நெறியாளர்: முனைவர். ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை ஆய்வுத் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் – 635 601
- எழுத்தாளர் பாமா -
தலித் இலக்கியம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பல்வேறு இலக்கியங்கள் தோன்றிவிட்டன. காலத்திற்கேற்றவாறு தீண்டாமைகள், ஏற்றத்தாழ்வுகள் நவீனமயமாக்கப்பட்டு செல்கின்றன. எவையாக இருப்பினும் அவற்றை அறிந்து அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் சமூகத்தில் நிகழும் அவலங்களை ஆவணப்படுத்தும் வகையில் தன்னுடையச் சிறுகதைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் தலித் பெண் எழுத்தாளர் பாமா. அவர் 'ஒரு தாத்தாவும் எருமையும்' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலில் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு விதமான வாழ்வியல் சிக்கல்களைச் சமூகத்திற்கு நேரடியாக சித்திரித்தவர். தன்னுடைய படைப்புகளில் யதார்த்தமானக் கதைப் பாத்திரங்களைக் கொண்டு சாதி என்னும் சமூக கட்டமைப்பை உடைக்க முயற்சித்தவர். தலித் என்று அடையாளப்படுத்தும் தலித் மக்களின் அடக்குமுறைகளையும், ஒடுக்கு முறைகளையும் உடைத்தெறிய பல்வேறு பரிணாமங்களில் பயணித்தவர். .
சாதிரீதியான ஒடுக்குமுறையால் ஏற்பட்ட நிலமைகள் அடிப்படையில் தலித் மக்கள் வறுமையாலும் தீண்டாமை போன்ற கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாச்சி சிறுகதையில் ‘‘ஒரு பறத் தாயாளியாடா எனிய அண்ணாச்சின்னு சொல்லுறது“1 என்று மேல் சாதிக்காரர் ஜெயசங்கரின் கூற்று மரியாதை நிமித்தம் காரணமாகக் கூட அண்ணாச்சி என்று தலித் மக்கள் மேல் சாதிக்காரரை அழைப்பதற்குத் தடையிருந்த நிலையை உணர்த்துகிறது. மேலும், சக மனித உரையாடல் உரிமையை மறுக்கபட்டிருந்த நிலையைக் காட்டுகிறது. “பார்ப்பனரல்லாதாரிடமிருக்கும் கொடுமை பார்ப்பனர்கள் காட்டும் கொடுமைகளை விட சில விஷயங்களில் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும்”2 என்ற வாக்கியத்தில் கூறப்பட்டுள்ள அதிகமான கொடுமைகளுள் மேல் சாதிக்காரை உறவுமுறை வைத்து கூறுவது தவறு என்று சொல்லும் கொடுமையும் ஒன்றாகும்.
“பணம் வசதி இருந்தா மட்டும் போதுமாங்க சாதியில்லன்னு ஆகிப் போகுமா எம்புட்டுப் பணம் இருந்தாலும் கீச்சாதி கீச்சாதி தாங்க. இவுங்களுக்குப் பணம் இப்ப வந்ததுங்க”3 என்று பச்சையம்மா சகுந்தலாவிடம் கூறுகிறாள். அப்போது தலித் மக்கள் எத்தகைய உயர்ந்தப் பொருளாதாரம் பெற்று பதவிரீதியில், பொருளாதாரரீதியில் உயர்ந்தாலும் தீண்டாமை என்ற ஒடுக்குமுறை தலித் மக்களிடம் இன்றும் நிலவிக் கொண்டுதான் வருகிறது. அப்போது பார்க்கையில் நவீனமயமாக்கப்பட்ட இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுகளிலும் தலித் மக்களைப் பார்க்கும் பார்வை புறத்தில் உயர்ந்த மாதிரி இருந்தாலும் அகத்தில் தலித் மக்கள் குறித்த மனநிலை முன்னேறவில்லை. தீண்டாமை நிலை தோன்றவதற்கு அடிப்படையாக இருப்பது தீட்டு, சுத்தமின்மை போன்ற கருத்தாக்கங்கள் ஆகும். இக்கருத்தாக்கங்கள் ஒரு தலைபட்சமாக தலித் மக்களின்மேல் சுமத்தப்படுகின்றன. பச்சையம்மா தலித் மக்களை வீட்டில் விட்டால் நல்ல காரியம் விளங்குமா என்று கூறும் இடத்தில் பிராமணர்களின் கொள்கைத் தாக்கம் அனைத்துச் சாதியினரிடமும் பரவச் செய்துள்ளனர். தீண்டாமை என்ற பூட்டிற்குத் தீட்டு, சுத்தமின்மை என்ற சாவி உருவாக்கப்பட்டு கடவுள் என்ற பெயரால் பூட்டி சாவியைத் தூக்கி வீசி அடிக்கப்பட்டார்கள். தலித் இனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் பொருளாதார ரீதியில் சமுதாயத்தில் உயர்ந்து வாழ்கிறார். ஆனால் பச்சையம்மா எவ்வளவு பொருளாதாரம் ஈட்டி அதனைத் தக்க வைத்து வாழ்ந்தாலும் அவர்கள் கீழ்ச்சாதிகாரர் என்று கூறுவதில் பொருளாதாரத்திற்கும் தீண்டாமைக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிகிறது. “முந்தைய காலங்களில் தலித்துக்களைப் பிறர் தொடுவதும் அவர்கள் மற்றவர்களைத் தொடுவதும் அனுமதிக்கப்படாத நிலையும்; அதைத் தொடர்ந்து பிற சாதியினர் வாழும் வீதிகளுக்குள்ளும் அவர்களது வீடுகளுக்குள்ளும் தலித்துக்கள் அனுமதிக்கப்படாத நிலையும் நிலவின”4 தலித் மக்கள் மேல் சாதியினர் வாழும் வீடுகளுக்குள்ளும், வீதிகளுக்குள்ளும் செல்ல அனுமதி இல்லாமல் இருப்பதைத் தெரிவிக்கிறது. எனவே, தலித் மக்கள் படித்து மேல்சாதிக்காரர்களுக்குச் சமமாக பொருளாதாரம் ஈட்டி அதனைத் தக்க வைத்து வாழ்ந்தாலும் அவர்களுடைய இறந்த காலத்தை நினைவூட்டி இழிவுச் செய்யப்படுகிறார்கள்.
வெனயம் சிறுகதையில் “டீச்சர் பொய் சொன்னா… அது பொய் இல்லியாக்கும்…! டீச்சரு களவாண்டா அது களவாணித்தனம் இல்லியாக்கும்…! பெறகு நம்ம கிட்ட பொய் சொல்லாத களவாங்காதன்னு சொல்லிக்கிறாங்க“5 என்று இராசு தன் பாட்டியிடம் கூறினான். திருடுவது என்பது உடைமைச் சமூகத்தை உடைப்பதாகும் என்பதால் தவறில்லை என்று புரிந்துக் கொண்ட இராசு “நம்மகிட்ட இல்லனா இருக்கிறவங்ககிட்ட இருந்து எடுக்குறது தப்பு இல்லையாம் சரிதான்“6 என்று இராசு புரிந்துக் கொள்கிறான். ‘அண்ணாச்சி‘ சிறுகதையில் ஜெய்சங்கர் நிலத்திரல் நீரப் பாய்ச்சுவதற்கு வெள்ளை வேட்டிச் சட்டை அணிந்துக் கொண்டு சென்றான் அம்மாசி. அவனிடம் ஜெயசங்கர் முதலாளி “ஒனியப் பாத்தா வேலைக்கு வந்திருக்காப்லயா தெரியுது. எங்கய ஆபீசுக்குப் பொறவங்க கெணக்கா வந்து நிக்க”7 என்று மேல் சாதிக்காரர் ஜெயசங்கர் கூறுகின்ற இடத்தில் ஆடை சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது. அம்மாசி அணிந்த உடையைக் கண்டதும் கம்பீரம் போன்ற நல்லுணர்வு உடையவராகக் காட்சியளித்ததை மேற்சாதிக்காரர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தலித் மக்களில் அரசியல் நிலை:
‘எகத்தாளம்‘ சிறுகதையில் தலித் மக்களில் ஒருவர் அரசியல் பொதுத்தேர்தலில் வேட்பாளராக நின்றதால் மேல் சாதிக்கார்கள் அனைத்து தலித் மக்களையும் தாக்குகிறார்கள். “ஊருக்குள்ள பிடிப்பட்டதுல இருந்து சும்மா அடிதான். வண்டில ஏத்தியில அடி எறக்கயில அடி செயிலுக்குள்ள அடக்கயில அடி வெளில உடும்போது அடி எப்பப் பாத்தாலும் டம்டம்னு அடிதான் நம்மள மாதிரி ஏழபாழைகள அடிக்கிறதுக்குத் தான் அரசாங்கம் அவனுங்களுக்குச் சம்பளம் குடுக்குது”8 என்று பாட்டி தன்னுடைய ஆதங்கத்தைக் கூறினாள். இவ்வாறு அடிப்பதற்கு முக்கிய காரணமாகப் பாட்டி கூறுவது ”எல்லாம் ஒங்க மாமெ தங்கராசு செஞ்ச வேலதான் எலெக்சன்ல நின்னாமில அதுக்குத்தான். அவனுக்கு எத்தன தடவப் படிச்சுப் படிச்சுச் சொன்னேன் கேட்டானா? இன்னைக்கு அவெம்பேருல கொலக்கேசு போட்டு உள்ள வச்சுட்டானுக” “நம்ம தேர்தல்ல நிக்கக் கூடாதாக்கும் பாட்டி”9 தேர்தலில் ஓட்டு மட்டும் தான் போட வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்கிறான். அவ்வாறு இங்கு தனி மனிதனுடைய உரிமை மட்டும் மறுக்கப்படவில்லை ஒரு சமூகத்தின் உரிமையையும் பறிக்கிறார்கள். எனவே அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னும் அச்சட்ட உரிமைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் செயல்படுத்துவதிலும் பெரிய சிக்கல் இருப்பதை உணர்த்துகிறது. ஒரு நாட்டில் வாழும் வெவ்வேறு மக்களின் உரிமைகளைச் செயல்படுத்தவிடாமல் தடுக்கப்படுவதும் மறுக்கப்படுவதும் ஏடு ஏறாத குற்றங்களாக உள்ளன. அவற்றை மீறி செயல்படும்போது அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் காவல்துறையும் அரசியல்வாதிகளும் பொய்யான குற்றங்களைச் சுமத்தி தலித் மக்களைத் துன்புறுத்தி கொடுமைகள் பல செய்து விரட்டுவதையும் அடிப்பதையும் ஆயுதம்மாக தலித் மக்களுக்கு எதிராகச் செயல்படுத்துகிறார்கள். தனித் தொகுதியில் வேட்பாளராக நிற்பதற்கே வாய்ப்பளிக்காத இந்த சமூகம் ஒரு தலித் வேட்பாளர் பொதுத்தொகுதியில் பிற அரசியல் கட்சிகளுக்கு எதிராக அல்லது போட்டியாக நின்றால் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. காரணம் அரசாங்கமும் சரி அரசியல் கட்சிகளும் சரி தங்களுக்குப் பின் சாதி, மத வெறிகளைச் சுமந்துக் கொண்டு செல்வது தான் முதன்மை காரணமாகக் கருதப்படுகிறது. நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணம் வர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட வேண்டும். “தலித்களின் அரசியல் வாய்ப்புகளை இல்லாமல் ஆக்க உயர் சாதியினர் பலமுறை தேர்தல்களை நடக்கவிடாமல் செய்தனர். அரசு அதிகார வர்க்கம் ஆகியவற்றின் உதவியோடு பிறசாதியினர் அந்தத் தொகுதி சாதிகலவரங்களில் ஈடுபட்டனர்”10 கதைகளில் நிகழ்ந்தவாறு வரலாற்றில் நிகழ்ந்ததை உண்மை என்று அறிய முடிகிறது.
பெண்களுக்கான ஊதியம்‘அதென்ன நாயம்‘ சிறுகதையில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் ஆண்களைவிட குறைவாக ஊதியம் பெறுகிற சிக்கல் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு நடக்கிறது. “காடு கரைகள ஆம்பளைக்குச் சமமா வேல செஞ்சிட்டு கூலி மட்டும் அவனவிட கொறவா வாங்குறீயே”11 என்று ஆண்டியப்பன் கூறினான் உடல் உழைப்பு பொறுத்தவரையிரல் ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றதை ஆண்டியப்பன் ஒரு ஆணாக இருந்தும் பெண்களின் ஊதியம் குறித்து சிந்திக்கும் தன்மையும் இதே போல “பஸ்சுலயும் ஆம்பளக்கு மூன்னு ரூவா டிக்கெட்ன்னா பொம்பளைக்கு ரெண்டு ரூவா போடச் சொல்லுராதுதான”12, “ஒரே வேலையைச் செய்யும் ஆணுக்கு அதிகமான சம்பளமும், பெண்ணுக்குக் குறைவான சம்பளமும் தருகின்ற முறை உலகம் முழுவதும் நிலவுவதையும் அழித்தொழிக்க முயலுகிறது’’13. ஆண்களுக்குச் சமமாக பெண்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைப் பெறச்செய்வதே நியாயமாகும். பெண் என்பதானலே ஊதியம் குறைவாகவும், சமூகத்தில் ஆண்களைவிட எந்தத் துறையிலும் முன்னோக்கி இருப்பதை இந்த ஆண் சமூகம் விரும்புவதில்லை என்பதை உணர்த்துகிறது.
தலித் பெண்கள் பாலியல் சிக்கலுக்கு ஆளாகுகிறார்கள். ‘அந்தக் காலம் சிறுகதையில் மருதப்ப முதலாளி தலித் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலைச் செய்துள்ளான். “உனக்கு எம்புட்டு மப்புனா எங்கத் தெரு பிள்ளைய கையப்பிடிச்சு இழுத்திருப்பே”14 என்று மாசாணம் கூறுகிறார். இதன் வாயிலாக ”பெண் எந்த சாதியைச் சேர்ந்தவளாயினும் அவளுக்குப் பாலியல் தான் போராட்டக் களம். அவள் தலித்தாகப் பிறந்திருந்தால் கூடுதலாகச் சாதி இழிவு என்ற களமும் சேர்ந்து கொள்கிறது”15 எனவே தலித் பெண் என்பதால் தன் ஆசைக்கு வசப்படுத்திக் கொள்கிறார்கள். “மருவாதயா அவெங் கைல தாலியக் குடுத்து அந்தப் புள்ள கழுத்துல கெட்டச் சொல்லு”16 என்று கூறுமிடத்தில் அம்பேத்கர் அவர்களின் அகமணமுறை சிந்தனையை உணர்த்துகிறது. அவ்வாறு செயல்படும்போது சாதி ஒழியும் என்று அம்பேத்கர் அவர்கள் நம்பினார். எனவே, தன் இனத்திற்குள்ளே மணம் முடிப்பதால் சாதி கலப்பு ஏற்படாமல் சாதி வலுப்பெறுகிறது என்றே கூற வேண்டும். அதனை உணர்ந்த மாசாணம் கதைப்பாத்திரம் இவ்வாறு கூறுவதாக அமைகிறது.
கல்வி சார்ந்த ஒடுக்குமுறை
கல்வி சார்ந்த ஒடுக்குமுறையால் தலித் மக்கள் மீது நிகழும் ஒடுக்குமுறைகளும் உண்டு ‘பணக்காரி‘ சிறுகதையில் காளியம்மாள் இரண்டாவது கைக்குழந்தையை வேலைக்கு அழைத்து வரவேண்டாம் என்று கூறுகிறார் முதலாளி “ஒம்மக மூத்தவள பிள்ள துக்க வரச்சொல்லு”17 தாய் தந்தை செய்த தொழிலை அடுத்த தலைமுறையும் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்குகிறார்கள். அடுத்த தலைமுறையினர்கள் பள்ளிக்குச் சென்று படித்து விட்டால் அறியாமை அகன்று தெளிவடைந்து விடுவார்களோ என்றும், தாய் தந்தையருக்கு அடுத்துப் பிள்ளைகள் கூலி வேலை செய்ய வராமல் போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில் தலித் மக்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. “கிராமப்புறத் தலித்துக்கள் பண்ணையாட்களாக வேலை செய்கிறபோது, அவர்களுடைய பிள்ளைகளைப் படிக்க வைக்க முற்படும்போது, படிச்சு என்ன கிழிக்கப் போறான் மாடு மேய்க்கச் சொல்லு என்ற ஆதிக்கத்தின் அறிவுரையை அள்ளி வழங்குவதை இன்றும் பார்க்க முடிகிறது”18 எனவே பண்ணையில் வேலைச் செய்யும் தலித் மக்களை அடிமையாக நடத்தப்படும் நிலையையும், பேச்சுரிமை திருடப்படும் நிலையையும் மற்றும் கல்வி உரிமையையும் மறுக்கப்படும் நிலையுமே காணப்படுகிறது.
தலித் மக்கள் தன்மானம் இழந்து வாழ வேண்டும் என்று கட்டமைத்துள்ளதன் எதிரொலியாக ராமாயி காணப்படுகிறாள். ராமாயிக்குப் பள்ளிக்கூடம் செல்ல விருப்பமில்லாமல் தாயிடம் வேலைக்கு வருவதாகக் கூறுகிறாள். எனவே, அவர்கள் மனமாற்றத்துக்குத் தயாராக இல்லை காரணம் அவர்கள் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட நிலைமைக்கு பழக்கப்பட்டு அதனை உள்வாங்கி அதுவே தங்களுடைய மொத்த வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்வதை இங்குக் குறிப்பிடுகிறது. எனவே அடிமை வாழ்வை உள்வாங்கிய இராமாயின் அறியாமையால் பள்ளிக்குச் செல்ல மறுக்கப்படுவதே தலித்துகள் முன்னேற்றத்திற்குத் தயாராக இல்லை என்று கூறலாம்.
பள்ளியிலும் சாதியைக் கற்பித்தல் முறையைக் காட்டுகிறது. ‘தீர்ப்பு‘ சிறுகதையில் பள்ளியில் சாதியைத் திணித்தல் மாணவர்களுக்குச் சமத்துவத்தைத் கற்பிக்கும் தலைமை ஆசிரியர் “தெருக்குழாயில் தண்ணிர் குடிச்சா என்ன தப்பு? சேரி ஆளுகளோட வீட்லதாங் குடிக்கக் கூடாது. ஒங்க வீட்ல அந்தக் தெருக்கொழாயே குடிக்கக்கூடாதுன்னுட்டாங்களா… சரி சரி கிளாசுக்குப் போங்க”19 என்று வரதராஜீலு கூறுகிறார். இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்குச் சாதியைக் கற்பிக்கிறார். ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும், சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் பள்ளியில் கல்வி, சுயமரியாதை, ஒற்றுமை கற்றுக் கொடுக்க வேண்டிய தலைமை ஆசிரியர் வரதராஜீ சாதி ஏற்றத்தாழ்வு, தீண்டாமை போன்ற தீமைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
சாதிக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள்
‘ஏப்ளா ஏழுத‘ சிறுகதையில் பாக்கியராசு “இங்க இந்த ஏப்ளவா மாத்துனது மாதிரி நாங்க போராடிச் சாதியாவே தீத்துக் கட்டுறோம்”20 என்று இராசமாணிக்கனிடம் கூறினான். இவ்வாறு தலித் மக்களை மேல் சாதிக்காரர்கள் பெயரிட்டு அழைக்காமல் ஆண்களை ‘ஏழுத‘ என்றும் பெண்களை ‘ஏப்ளா‘ என்றும் அழைத்துள்ளார்கள். ஏழுத என்றால் கழுதை என்று பொருள். தலித் மக்கள் தங்களின் சுயமரியாதையை அறிந்து கொண்டு ஊர்வலமாகச் சென்று ஏப்ளா ஏழுத என்று அழைக்கும் முறைக்கு எதிராகப் போராட்டம் செய்துள்ளனர்.சாதிரீதியான ஒடுக்குமுறையில் இவ்வாறு தலித் மக்களைக் கழுதை என்று அழைப்பதும் ஒன்றாகும். சாதிரீதியாக ஒடுக்குமுறை செய்யப்படுகிறார்கள் என்று உணர்ந்து அதனை எதிர்த்துப் போராடி உள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
போராட்டத்திற்கு அவர்கள் முன்னுதாரணமாக இருந்தவையாக “இந்த கம்யூனிஸ்டு கச்சிக்காரனுங்க அப்பப்ப செவப்புக் கொடியப் புடிச்சிக்கிட்டு என்னென்னமோ கத்திக்கிட்டு போவோமுனு நாங்க போனோம்”21 என்று இராசமாணிக்கம் குறிப்பிடுகிறார். “ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப்படுகின்றது, அவைகள் எல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்”22 என்று பெரியாரின் கூற்றுக்கேற்ப சாதிக்கு எதிராக சுயமரியாதைப் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ளவர்கள் சமுதாயத்தில் அனைத்துத் துறைகளிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அடிப்படையான மனித உரிமைகளை இழந்தவர்கள் வாழ்க்கையில் இழிவான சொல்லிற்கு ஆளாகுகிறார்கள் என தலித் சொல்லுக்கு விளக்கம் கூறலாம். மேலும், ஆண்டான் அடிமைத்தனம் என்னும் குற்றம் தலித் மக்கள் மீது செலுத்தப்பட்டுள்ளது. ‘மௌகாய் பொடி‘ சிறுகதையில் “காலனில குடியிருக்ர எசக்கி குடும்பந்தான் பரம்பர பரம்பாரையா அந்த வீட்டுக்கு ஏண்ட வேல எடுத்த வேல செஞ்சுகிட்டு பண்ணவேல பாட்ட வேலயுஞ் செய்றாக”23 என்று கூறுகையில் ஆண்டான் அடிமைத்தனம் உருவாகி இருந்ததைப் புலப்படுத்துகிறது. எசக்கியோட மகன் கருத்தப்பாண்டி கெங்கம்மாள் உடைய வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்கிறான். “ஆனா அவங்க ஐயா எசக்கி வாங்குன கடன தீருந்தடிக்கும் வேற எங்குட்டும் வேல வெட்டிக்குப் போகக் கூடாதுன்னு கெங்கம்மா புடுச்சு வெச்சிக்கிட்டு இருந்தா”24 என்ற போக்கினைப் பார்க்கையில், எவன் ஒருவன் பொருளாதாரரீதியில் சுதந்திரம் பெறுகிறானோ அவனிடம் நம்பிக்கை உருவாகி சமுதாயக் கொடுமையிலிருந்து விடுதலை பெற முயல்வான் எனலாம். மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று கூறப்படும் பிரிவினர்களைச் சேர்ந்த தலித் மக்களை அடிமையாக வைத்து கொள்வதற்கு மேல் சாதிக்காரர்கள் உழைப்பிற்குப் பணத்தைக் கொடுக்காமல் தலித் மக்கள் பணத்தைக் கண்களில் பார்த்துவிட்டால் அறியாமை அகன்று அவர்களுக்குள் தன்னம்பிக்கை பெற்று முன்னேற்றத்தை நோக்கி சென்று விடுவார்கள். பிறகு சேமிப்பு செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று மேல்தட்டு மக்கள் நினைத்துள்ளார்கள்.
காலம் கடந்தும் இழிந்த தொழிலைச் செய்பவர் தலித் மக்கள் என்றும், அத்தொழிலையே அவர்கள் செய்து வரவேண்டும் என்று திணிக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தலித் மக்கள் தன் சமூகத்தைச் சார்ந்தவர்களைத் தொழிலின் அடிப்படையில் ஒடுக்குவது வேதனைக்குரியது அப்போது தலித் மக்களுக்குள்ளும் ஒடுக்குமுறை குணத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதையும் பிறகு குலத் தொழிலை வற்புறுத்தியதன் பின்ணனியால் சாதிக் கட்டுமானத்தை எளிதாக உடைக்க முடியாது என்ற நிலை உருவாகும் அதனால் “அவரவர் சாதிக்குரிய தொழிலைச் செய்வதன் மூலமாகவே இந்துமத கடவுளின் அனுகிரகத்தைப் பெற முடியும் என்று புராணம் கூறுகிறது”25 மதக்காரர்கள் கடவுளின் மேல் கட்டுமானத்தை எழுப்பி ஒடுக்குமுறைகளைக் கற்பிக்கிறார்கள்.
‘தகர்ப்பு’சிறுகதையில் தாயை இழந்த திருமலையை வளர்க்க முடியாத காரணத்தினால் அவனுடைய பாட்டி அன்பு இல்லம் என்ற விடுதியில் சேர்த்தாள். ஆனால், திருமலைக்கு அங்கிருந்து பள்ளிக்குச் செல்வதற்குப் பிடிக்கவில்லை. “எனக்குப் பள்ளிக்கொடம் புடிக்குது ஆஸ்டலுதான் புடிக்கல நானு வீட்ல இருந்து வந்தே படிக்கேன்”26 என்று திருமலை கூறுகிறான். மேலும், விடுதியில் காலை ஐந்து மணிக்கு எழுவதும் குளிர்ந்த நீரில் குளிப்பதும் ஜபம் செய்யச் சொல்வதும் அவனுக்குப் பிடிக்கவில்லை என்று கூறுகிறான். இதன் அடிப்படையில் திட்டவட்டமான சுழற்சித்தன்மையில் இயங்கும் முறையை அவன் விரும்பவில்லை என்பதை உணர முடிகிறது.
இதனை, மேலோட்டமாகப் பார்ப்பதற்குத் தவறு என்று எண்ணினாலும் சற்று ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மைத் தன்மை விளங்கும். அதன் அடிப்படையில் இச்சமுகம் ஒழுங்கு என்ற அடிப்படையில் கட்டமைத்திற்கும் முறையினைத் தகர்த்துவதாக திருமலை செயல்படுகிறான். ஒழுங்கினைப் பின்பற்றுவதால் அவனுடையச் சுதந்திரம் மறுக்கப்படுவதாக எண்ணுகிறான். மேலும், இதுவே அடிமை மனோபாவத்திற்கு எளிதாக தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் என்பதை உணர்ந்தவனாக செயல்படுகிறான். அவன் கல்வி கற்க மறுக்கவில்லை, தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்ப்பதற்கு மறுக்கவில்லை அப்படியிருக்கும் போது நம்மை கண்காணிப்பதற்கு அல்லது வழிநடத்துவதற்கு எதற்கு ஒரு கட்டுப்பாடு என்று உணர்வதாகத் தெரிகிறது. தன் வேலைகளைத் தனக்குப் பிடித்தாற் போல பிடித்த நேரத்தில் மேற்கொள்ளும் பொழுது எங்கிருந்து செய்யலாம் என்று தன்னை சமூகத்தின் பார்வையில் தகர்த்துக் கொள்ளும்படி செயலாற்றுகிறான்.
எனவே, இது ஒரு வகையில் அதிகாரத்தை எதிற்கும் குரலாக அமைகிறது. காரணம் கட்டுப்பாட்டிற்குள் இயங்காமல் தன்னிச்சயாக இயங்குதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான். “தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல அறிவும் வேண்டும். சுயமரியாதை வேண்டும். தன்மான உணர்ச்சியும் எதையும் பகுத்துணரும் திறனும் ஆராய்ந்து அறியும் அறிவும்தான் மிகவும் தேவை”27 எனவே இக்கூற்றின்படி திருமலை தன்னுடைய தன்மான உணர்ச்சியையும் பகுத்துணரும் திறனைப் பெற்று விடுதியைவிட்டு வெளியேறினான்.
‘பொங்கல்‘ சிறுகதையில் “ஆனா அது என்ன ராசியோ நடுவுள எசக்கி முத்த மட்டும் வேலைக்குப் போச் சொல்லாம பள்ளிக்கூடத்துல உட்டுட்டாரு. அந்தப் பெயலும் முக்கித் தக்கி பெரிய பத்து முடிச்சு வாத்யாரு வேலைக்கும் படிச்சுட்டான்”28 மாடசாமியின் மகன் எசக்கிமுத்து மட்டும் படித்துள்ளான். ஆனால் எசக்கிமுத்துவின் தம்பி இளவரசு படிக்கவில்லை. இருவரையும் நோக்கும்போது பொங்கலுக்கு வருடம் வருடம் வழக்கமாக தன் நிலத்தில் விளைந்தவைகளை மேல் சாதிக்காரர்களுக்குக் கொடுப்பது பழக்கமாக வைத்துள்ளார்க்ள. இந்த வருட பொங்கலுக்கு மாடசாமி சேவல், கோழி, கரும்பு, வாழைப்பழதாரு, அரிசி போன்றவற்றை மேல் சாதிக்காரருக்குக் கொடுக்க சொன்னான். ஆனால், கல்வி பெற்ற எசக்கி முத்து இதற்கு உடன்படவில்லை. காரணம் எசக்கி முத்துவிற்கு நம் உழைப்பில் விளைந்தவைகளை ஏன் மேல் சாதிக்கார்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது. எசக்கிமுத்து “சரி நம்ம இப்படி பொங்கலுக்குப் போயிப் பாத்தா, அது மாதிரி தீபாவளிக்கோ வருசப் பெறப்பக்கோ அவரு குடும்பம் வந்து நம்மள பாக்கணும்ல, அதுமட்டுஞ் செய்ய மாட்டிக்காரு”29 என்று மாடசாமியிடம் கேட்டான். ஆனால், மாடசாமிக்கு எசக்கி சொல்வது கோபத்தை உண்டாக்கியது. அதை மீறியும் பொருட்களைக் கொடுப்பதற்காக மேல் சாதிகாரர் வீட்டிற்கு மாடசாமியுடைய மனைவி மற்றும் இளவரசு மூவரும் சென்றார்கள். எடுத்துக் கொண்டு போன பொருட்களை மேல் சாதிக்காரன் பெற்றுக் கொண்டு பதிலுக்குப் போன வருடம் கொடுத்த துண்டையும் கொடுக்காமல் வெறும் சோற்றை மட்டும் கொடுத்தார்கள். அதனை உணர்ந்த மாடசாமி “அந்தப் பெய எசக்கிமுத்துன்னா இந்தச் சோத்தச் சிந்தக்கூட மாட்டான்”30 என்று மனதில் நினைத்துக் கொள்கிறார். காலம் காலமாகக் கல்வி அறிவில்லாமல் சுயமரியாதை இழந்து நல்லது தீயது ஆராய்ந்து பகுத்துணராமல் இருந்த தந்தைக்குக் கல்வி பெற்ற எசக்குமுத்து மாடசாமிக்குப் புரியும் படி உண்மையை உரைக்க உரைத்தான். இறுதியில் மாடசாமிக்கு எசக்கி சொல்வது சரி என்று உணர்ந்துக் கொண்டான். மாடசாமி அந்தச் சோற்றை மாட்டிற்குப் போடச் சொல்லிவிட்டு ராக்கம்மாவிடம் களி செய்யச் சொல்கிறான் என்பதில் அவன் தன்னுடைய சுயமரியாதையை உணர்ந்து கொண்டு சோற்றை உண்ணாமல் நிராகரிக்கிறான் என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. “அவுக வீட்டு எரும மாடு புதுசா என்னத்தையோ பாக்கவும் அதத் திங்காம ஒதுக்கிட்டுத் தண்ணிய மட்டுங் குடுச்சிட்டுப் படுத்துருச்சு”31 இதன் அடிப்படையில் சுயமரியாதையின் தேவையை மறைமுகமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மாடசாமியின் வீட்டு எருமை மாடு கூட அந்தச் சோற்றை உண்ணாமல் வழக்கமாக குடிக்கும் தண்ணீரை மட்டும் குடித்தது. கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளான் அதனைத் தந்தைக்குக் கடத்தும் போது மாற்றம் அடைகிறது அவர்களுடைய வாழ்க்கையில்.
படைப்பின் முக்கிய அம்சமாக இரண்டு குரல்கள் வெளிப்படுகின்றன. ஒன்று ஆதிக்கக்குரலாகவும் மற்றொன்று எதிப்புக் குரலாகவும் அமைகிறது. இதில் சமுதாயத்தில் நிகழும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்த தலித் மக்களின் நிலையில் கல்வி, தொழில், சாதி, தீண்டாமை, அதிகாரம், பெண் என இவைகளின் மேல் அடக்குமுறைகளை யதார்த்தமாக படைத்துள்ளார். ஆதிக்கக்குரல்களைச் சிக்கலாகவும் எதிர்ப்புக் குரல்களைத் தீர்வாகவும் பார்க்கும் பொருட்டு பாமா அவர்களின் படைப்பில் அதற்குத் தகுந்தாற்போல படைத்துள்ளார். இருப்பினும் படைப்பில் சில இடங்களில் தலித் மக்களே தலித்துகளை ஒடுக்கும் முறையைப் பார்க்கும்போது சாதி ஒழிப்பு என்பது பரிணாமம் பெற்று வளர்ந்து கொண்டேதான் உள்ளது. அப்படி இருக்கையில் தலித் மக்களுக்குச் சாதி ஒழிப்பு என்ற விடுதலையை நோக்கி எவ்வாறு செல்ல முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதன் அடிப்படையில் பாமா அவர்களின் இப்படைப்பு சாதிய மேம்பாட்டு அரசியலாகவே கருத முடிகிறது. தலித் மக்களும் சாதிப் பெருமைகளைப் பேசி பூர்வீக பெருமையை இணைத்து கொண்டு சமுதாயத்தில் உயர்ந்த சாதியாக இருக்க முயல்வதாகத் தெரிகிறது.
சான்றெண் விளக்கம்
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 33
தந்தை பெரியார், சமுதாயச் சீர்திருத்தம் ப. 10
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 210
ராஜா. து, தலித் பிரச்சனை முன்னோக்கிய பாதை, ப. 8
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 119
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 119
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 32
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 235
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 235
ராஜா. து, தலித் பிரச்சனை முன்னோக்கிய பாதை, ப. 11
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 123
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 123
பஞ்சாங்கம் க, இலக்கியத் திறனாய்வும் கோட்பாடுகடும் ப. 229
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 64
ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராசஸஸ், ப. 153
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 64
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 9
ராஜ் கௌதமன், தலித் பண்பாடு. ப. 36
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 216
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 131
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 130
தந்தை பெரியார், பெரியார் ஒளி முத்துக்கள், ப. 21
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 16
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 17
ராஜ் கௌதமன், தலித்திய அரசியல், ப.14
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 143
தந்தை பெரியார், பெரியார் ஒளி முத்துக்கள், ப. 22
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 57
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 58
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 60
பாமா, ஒரு தாத்தாவும் எருமையும், ப. 60