நனவிடை தோய்தல் (19) : நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - வின்சர் எனும் அபூர்வம்! - இந்து.லிங்கேஸ் -
உனது மண்ணில் பூக்கும்
இரவுகள் அழகாகி விடியும் கணங்களை
ரசித்த அதே உன் கண்கள்
இனி புலரப்போகும் காட்சிகளையும் நிச்சயமாக நேசித்திருக்கும்.
அத்தனை அழகல்லவா எம் தாய்மண்?
கடல் அழகு.
கடலில் வந்து விழும் செம்பொன் பரிதியின் அழகு.
நீலத்தை உடுத்துநிற்கும் வானமும் வடிவு.
ஊரைக்காக்க எழுந்து நிற்கும் கோபுரங்கள்
வழிகாட்டும் பனைகளும் தென்னைகளும்.
குளங்களும்,தாமரைகளும்.
விடியலை பறைச் சாற்றும் பறவைகள்.
மனதை வருடும் தவிலும்,நாதஸ்வரமும்.
காற்றைத் தழுவி எமக்குக் கடத்தும்
அரசமரம்,ஆலமரம், பூவரசு.
பச்சைப்பசேலென
காற்றில் அலைபோல் அசையும் பயிர்கள்
என எல்லாமே அழகல்லவா?
அத்தனை அழகையும் வாரி அள்ளிக் கொட்டிக்கொண்டேயிருந்த மண்ணில்தான் 'யாழ்ப்பாணம்' என்ற நகரமும் மழையிலும், வெயிலிலும், ஏன் 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டிலும்கூட கண்ணுபடப்போவதாய் செழித்துக்கிடந்தது.