முகநூற் பதிவுகள்: யுகதர்மம் - நாடகமும் பதிவுகளும் ! நாடக நெறியாளர் க. பாலேந்திராவின் தொகுப்புரை! - க. பாலேந்திரா -
- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
- யுகதர்மம் நாடகக் காட்சி -
சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் 30-03-2017 இல் இந்த நூல் இலங்கையில் இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டது . இந்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நாடகமும் அரங்கிலும் பயிலும் மாணவர்கள், நாடக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்த நூலுக்கு நான் எழுதிய தொகுப்புரையை இன்று முகநூலில் பதிவு செய்கிறேன். நாடக மாணவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு நீண்ட விபரமான பதிவு. ஆர்வமுள்ளவர்கள் வாசியுங்கள்.
ஜேர்மனியரான பேர்டோல்ட் பிரெக்ட்(1898-1956) உலக நாடக வரலாற்றில் மிக முக்கியமானவர். இலங்கையில் தற்போது தமிழ் நாடக ஆர்வலர்களுக்கு பேர்டோல்ட் பிரெக்ட் நாடகங்கள் பரிச்சயமாகி வருகின்றன என்று சொல்லலாம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நிலைமை வேறு. இந்த நிலைமையை இளம் தலைமுறையினர் குறிப்பாக அரங்கியல் பயிலும் மாணவர்கள் அறிய வேண்டும். ஈழத்து நவீன நாடகங்கள் பற்றிய பதிவுகள் அவசியம் என்று கருதியே இந்த நூலாக்க முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
எழுபதுகளின் ஆரம்பங்களில் கொழும்பு மொரட்டுவ (கட்டுபெத்தை) பல்கலைக் கழகத்தில் நான் பொறியியல் துறை மாணவனாக இருந்தபோது பிரபல சிங்கள நாடக நெறியாளர் ஹென்றி ஜெயசேனா அவர்கள் நெறிப்படுத்திய ஜேர்மன் நாடகாசிரியர் பேர்டோல்ட் பிரெக்டின் நாடகமான “கோகேசியன் சோக் சேர்க்கிளை” (Caucasian Chalk Circle ) கொழும்பில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் காலங்களில்தான் நான் தீவிர நாடகத்துறையில் பிரவேசித்தேன். தீவிரமான நாடகத் தேடலில் நான் ஈடுபட்ட காலம் அது. “ஹு னுவட்டயே கதாவ” என்ற பெயரில் மேடையேறிய அந்த சிங்கள நாடகம் என்னில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாடகத் தாயாரிப்பு என்னைப் பிரமிக்க வைத்தது. நான் பார்த்த முதலாவது பிரெக்டின் நாடகம் அது. தொடர்ந்து பிரெக்ட் பற்றி நிறைய ஆங்கிலத்தில் வாசித்து அறிந்தேன். தமிழில் அவர் பற்றிய எழுத்துக்கள் அப்போது மிகக் குறைவு. அவருடைய நாடகம் ஒன்றை தமிழில் செய்ய விரும்பினேன்.