நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட பானுபாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது ஒவ்வொரு கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஓர் ஆணாகச் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன். மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்தக் கவிதைகள் பேசுகின்றன.
மூலக்கவிதைகளை நான் படிக்காதபோதும், மொழிமாற்றம் மிகவும் அழகாக, அமைதியாக மனதில் வந்து குளத்தின் கரையின் அலையாக ஈரலிப்பைத் தருகின்றன. பெண்களின், பெண்களுக்கே உரிய காதல் , தாய்மை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதைகள், அதாவது அகத்தின் வெளிப்பாடுகள் என்றாலும் சில பட்டினி, போர் எனும் புறவய வெளிபாட்டை பேசுபவையாக உள்ளன. அவை பெண் குரலாக நமக்குக் காதில் ஓங்கி அறைகின்றது. ஒரு குறுகிய இனமோ நாடோ அற்று மொத்தமான மனித வாழ்வின் தேறலை பிளிந்து நமக்குத் தருகின்றன. ஆண்கள் சிந்திக்காத கோணத்தில் இருந்து அவைகள் வருவதே எனக்குப் பிடித்தது.
முதல் கவிதையே சிறு குழந்தைக்குத் தலையில் ஊற்றிய ஒரு குடம் வெந்நீர்போல் என்னைத் திக்கு முக்காடப்பண்ணியது.
( Marie Takvam)
“எனது
குழந்தைகள் எங்கே?
அழகாக ஆடையணிந்து
அன்னிய மனிதர்கள்போல்
என்னிடம் வந்திருக்குமிவர்கள்.
இன்று
தங்களது பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். “
வயதான தாய், தன் குழந்தைகள் வளர்ந்த பின், அவர்கள் அன்னியர்களாக நடப்பதைக் குறிக்கும் கவிதை.
இது எந்த சமூகத்திற்கும், எக்காலத்திலும் பொருத்தமானது. ஆனால், பலரால் மனம் விட்டுப் பேசமுடிவதில்லை. இயற்கை அழகையும் பெண்ணையும் வர்ணிப்பது பெரிய விடயமல்ல. காரணம்: மனிதர்கள் எல்லோருக்கும் அழகுணர்வு உண்டு. கவிஞர் தங்களிடம் சொற்களைச் சேமித்து வைத்திருப்பதால் மொழியால் கவிதையாகிறான். அதாவது செல்வந்தன் பணமிருப்பதால் தனது பணத்தைச் செலவழிப்பது போன்றது. ஆனால், உண்மையான கலைஞன்- கவிஞர் மற்றவர்கள் பேசாப்பொருளை அல்லது பேசமறுக்கும் பொருளைப் பேசுகிறான். அவன் மனிதகுலத்தின் அடிப்படை விடயங்களைப் பேசும்போது அது காலத்தால் அழியாது- செவ்விலக்கியமாகிறது. இதுவே பாரதி செய்தது. மற்றவர்கள் பெண்ணையும் இயற்கையையும் பாடி கவிஞர்களாகப் பாவனை செய்கிறார்கள்.
புறவயமானதாலும் என்னைச் சிந்திக்க வைத்த கவிதை. (Marie Takvam)
“பல லட்சம் மக்கள்
பட்டினியால் மடிந்து கொண்டிருக்கும்போது
நான் எனது சிகையை நிறமேற்றுவதற்கு
அலங்கார நிலையம் சென்றேன். “
எனத் தொடங்கிய இந்தக் கவிதை கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்டபோது தற்போதைய பாலஸ்தீனத்திற்கு என்னை அழைத்துச் சென்றது.
இறந்த தாயை மரக்கிளையில் வந்தமர்ந்த பறவையாக உருவமைத்து பாடும்போது எனது தாயின் நினைவு எனக்கு வந்தது. இதுவே இந்த கவிதையின் வெற்றி.
இறுதிப் பக்கத்து கவிதை கூட புத்தகத்தை மூடி வைக்கும்போது மனதைக் குடைந்தது.
“ இரண்டு நேரச் சாப்பாடும் தயாராக உள்ளது. தயிரைத் தனியாக வைத்திருக்கிறேன். சாப்பாட்டைச் சூடாக்கியபின் தயிரைப் போடவேண்டும் ” என சியாமளா சொல்லி விட்டு வேலைக்குச் செல்லும்போது கவிதையின் கடைசி வரிகளை முடித்தேன்.
“ உனது ரோஜாவென்று என்னை அழைக்காதே
குளிருறைந்த இரவில்
உனது ஒளி யென்று என்னை அழைக்காதே
நாமிருவரும் இணைந்திருப்போம்.
நிபந்தனை அற்ற
மனிதர்களாக மட்டும்
இணைந்திருப்போம் “
என இறுதி கவிதை முடிகிறது.
இதைவிட தற்கால உலகில் பெண் வேறு எப்படி சமத்துவம் பேசமுடியும்?
சிறப்பான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொழி பெயர்த்த பானுவுக்கு நன்றி.
நண்பர் தமயந்தியின் வீட்டில் நின்றபோது உங்கள் கவிதைகளிலும் பானுவின் கவிதை நன்றாக இருக்கிறது எனச் சீண்டலுக்குச் சொன்னபோது தமயந்தி ‘ இப்ப எல்லோரும் சொன்னா எப்படித் தோழர் ‘ என்றபோது எனக்கு அந்தரமாகப் போய்விட்டது. ஆனாலும் சியாமளா நல்ல பிள்ளை நடேசனைப் போலில்லை எனப் பலர் எனக்குக் கேட்காது சொல்வார்கள் எனச் சொல்ல நினைத்துச் சொல்லவில்லை
பானுபாரதியின் இந்த மொழி பெயர்ப்பு மிகவும் தரமானது. மொழிபெயர்ப்பில் முக்கியமான விடயம் அந்தக் கவிதையின் மொழி எந்த கலாச்சாரத்தின் வெளிப்படு என்பதே. அந்த வகையில் நோர்வேயில் வாழ்ந்து அந்த மனிதர்களிடம் பழகியபடியால் கலாச்சார கூறு மாறாமல் பானுபாரதியால் எமக்கு சொல்ல முடிகிறது.
கவிதைக்கும் எனக்கும் காத தூரம் என நினைப்பவன் நான். அதிலும் மொழிபெயர்ப்பு என்றால் சொல்லத் தேவையில்லை.
சென்னை கறுப்பு பிரதிகள் இந்நூலை வெளியிட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.