குமரன் புத்தக நிலையத்துக்கூடாக, 2019ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் ‘யாழ்ப்பாணப் பொது நூலகம், அன்றும் இன்றும்’ என்ற நூலின் வெளியீட்டு விழா ரொறன்ரோவில் நிகழ்ந்தபோது எனக்கும் அழைப்பு வந்திருந்தது. ஆனால், அதில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. அண்மையில் வேலைக்காகச் சென்ற ஓரிடத்தில், என்னைச் சந்தித்த ரூபவதி நடராஜா அவர்கள், இந்த நூலின் ஒரு பிரதியை எனக்குத் தந்து, அது பற்றிய கருத்துக்களை கூறும்படி கேட்டிருந்தார். நேற்றுவரை இதனை வாசிப்பதற்கு எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. வாசித்ததும் உடனேயே இதனைப் பற்றி எழுதவேண்டுமென்ற உத்வேகம் ஏற்பட்டது.
தந்தைக்கும், கணவருக்கும் காணிக்கையாக்கப்பட்டிருக்கும் அவரின் இந்த நூல், அன்று யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் அவரது நூலகர் வேலையை (1974 -1987) எத்துணை விருப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்திருப்பாரென்பதை காட்டுகிறது. முன்னட்டையில் யாழ் நூலகத்தின் படத்தைத் தாங்கியிருக்கும் இதில், யாழ் மாநகராட்சி மன்றத்தின், மன்றக் கீதம் முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது.
தேவ மந்திர கீத மொலிக்கும்
விளக்கிடு குர் ஆன் நாதமொலிக்கும்
ஓதிடு பைபிள் போத மொலிக்கும்
ஓங்கிய கோபுர மணிகள் ஒலிக்கும்
என சமத்துவத்தைக் கூறுமொரு கீதம் யாழ் மாநகரசபைக்கு இருக்கிறது என்பதிலிருந்து, பிராயச்சித்தம் தேடும் வெண்தாமரை இயக்கம்வரை இதுவரை அறிந்திராத பல விடயங்களையும் இதன்மூலம் நான் அறிந்துகொண்டேன்.
நூலங்களின் வரலாற்றையும், யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் ஆரம்பம், வளர்ச்சி, வீழ்ச்சி, மீள்எழுச்சி போன்றவற்றையும் ஆதாரங்களுடன் எம் முன் நூலாசிரியர் வைத்துள்ளார். நூலகத்துக்காகச் செய்யப்பட்ட அர்ப்பணிப்புகள், நூலகத்துக்கு நேர்ந்த அனர்த்தங்கள், நூலகத்தின் மேல் செலுத்தப்பட்ட அரசியல் செல்வாக்கு எனப் பல்வேறு விடயங்கள் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு தனிமனிதனாக இந்த நூலகத்தின் உருவாக்கத்துக்கு வித்திட்டிருந்த புத்தூர் மேற்கைச் சேர்ந்த திரு. க. மு. செல்லப்பா என்ற மாமனிதனின் நினைவாகவும் யாழ்ப்பாண நூலகம் ஏதாவது செய்திருக்கிறதா என அறியும் அவா இதை வாசித்தபோது எனக்கேற்பட்டது. திரு. க. மு. செல்லப்பா அவர்களின் முன்முயற்சியால், வீடு வீடாகச் சென்று நூல்களைத் திரட்டியோர், நூல்களை அன்பளிப்புக்கள் செய்தோர், நூலகத்துக்கான நிதியைத் திரட்டுவதற்காகக் களியாட்ட விழாக்கள் நிகழ்த்த உதவியோர் ஆகியோரின் பெயர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த நேரத்தில் யாழ் மேயராக இருந்த திரு அல்பிரட் துரையப்பாவினால் 11.10.1959இல் திறந்துவைக்கப்பட்டிருந்த நூலகம், நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுடப்பட்டதற்கான பழிவாங்கலாக, 97000 நூல்களுடன் ஜூன் 1, 1981 அன்று, நள்ளிரவில் எரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கோரமான செயலைப் பற்றி, அந்தத் துன்பியல் நிகழ்வு பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். “தீக்கிரையானதின் துயர்மிகு வலிகளை மீள்கட்டமைப்பினால் ‘சரிக்கட்டி’ விடலாம் என்ற உணர்வு ஆளும்வர்க்கத்தினரை ‘புத்தகமும் செங்கல்லும்’, ‘வெண்தாமரை’ போன்ற இயக்கங்களை அமுலாக்கத் தூண்டியிருக்கலாம். போரின் சாட்சியமாக இருந்து, இப்போது நல்லிணக்கத்தின் தூதுவனாக காட்சியளிக்கிறது ...,” எனத் தொடரும் நூலாசிரியரின் வசனங்களில் அவரின் மனதிலுள்ள மாறாவடு தெரிகிறது. இந்த வேதனையான சம்பவத்தின் எதிரொலியாக அந்த நேரத்தில் எழுதப்பட்டிருந்த கவிதைகளும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதுவரை, யாழ் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளவர்களால் மட்டும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த நூலகம், 4.6.1984 இல் மீளவும் திறக்கப்பட்டபோது, குடாநாட்டில் எங்கு வாழ்ந்தாலும் நூலகத்தின் பயனையடையலாமென்ற நிலைக்கு மாற்றமடைந்தது. அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகை போன்ற விசேட வசதிகளையும் கொண்டிருந்தது. ஆனால், அந்த ஆசுவாசமும் மகிழ்ச்சியும் ஒரு வருடத்துக்குக்கூட நிலைக்கவில்லை, கோட்டைப் பகுதி யுத்தப் பிரதேசமானபோது, மீளவும் நூலகச் சேவைகள் 10. 5. 1985 முதல் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அதன் பின்னர் 1995இல் மெதுமெதுவாக அபிவிருத்தியடைந்த நூலகம், இடப்பெயர்வினால் அதே ஆண்டில் பாரிய சேதங்களுக்கு உள்ளானது. நூலகத்தை புனரமைப்பதற்காவும், அமைதியையும், சமாதானத்தையும் உருவாக்குவதற்கான நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், ஒவ்வொரு சிங்களப் பிரஜையும் ஒரு செங்கல்லையும் புத்தகத்தையும் வழங்கவேண்டியது அவர்களின் வரலாற்றுக் கடமையென ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா ஊடகங்கள் யாவற்றிலும் பிரச்சாரம் செய்திருந்தார். அப்படியாக 1997இல் வெண்தாமரை என்ற இயக்கமும் உருவாக்கப்பட்டது என்ற செய்திகளும் இதில் உள்ளன.
13ம் நூற்றாண்டில் தமிழ்ச் சங்கம் ஒன்று இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த ஆச்சரியமான செய்தியையும், ‘சரஸ்வதி மகாலயம்’ என்ற நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த சங்கப் புலவர்கள் ஆக்கிய நூல்களை சப்புமால் குமாரயா என்ற சிங்கள அரசன் தீயிட்டு அழித்தான் என்ற துயர்மிகு செய்தியையும்கூட இந்த நூல் மூலம் நான் அறிந்தேன். (“யாழ்ப்பாண இராட்சியத்தை ஆண்ட செண்பகப் பெருமாள் என்ற தமிழ் மன்னரின் பெயரை சப்புமல்குமார என சிங்களப் பெயர் போல வரலாற்று நூல்களில் குறிப்பிட்டுள்ளனர் என கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் குறிப்பிடுகிறார் - https://www.ilakku.org/இலங்கை-இனமோதலில்-இலங்கை) எதுவாக இருந்தாலும் உலகம்பூராவும் இப்படியாக நூலக அழிப்புக்கள் நிகழ்வது இழப்பீடு செய்யமுடியாத பெரும் இழப்புக்களே.
இலங்கையில் தமிழ் சங்கங்கள் இருந்தது பற்றியோ சங்கப்புலவர்கள் இருந்தது பற்றியோ எங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் இந்தியாவையே நாம் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அத்துடன், பேராதனைப் பல்கலைக்கழக அயலிலுள்ள குறிஞ்சிக் குமரன் கோவிலில் நூலகம் இருந்ததைத் தவிர வேறெந்த ஆலயத்திலும் நூலகம் இருந்ததாகக் கேள்விபட்டிருக்காத எனக்கு, மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் சுவடி நூலகமும் , கீரிமலைச் சிவன் கோவிலில் படிப்பகமும், நூலகமும் இருந்திருக்கின்றன என்ற செய்தி பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. வெறுமன சமய நம்பிக்கையை வளர்ப்பதுடன் நின்றுவிடாது, அறிவை வளர்க்கவும் அந்த காலத்தில் உதவியதுபோல இப்போதும் நடந்தால் எவ்வளவு சிறப்பாகவிருக்குமென நினைத்தேன்.
யாழ் வடிவில் அமைக்கப்பட்டிருந்த யன்னல்களைக் கொண்டிருந்த இந்த நூலகத்தில் சிறுவருக்கென ஒரு பகுதியும், கதைசொல்லல் போன்ற நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன என்பதை வாசித்தபோது, சிறுமியாக இருந்தபோது இவற்றைப் பயன்படுத்த எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே எனக் கவலையாக இருந்தது. இப்படியான வசதிகள் எல்லாம் இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்திராததால், ரொறன்ரோவில் முதன்முதலில் நாங்கள் வாழ்ந்த கட்டடத்தின் முன்னிருந்த நூலகத்தின் முன்கதவடியில், அந்த நேரம் 3 வயதிலும் 4½ வயதிலும் இருந்த இருந்த என் பிள்ளைகளை நிறுத்திவிட்டு. உள்ளே சென்று பிள்ளைகளைக் கூட்டிவரலாமா என அப்பாவித்தனமாக நான் கேட்டது இதை வாசித்தபோது என் ஞாபகத்துக்கு வந்தது. நூலகத்திலுள்ள சிறுவர் நூல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, நூலைத் தொலைத்தால் அதற்கான தண்டப்பணம் இருப்பது தூரதிஷ்டசம் என்றும், அது சிறுவருக்கு அழுத்தம் கொடுப்பதால் வாசிப்பதில் சுயமாக ஈடுபடுவதை அது தடுக்கிறது என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எங்குமுள்ள விதிமுறைதானே அது. பெற்றோரினதும் பிள்ளைகளினதும் பொறுப்பை வளர்க்க அது உதவுமென நான் நினைக்கிறேன்.
மற்றும்படி, இதிலுள்ள சில எழுத்துப்பிழைகள் (உ+ம் ஒங்கிய, ப.vi), வசனப்பிழைகளையும் (உ+ம்.காவல்படை ------- யாவும் எரிக்கப்பட்டது, ப.67) காலமானதாக அறியவந்தோம் போன்ற நேரடி மொழிபெயர்ப்புக்களையும் தவிர்த்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். அத்துடன், ஒரு இடத்தில் 1981 ஆனி மாதம் 1ம் திகதி நூலகம் சாம்பல் மேடாய்க் கிடந்தது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது (ப.69). அன்றிரவுதான் எரிக்கப்பட்டிருந்தால், 1ம் திகதி சாம்பல் மேடாகக் கிடந்தது என எப்படிச் சொல்லலாம். இது நூலகம் எப்போது எரிக்கப்பட்டது என்பது பற்றிய குழப்பத்துக்கு மீளவும் தீனிபோடுவதாக உள்ளது.
நூலின் முடிவில் யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கிளைகள் மற்றும் நடமாடும் நூலகச் சேவைகள் பற்றியும், நூலகத்தில் நூல்களைப் பராமரிக்கும் சேவைகள் பற்றியும்கூட விரிவாக ரூபவதி அவர்கள் எழுதியுள்ளார். யாழ் நூலகம் தொடர்பான காலவரிசை ஒன்றையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாகவிருந்திருக்கும்.
ஒட்டுமொத்தத்தில், அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது, நூலகத்தினரின் வலைத்தளத்திலும் இதனைத் தரவிறக்கி வாசிக்க முடியும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.