மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவின் சாவகச்சேரி மருத்துவ நிலையக் குறைபாடுகள் ,மற்றும் யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள் சிலரின் நடவடிக்கைகள் பற்றிய காணொளிகளைப் பார்த்தேன். இவர் கூறும் மருத்துவச் சீர்கேடுகள் முக்கியமானவை. தீர்க்கப்பட வேண்டியவை. இவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததற்காக இவரைப் பாராட்டலாம்.
அதே சமயம் பொதுவெளியில் நடந்து கொள்ளும் இவரது ஆளுமை அம்சங்கள் விடயத்தில் இவர் சிறிது கவனம் எடுக்க வேண்டும். தனக்குச் சார்ப்பான விடயம் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவர் குழந்தையைப் போல் துள்ளிக் குதிக்கின்றார். ஊடகவியலாளர் ஒருவருடன் இன்னுமொரு மருத்துவர் பற்றி உரையாடும் சமயத்தில் , அவ்வூடகவியலாளர் இவர் குற்றஞ் சுமத்தும் மருத்துவரை வானலைக்கு அழைக்கையில் அம்மருத்துவர் இணைப்பைத் துண்டித்து விடுகின்றார். அம்மருத்துவர் செய்தது சரியான செயல். உடனே இவர் துள்ளிக் குதித்து 'நான் சொன்னேன் பார்த்தியா' என்பதுபோல் ஏதோ கூறுகின்றார்.
இவர் இன்னுமொரு மருத்துவருடன் அவருக்குத் தெரியாமல் தொலைபேசியில் உரையாடிக்கொண்டே , அம்மருத்துவரின் உரையாடலை ஒலிப்பதிவு செய்கின்றார். அம்மருத்துவரோ ஆளுமை விடயத்தில் இன்னும் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றார். பரதேசி என்று வார்த்தைப் பிரயோகமும் செய்கின்றார்.
என்னைப்பொறுத்தவரையில் இவர் இவ்விதமான சட்டத்துக்குப் புறம்பான விடயங்களைத் தன்னை நியாயப்படுத்துவதற்காகச் செய்யத்தேவையில்லை. தன் ஆளுமையைச் சிறுமைப்படுத்தும் வகையில் குழந்தையைப் போல் கைகொட்டிச் சிரித்து மகிழ்ச்சியடையத்தேவையில்லை. இவரிடம் நியாயம் இருக்கிறது. தன் குற்றச்சாட்டுகளை மட்டும் , நிதானத்துடன், உணர்ச்சிவசப்படாமல் பொதுவெளியில் வைப்பதே முக்கியமானது.
சிலர் இவர் சிங்களப்பெண்மணியை மணந்து கொண்டார் என்று கூறி இவரை மட்டந்தட்ட வெளிக்கிடுகின்றார்கள்.அது தவறான அணுகுமுறை. அது இனவாதிகளின் நடைமுறை. யாரும் யாரையும் மணக்கலாம். அது அவரவர் உரிமை. அவரவர் விருப்புக்கேற்ப நடக்குமொன்று.
இன்னுமொரு காணொளியில் தான் காசுக்காகச் செயற்படுபவனல்லன் என்கின்றார். அப்படிச் செயற்படுபவனாக இருந்தால் கறுப்புப் பெண் ஒருத்தியை, 2 கோடி சீதனத்துடன் வாங்கித் திருமணம் செய்திருப்பேன் என்கின்றார். இது கண்டிக்கத்தக்க கூற்று. இவரது ஆணாதிக்க, நிறத்துவேசம் மிக்க மனப்போக்கை வெளிப்படுத்தும் கூற்று. இவ்விதமான கூற்றுகளை இவர் தெரிந்து செய்வதில்லை. இவை சரி பிழை என்று அறியாமல் செய்வதாகவே நான் கருதுகின்றேன். ஆனால் இவ்வகையான கூற்றுகளை இவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இவர் கூறும் குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. குறிப்பாகச் சிறுமி ஒருவரின் மரணம் பற்றியது. அச்சிறுமியின் மரண விடயத்தில் பூரண விசாரணைகள் நடத்தப்பட்டு, குடும்பத்தவருக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும், குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.