வெலிகம ரிம்ஸா முஹம்மத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக் கற்கை நெறிக்காக ஆய்வு ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வை ஒரு சில மாற்றங்களோடு "விடியல்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இந்த விடியல் என்ற நூலினையே இங்கே ஓர் எளிய மதிப்பீட்டிற்காக நான் எடுத்துக்கொள்கின்றேன். ஏனைய இலக்கிய வடிவங்களைப் போன்று ஆய்வுத் துறையானது தொடக்கம், வளர்ச்சி, உச்ச கட்டம், முடிவு போன்ற வளர்ச்சிப் படிமுறைகளைக் கொண்டதல்ல.
ஆய்வின் நோக்கம், ஆய்வின் பொருள், முன்னர் ஆய்வு செய்யப்பட்டதா? அப்படியாயின் மீள் ஆய்வு செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இத்தகைய ஆய்வின் மூலம் சொல்ல வரும் செய்தி என்ன? போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு ஆய்வு இருக்க வேண்டும். ரிம்ஸா முஹம்மத் இளம் ஆய்வாளர், கவிஞர், பன்னூலாசிரியர், சஞ்சிகையாசிரியர், ஊடகவியலாளர் என்ற வகையில் மூத்த எழுத்தாளர் மூதூர் முகைதீனின் கவிதைகளைத் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.
நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத், முதலாவது அத்தியாயத்தில், கவிதை பற்றிய அறிமுகத்தைத் தந்துவிட்டு தான் எடுத்துகொண்ட ஆய்வின் பிரச்சனைகள், ஆய்வின் வரையறை, உள்ளடக்கம் பற்றிக் கூறுகின்றார். இரண்டாவது அத்தியாயத்தில் கவிதையின் வரைவிலக்கணம், கவிதையின் வகைகள், மரபுக் கவிதைகள் நவீன கவிதைகள் பற்றியும் பேசுகிறார். மூன்றாவது அத்தியாயத்தில் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அவர் பெற்ற விருதுகள், பரிசில்கள், கௌரவங்கள் பற்றி மிகச் சிறப்பான முறையில் எழுதிச் செல்லுகிறார். நான்காவது அத்தியாயத்தில் "பிட்டும் தேங்காய்ப் பூவும்", "இழந்துவிட்ட இன்பங்கள்", "ஒரு காலம் இருந்தது" ஆகிய 03 கவிதைத் தொகுதிகளிலுள்ள கவிதைகள் பற்றியும் மிகவும் சிறப்பான எடுத்துக் காட்டுகளோடு பதிவு செய்து விளக்குகிறார். ஐந்தாவது அத்தியாயத்தில் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புகள் பற்றியும், வாசகர்கள் மத்தியில் கவிதை நூல்களுக்கான வரவேற்புப் பற்றியும் தனக்கே உரித்தான பாணியில் கூறுகிறார்.
கவிதை பற்றிய அறிமுகத்தின் போது, "கவிதை என்பது ஆழ்மனதில் புதைந்திருக்கும் வலிகளை, சந்தோசங்களை, ஏமாற்றங்களை, தவிப்புக்களை எல்லாம் வெளிக்கொணரும் ஒரு ஊடகம்" என்று கவிதைக்கு புதியதொரு இலக்கணம் வகுக்கின்றார். காலத்திற்கு ஏற்ப பொருள் புதைந்த இலக்கணம் ஒன்றை ரிம்ஸா முஹம்மத் இங்கே பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள். யாப்பிலக்கணம் மட்டும் தெரிந்தவர்களிடம் இருந்த கவிதை காலவோட்டத்தில் எளிதான முறையில் எல்லோரிடமும் மரபை மீறிய கவிதைகள் என்ற வடிவத்தில் வந்து சேர்ந்துள்ளன எனப் பெருமையுடன் கூறுகிறார். போர் கிழித்த தேசம் தான் சுமக்கும் வலிகள் வேதனைகள், உளவியல், உடலியல் தாக்கங்கள் அதனால் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றிப் பேசும் கவிஞர் முகைதீனின் கவிதைகள் பற்றி மிகவும் யதார்த்தமான முறையில் ஆய்வு செய்கிறார்.
கவிதையின் வகைகள் என்ற பகுதியில் தலித் கவிதைகள், பெண்ணியக் கவிதைகள், பின் நவீனத்துவம், ஹைக்கூ, என்று வகைப்படுத்துகின்றார். கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெலிகம ரிம்ஸா முஹம்மத் இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். கவிஞர் மூதூர் முகைதீன் அவர்கள் சுமார் மூன்று தசாப்பதங்களாக இலக்கிய ஈடுபாடு கொண்டு, தமிழ்த் தொண்டு ஆற்றிவருகிறார். கிழக்கின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராகவும், தனது ஊரின் பெயரை முன்னிறுத்தி "மூதூர் முகைதீன்" என்று புனைபெயர் கொண்டு தொடர்ந்தும் எழுதி வருகிறார். இவரது இயற்பெயர் ஏ.எம். முகைதீன் ஆகும். இதுவரை இவர் மூன்று கவிதைத் தொகுப்புக்களை வெளியீடு செய்துள்ளார். "பிட்டும் தேங்காய்ப்பூவும்", "இழந்துவிட்ட இன்பங்கள்", "ஒரு காலம் இருந்தது" என்பனவே அவையாகும்.
- எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
"பிட்டும் தேங்காய்ப்பூவும்" என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் சிலவற்றை எடுத்துக் காட்டுக்களாகப் பதிவு செய்து தனது ஆய்வினை மேற்கொள்ளுகின்றார். யுத்தம் தந்த துன்பங்கள், துயரங்கள், வலிகள், வேதனைகள், எல்லோரையும் பாதித்திருக்கின்றது என்பதை இவரது கவிதைகள் தாங்கி நிற்கின்றன. ரிம்ஸா முஹம்மத் அவர்களின் நடையில் சொல்லவேண்டுமாயின் "எங்கு பார்த்தாலும் பிணங்களும் மண்டை ஓடுகளும், அந்த இருண்ட காலத்தை எம் கண் முன்னே காட்சிப்படுத்துகின்றார். புராதன பொருட்களை அகழ்ந்து ஆராய்ச்சி செய்வது போல இனி மண்டை ஓடுகளைத்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டுமெனச் சாடி நிற்கின்றார்". இந்தத் தொகுப்பிலுள்ள ஒரு உணர்வுமிக்க கவிதை ஒன்றினை இனம் காட்டுகின்றார்.
நோன்புக் கஞ்சியை
விரும்பிச் சுவைத்திட
மாலைப் பொழுதில்
உரிமையுடன்
உம்மாவிடம் கேட்டு வாங்கி
உறுஞ்சிக் குடிக்கும்
விஜயன் விமலன்
நட்பு மலர்கள்
தினமும் மணக்கும்
பிள்ளையார் கோவிலில்
சிவராத்திரிக்கு
சின்னராசாவின் பக்கத்தில்
அன்வர் இருந்து
மோதகம் உண்பான்
ஐயர் வந்து சிரித்தபடியே
அவித்த கடலையையும்
அள்ளிக் கொடுப்பார்..
இந்த வரிகள் யுத்தத்துக்கு முன்பு இனங்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினதும், அன்பினதும் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு தனது யதார்த்தமான, அரிதாரம் ஏதும் பூசாத வரிகளால் பதிவு செய்து போகின்றார். உண்மையில் கவிஞரின் ஆளுமையும், ஆய்வாளரின் சொல்லாட்சி எழுத்தாற்றலும் இக்கவிதைக்கு மேலும் மெருகூட்டுகின்றது.
"இழந்துவிட்ட இன்பங்கள்" என்ற தொகுப்பிலிருந்து ஆய்வாளர் எடுத்துக் காட்டும் சிறப்பான கவிதை ஒன்றினை இங்கே பார்ப்போம்.
பொன்னகராம் நான் வாழும் பதியம் இன்று
பொலிவிழந்து போனதுவோ போரால் வெந்து
கண் போன்று காத்திட்ட கல்விக்கூடம்
கலையிழந்து காட்சிதரும் கோலம் கண்டு
கண்ணீரை விட்டும் நான் கவலை கொண்டு
கரந்திட்ட காலத்தைக் கனவாய்ப் பார்த்தே
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி நெஞ்சில்
ஏக்கத்தில் வாழுகின்றேன் இன்னும் மண்ணில்
போரின் கோர முகத்தை கவிஞர் மேலுள்ள கவிதை மூலம் மிகவும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார்.
"ஒரு காலம் இருந்தது" என்னும் கவிதைத் தொகுப்பிலுள்ள இன்னொரு அற்புதமான கவிதையை அது காட்டும் அன்பின் பிணைப்புகளையும், இனங்களின் ஒற்றுமைகளையும் கவிஞர் வெளிப்பூச்சு ஏதுமின்றிப் இப்படி பதிவு செய்துள்ளார். கவிஞருக்கு வாழ்த்துக்கள். இந்தக் கவிதையை இனம் காட்டிய ஆய்வாளருக்கு எமது சிறப்பான பாராட்டுக்கள்.
ஒரு காலம் இருந்தது
அந்திப்பொழுது உச்சம் கொடுக்க
ஆலய மணி ஓசையில்
அரிசி உலை வைப்பதற்காய்
ஆயிசா உம்மா
அவசரப்படுவதும்..
அதிகாலை
பாங்கொலியில்
அன்னம்மா எழுந்து
புகையிலைத் தோட்டத்திற்கு
புறப்பட்டுப் போவதுமாய்
ஒருவர் வழியில்
இருவரும் இணைந்தே
வரையப்பட்ட விதி வழியாய்
வாழ்ந்த
ஒரு காலம் இருந்தது..
இத்தகைய மூன்று தொகுப்புகளிலிருந்தும் தனக்கே உரித்தான பாணியில் கவிதைகளை எடுத்துக்காட்டி தனது ஆய்வினை மிகவும் சாத்தியமான முறையில் வெற்றிகரமாக நகர்த்திச் சென்ற ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ஆளுமையும் ஆற்றலும் கண்டு நாம் இங்கேவியந்து நிற்கின்றோம். இந்த உணர்ச்சிக் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் இந்த மூன்று தொகுப்புகளையும் படிக்க வேண்டுமென்ற ஆவலினைத் தூண்டிய ஆய்வாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு எமது சிறப்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்குவதில் நாம் பெருமைகொள்கிறோம்.
நூல் :- விடியல்நூல்
வகை :- ஆய்வு
நூலாசிரியர் :- ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி :- 0775009222
மின்னஞ்சல் :- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
விலை :- 400 ரூபாய்
நூல் மதிப்பீடு:- சிறீ சிறீஸ்கந்தராசா
அனுப்பியவர்: வெலிகம ரிம்ஸா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.