ஈழத்தில் நாட்டுக்கூத்துக் கலை! - த.சிவபாலு பி.இடி சிறப்பு, எம்.ஏ -
கிராமியக் கலை வடிவங்கள் பல்வேறு வகையினவாக தொன்று தொட்டு மக்களிடையே பயின்று வந்துள்ளமை நாம் அறிந்ததே. கூத்து என்னும் பதம் தமிழில் மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றது. திருமூலரின் திருமந்திரத்திலும். திருக்குறளிலும் தொல்காப்பியத்திலும் இச்சொல்லாடலைக் காணமுடிகின்றது. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையே பல்வேறு வகைகளில் தொடர்புகள் பேணப்பட்டு வந்துள்ளன. கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் ஒற்றுமை பேணப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் இடவேறுபாடு காரணமாக பிரதேசத்திற்கான தனித்துவமும் பேணப்படுகின்றது. தமிழால் இணைந்துள்ள நிலைமையை நாம் எல்லாக் கலைகளிலும் காணமுடியும்.
'கூத்தாட்ட அவைக் குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று' – குறள் 332
திருவள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழர் மத்தியில் கூத்துக்கலை முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதற்கு இந்தத் திருக்குறளே போதுமானது. கூத்து இடம்பெறும் அவைக் குழாம் என வரும் உவமானம் மக்கள் பெருந்தொகையாகக் சேர்ந்து கண்டு களித்துள்ளனர் என்பது விளக்கம். எனின் தமிழர் சமூகம் கூத்தாட்டத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது வெளிப்படை.