இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.
உலக அமைதி முதலில் குடும்பத்தால் சீரழிகின்றது. குடும்பத்துக்குள் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளால் நடைபெறுவது குடும்பச் சண்டை. இதனால், மன அமைதி குன்றுகின்றது. சகோதரர்களிடையே பணவிடயங்கள் உரிமைப் போராட்டங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாரத யுத்தமே கண்டது எம்முடைய தமிழ்நாடு. இதனைவிட குடும்ப அமைதியின்மை மனிதர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் மூலமாக பலவிதமான பிரச்சினைகளை குடும்பம் எதிர்நோக்க வேண்டி வருவதுடன் தொடர் கொலைகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகின்றன என்று மனநலவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றார்கள்.
பேராசையும் எமக்கு உரிமையில்லாதவற்றில் நாம் ஆசைப்படுதலும் குடும்பம் அமைதி இழந்து உலக அமைதியைக் கெடுக்கின்றன. இதனால், இராவண வதை, வாலி வதை போன்ற யுத்தங்கள் கண்டது தமிழ்நாடு. இவ்வாறான காரணங்களினால், குடும்ப அமைதி குன்றி அது அடுத்த கட்டமாக நாட்டின் அமைதியின்மையாகவும் உலக அமைதியின்மையாகவும் மாற்றம் பெறுகின்றது.
எந்த ஒரு விடயமும் முதலில் வீட்டில் இருந்து நாட்டுக்குப் பரவிப் பின் நாட்டில் இருந்து உலகத்துக்கு பரவுகின்றது. நாடும் வீடும் உலகமும் விளங்க வேண்டுமென்றால், முதலில் வீட்டுக்குள் அமைதி கிடைக்க வேண்டும். அதற்குரிய வழிகளை ஒவ்வொரு வீட்டு அங்கத்தவர்களும் நாம் பேண வேண்டியது அவசியம்.
ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்ற நாம் இன்று மனப் பதட்டத்துடன் இருக்கின்றோம். ஒரு உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்து அதன் வடு இன்னும் மாறுவதற்கு முன்னே மீண்டும் ஒரு உலக யுத்தத்தைச் சந்திக்கப் போகின்றோமோ என்ற அச்சம் எங்களுடைய மனத்திலே நிறைந்திருக்கின்றது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலே நடக்கின்ற யுத்தத்தை நோக்கி எம்முடைய கவனம் ஒவ்வொரு நாளும் இருக்கின்றது. ஐரோப்பியர்களின் தலையீட்டால் நாம் வாழுகின்ற ஐரோப்பிய நாடுகள் அணுகுண்டுத் தாக்குதலுக்குள் அகப்பட்டு விடுமோ என்ற அச்சம் இங்கு வாழுகின்ற அனைவரின் மனங்களிலும் இருக்கின்றது.
கல்லும் கத்தியும் கொண்டு மனிதன் உணவுக்காகப் போராடிய காலத்தில் போராட்டம் என்பது மிருகவதையில் மட்டுமே இருந்தது. அன்று தொடங்கி மனிதனுக்குள் கொலை என்ற உணர்வு ஆழமாகப் பதிந்து அது சந்ததி சந்ததியாக மரபணுக்கள் மூலம் கடத்தப்பட்டு வருகின்றது. இனக்குழுக்களாகப் பிரிந்து மனிதன் பின் ஊர்களாக விரிவடைந்து நாடுகளாகப் பெருகி மனித சமுதாயம் வளர்கின்ற போது உக்கிரம் அடைந்து நான் எனக்கு என்ற உரிமைப் போராட்டமாக மாறியது. ஒரு நாட்டை தம்முடைய கைப்பிடிக்குள் கொண்டு வர ஒரு நாடு எத்தனிக்கும் போது மற்றைய நாடுகளை அடிமைப்படுத்துகின்ற அடிமைத்தனம் முன்னிலைக்கு வருகின்றது.
இதற்கு என்ன செய்யலாம் என்று பார்த்தால் சூரியன் தன் கட்டுப்பாட்டுக்குள் இந்தப் பால்வீதியை வைத்திருப்பதைப் போல் ஒரு குடைக்குள் ஆட்சி இருந்துவிட்டால், இந்த உலக யுத்தம் என்பது இல்லாமல் போய்விடும். இதைத்தான் வேதாத்திரி மகரிசி அவர்கள் நிலவுலகுக்கோர் ஆட்சி என்றார். உலகத்தையே தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று ஜெர்மனிய முன்னாள் ஜனாதிபதி ஹிட்லர் நினைத்தார். அதற்கு அவர் கையாண்ட அணுகுமுறை தவறாக அமைந்திருந்தார். ஒரு குடைக்குள் ஆட்சி என்று வருகின்ற போது இலங்கையில் நடந்தது போல உள்நாட்டு யுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அதனால் மனங்களைத்தான் நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
நிலவுலகுக்கோர் ஆட்சிக்கான காலம் கடந்து விட்டது. இதை நாம் நினைத்தாலும் நடத்த முடியாத நிலையிலே உலகம் நிற்கின்றது. எப்போது நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்று ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டதோ அவ்வாறு அவ்வவ் நிலங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்தார்களோ வாழ்ந்தார்களோ அன்றிலிருந்தே உலகம் பிரிக்கப்பட்டு விட்டது. தனக்கென ஒரு ஆட்சி, தனக்கென ஒரு சட்டம், கல்வி முறை, என நாடுகள் ரீதியாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. மொழி, இன, மத ரீதியாக மனிதன் பிரிக்கப்பட்டுவிட்டான். ஒன்றை ஒன்று வெல்ல போரிட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டான்.
இந்த யுத்த குணம் மனிதனிடம் மட்டும்தானா? என்று நாம் சிந்திக்கின்ற போது கூர்ப்பு விதியின் படி குரங்கில் இருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி கண்டான் என்றால், அந்தக் குரங்குக் கூட்டங்கள் தம்முடைய பகுதியைப் பிற குரங்கு இனங்களோ வேறு மிருகங்களோ ஆக்கிரமிக்கின்ற போது உக்கிரமாகப் போரிட்டிருக்கின்றார்கள். இப்போதும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதேபோலப் பிற உயிரினங்களில் உதாரணமாக மீனைப் பார்த்தால் ஒரு இன மீன் தன்னை நோக்கி வரும் வேறு ஒரு இனத்திடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு வகையான வாயுவைப் பின்புறமாகச் செலுத்தும். அதனுடைய மணத்ததைச் சுவாசிக்க முடியாதும் அந்த நச்சுக் காற்றை உள்வாங்க முடியாமலும் அம்மீனைத் தொடராது தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிவிடும்.
இவ்வாறு தற்காப்புக்காகத், தனக்குரிய உரிமையை விட்டுக்கொடுக்காமல் வைத்திருப்பதற்காகவும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், பிற்பட்ட காலத்தில் அதையும் மீறி ஆசை மேலீட்டினாலும் தலைமைத்துவ வேட்கையாலும் யுத்தமாக வெளிப்பட்டிருக்கின்றது. இலங்கையை யுத்தம் பற்றிச் சிந்தித்தால், உரிமைப் போராட்டமானது சகோதர படுகொலை, புத்து ஜீவிகள் படுகொலை என்று தன் இனத்தைத் தானே அழித்தது மட்டுமல்லாமல் உள்நாட்டு யுத்தமாக மாறி ஒரு இனத்தை அந்நாட்டு அரசாங்கமே அழித்த யுத்தமாக உருமாறியது. இவ்வாறு தம்முடைய தேவையும், தம்முடைய தேவையை நிறைவேற்றுவதற்கு மனிதன் எத்துணை அளவுக்கும் போவான் என்பது உறுதியாகின்றது.
இன்னும் ஒருபுறம் தமிழர்களுடைய இலக்கியங்களை எடுத்து நோக்கினால், ஒரு நாட்டின் மன்னன் தன்னுடைய நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு மக்களுக்கு வருகின்ற இடையூறிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது.
மனுநீதிகண்ட சோழன் புராணத்தில்
மாநிலங்கா வலனாவான்
மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு
தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த்
தறங்காப்பா னல்லனோ
என்று பெரிய நிலவுலகத்திற்கு அரசனாவான், நிலை பெற்ற உயிர்களைக் காக்குங் காலத்திலே அந்த உயிர்களுக்குத் தன் காரணமாயும், தன் கீழ்ப் பணிபுரியும் அமைச்சர் முதலானோரின் காரண மாயும், குற்றத்தை விளைவிக்கும் பகைவர்கள் காரணமாயும், கள்வர் காரணமாயும், பிற உயிர்கள் காரணமாயும் வருகின்ற துன்பங்களால் வரும் ஐந்து அச்சங்களையும் நீக்கி அறத்தை வழுவாமல் காப்பவன் அல்லனோ? என்று மன்னன் அவன் கடமை கூறப்பட்டுள்ளது.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
பெற்றுப் பாதுகாத்தல் தாயினுடைய கடமையாம். தன் குலத்துக்குரிய படைக்கலப்பயிற்சியாகிய கல்வி அதற்குரிய அறிவு அதற்குரிய செய்கைகள் ஆகிய இவற்றால் நிறைந்தவனாகக் செய்தல் தகப்பனுக்குக் கடமையாகும். படைக்கலத்தைத் திருத்தமாகச் செய்துகொடுத்தல் கொல்லனுக்குக் கடமையாகும்;. ஒளியுடன் விளங்குகின்ற வாளைக் கையிலே ஏந்தி போர்க்களத்திலே பகைவர்களின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனுடைய கடமையாகும் என்று களத்துக்கு வீரரை அனுப்பும் வீரமரபு பற்றிப் புறநானூற்றிலே பொன்முடியார் எடுத்துக் கூறுகின்றார். இங்கு களிறு எறிந்து பெயர்தல் என்பது தாக்க வரும் யானையை ஓடச் செய்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். அதுவே சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
மனித இனம் குழுவாக வாழ்ந்த காலத்திலும் அக்குழுவின் தலைவன் மக்களைக் காப்பாற்ற வேண்டும் அதற்கு போரிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழர்களின் அடையாளமாகக் காதலும் வீரமும் கூறப்படும் போது வீரம் என்ற தலைப்பிலே கொலைதான் முன்னிலையில் பார்க்கப்படுகின்றது. ஒரு சமூகத்திலே ஒரு தனிமனிதன் கொலை செய்யப்படுகின்றான் என்றான் அந்தக் கொலை செய்பவனுக்குக் கொலைக்குற்றத்துக்கான தண்டனை கொடுக்கப்படுகின்றது. அதே கொலையை எமது உரிமைப் போராட்டத்திற்காகச் செய்கின்ற போது அது தமிழனின் வீரமாகப் பார்க்கப்படுகின்றது. இப்போராட்டமே இலங்கையிலும் போராளிகள் உரிமைக்காகப் போராடுகின்ற போது அரசாங்கத்தை மறைந்திருந்து தாக்கினார்கள். அரசாங்கம் போராளிகளை அழிப்பதற்காக குறி வைத்துத் தாக்கினார்கள். இங்கு குற்றம் என்று பார்த்தால் அது இரு தரப்பினரிடமும் இருக்கின்றது. ஆனால், நாம் என்ன சொல்கின்றோம் தமிழர் வீரம் மிகுந்தவர்கள். அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட்டார்கள் என்று மார்பு தட்டிக் கொள்ளுகின்றோம். தனியே செய்தால் அது கொலை. கூட்டமாகச் செய்தால் அது வீரம் என்று எம்முடைய மன அகராதியிலே பதிந்து வைத்திருக்கின்றோம். ரோஜாப்பூவை எடுத்துப் பார்த்தால் அது எப்படிப் பார்த்தாலும் அது ரோஜாவே. அதுபோலவே உயிர்களைக் கொல்வது அது எந்த வடிவமாக இருந்தாலும் அது கொலையாகவே கருதப்படும்.
பாரி என்னும் குறுநில மன்னனை அழிப்பதற்கு சேர சோழ பாண்டிய மூவேந்தரும் ஒன்றாக இணைந்து அழித்தார்கள். தம்மை விஞ்சி பாரி என்னும் குறுநில மன்னன் உயர்ந்து நிற்பான் என்று அஞ்சினார்கள். உலகத்துக்கு நல்லவனாக வாழக்கூட மனித இனம் இடம்தராது என்னும் கசப்பான உண்மையையும் நாம் இவ்விடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
போரினால் வருகின்ற அழிவு துன்பங்களில் இருந்து நாடு அமைதியடைய வேண்டும் என்று மன்னர்கள் எண்ணினார்கள். அதற்குரிய முயற்சிகளும் மேற்கொண்டிருந்தார்கள். தொண்டைமான் என்னும் மன்னன் தன்னுடைய படைக்கலங்களின் வலிமையைப் பற்றிப் பெரிதாக எண்ணியதால் அறியாமையில் அதியமானுடன் போரிட எண்ணினான். அதனால், அதியமான் அப்போரை தடுத்து நிறுத்துவதற்காக ஒளவையாரை தொண்டைமானிடம் தூது அனுப்பினார். அங்கு படைக்கலங்களை தொண்டைமான் ஒளவையாருக்குக் காட்டினார். ஒளவையாரும்
இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்
உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.
இந்தப் படைக்கலங்கள் பீலி யணியப்பட்டு மாலை சூட்டப்பட்டு உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு நெய்யிடப்பட்டு காவலையுடைய அகன்ற கோயிலிடத்து இருக்கின்றன. ஆனால், செல்வம் இருந்தால் உணவு கொடுத்து இல்லையாயின் உள்ளதனைப் பலரோடுகூட உண்ணும்; தலைமயையுடைய எம் வேந்தன் அதியமானுடைய கூரிய நுனியையுடைய வேலோ பகைவரைக் குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டில் இடத்திலே கிடக்கின்றன. என்று தொண்டைமான் படைக்கலங்களைப் புகழ்வது போல பழித்து தொண்டைமானுக்கும் அதியமானுக்கும் இடையிலே நடைபெறவிருந்த போரை நிறுத்துவதற்காக ஒளவையார் பாடினார்.
எழுத்து முதலில் இலையில் ஆரம்பித்துப் பின் பனையோலையில் தொடர்ந்து அதன்பின் கல்லிலே எழுதப்பட்டு பத்திரிகைக்கு வந்தது போல் ஆயுதங்களும் கல்லில் தொடங்கி பல வடிவங்களாகி கி.பி 6 ஆம் நூற்றாண்டிலே இரும்பின் பயன்பாடு ஆரம்பிக்கத் தொடங்கியபின் இரும்பு ஆயுத்தங்கள் பாவனைக்கு வந்தன. அதன்பின் மிகவும் மோசமான நிலைக்கு போராட்டங்கள் வந்துள்ளன. அதன்பின் மனிதன் தற்போது அணுகுண்டு அச்சத்துக்கு ஆளாகியுள்ளான். ஜப்பானில் ஹிரோசிமா, நாகசாக்கி நகரங்களில் 1945 இல் வீசப்பட்ட அணுகுண்டின் தாக்கம் இன்றும் பிறக்கும் குழந்தைகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு போரினால் ஏற்படுகின்ற அழிவுகள், குடும்ப அழிவுகள் ஏற்படாது உலகம் அமைதி பெறவேண்டும் என்றால், எவ்வாறான நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்று பல அறிஞர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த ரோக்கத்தோன் அமைப்பும் தொடர் உரை நிகழ்வாக உலக அமைதிக்காக நடத்திக் கொண்டிருக்கின்றது. பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.
போரில்லா நல்லுலகம் வர வேண்டும் என்பதற்காக உலக சமாதான இயக்கத்தை 10 ஆம் திகதி ஆவணி மாதம் 2002 முதல் 13.8.2002 வரை ஆழியாரில் உலக அமைதி மாநாட்டை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நடத்தினார். அந்த மாநாட்டிலே ஐக்கியநாடுகள் தகவல் மைய இயக்குனர் திரு பீட்டர் ஸ்ரார்ஸ்ரெபிக் அவர்கள் நேரிலே வந்து உலக சமாதான திட்டம் பற்றிய மகரிஷியின் தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டார். அந்த உலக சமாதானத் திட்டங்களைத் தற்போது யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவின் அமைப்பிலே சேர்த்திருக்கிறார்கள்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக அமைதிக்காக போரில்லா நல்லுலகம் வேண்டுமென்கிறார். அதற்குப் பலமதங்கள், பல கடவுள் பழக்கம் குறித்து ஆய்ந்து உண்மை ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் என்று தன்னுடைய 14 தத்துவங்களில் இவற்றையும் வலியுறுத்தியிருக்கின்றார். அமைதி வரவேண்டும் என்பதற்காகப் புத்த மதம் பகைவரை நேசி என்று போதிக்கின்றது. ஆனால், அதன் வழி நடப்பவர்கள் செய்கின்றார்களா? யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு நாம் எவர் சொன்ன சொல்லையும் சொந்த அறிவால் நினைத்துப் பார்க்க வேண்டும் அல்லவா? எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண வேண்டும் அல்லவா? அப்படித் தாமாகத் தமது சிந்தனையாற்றலால் இந்த இவுலகை மாற்ற முற்படவேண்டும். ஆனால், இப்போது மதத்தின் பெயரால் பல படுகொலைகள் நடக்கின்றன. அதனால், நாம் புத்தரையும், இயேசுவையும், அல்லாவையும் பதவி இறக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் சொல்லிய அறிவுரைகளை யாருமே கேட்டு நடப்பதில்லை.
நோய் உள்ளவர்களுக்குத்தானே மருந்து கொடுக்க வேண்டும். அதுபோல குறைகள் நிறைந்த உலகத்துக்குத்தான் அறிவுரைகள் தேவை. திருவள்ளுவர் 1330 குறள்களில் உலகம் உய்வதற்காகப் பல அறிவுரைகள் கூறினார். அறிவுடமை என்பது பிறர் உயிர்களுக்கு நீ செய்யும் உதவிதான் அறிவு என்று எடுத்துரைத்தார். கொல்லாமை போதிக்கப்பட்டது. நீதி நூல்கள், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் அறிவுரை கூறி மக்களை நல்வழிப்படுத்தும் நூல்கள் எழுந்தன. வள்ளலார் தோன்றினார் வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினார். எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் பார்க்கச் சொன்னார். ஆனால், இன்று உலகநாடுகளில் என்ன நடக்கின்றது?
அசோகச் சக்கரவர்த்தி யுத்தகளத்திலே இறந்து கிடக்கின்ற உயிர்களைப் பார்க்கின்றான். அந்த வேளை ஒருதாய் போரிலே விழுப்புண் ஏற்பட்டு இறந்த தன்னுடைய மகனின் உடலை மடியிலே போட்டு அழுகின்றாள். அவளுக்குத் தாகம் எடுக்கின்றது தண்ணீர் கேட்கின்றாள். அசோகச் சக்கரவர்த்தி அவளுடைய கையில் நீர் கொடுக்கின்றான். நீ யார்? என்று அவள் கேட்கின்றாள். அசோகச் சக்கரவர்த்தி என்று அவன் சொன்ன போது, தண்ணீரை ஊற்றிவிட்டு இறந்த இந்த பிணங்களின் மேல் நடந்தா நீ அரசாளப் போகின்றாய் என்று பலவாறாகப் பேசுகின்றாள். அவளுடைய ஆவேசமான பேச்சு அசோகச் சக்கரவர்த்தியை அன்புதான் இன்ப ஊற்று அன்புதான் உலக மகா சக்தி என்று மனமாற்றத்தைக் கொண்டு வந்தது.
மிருகங்கள் நாட்டுக்குள் வந்தால் மயக்க மருந்து போட்டு அவற்றை மீண்டும் காட்டுக்குள் கொண்டு விடுகின்றார்கள். அதேபோல மனித மனங்களில் இருக்கும் போராடும் குணத்தை ஏதாவது மருந்து மாத்திரைகள் மூலமாகக் குணமாக்க வேண்டும். அதற்கு மருந்து பக்கவிளைவுகளைக் கொண்டு வரும் என்று நினைப்பவர்கள். தியானம் மூலமாக மனத்தை அடக்கும் மனவளக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் தியான வழிமுறைகளைப் பலவாறாக வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றார். அதன்படி வீட்டில் இருந்தபடி தியானம் செய்கின்ற போது பிரம்மஞானம் பெறக்கூடியவர்களாக மாறுகின்றோம். ஞானம் என்றால் அறிவு அந்த அறிவை பிரம்ம ரிஷிகள் போல காட்டுக்குப் போய்த்தான் பெற வேண்டும் என்றில்லை என மகரிஷி சொல்கின்ற போது வீட்டில் இருக்கும் போதே ஞானம் பெறலாம். அத்துடன் ஆசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், பாலுணர்வு இந்த ஆறு குணங்களையும் அறுகுண சீரமைப்பை செய்கின்ற போது நான் என்னுடைய வாழ்நாளிலே யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் செய்ய மாட்டேன் துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன் என்று சங்கற்பம் எடுத்துக் கொள்வோம். இந்த ஆறு குணங்களையும் சீரமைத்து விட்டோமானால், நாம் திருந்திவிடுவோம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தியான வழியிலும் அறுகுண சீரமைப்பு வழியிலும் தன்னை உட்படுத்திக் கொள்ளுகின்ற போது தன்னை சிறப்பான மனிதனாக்குவான். அவனுக்கு மருந்து மாத்திரைகள் தேவையில்லை. வீட்டில் ஆரம்பித்த அமைதி நாட்டிலும் பிரதிபலிக்கும் உலக அமைதி கிடைக்கும்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக அமைதி பற்றி சிந்தித்து அன்பொளி என்ற மாதஇதழை 1957 ல் ஆரம்பித்தார். 1958 ல் உலக சமுதாய சேவா சங்கம் ஆரம்பித்தார். முதல் அயல்நாட்டு மன்றத்தை வோஷிங்டனில் லழபய ளுநசஎiஉந ஊநவெநச என்ற பெயரிலும் பின் நேற துநசஉல இலும் ஆரம்பித்தார். உலகமெங்கும் வேதாத்திரியம் ஒலித்தது. 9.1.1975 இலே ஐக்கியநாடுகள் நிறுவனத்தில் உலக அமைதிக்கு ஆன்மீகத்தின் வளர்ச்சி முக்கியம் என்று ஆற்றிய உரை மக்களைக் கவர்ந்தது. பின் சிக்காக்ககோவிலும் கிளை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்தில் உலக அமைதிக்காக அயராது உழைத்தார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கணியன் பூங்குன்றனார் பாடியது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவர் கூறிய சகோதரத்துவம் எல்லாரும் உறவினர்கள் என்னும் மனப்பாங்கு மக்களிடம் வளர வேண்டுமே. அடுத்தவரை நேசிக்கும் பக்குவம் வருகின்றவர்களுக்குத்தான் மிருக வதை, உயிர்க் கொலை செய்வதற்கு அச்சம் ஏற்படும்.
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.
என்று பாரதி கூறுவதுபோல இயற்கையை நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முதலில் மனிதன் தன்னைக் காதலிக்க வேண்டும். இதனையே வள்ளுவர்
"தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினை பால்' என்றார்
ஒருவன் தன்னை விரும்பினால், தான் செய்கின்ற பாவங்கள் தனக்கு மீண்டும் வந்து தன்னையே தாக்கும் என்ற பயத்தினால், எந்தத் தீய வினைகளையும் செய்ய மாட்டான். எனவே ஒருவன் தன்னைக் காதலிக்க வேண்டும்.
பெண்கள் தாம் அடிமை என்றோ, அடக்கமாக இருக்க வேண்டியவர்கள் என்றோ தாமாக எண்ணக் கூடாது. உரிமை என்பது ஆண் பெண் என்ற பாகுபாட்டுடன் அமையக் கூடாது. ஏற்கனவே பாரதியும், பெரியாரும் பல இடித்துரைத்திருக்கின்றார்கள். அந்த பாரதிக்கு பெண் உரிமை போதிக்க நிவேதிதா என்ற பெண்ணே தேவைப்பட்டது. பெண்கள் தாமாகத் தம்முடைய உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும். 1924 வரை பெண்களுக்கு முலை வரி விதிக்கப்பட்டிருந்ததை அறிந்திருக்கின்றீர்களா? பிற்படுத்தப்பட்ட பெண்களும் தலித் பெண்களும் மார்பகம் வளரத் தொடங்க முலைவரி செலுத்த வேண்டும். வரி வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பூப்பு எய்திய தலித் பெண்களிடமிருந்து முலை வரியை வசூலிப்பார்கள். பெண்ணின் மார்பகங்களின் அளவைப் பொறுத்து வரி வசூலிப்பவர்களால் வரி அளவு மதிப்பிடப்பட்டது.
அதேபோல் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலாடை அணிவதில்லை. வீடுகளில் கதவு வைக்க முடியாது. பெண்கள் உடன்கட்டை ஏறுதல். இவ்வாறான அடக்குமுறைகள் பெரும் போராட்டங்களின் மூலமே நீக்கப்பட்டது. ஆயினும் இன்னும் சில பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மணிப்பூரில் நடந்த பிரச்சினை இன்றும் புத்தர், காந்தி பிறந்த மண்ணிலே நடைபெறுவது அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
இவ்வாறான ஆணாதிக்கம் தடுக்கப்படும் போது இயல்பாகவே பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுவது நீக்கப்பட்டு மனஅமைதி ஏற்படுகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பங்களில் சம உரிமை, பெண்களை மதிக்கின்ற மனப்பாங்கு, அடக்குமுறைத் தவிர்ப்பு வருகின்ற போது குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்து, அந்த வீட்டிலேயே ஒன்றாக வளருகின்ற குழந்தைகள் மனநிலை பாதிப்பற்ற சிறப்பான குழந்தைகளாக வளர வாய்ப்பு ஏற்படுகின்றது. நாட்டின் தேவைகளைத் தாமாக முன் வந்து தீர்த்து வைக்க வேண்டும். அளவுக்கு மீறிப் பணத்தைச் சேகரித்து வைப்பவர்கள். பஞ்சம் பட்டினியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
நாம் எவ்வாறு நடந்து கொள்ளுகின்றோமோ அது எமக்குத் திரும்பவும் வரும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது எம்முடைய இலங்கை மண்ணிலே நாம் கண்டு கொண்ட ஒரு தத்துவமாகவே இருக்கின்றது. செய்கின்ற வினைக்கேற்பப் பிரதிபலனை நாம் அனுபவிப்போம் என்பதே மந்திரம். பல மொழி பேசுகின்ற பல இன மக்களைப் பாதுகாத்து வசதி வாய்ப்புக்களைச் செய்து கொடுத்திருக்கும் நாம் வாழுகின்ற ஐரோப்பிய நாடானது அனைத்து மக்களையும் அணைத்து வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் அனைத்து மக்களுடனும் சேர்ந்து விட்டுக் கொடுத்து வாழுகின்ற நாம் ஏன் எம்முடைய தாய் நாட்டிலும் ஒற்றுமையாக, சகோதரத்துவ மனப்பாங்குடன் வாழ முயற்சிக்கக் கூடாது. மகிழ்ச்சியும் சந்தோசமும் அமைதியும் எம்முடைய மனதுக்குள் இருந்தே வரவேண்டும்.
கனவு காணுங்கள் கனவு காணுங்கள்
கனவு காணுங்கள் - அந்தக் கனவுகளை
எண்ணங்களாக மாற்றுங்கள்.
எண்ணங்களை செயல்படுத்துங்கள் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்
உலக அமைதி பற்றி ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது அவசியம். அதை எண்ணங்களாக மாற்றிச் செயற்படுத்த வேண்டும். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அந்த வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாகவும் பிறரை மனத்தால் கூட வருத்தாமலும் வாழ உறுதி எடுக்க வேண்டும். இயற்கையை வழிபட்ட மனிதர்கள் நாய் கடிக்கும் என்று நாயைக் கொல்ல சிந்திக்காது நாயை வைரவக் கடவுள் என்று வணங்கினார்கள். கடிக்க வரும் பாம்பை அடித்துக் கொல்லாமல் நாகதம்பிரான் என்று கடவுளாக வணங்கினார்கள். அவ்வாறே எம்மைத் தாக்குபவர்களையும் தூற்றுபவர்களையும் வாழ்த்துதல் என்ற உயர்ந்த பண்புடன் வாழ்த்திக் கொண்டே இருப்போம். அந்த வாழ்த்து திரும்பவும் எங்களை வந்தடையும். உலகத்தைச் சுத்தப்படுத்த இயற்கை மழையைத் தூவி தூசிகளை அகற்றுகின்றது. அதுபோல் உலகம் அமைதி பெற எம்மை நாம் தயார் படுத்திக்கொண்டு பகையை ஒழித்து, அனைத்து உயிர்களிடமும் சாதி, மத, இன பேதமின்றி அன்பைச் செலுத்தி, வேற்றுமையை வெறுத்து, ஒற்றுமையை நிலைநாட்டி, ஆயுதப் போராட்டத்தை எதிர்த்து, அன்புவழி உலகை இன்பத்தில் ஆழ்த்துவோம். அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.