அவுஸ்திரேலியா - விக்ரோரியா மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு V C E உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி, மிகச்சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்தில், அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், தமிழ்மொழிச்சாதனை விழாவை எதிர்வரும் 30 ஆம் திகதி ( 30-03-2025 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்துகிறது.
இந்நிகழ்ச்சி அன்றைய தினம் , மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 700, Waverley Road, Glen Waverley Vic 3150 ) மாலை 5-00 மணிக்கு நடைபெறும்.
மெல்பனில் இம்மாணவர்களுக்கான பாடசாலைகளை நடத்திவரும் அமைப்புகளைச்சேர்ந்த தலைவர்களும், ஆசிரியர்களும் மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைப்பர்.சங்கத்தின் தலைவரும் எழுத்தாளரும், ஓவியருமான திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில், திருமதி சாந்தி சந்திரகுமார், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். மாணவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வையடுத்து, சித்தியடைந்த சில மாணவர்களின் உரைகளும் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள கலைநிகழ்ச்சியில், கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தான் பிறந்த இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பொப்பிசைத் துறையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் பொப்பிசைப்பிதா நித்தி கனகரத்தினம் அவர்கள் பாராட்டி கெளரவிக்கப்படவிருக்கிறார்.
அத்துடன் அவர் எழுதியிருக்கும் பாரம்பரிய தமிழர் உணவுகளின் யோசனைக்கூறுகள் என்ற நூலை மருத்துவர் ( திருமதி ) சியாமளா நடேசன் அறிமுகப்படுத்தி உரையாற்றுவார். பொப்பிசைப்பிதா நித்தி கனகரத்தினம் அவர்களின் பாடல்களும் இடமபெறும்.
மெல்பன் மிருதங்க இசைக்கலைஞரும், வளர்ந்துவரும் இளம்பேச்சாளருமான செல்வி அபிதாரணி சந்திரனின் மிருந்தங்க இசை நிகழ்ச்சியும் இவ்விழாவில் இடம்பெறவிருக்கிறது.
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, தமிழ்ப்பாடத்தில் உயர் புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை வாழ்த்துமாறு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்பர்களை அன்புடன் அழைக்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.