1. உண்மைஉண்மைகள் என்றும் உவப்பானவை அல்ல !
அவை உறைக்கவும் செய்யும்
உறவை பிரிக்கவும் செய்யும்
காலம்
தீர்மானிக்கும்
மேடைகளில்
உண்மையும் ஒரு அங்கமே !
அவற்றைக் கையாள்வதில்
மிகுந்த கவனம் தேவை
அனாவசியமாக பகிரப்படும்
உண்மை
அமைதியை சிலவேளைகளில்
கெடுத்து விடுகிறது .
தேவையான அளவுக்கே
தேர்ந்து எடுத்து கொடுக்க
வேண்டும் .
2. அம்மா ( தாய்) !
அருகிலிருந்து அமுதூட்டி
ஆசை முத்தம் கொடுத்தவளை
பேதை மனம் தேடுதுவே ,
அன்புடனே உபசரித்து
அறிவு புகட்டிய அன்னை
மடியை
எண்ணி மனம் தேடுதுவே
உண்மை நிலை எடுதுரைத்து
உணர்வு நிலை ஏற்றி வைத்து
எண்ணம் எல்லாம்
என்றும் மனம் தேடுதுவே !
3. மிதவை
நேற்றும் , இன்றும் ,நாளையும்
வாழ்க்கை மனிதர்களோடு தான்
பின்னப்பட்டு கிடக்கிறது என்பதை
எப்படித்தான் சில மனிதர்கள்
மறந்து விடுகிறார்கள் .
அதனால் தான் சில மறதி
நோய்களுடன் மரணித்தவர்களாய்
வாழ்கிறார்கள் ,வாழ
விடப்படுகிறார்கள் .
மனித தொடர்புகளின்
மகத்துவத்தை புரிந்து
கொள்வோம்
மமதைகளை அகற்றி வைப்போம் .
4. மனிதன்
இளமையில் கனவுகளையும்
முதுமையில் நினைவுகளையும்
சுமக்கும் ஒரு விலங்கு .
வீணையின் ஒலியையும்
குழந்தையின் சிரிப்பையும்
புரியும் போது மனிதன்
முழுமை பெறுகிறான்.
பாகுபாடுகளைக் கடந்து
பக்குவம் பெறு .
5. கடல்
தினம் கடற்கரையில்
அவள் காலடியை தேடி நடக்கிறேன்
அந்த ஒற்றைப்பனை மரமும்
சாட்சி சொல்ல மறந்து
சரிந்து படுத்துக் கொண்டது .
மனிதன் கடலோடு மட்டும் நிலச்
சண்டை போடுவது இல்லை
ஏனோ ?
கால்களை தொட்ட
கடல் அலைகள்
ஆசிர்வாதம் வாங்கியதாய்
ஆணவம் கொள்ளாதே
அலைகளின்
சக்தி பல அழிவுகளை
நிகழ்த்திச் சென்று உள்ளது
அதற்காக அதன்
அழகை ரசிக்க
மறந்து விடாதே
அது தன்னையும்
தாலாட்டும்
உன்னையும் தாலாட்டும் .
6. கருவி
யார் , யாரோ போராடிய
துப்பாக்கி மட்டும் அனாதையாகக்
கிடக்கிறது .
7. நோய்
உனக்கு கொடுக்கப்பட்ட காலம்
தான்
உனது குறிக்கோள்களை மாற்றி
வைக்கும்
உனது திசையை காட்டி நிற்கும்.
8. வரலாறு
1940 , ஒரே தேசமாய் இணைந்த
வாழ்வு நல்லது
1950 மொழி அங்கீகாரம் வேண்டும்
1960 சமஷ்டி ஆட்சி வேண்டும்
1970 தனி நாடு வேண்டும்
1980
தனிநாடு
1990
மாகாணசபை வேண்டும்
2000 இணைந்த மாகாணசபை
வேண்டும் ,
அங்கீகாரம் வேண்டும்
2010 இணைந்து வாழ வேண்டும் ,
சமஷ்டி வேண்டும்
2020
தனிநாடு வேண்டும் .
( இதே போல எதிர்த்தரப்பும் எழுதட்டும் ... )
9. வாழ்க்கையில் ,
கணக்குப் பார்த்தால்
பல விசயங்கள் புரிவதில்லை
ஆயினும் என்ன ?
வாழ்க்கை கணக்குகளுக்கு
அப்பால் பட்டது தானே !
நீ பல வருடங்கள் வாழ்ந்து
விட்டாலும் கைக்குள்
எண்ணக் கூடிய சில
சந்தர்ப்பங்களில் தான் நீ
வாழ்ந்ததாக உனக்கே தெரியும்
மிகுதி எல்லாம்
வெறும் விகுதிகளே !
சவாரி செய்யும் போது
சற்று கடினமாக அமர்ந்து
விட்டோமா ?
இந்த விலங்குகள்
எம்மை தூக்கி எறிந்து விட்டன
நாளை ஒரு வேசம் போடுவோம்
அதுவரையில் , சில இடைவேளைகள்
தொடரட்டும் .
' சிந்திக்கிறதை நிறுத்தக் கூடாது ' என்ற
சோக்கிரஸ்டீஸ் சிந்தையை
நிறுத்த நச்சு கொடுத்த
சமூகம் எங்கே போகிறது ?
கேள்வி கேட்கக் கூட
உரிமை அற்றுக் கிடக்கிறது .
பிறரை எழுப்புவதற்காக தம்
உயிரைக் கொடுத்தவர்கள்
நினைவு கொள்ளப்படுவர் !
( நாட்டின் உள் வெளி கொள்கைகளால்.... பலிகள் ! )
10. மேதை
ஆசிரியர்கள் 1000 க்கணக்கான
கேள்விகளை விதைக்கிறார்கள்
அவற்றில் 100 க்கணக்கான
கேள்விகளுக்கு விடைகளை
அவர்கள் தந்து விடுகிறார்கள்
மிகுதியில் ,
சில கேள்விகளை ஒரு
சில மாணவர் பகுத்து
ஆராய்ந்து...விடைகளை கண்டு பிடிக்கிறார்கள்
இவர்களே ,
தத்துவஞானியாகவும் ,
விஞ்ஞானியாகவும்
திகழ்கிறார்கள் !
11. லோகாயம்
மனிதன் தான் பிறந்ததிலிருந்து
உள்ளேயும் வெளியேயும் தேடிக்
கொண்டே இருக்கிறான்
வெளியே தேடிக் கட்டிப் போட்டுக்
கொண்டவர் உறவாகவும் ,
கலந்து பேசியவர்கள்
நட்புபாகவும் இணைகிறார்கள்
உள்ளே ஆன தேடலில்
கடவுளையும் , கருணையும் கண்டு
புதிய பரிணாமமும் எழுகிறது .
12. காட்சிப்பிழை !
அன்புப்பாடம் புரியவில்லை
அனுபவம் புரிகிறது
விம்மி , விம்மி அழுத பின்பும்
விந்தை உலகம் புரியவில்லை .
விழ்ந்து எழுகிறேன்
வேசம் ஏதும் புரியவில்லை
தள்ளி நின்று பார்க்கிறேன்
தாண்டவக் கூத்துப் புரியவில்லை
தரையில் துவண்டு அழுகிறேன்
தாகம் இன்றும் தீரவில்லை
மீண்டும் வீழ்கிறேன்
மீட்சி இன்றித் தவிகிறேன்
காட்சி தான் மாறாதோ ?
கானல் வரிகள் அழியாதோ !
13. துடிப்பு
நீ ஒரு வாழ்த் தகுதியுள்ள மனிதன்
எனவே தான் வாழ்ந்து மரபணுவைக்
கடத்தி விட்டுச் செல்கிறாய்
அது மட்டுமில்லாமல்
கருத்தையும் விதைத்துச்
செல்கிறாய் . அதனால் மற்ற
உயிர்களிலிருந்து
வேறு படுகிறாய்
கருத்தாலும் , கருவாலும் வாழத்
துடிக்கிறது மனித வாழ்வு .
14. நிறவாதம்
அங்கங்கே காயம் செய்து
அழகு பூச்சு இடுவதை
நிறுத்த
தோலின் நிறத்தையே மாற்றிக்
கொண்டேன் . எனினும் இன்னும்
இன்றும்
நிற்கவில்லை என் நிறத்திற்கான தேடல்
இயலாமையும் , இல்லாமையும்
மனிதனை மனமுடைய வைத்து
விடுகிறது .
அதனால் அவன் சமூகத்தின் மீது
ஒரு
சீற்றம் கொள்கிறான் .
ஒருநாள் உன் உடல் எரிந்து சில
எலும்புத் துண்டுகளும் சாம்பலும்
ஆகலாம் , அதுவரைக்கும் தான்
இந்த தாளங்கள் இங்கே நடக்கும் .
நாளைய விடியலின் போது
என் அருகில் நீயோ
உன் அருகில் நானோ
இல்லாமல் இருக்கலாம்
ஆயின் என்ன, வாழ்வின்
இனிய நினைவுகள் எமது இருப்பை நினைவில்
இருத்திச் செல்லும் .
15. குறிக்கோள் !
ஏதோ ஒரு பற்றுடன் தான்
மனித வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது
வயதுக்கு வசதிக்கு ஏற்ப அது மாறும் .
வானத்தைநோக்கி பார்க்க முடியும்
ஒருவனால் தான்
சிலவேளைகளில் வானவில்லைப் பார்க்க முடியும்
இலக்கை நோக்கிய பயணமே
இனிமையான
நேரங்களை எமக்கு அளிக்கும் .
16. வருசம் பிறக்க
வர்க்க ஆண்டே வருக
வசந்தம் கொண்டு தருக
அமைதி கொண்டு வருக
ஆனந்தம் நிறையத் தருக
அன்பை நிறையத் தருக
அறிவைப் பெருக்கித் தருக
இன்பம் பெருக்கித் தருக
இதயம் இனிமை பெருக
கல்வியில் உச்சம் பெருக
கலைகளில் ஏற்றம் நிறைக
வாழ்வில் வசதி பெருகி
வையகம் என்றும் நிறைக
எப்படியோ சில ஆண்டுகள் கடந்து
போய் விடுகின்றன
அவை கொடுத்த தாக்கங்களும்
கடந்து போய் விடுகின்றன
எண்ணிப் பார்க்கும் போது
சிலருக்கு வெறுமை தெரியலாம்
ஆயினும் சில அழிக்க முடியாத
நினைவுகள் பதிந்து
கிடைக்கத் தான் செய்கிறது சிலருக்கு
அவைகளை எடுத்துப் பார்க்க
நேரமோ மனமோ
வருவதில்லை அவ்வளவு தான்
17. நிலமகள்
இறக்கும் தர்ணம் வரும் போதும்
இருப்பவர்களின் வளமான
வாழ்விற்கு வகை
செய்து போவனே என்றும்
வாழும் மனிதன்
யாரையும் காரணமில்லாமல்
தண்டிக்கும் உரிமை தனி
மனிதனுக்கோ , குழுவுக்கோ , நீதிக்கோ
கிடையாது
நேற்றைய பொழுதுகளை பேசாமல்
கடந்து விட்டோம்
இன்றைய பொழுதுகளை
இசைக்காமல் சுருக்கி விட்டோம்
நாளை பொழுதுகளை
நாமே சுருக்கி விட்டோம்
மனிதனோடும் ,இயற்கையோடும்
உறவு கொள்ளாமல்
எதை சாதிக்கப் போகிறோம் ?
பயன்களை எதிர்பார்த்தே
பயணங்கள் தொடங்கியதால்
இயற்கையோடு இயைந்து
போக மறந்து விடுகிறோம்
சில இனிமைகளை இழந்து
விடுகிறோம்.
18. பொங்கல்
புதிர் நெல் அறுத்து எடுத்து
புதுப்பானை பார்த்து எடுத்து
முற்றத்தில் கோலமிட்டு
முக்கோண அடுப்பு வைத்து
ஆதவனுக்கு அழைப்பு
வைத்து
பொங்கியபொங்கலில்
என் மனமும் மகிழ்ந்து
பொங்கட்டும்
இதயம் நிறையட்டும் .
19.அறிவிலி
உருண்டு கொண்டு இருக்கும்
உலகையே உருளாமல்
இருப்பதாய் உணரும் மனிதன்
எத்தனையோ எதிர்மறை
எண்ணங்களை கொண்டிருப்பது
ஒன்றும் ஆச்சரியமே இல்லை .