* ஓவியம் AI

மனதின் சாளரங்கள் திறப்பதற்கு  மாமனிதர்களின்  தத்துவங்கள்  உதவுவது போல,  சில வாசிப்புகளும் உதவுவதை அவள் அறிவாள். இறுகியிருந்த  எண்ணங்கள் சிட்டுக் குருவிகளைப்  போல  சிறகடித்துப் பறக்கவும் ,  இனிய சங்கீதம் எங்கும் நிறைக்க   வல்லதும்  வாசிப்பு என்பதை மறுக்க முடியாது.

அறிதலுக்கும் விவாதத்திற்குமுரிய பல விடயங்களை அலசும் அந்தப் புத்தகத்தை  வாசித்து  முடித்த திருப்தியுடன் அவள் விழிகளை  மூடித்  தன் அகவுலகில் நுழைந்தாள். அங்குதான் அவளது மனக்குதிரைகள் லாயத்தில் கட்டப்பட்டிருக்கும்.

அவள் அங்கு செல்லும் வரை மிக அமைதியாக இருக்கும் அவை , அகவுலகில் நுழைந்ததும் மட்டற்ற வேகம்கொள்ளும். சில சமயங்களில் கட்டுக்கடங்காது.

அவளுடைய மனக் குதிரைகளின் இயல்பு பற்றி முதலில் ஒரு அறிமுகம் தர வேண்டும்.

உறுத்தலான  பல  விடயங்களைக்  கலந்தாலோசிப்பதற்கும் சிக்கலான  உள்ளக விவாதங்களை நடத்துவதற்கும்  அவை மிகமிக  உறுதுணையானவை.   இக்கட்டான சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள பக்கவாட்டுச் சிந்தனைகளைத் தந்து அவளுடன் கூடவே பயணிப்பவை. வேகமான மாற்றுவழிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுப்பதற்கு எப்போதும் துணை நிற்பவை.

மற்றவர்களின் கண்களின் ஊடாக அவர்களது மனதிற்குள் கணநேரத்தில் ஊடுருவும் வல்லமை  கொண்டவையென்பதால் அவர்களின் உள்ளுணர்வை அறிவதற்கு எப்போதும் அவளுக்கு உதவுகின்றன. முரண் கருத்துடையவர்களிடம் வாதிடுவதற்கு உடனடியாகக்   காரணிகளைக் கண்டறிந்தும் தருகின்றன.

ஆனாலும் மிகமிக இறுக்கமான அமசடக்கான மனிதர்களை சில சமயங்களில் அவை எடைபோடத் தவறி  விடுகின்றன.

பதின்மத்தில் அவை வீறு கொண்டெழுந்து அதிவேகம் பெற்றதாகவும், காலமும் கசப்பான அனுபவங்களும் கற்றுத் தந்த பெறுமதியான திறன்களே அவையெனவும் நினைவில் பதித்திருக்கிறாள்.

சூரிய பகவானின் ஏழு குதிரைகள் பூட்டிய தேர் போல திசைகள் அனைத்தும் விரைந்தேகும் திறமை  உடையவை. எனினும்  கடிவாளத்தை  இறுக்கமாகப் பிடிப்பதற்கு சில  வேளைகளில் அவள் தவறி விடுகிறாள்.

குதிரைகள் குறுக்கால்  இழுக்கும்  இவ்வாறான சந்தர்ப்பங்களில்    குழப்ப உணர்வுகளால் சூழப்படுவாளெனினும்,  கடிவாளம் வேறு யார் கைக்கும் செல்வதை ஒருபோதும் அனுமதித்ததில்லை.

இப்போது அவளது குதிரைகள் எண்திசைகளிலும் பாய்வதற்கு ஏதுவான விடயங்கள் பலவற்றை இந்தப் புத்தகத்தில் இருந்து சாவதானமாக  மேய்ந்து  வந்திருக்கின்றன.

என்னதான் முன்னேறினாலும், பெண்ணுலகம்   மீதான அழுத்தங்கள்,,  ஒடுக்குமுறைகள் பற்றிய பல தகவல்கள்  அவளது மனதை இன்று  அதிகமாகப் பாதித்திருந்தன.

அவள் பெயர் பைரவி என்பதை அனுமானித்திருப்பீர்கள். இசைக் கலைஞர்களின் அபிமானம்  பெற்ற  புராதன இராகமொன்று தனக்குப் பெயராக அமைந்ததில் அவளுக்கு மிகுந்த பெருமை. பைரவி எனும் பெயர் தனக்கு ஒரு கனதியை,  கம்பீரத்தை  தருவதாகவும் அவள் நம்பியிருந்தாள். இந்த ராகத்தின் ஒருசில இலட்சணங்கள் தனக்கு மட்டுமல்ல பெண்ணினத்துக்கும் பொருந்துவதாக  அவளுக்குள் ஒரு எண்ணம் உண்டு.

மனோதர்மம், கற்பனை வளம், இசைத் திறன் என்பவற்றை வெளிப்படுத்த செளகரியமாக இருக்கும்  இந்த  ராகம் , ஆரோகணத்திலும் அவரோகணத்திலும்  ஏழு ஸ்வரங்களைக் கொண்டிருந்தாலும்,  ஆரோகணத்தில் அந்நிய ஸ்வரம் பேசுவதால் அது சம்பூர்ண ராகம் ஆகாதாம்.

இசையின் சகல உருப்படிகளையும் பாடக்கூடிய  இந்த  வர்ணனைக்குரிய ராகம் போலவே,  பெண் இனமும்  ஜன்யசம்பூர்ண ராகமாகவே நிலைத்திடுவதும் அவ்வாறுதானோ?

பெண்களின் உயர்ச்சியில் தடைக்கல்லாகும் அந்நிய ஸ்வரம் ஆண்கள்தான்  என மனதில்  நினைத்தவாறு,  அரைகுறை சங்கீத அறிவு பெற்ற குதிரையொன்று  சந்தேகம் எழுப்பியது .

அந்தக் குரலை அடக்கி மேவியபடி  நிதானித்த  மற்றொரு குரல் , நூலில் அவளை மிகக் கவர்ந்த இரு தலைப்புகளில் , சுவாரசியம் கருதி ஒன்றை இப்போது  அலசவும் மற்றதைப்  பிறகு  சொல்வதற்கும்  ஆலோசனை வழங்கியது .

இலங்கைப்  பாடசாலைகளில் பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் முகமாக எழுதப்பட்ட தலைப்பானது , பைரவியின் மனம் கவர்ந்த ஒன்று. வழமையாக பெண் குழந்தைகளின் அறியாமையும் அதனால் விளைந்த துணிவின்மையுமே இதற்குக் காரணம் என்பது சரியாகத்தானே இருக்கிறது.

இன்று இது பற்றியும் அந்த இரண்டாவது தலைப்பு  பற்றியும்  தனது துணையிடமும் அன்பு நண்பர்களான விவேகன்,  ஸ்ரீதரனிடமும் உரையாட வேண்டும் என நினைத்தாள்.

மாற்றம்  என்பது  படிப்படியாக வீட்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். தங்களால் அது  இயலும்  என்று  உறுதியாக  நம்பினாள்.

பெண்களின் பிரச்சனைகள் என்னவென்பதை சகல பரிமாணங்களுடனும் அவர்கள் அறிந்திருக்கிறார்களா, அது பற்றி  என்ன நினைக்கிறார்கள் என்பதை  ஆண்களான அவர்களிடம்  தானே அறிய வேண்டும்.

 அனைத்து  பிரச்சனைகளின் ஆரம்பப் புள்ளி ஆண்களின் ஆதிக்க மனநிலைதான் என்றல்லவா பெண்கள் நினைக்கிறார்கள் .

எனினும் நண்பர்கள் இருவரும் இரண்டு போக்கு. முரண்பட்ட கருத்துக் களங்கள்.

விவேகன் வயதில் இளையவன். இளைஞன். மகன் போன்ற வயதுடையவன். எனினும் அவளது சிந்தனைகளுடனும் ரசனைகளுடனும் சேர்ந்து பயணிப்பவன். பெண்ணை சமமாக மதிக்கத் தெரிந்தவன் புரிந்து கொள்பவன் என்பது அவளது கணிப்பு. குதிரைகள் குறுக்காக அல்லாமல் சரியான திசையில் ஓடியிருந்தால் கணிப்பு பிழைப்பதற்கில்லை.

ஸ்ரீதரன் சமவயதுடையவன். எனினும் பல விடயங்களில் வேறுபட்டவன். உடலமைப்பாலும் உள அமைப்பாலும் ஆணுக்கு பெண் சமமானவள் அல்ல. இயற்கையே அவ்விதம் பாரபட்சமாகப் படைத்திருக்கும் போது சமஉரிமை வேண்டும் என்று பெண்கள் எவ்வாறு வாதிடலாம் என்பது அவனது கட்சி. உயர்வும் தாழ்வும் இருந்தால் தான் ஆட்டமும் ஓட்டமும் சுகமாக இருக்குமாம் என்று குறும்புடன் கண்ணடிப்பான்.

பெண்ணியம் பேசும் பெண்களையும் அவனுக்குப் பிடிப்பதில்லை. தனது பாஷையில் 'கொசப்புகள்' 'முளைச்சதுகள்' 'வீட்டில வேலையத்ததுகள்' என்று 'அதீத ரசனையுடன்' அழகழகாக பட்டம் சூட்டி சிரித்து மகிழ்பவன்.

எனினும் சிறுவயதில் இருந்து விளையாட்டுத் தோழன்.   அறிவாளி. துன்பத்தில் தோள் தருபவன். அவளது முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவன். அதனால் அவனும் உயிர்த்தோழன்.

பைரவி அந்நூல்  வாசிப்பின் மீதான சில கருத்துகளை இணையத்தில் தேடினாள்.

'இலங்கையில் நான்கு பெண்களில் ஒருவர் தமது பதினெட்டு வயதிற்கு முன்னரே பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப் படுகின்றனர் என்ற நூலாசிரியரின் கருத்துச் சரியானதா? என்ற ஒரு மூத்த இலக்கியவாதி ஒருவரின் குறுக்குக் கேள்வி அவளை அதிரச் செய்தது.

அதை விட அதிகமாகவே இருக்குமே என்று கனைத்தது ,  கோபம் கொண்ட குறும்புக்கார குதிரையொன்று .

இப்படித்தான் பல ஆண்களின் புரிதல் இருக்கிறது . ஆண்கள் பற்றி அதீதமான நம்பிக்கை கொண்டவரா இவர். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் மறைந்திருக்கும் அல்லது மறைத்திருக்கும் பக்கங்கள் பற்றி அறியாதவரா என்ன ? ஆண்கள் செய்யும் அத்துமீறல்களுக்கான குற்றப் பத்திரிகைகள் பெரும்பாலாக பெண்கள் மீதே தாக்கல் செய்யப்படுவதை தெரியாதவரா?

ஸ்ரீதரன் அடிக்கடி   கூறுவான் , இடமும் சந்தர்ப்பமும் சரியாக அமைந்து, பெண்ணும் ஒத்துதுழைத்தால் அல்லது பிரச்சனை ஏதும் வராது என்பது சந்தேகத்துக்கு இடமின்றியும் சாட்சியங்கள் இன்றியும் இருந்தால் ஆண் எப்போதும் ஒழுக்கநிலை தவறக் கூடியவன்தான் என. ஆண்களது  ஹோர்மோன்கள் அப்படித்தான் அவர்களை வேலை வாங்குமாம். சில ஆம்பிளையளுக்கு தடிக்கு சீலை சுத்தி விட்டாலும் காணுமாம் என்று நக்கலடிப்பதும் அவனது வழமைதான்.

பைரவி மனதிற்குள் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொள்வாள். ஒழுங்காக உடை அணியும் பெண்களையும் சிறுகுழந்தைகளையும் கூட விட்டு வைக்காத சில ஆண்களை என்னதான் செய்வது ? அப்போ படிப்பு பகுத்தறிவு எதுவும் இவர்களுக்கு வேலைக்காகாது போல. மிருகங்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். அதுகள் கூட பெண்விலங்குகளை வல்லுறவு   செய்வதில்லையே .

மூத்த இலக்கியவாதியின் கேள்விக்கான ஆதாரங்களை  சமர்பிக்க வேண்டிய அவசர நிலைமை   காரணமாக ,  மனக்குதிரையொன்று  இப்போது  நாற்பது  வருடங்கள் பின்னோக்கி ஓடி ,  பள்ளிச் சீருடை அணிந்த பதினான்கு வயது பைரவியுடன் C.T.B பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தது. பாடசாலை மற்றும்  டியூஷன் முடிந்து பஸ்  நிலையம் வருகையில் மாலை மணி ஐந்தாகி விட்டது.

சிறுமி பைரவி ஏறும் போதே பஸ்ஸில் புட்போட் வரை கூட்டம் நெருங்கியடித்தது. வியர்வையின் விரும்பத்தகாத வாசனைகளுக்கு இடையில் உரசி நெரிந்து ஏறியவள் , இடமில்லாத மிகக் கடைசி இருக்கையில் நகர்ந்து இடம் தந்த இருவரிடையே அமர்ந்தாள்.

இடப் பக்கத்தில் தந்தை வயதுடைய கண்ணியத் தோற்றத்தில் ஒருவர் . வலப் பக்கம் சைட் பேர்ண்ஸ் வைத்து தலைமுடி சிலும்பிய பெல்பொட்டம் இளைஞன். அவனைப் பார்த்து மனதால் பயந்திருந்தாள்.

அவன் ஏதும் பிரச்சனை தந்தாலும் பெரியவர் தட்டிக் கேட்பார் என்ற நம்பிக்கை. சிறியதோர் இடைவெளியில், இருபக்க அழுத்தத்தால் கீழே விழுந்து விடாதிருந்தாள். ஆனாலும் மிகச் சிரமப்பட்டாள் .

மூலை வளைவொன்றில் பஸ் திரும்பிய நேரம் இரு தங்க வளையல்கள் அணிந்த தனது இடது கரம் இறுகப் பற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தாள். வயதானவர். தந்தை போன்ற பாசத்துடன் பற்றியிருக்கிறாரா ?

அவரது பார்வை சலனம் இல்லாது நேராக நிலைத்திருந்தது. முகம் உணர்வுகள் அற்றதாக வெறுமை காட்டியது. என்னவென்று இனம் புரியாத சந்தேகத்தில் பைரவியின் மனம் பதற்றமாக தொடங்கியது.

ஒருவேளை காப்பை உருவப் போகிறாரோ பெரியவர். காப்பு போனால் அப்பாவிடம் அடிதாங்க முடியாது. ஸ்கூலுக்கு என்னத்துக்கு காப்பு சோடனையெல்லாம் , டீச்சரிட்டை பேச்சு வாங்கப் போறாய்   என்று காலையிலேயே கத்தியவர் .

சாமர்த்தியமாக மற்றவர் அறியா வண்ணம் பற்றப்பட்டிருந்த சிறிய கைகளை விடுவிக்கும் அவளது முயற்சி பலன் அளிக்கவில்லை. இரும்புப் பிடி.

அதே சமயம் முன்னால் நெளிந்த கூட்டத்தால் மறைக்கப்பட்ட அவரின் இடதுகரம் வலது மேற்கையின் ஊடாக ஊர்ந்து தன் மார்ப்புப் பகுதியை தொடுவதை உணர்ந்தவள் திரும்பிப் பார்க்கவும் சக்தியற்று விறைத்திருந்தாள்.

கிசுகிசுத்த குரலால் அந்த மனிதர் அதன் பிறகு சொன்ன புரிந்தும் புரியாத அருவருப்பான வார்த்தைகள் அவளை நடுநடுங்கச் செய்தன.

அறியாத வயது. பதறினாள். இப்போ எழும்பி நின்றால் அது மற்றவர்களால் கவனிக்கப்படுமே ? என்னைப் பற்றி  என்ன நினைப்பார்கள் ? மேலே வந்து விழும் இந்த சனநெரிசலில் எங்கே நிற்பது? டியூஷன் முடிந்து மாலையாகும் நேரம் தெரியாத இடத்தில் இறங்க முடியுமா ? பயத்தால் வியர்வை பெருகியது.

அரைமணித்தியால பயணம் வருடங்களாக மாற , ஒருமாதிரி இறங்குமிடம் வந்தது. பொங்கி வரும் விம்மலுடன் கண்ணீர் வழிய வீட்டை அடைந்தவள் பெரும் குரலில் அழத் தொடங்கினாள்.

"நான் இனி பள்ளிக் கூடம் போக மாட்டன் அம்மா ".

அவளுடைய பஸ் பயணம் தந்தையின் உழைப்பில் மேலதிக சுமையேற்றும் வாடகைக் கார் பயணமானது.

குதிரை சற்றே முன்னோக்கி வேகமெடுத்தது.

அதே பைரவி  இப்போ இருபதின் இளங்கன்னி. அவள் ஒரு காரியாலயத்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்றிருந்தாள். இன்னும் அப்பாவித்தனம் குறையாத வயது.

மதிய இடைவேளையில் அவளொத்த தோழிகளிடம் தனது ஆர்வத்துக்குரிய கலையான பிளாஸ்டிக் மலர்கள் செய்வது பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

''மெல்லிய முக்கோண உருவத்தில் பிளாஸ்டிக் கடதாசியை வெட்டி இதழ்களை முதலில் செய். இதழை இரண்டாக மடித்து  அகன்ற பக்கத்தில் ஊசியால் கோர்த்து நூலை இறுக்க பூவாக விரியும் .
பிறகு பச்சை நிறத்தில் மிக மெல்லிய கீறுகளாக பேப்பர் வெட்டி கம்பியில் இறுக்கமாகச் சுற்று. கம்பியை இப்போ பூவுடன் தொடுக்க வேண்டும். இப்ப பூ ரெடி. இனிக் கொத்தாகக் கட்டு. பாரன், எவ்வளவு வடிவாயிருக்கு. ஆனா இந்தக் கம்பி சுத்தறதுதான் சரியான கஷ்டமப்பா. கையெல்லாம் சரியா நோகும் "

பக்கத்தில் நின்ற சக ஆண் ஊழியரின் வெடிச்சிரிப்பால் அதிர்ந்தாள்.

"இங்கை பாரடா மச்சான். பைரவிக்கு கம்பி சுத்தறது கஷ்டமாயிருக்காம் "

அவளைச் சுற்றிலும்  நாராசமான ஆண் சிரிப்பொலிகள்.

சொன்னவனது குரல்,  நாற்றமெடுக்கும்  பொருள் விளங்காத அழுக்கு  மூட்டையாக தசாப்தங்கள் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருந்தது பைரவிக்கு.

மனமொத்து காதல் மணம் புரிந்த கணவன் மாறனிடம், நாராசத்தின் பொருள் அறியும் வரை அது தொடர்ந்தது .

ஆண்கள் பற்றிய பைரவியின் பயங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் பனிபோலக் கரைத்தவன் அவன். காதலின் தடங்கல்கள் அனைத்தும் கடந்து கைபிடித்தவன். அவளை நீ என்று கூட அழைக்க மாட்டான். நீங்கள் என்று பன்மையில் அழைத்துக் கண்ணியம் தருபவன். உடலும் மனமும் நோகாது காத்த உத்தம புருஷன். அவனோடு இணைந்த இனியநாள் நினைவில் வந்தது. கசப்பான நினைவொன்றுடன் கைகோர்த்தபடி.

எழுதுவினைஞர்  சேவையில் இருந்து நிர்வாக சேவைக்கு அவள் மாறிய போது ஒரு பின்தங்கிய கிராமத்தில் தனித்திருக்க வேண்டிய சந்தர்ப்பம். ஒரு இளம் சோடியின் வீட்டில் தங்கியிருந்தாள்.

கிணற்றடியில் குளிக்கும் போது ஆடையினூடாகத் துளைக்கும் வீட்டுக்கார இளைஞனின் பார்வை , செக்ஸ் புத்தகம் படிப்பீர்களா என்ற நயவஞ்சக  அணுகுதல், இறுதியில் அவளது அறைக்குள் அத்துமீறி  நுழைய முயன்று மனைவியிடம் மாட்டுப்பட்டது வரை சிறிய கால இடைவெளியில் அசுர சாதனைகள்.

இதை அறிந்து இனி நீங்கள் தனித்திருக்க வேண்டாம் என்று தோள் தந்தவன் மாறன்.

அன்று மட்டுமா அத்துமீறல்கள் ? இன்றும் குறைவின்றி எத்தனை சொல்லலாம். அண்மைய தகவலொன்றில் வாசித்திருந்தாள்.

 'இலங்கையில், 90% பெண்கள் பொது போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர், ஆனால் 4% பெண்கள் மட்டுமே காவல்துறையின் ஆதரவை நாடுகிறார்கள் என்று ஐநா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன'.

(UNFPA அறிக்கை செய்தி - நவம்பர் 26, 2018 )

ஏன் பெண்கள் தமது பாதிப்பை இவ்வாறு மறைக்கிறார்கள் ? குற்றம் செய்தவனை விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணையே சமூகம் பழி சுமத்துவதால் தானே?

அன்றிரவு ஸ்ரீதரன் வந்திருந்தான்.

"விசயம் தெரியுமோ பைரவி. அந்த புளுகர்ரை மகள் மாதவிக்கு பள்ளிக்கூட மாஸ்டரோடை ஏதோ பெரிய  கசமுசாவாம். பெட்டையும் கொஞ்சம் ஒரு மாதிரித்தான். இண்டைக்கு ஊரில  talk of the town , யூரியூபில ரென்டிங் இந்த நியூஸ் தான்"

உதடுகளை கோணலாக்கிச் சிரித்தான்.

"என்ன சொல்ல வாறீங்கள் ஸ்ரீ , அப்ப மாஸ்டர் வலு சுத்தம் போல..இப்பிடித்தான் எல்லாத்துக்கும் பெண்களிலேயே பழி போடுறீங்கள் . அது சின்னப்பிள்ளை, பிழை விட்டாலும் ஆசிரியர் தான் திருத்தி  இருக்க வேணும் "

அடங்கியது போல மீண்டும் ஆட்டத்தைத் தொடர  ஆயத்தமானான்.

பலதும் பத்தும் எனக் கதை தொடர்ந்தது . ஆனால் பெண்கள் விசயத்தில் ஸ்ரீதரன் கொண்ட கருத்து  மாறவேயில்லை. வாதத்தில் சளைக்கவுமில்லை.

ஆனால் இதெல்லாம் பைரவியுடன் கதைக்கும் போது மட்டும்தான். பொதுவெளியில் பெண்கள் பற்றி உயர்வாகவே கதைப்பான். மகா நடிகன்.

எப்பவுமே சண்டை பிடித்துப் பிரிந்து, இரண்டாம் நாள் சமாதானக் கொடியேந்தும் விநோத நண்பர்கள் அவர்கள். வாய்த்தர்க்கம் இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம் .

"ஏன் பைரவி எடுத்ததுக்கெல்லாம் ஆம்பிளையள் தான் காரணம் என்று நினைக்கிறீங்கள். ஆம்பிளையளை இப்பிடி உயரத் தூக்கி வைச்சு வளர்த்து விடுறதில பொம்பிளையளுக்கு தானே பங்கு அதிகம். மகனுக்கு சீதனம் கேக்கிறதும் சப்போர்ட் பண்ணுறதும்  மருமகளோடு புடுங்குப் படுறதும் ஆராம்? மாமியாரோடு சண்டை பிடிக்கிறதும் அவைதானே. இதுகள் பெண்ணாதிக்கம் இல்லையோ? பொம்பிளையளை ஒழுங்கா மதிக்க வேணும் எண்டு சின்ன வயதில சொல்லிக் குடுத்து வளர்க்கத் தெரியாதோ. வந்திட்டியள் போர்க்கொடி தூக்கிக் கொண்டு"

"அப்ப ஆம்பிளையள் சீதனம் வாங்க விரும்பாமை கையில் கொண்டு வந்து திணிக்கிறவையோ ஸ்ரீ . வேண்டாம் என்றால் சரிதானே "

விடாமல் தொடர்ந்தான் ஸ்ரீ .

" இல்லை பைரவி , இப்ப தாய்தகப்பனிட்டை  சீதனம் டிமாண்ட் பண்ணுறதே மகள்மார்தானாம். சீதனம் வேண்டாம் எண்டு ஆம்பிளையள் சொன்னாலும் விநோதமாக பாக்கினம்.  இவனுக்கு சம்திங் ரோங் எண்டு. மற்றது  பொம்பிளைப் பிள்ளையள் அரைகுறை உடுப்போட , அதை இதைக் காட்டி ஆம்பிளையளை உசுப்பேத்தாமல் ஒழுங்கா உடுப்பை போட்டு வளர்க்கத் தெரியாதோ உங்களுக்கு.   எங்கை எந்த அஸ்திரத்தை பாவிச்சு ஆம்பிளையளை  விழுத்தலாம்  , பிறகு தங்களுக்கு ஒண்டுமே தெரியாத மாதிரி நடிக்கிறது  எண்ட பொம்பிளையளின்ரை சாகசம் எங்களுக்கும் தெரியும் பைரவி.  நாங்கள் ஒருக்கா தொட்டிட்டா என்ன குறைஞ்சா போறியள். ஆம்பிளையள் ஒருவிதத்தில பாவப்பட்ட சன்மங்கள். வீட்டில காட்ட முடியாத வீரத்தை வெளியில காட்டினம் போல. சும்மா விசர்க்கதை கதைக்க வேண்டாம். உங்களோடை கதைச்சாலே என்ரை மூட் குழம்பிப் போகுது. நிப்பாட்டுங்கோ "

உண்மை பாதி பகிடி பாதியாய் வெளுத்து வாங்கி விட்டான். உள்ளுக்குள் பொங்கி வெடித்த கோபத்தை அடக்கிக் கொண்டு பைரவி கேட்டாள்.

" ஏன் ஸ்ரீ, பஸ்ஸிலை போகேக்கை ஒழுங்கா  நிக்கிற பொம்பிளையளை சொறி தேய்க்கிறது யாராம்? உந்த பாவப்பட்ட சன்மங்கள்தானே. உன்ரை மகளிட்டை ஆரும் இடுப்பில நெஞ்சில சொறி தேய்ச்சால், பரவாயில்லை தோல் தானே எண்டு விட்டுட்டு இருப்பியோ? இல்லை மகளின்ரை மனிசன் கன்னத்தில கை வைச்சா அது புருசன் பெண்சாதிக்கு அடிக்கலாம் எண்டு விட்டிட்டு போவியோ . உன்ரை மனிசி ரோட்டில போகேக்கை நல்ல கறவை மாடு போகுதெண்டு யாரும் பெடியள் சொன்னால் பேசாமல் கேட்டுக் கொண்டு வருவியோ ? உன்ரை அம்மாவை வயசானாலும் கிழவி ஒரு தினிசாத் தான் போகுது எண்டு சொன்னால் சந்தோசப் படுவியோ? "

பொருள் விளங்கா மெளனம் காத்தான் ஸ்ரீதரன். அழுத்தமானவன். பைரவி தொடர்ந்தாள் .

" ஏன் எங்களுக்கு ஹோமோன் ஒண்டும் வேலை செய்யிறதில்லையோ ? பஸ்ஸிலை ஆம்பிளையளை சொறியிறனாங்களோ ? நீங்கள் உரிஞ்சு விட்டுட்டு நடுரோட்டில நடந்தாலும் நாங்கள் உங்களை சீண்டவேணுமெண்டு  நினைக்கிறதில்லையே.  உங்கட ஆதிக்கத்தாலையும்   சீண்டலாலையும்  எத்தனை பொம்பிளையளின்ரை ஆளுமையை உயர்ச்சியை தடுத்திருக்கிறீங்கள்.  நான் நண்பன் எண்டு என்ரை ஆதங்கத்தை உன்னட்டை சொன்னால் விளங்கிக் கொள்ள  முடியாத சடமாடா நீ. படிச்ச படிப்பு உனக்கு  வீணாய் போயிட்டுது "

மரியாதை மறந்து ஒருமையில் வெடித்தாள் பைரவி . ஆரோகணத்தில் அந்நிய ஸ்வரம் பேசியது.  குரல் மிகமிக  மூர்க்கம் கொண்டு  அபஸ்வரமாய் இரைந்தது.

" பார், இப்பதான் விவேகன் வந்திட்டுப் போறான். அவனிட்டையும் இதைத்தான் கதைச்சனான். சின்னப் பெடியனா இருந்தாலும் அவன் எவ்வளவு பக்குவமா கண்ணியமா கதைச்சான். பிரச்சனையை புரிஞ்சு கொண்டான்.

ஓமம்மா, எங்கட இளைஞர் மன்றத்தில இனி அடுத்த சமூகநலப்பணி நீங்கள் கூறிய , பெண்ணியத்தினை புரிந்து கொள்ளல்தான். வீடு திருந்தினா நாடு திருந்தும். அதோட நாங்கள் போதைவஸ்து பற்றியும் விழிப்புணர்வுத் திட்டம் ஒண்டு வச்சிருக்கிறம். உங்கட நண்பர் ஸ்ரீதரன் ஐயாவைத்தான் இந்தமுறை தலைவராக தெரிய நினைச்சனாங்கள் எண்டு சொன்னான். நீ நல்ல மனிசனாம். உன்னைப் பற்றி அவனுக்கு தெரியேல்லை. சின்னப் பெடியன் அவன் . நீயும் இருக்கிறியே. உன்னைப்போய் தலைவரா போடப் போகினமாம். தகுதி இருக்கோ ? எருமைத் தோலாடா உனக்கு ?"

பைரவியின் மனம் ஏமாற்றத்தால் வாடியது . நண்பன் இப்படிக் கதைப்பான் என அவள் நினைத்திருக்கவில்லை.

ஆனால் வானத்தில் தெரியும் விடிவெள்ளி போல விவேகன்.

மகனே ! உன் தாய்க்காக உன் சகோதரியருக்காக உன் மனைவிக்காக உன் மகளுக்காக ஏன் அனைத்துப் பெண்களுக்காகவும்

'பெண்ணியம் பற்றி ஆண்களும் பேச வேண்டும்'

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரான பரப்புரையோ அரசியலோ அல்ல. இருபாலாரும் தத்தமது வலிமைகளையும் பலவீனங்களையும் நன்கு புரிந்து பரஸ்பர நம்பிக்கையுடன் விட்டுக் கொடுத்தும் தட்டிக் கொடுத்தும் சமமாக  வாழ்வது. வரையறைகள் தனிமனித ஒழுக்கம்  இருபாலாருக்கும் சமமாக வேண்டும். அவளது உணர்வுகளையும்  வலிகளையும்  ஒரு பெண்ணின் மனதாக இருந்து  ஆண்கள் நீங்கள் புரிந்து  கொள்ளுங்களேன்.

புத்தகத்தில்  மனது ஈர்த்த வசனங்களை மீண்டும் தனக்குள்ளே  ஆலாபனைகளுடன்  இசைத்துக் கொண்டாள் பைரவி.  அது விவேகன் போன்ற இளைய தலைமுறையினரை  நிச்சயம் வசீகரிக்கும்.

சிந்தனை வயப்பட்டிருந்த பைரவியை  கையடக்கத் தொலைபேசி அழைத்தது. பவானி சற்குணசெல்வம் என்றது முகப்புத்திரை.

புத்தகம் வாசிச்சனீங்களோ பைரவி ?

ஓமோம். அருமை. அருமை. 'மனச்சோலை' என்ற புத்தகம் மூலமாக உங்கள் அகக்குரலை உரத்துக் கூறியிருக்கிறீங்கள். பாராட்டுகள் பவானி. நல்ல  முயற்சி. அதில் ஒரு தலைப்பு பற்றித்தான் இப்போ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஓம் . இனி ஆண்களும் பெண்ணியம் பற்றிப் பேச வேண்டும் . மாற்றத்திற்கான உந்துசக்தியை அது நிச்சயம் வழங்கும். சேர்ந்தே பயணிப்போம்.

'இந்த மாற்றத்திற்காக  இன்னும் எத்தனை யுகங்கள் நான் ஓட வேண்டுமோ'  என்ற குதர்க்கமான பாவனையுடன் பைரவியை பார்த்து  நக்கலாகக்  கனைத்தது மனக்குதிரையொன்று. குறுக்காகப்  பாய நினைத்த அதன் கடிவாளத்தை  நம்பிக்கையுடன்  இறுகப் பற்றினாள்  பைரவி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்