குழந்தைகள் என்னும் கொத்தடிமைகள் - லதா ராமகிருஷ்ணன் -
குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல். காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தை யும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
’அடியாத மாடு படியாது’ என்றும், ’அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்றும் குழந்தையை அடிப்பதை பலவாறு விதவிதமாக நியாயப்படுத்தும் பெரியவர்களை என்ன சொல்ல?
சில நாட்களுக்கு முன் ஒரு குறுகிய சந்தில் போய்க் கொண்டிருந்தேன். அங்கிருந்த பள்ளியொன்றிலிருந்து ஸ்கேலில் பளீர் பளீரென்று அடி விழும் சப்தமும், ஒரு சிறுவன் வீறிட்டழும் சப்தமும் தெருவரை வந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. தாங்கமுடியாமல் பள்ளிக்குள் சென்றேன்.
இருட்டான அறைகள். காற்று வசதியே கிடையாது. உள்ளறையொன்றில் பருமனான பெண்மணி ஒருவர் கையில் ஸ்கேலோடு நின்று கொண்டிருந்தார். அவருடைய வகுப்பறையிலும் சுற்றிலுமிருந்த வகுப்பறைகளிலும் குழந்தைகள் - ஐந்தாம் வகுப்புவரையான பள்ளி போலும் - பயம் மண்டிய கண்களோடு அமர்ந்திருந்தனர்.
குழந்தைகளை அடித்தல் சட்டப்படி தவறு என்று தெரியாதா - இப்படியா காட்டுத்தனமாக அடிப்பது என்று கேட்டதற்கு தலைமையாசிரியர் போலும் ஒரு பெண்மணி வந்து ”நாங்கள் அடிக்கவேயில்லையே”, என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகப் பொய்யுரைத்தார். இது குறித்து ஊடகங்களில் எழுதுவேன் என்று கூறி வெளியேறினேன். எங்கள் பகுதியில் வரும் பத்திரிகைக்கு எழுதிப் போட்டேன். பிரசுரமாகவில்லை.