள் எடுத்தோம், ஆனால் அவை தெளிவில்லாமல் உள்ளன, அந்தப் Paradeஐப் பார்க்க விரும்புபவர்கள் கீழிருக்கும் இணைப்பில் பார்க்கலாம்.
https://www.aruba.com/us/calendar/arubas-lighting-parade
தொடரும் …
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.