ஆய்வுச்சுருக்கம்:
தமிழகத்தில் வேற்றுநாட்டார் ஆட்சியும், மொழியும், மதங்களும் புகுந்தமையால் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மொழியில் புதுவாழ்வு தோன்றியது. இவ்வாழ்வு மதச்சார்புடையோரால் மக்களிடையே பரவியது. ஓரளவு இலக்கிய உலகிலும் நிலைபெற்றது. இதனால் இலக்கண ஆசிரியர்கள் மொழியின் நிலை கண்டு புதிய விதிகள் வகுக்க வேண்டிய பொறுப்புடையர் ஆயினர். இச்சூழ்நிலையில் எழுந்த இலக்கணமே வீரசோழியம் ஆகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எழுதப்படும் இலக்கணம் அக்கால மொழியமைப்பை விளக்கிக் கூறவேண்டும். மொழியில் காலவோட்டத்தில் விளைந்துள்ள மாற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் கருத்துகளை இலக்கணத்தின் பண்பாக ஏற்றுக் கொள்வோமேயானால் வீரசோழியம் அக்கால மொழிப்பண்பை விளக்க சிறந்த நூலாகத் திகழ்கிறது.
வீரசோழியம் முழுவதும் இலக்கணக் கூறுகள் வடமொழி மரபின் நோக்கில் வருணனையாகவும் ஒப்புமையாகவும் இடம்பெறுவதால் வடமொழியாளர்க்காக இந்நூல் எழுதப் பட்டிருக்கலாம் எனவும் வடமொழி வல்லோர் தமிழ் மொழியறிவு பெறும் பொருட்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம். வடமொழியாளர்க்கு தமிழ் கற்பிக்கும் நோக்கில் வடமொழி மரபுகளை தமிழ்ப்படுத்தி புடைமாற்று ஒப்புமை இலக்கண அடிப்படையில் அமைத்துள்ளார் எனும் கருத்தாக்கம் பெறப்படுகிறது. இதன் அடிப்படையில் வீரசோழியம் ஆராயப்பட்டு கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.
முன்னுரை:
உலகில் உருக்கொண்ட ஒவ்வொரு மொழிக்கும் குறிப்பிடத்தக்க நோக்கமும் சிந்தனை மரபும் உண்டு. அதனோடு தொடர்புடைய இலக்கண உருவாக்கமும் அத்தகையதே. மொழி , இலக்கியம் கற்க உதவுதல், மொழிச்சிதைவைத் தடுக்க முனைதல், மொழியில் வளர்ந்துவரும் புதிய பரிணாமங்களை ஏற்று மொழி வளர்ச்சிக்குத் துணைநிற்றல் என உலக அளவில் இலக்கண உருவாக்க நோக்கங்கள் பல்வேறு வகையாக அமைகின்றன. ஒரு மொழியின் கண் உள்ள எழுத்தமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு போன்றவற்றை வரையறை செய்து விளக்குவது இலக்கணமாகும். இவ்விலக்கணத்தினால் மொழியின் வளமை, மரபு, கட்டமைப்பு வரையறைகளை விளக்குவதிலும் இலக்கணம் இன்றியமையாத இடம் வகிக்கிறது. உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்குமே இலக்கணக் கட்டுக்கோப்பும் வரையறையும் உண்டு. அவ்வாறு இல்லாமற்போயின் ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு புரியாமல் போய்விடும். `
புடைமாற்று ஒப்புமைக் கோட்பாடு:
தாய்மொழி இலக்கண விதிகளை இரண்டாம் மொழி இலக்கண விதிகளோடு ஒப்பிட்டுப் பின்னர் இரண்டாம் மொழி இலக்கண விதிகளுக்குப் புடைமாற்றி கற்பிப்பதன் மூலம் இரண்டாம் மொழி இலக்கணத்தை எளிமையாகக் கற்கமுடியும். இதுவே புடைமாற்று ஒப்புமைக் கோட்பாடு தோற்றம் பெறுவதற்கான காரணமாக அமைகிறது.
புடைமாற்று ஒப்புமைக் கோட்பாடு கருத்தியல் வாய்பாடு:
மொழிகள் ஒப்புமை ஒழுங்கமைவு உடையன.
மொழி, புடைமாற்று ஒப்புமை விதிகளான ஓர் அமைப்பொழுங்கு
தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழிக்கு பொருந்தும்.
தாய்மொழி இலக்கணத்தைப் புரிந்து கொள்வதன் மூலமாக இரண்டாம் மொழியின் இலக்கணத்தை எளிதாகக் கற்க முடியும். என்று புடைமாற்று ஒப்புமைக் கோட்பாட்டிற்கு வாய்பாடுகள் சு.இராசராம் அவர்களால் வகுக்கப்பட்டுள்ளது. “புடைமாற்றம் ஒப்புமை அடிப்படையிலான ஒரு பரிணாம மாற்றம் இம்மாற்றத்தைத் தாய்மொழி இலக்கண விதியில் சிதைவு எனக் கூறலாம்.” (இராசராம்.சு 2010 –பக்- 468.) இதன்வழி தாய்மொழி இலக்கண விதிகள் சிதைவுறும் என்றும் இவை சில இலக்கண விதிகளில் இருந்து வேறுபட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்திணைக் கொண்டு தமிழ் இலக்கண நூலான வீரசோழியம் எவ்வாறு இக்கோட்பாட்டிற்குள் பொருந்தி வருகிறது என்பதை விளக்கி நிறுவுவதாகவும் இப்பகுதி அமைகிறது.
புடைமாற்று ஒப்புமை விதிகள் சாதராண இலக்கண விதிகளிலிருந்து வேறுபட்டவை. இருமொழி ஒப்புமையையும் புடைமாற்றத்தையம் இவ்விதிகளின் உள்ளார்ந்த இயல்புக் கூறுகளாக் கூறலாம். தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழி இலக்கணத்தைப் பொருந்தியும் மாறுபட்டும் வரும் தாய்மொழி இலக்கணமோ இரண்டாம் மொழியின் இலக்கணமோ தத்தம் அமைப்பிலிருந்து சிதைவுறுதலும் சுருங்குதலும் தவிர்க்க முடியாத விளைவுகள் ஆகும். இவ்விளைவுகளின் அடிப்படையில் இலக்கணங்களைப் பொருத்தி பார்க்கலாம்.
வீரசோழியம் கட்டமைப்பு:
வீரசோழியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம் அலங்காரப்படலம் எனும் ஐந்து அதிகாரங்களை உடையது. இதில் காரிகைகள் இடம்பெற்றுள்ளன. சொல்லதிகாரத்தில் ஆறு படலங்களும் ஏனைய அதிகாரங்களில் ஒவ்வொரு படலமும் இடம்பெற்றுள்ளன. வடமொழி மற்றும் தமிழ்மொழி மரபுகளை இணைத்துக் கூறுவதால் தமிழ்மொழி இலக்கண மரபையொட்டி அதிகார வரிசை முறையும், வடமொழி இலக்கண மரபையொட்டி படல வரிசை முறையும் வீரசோழியத்தில் அமைந்துள்ளது எனலாம்.
வீரசோழியம்:
“தாய்மொழி இலக்கண விதியை அவ்வாறே இரண்டாம் மொழி இலக்கணத்திற்குப் புடைமாற்றி விதிகள் கூறும் முறையை வீரசோழியம் முழுவதும் காணலாம்.” என (இராசராம்.சு 2010 –பக்- 469.) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இலக்கணத்தை சுருக்கி கூறுதல் வீரசோழியத்தின் நோக்கமாக இருந்தது எனலாம். தொல்காப்பியத்தில் காணும் விரிவு வீரசோழியத்தில் இடம்பெறவில்லை.
ஒன்றுபடுதல்-நூற்பா:
‘ஒருவ னொருத்தி சிறப்புப் பலரொன் றொடுபவவை
மருவு படர்க்கை யொடுகால மூன்றையும் வைத்துறழத்
துரவ மலிபதி னெட்டாந் தொழிற்பதம் தொல்கருத்தா
உருவ மலியும் பொருண்மேல் நிகழுமொழியிலையே’’ (வீர.சொல்.31)
பொருள்
படர்க்கை என்னும் பிரதம புருடனில் வரும் கிரியா பதங்களை வகைப்படுத்தும் நிலையில் இந்நூற்பாவின் பொருண்மை அமைந்துள்ளது.
சான்று விளக்கம்:
இந்நூற்பாவின் பொருண்மையில் மொழியின் ஆசிரியர் நேரிடையாக வடமொழி சொற்களை பிரதம புருடன், கிரியா பதம் என்ற சொல்லாட்சியை கையாண்டமையால் இங்கு புடைமாற்று ஒப்புமைக்கோட்பாடு பொருந்துகிறது எனலாம்.
தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழிக்கும் பொருந்தும் எனும் கருத்தியலை முன்வைத்து தாய்மொழி இலக்கணத்தின் மூலம் இரண்டாம் மொழியின் இலக்கணம் உணர்த்தப்படுகிறது.
*இறப்பு
*நிகழ்வு
*எதிர்வு
தாய்மொழி இலக்கணத்தில் உள்ள கால வகையை ஏற்று இரண்டாம் மொழிக்கும் மூன்று என வகைப்படுத்தியுள்ளமையால் இங்கு தாய்மொழி இலக்கணத்தோடு பொருந்தி செல்கிறது எனும் கருத்தியலை முன்வைத்து புடைமாற்று ஒப்புமைக்கோட்பாடு இந்நூற்பாவில் பொருந்தி வருகின்றதை அறிந்து கொள்ள முடிகிறது.
நூற்பா
‘‘மதத்திற் பொலியும் வடசொற் கிடப்புந் தமிழ்மரபும்
உதத்திற் பொலியேழைச் சொற்களின் குற்றமு மோங்குவினைப்
பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்கடன் னூறாயிரம்
விதத்திற் பொலியும் புகழவ லோகிதன் மெய்த்தமிழே’’ (வீர. சொல். 83)
பொருள்
சொற்களை வழுவின்றி முடிக்க வேண்டும் என்பதை விளக்கும் முகமாக இந்நூற்பாவின் பொருண்மை அமைந்துள்ளது. வடமொழி கலப்பையும், தமிழ் மொழி மரபையும் பின்பற்றி வேற்றுமை எழுத்துக்களின் தன்மையை அறிந்தும் குற்றமற சொற்களை அமைக்க வேண்டும். வழுவின்றி அமையும் வினைச் சொற்கள் இலக்கணம் கற்பித்தலை மேம்படுத்தும் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
சான்று விளக்கம்
• தாய்மொழி இலகக்ணத்தைப் புரிந்துகொள்வதன் மூலமாக இரண்டாம் மொழியின் இலக்கணத்தை எளிதாக கற்க முடியும் எனும் கருத்தியல் வாய்பாடு இங்கு முன்னிறுத்தப்பெறுகிறது.
• தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழிக்கும் பொருந்தும் என்பதில் வடமொழி கலப்பை ஏற்று தமிழ் மரபில் இலக்கணம் கற்பிப்பதால் இங்கு இவ்விதி பொருந்தி வருவதால் புடைமாற்று ஒப்புமைக் கோட்பாடு இதில் பயின்று வந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.
வேறுபடுதல்-நூற்பா:
‘‘முன்னிலை தன்மை யிடத்தினிற் காலங்கள் மூன்றையும்வைத்
துன்னு மொருமை சிறப்பொடு பன்மையு முய்த்துறழ்ந்தால்
பன்னுந் தொழிற்சொற் பதினெட் டுளகருத் தாப்பொருண்மேன்
மன்னி நிகழ்தொகை முப்பதொ டாறும் வகுத்தறியே’’ (வீர. சொல்.72)
பொருள்
முன்னிலையிலும் தன்மையிலும் கிரியா பதங்கள் வரும் முறையை விளக்கி நிற்கின்றது. மூன்று காலங்களையும், மூவகையான சொல்லையும் வைத்து உறழ பதினெட்டு வகையான கிரியாபதம் வருமென சுட்டியுள்ளார்.
சான்று விளக்கம்:
இந்நூற்பாவில் தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழி இலக்கணத்தோடு பொருந்தி வருகிறது. எனும் கருத்தியலும், தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழி இலக்கணத்தோடு வேறுபட்டு நிற்கிறது எனும் கருத்தியல் இங்கு பெறப்படுகிறது தாய்மொழி இலக்கணங்களைப் புரிந்து கொள்ள இரண்டாம் மொழிக்கு புடைமாற்றும் போது இக்கருத்தியல் முன்னிறுத்தப் பெறுகிறது. காலங்கள் மூன்றையும் வைத்து நூற்பா யாத்தமையால் இங்கு புடைமாற்று ஒப்புமைக் கோட்பாடு பொருந்தி வருகிறது. ஆனால் மூவகைச் சொல் என ஒருமை, சிறப்பு, பன்மை என வகைப்படுத்தியதில் ‘சிறப்பு’ என்னும் வகை தாய்மொழி இலக்கணத்திலிருந்து வேறுபட்டு நிற்கின்றதை உணரமுடிகிறது. ஆகையால் இங்கு தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழி இலக்கணத்தோடு பொருந்தியும், வேறுபட்டும் நிற்பதன் மூலம் புடைமாற்று ஒப்புமைக் கோட்பாடு பயின்று வருவதை இனங்காண முடிகிறது.
சிதைவுறுதல்-நூற்பா:
‘‘தானானுந் தாளாளுந் தாராருந் தார்களொ டார்களென்று
மேனா முரைத்த பிரத்திய மாருந் ததுவதுவும்
தேனார் குழலி தனவு மனவுந் திகழ்படர்க்கை
ஆனா விறப்பில் தொழிற்பத மாறிற்கு மாய்ந்தறியே’’ (வீர.சொல். 13)
பொருள்
படர்க்கை இறந்தகால வினைகளில் பிரத்தியங்கள் வரும் முறையை விளக்குகின்றது. தான், ஆன், தாள், தார், ஆர், தார்கள், ஆர்கள், தது, அது, தன, அன என்று சொல்லப்பட்ட பனிரெண்டு உருபுகளும் (பிரத்தியம்) இறந்தகாலப் படர்க்கையில் வரும்.
சான்று விளக்கம்
• தாய்மொழி இலக்கணத்தின் மூலம் இரண்டாம் மொழியின் இலக்கணம் உணர்த்தப்படுகிறது.
• இரண்டு மொழிக்கும் பொதுவான இலக்கண நிலையைக் கூறியுள்ளமையால் இரண்டாம் மொழிக்கும் பொருந்தும் என்பதையும் அறியமுடிகிறது.
• தாய்மொழி இலக்கணத்தில் படர்க்கை வினை விகுதிகளை (அன்,ஆன்,அள்.ஆள்,அர்,ஆர்,ப) ஏழாகச் சுட்டியுள்ளார். ஆனால் இரண்டாம் மொழி இலக்கணத்தில் பனிரெண்டு வகையாக. ( தான், ஆன், தாள், தார், ஆர், தார்கள், ஆர்கள், தது, அது, தன, அன) குறிப்பிட்டுள்ளமையால் இங்கு வேறுபட்டு நிற்கிறது எனலாம்.
• மேலும் தாய்மொழிக்கு இலக்கணம் கற்பிக்கப்படும்போது இரண்டாம் மொழிக்கான இலக்கணத்தில் (பிரத்தியம்) என்ற சொல்லாட்சியை கையாண்டுள்ளமையால் தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழி இலக்கணத்திற்குப் பொருந்தும் எனும் கருத்தியல் பெறப்படுகிறது.
• தமிழில் வினைமுற்று வினைப்பகுதி + கால இடைநிலை + (திணை, பால், எண், இடம் காட்டும்) விகுதி என்னும் அமைப்பு உடையது. வட மொழியில் வினைமுற்று தாது + பிரத்தியம் என்னும் அமைப்பு உடையது. வடமொழியைக் கற்கும் சூழலில் தாது + பிரத்தியம் என்னும் விதியைத் தமிழுக்கு புடைமாற்றும்போது வினைமுற்று அமைப்பு சிதைவுறுகிறது.
• படர்க்கை இறந்தகால வினைகளில் பிரத்தியங்கள் வரும் இயல்பு தாய் மொழி இலக்கண அமைப்பையொட்டி வீரசோழியத்தில் விளக்கப் பட்டுள்ளது.
• வீரசோழியம் வடமொழி தாது + பிரத்திய அமைப்பில் தமிழ் வினையைத் தாது என்றும், தொடர்ந்து வரும் பகுபத உறுப்புகளை ஒருசேரப் பிரத்தியம் என்றும் அமைத்துக் கொள்கிறது.
பாடு + ஆன் படி + தான்
பாடு + ஆள் படி + தாள்
பாடு + ஆர் படி + தார்
பாடு + ஆர்கள் படி + தார்கள்
பாடு + அது படி + தது
பாடு + அன படி + தன
இவ்வாறு தாய்மொழி இலக்கண விதியை அவ்வாறே இரண்டாம் மொழி இலக்கணத்திற்குப் புடைமாற்றி விதிகள் கூறும் முறையை வீரசோழியத்தில் காணமுடிகிறது.
முடிவுரை
புடைமாற்று ஒப்புமைக் கோட்பாட்டிற்கு எடுத்துக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் ஒன்றுபடுதல், வேறுபடுதல், சிதைவுறுதல் எனும் கருத்துப் பொருண்மையின் வழி இக்கோட்பாட்டை இந்நூல் தம்முள் உள்வாங்கியுள்ளன. புடைமாற்று ஒப்புமைக் கோட்பாட்டின் கருத்தியல் அடிப்படையில் வீரசோழியம், தாய்மொழி இலக்கணம் இரண்டாம் மொழி இலக்கணத்திற்குப் பொருந்தியும் வேறுபட்டும் நிற்கும் எனும் பொருண்மையில் அமைந்துள்ளதை புடைமாற்று ஒப்புமைக் கோட்பாட்டைக் கொண்டு அணுகி ஆராய்ந்தமையால் அறியமுடிகிறது.
சான்றெண் விளக்கம்:
1. சு.இராசாராம், இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், ப.468.
2. மேலது, ப. 469
3.வீரசோழியம் –சொல்லதிகாரம் நூற்பா.எண்-31
4 மேலது, நூ.எண் -83
5. மேலது, நூ.எண் -72
6. மேலது, நூ.எண் -13
துணைநின்றவை
1.இராசாராம். சு, 2010 இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்
2. இராசாராம்.சு, 1993 வீரசோழிய இலக்கணக் கோட்பாடு. இராகவேந்திரா பதிப்பகம், நாகர்கோயில்.
3. சாவித்ரி.சி, 2016 தமிழ் தெலுங்கு இலக்கணப் போக்குகள், ஆதித்யா பப்ளிகேசன்ஸ், உடுமலை.
4. புத்தமித்திரனார், 1970 வீரசோழியம் கழக வெளியீடு, சென்னை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.