பட்டலந்த படுகொலையின் அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின், (13.3.2025) மலையக பாராளுமன்ற தலைமைகள் பின்வரும் கூற்றுக்களை கூறினர்:
“எம்மை குறை கூறுவதில் பயனில்லை. மலையக திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்’’- எனத் திகாம்பரமும், “ இது போதாது, இதனோடு ஜேவி;பி யினரையும் சேர்த்துத்தான் விசாரிக்க வேண்டும்” என மனோ கணேசனும், “54 தொழிற்சாலைகளை ஜேவி;பி யினர் எரித்ததை மறப்பதற்கில்லை” என -ஜீவன் தொண்டமானும் தம் உரையில் கருத்து தெரிவித்திருந்தனர்.
மொத்தத்தில், பட்டலந்த படுகொலைகளை விமர்சிக்கும் அதே போர்வையில், மலையக மக்களின் பொருளாதார நிலைமைகள் குறித்தும் ஒரு பிடி பிடித்திருந்ததை நாம் அவதானிக்க கூடியதாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும், இதே தலைமைகள்தாம், ஒருவர் மாறி ஒருவராய் 50 ஆண்டுகள் மலையகத்தை ஆட்சி புரிந்து வந்தவர்கள் என்ற உண்மையையும் நாம் மறப்பதற்கில்லை.
ஏனெனில் மலையக மக்களின் வேதனம் குறித்து அல்லது வீட்டுக் குறைபாடுகள் குறித்து முழக்கமிடும் இதே தலைமைகள், நேற்று வரை, என்ன செய்தனர் என்ற கேள்வி மனதை குடைவதாகத்தான் உள்ளது. ஏனெனில், இவர்கள் பாராளுமன்றம் மாத்திரமில்லாமல் மாகாண சபை, உள்ளுர் அதிகார சபை என எங்கெங்கு அதிகாரங்கள் குவிந்திருந்ததோ அதையெல்லாம் வாரி சுருட்டி விட, இதே தலைமைகள்தாம் கடந்த காலங்களில் பின் நின்றதாயில்லை. நாங்கள்தான், “மலையக மக்கள்” என்றும் சரி அல்லது இதுவே ‘எமது தேசியம்’ என மனோ கணேசன் போன்றோர் கூறினாலும் சரி, இதுவே இவர்களது அரசியலானது. ஆனால் இத்தனை காலமும், இப்படியாக அதிகாரங்களை குவித்து கொண்ட இவர்கள், ஆக மொத்தத்தில், கடந்த காலங்களில் செய்ததுதான் என்ன என்ற கேள்வி மாத்திரம் எஞ்சி நிற்பதாகவே உள்ளது. நிலசீர்திருத்த சட்டமாகட்டும் அல்லது காணியுரிமை சட்டமாகட்டும் அல்லது சம்பள உயர்வுகள் ஆகட்டும், இவர்கள் மலையக மக்களின் ஒட்டுமொத்த விடயங்களில் எதைத்தான் செய்தார்கள் என்பது பிரச்சினையாகின்றது. இக்கேள்வியின் பின்னணியிலேயே, இவர்களின் கடந்த காலங்கள், பற்றிய சந்தேகமும் எழுந்தபடி இருப்பதானது இச்சந்தேகங்களுக்கு பக்கபலம் சேர்ப்பதாக உள்ளது. ஆனால் இன்று இவர்கள், மலையக மக்களின் சார்பிலேயே, நாம் அரசுக்கு முன்வைக்கும் கோரிக்ககைகள் இவை என இவர்கள் ஜேவி;பி அரசுக்கு வைக்கும் சவால்களானது சிரிப்பைத்தான் வரவழைக்கின்றது. இந்த பின்னணியிலேயே, இவர்கள் இன்று “இதைசெய்-அதைசெய்” என்று அரசுக்கு குரல் கொடுக்கும் போது, கடந்த 50 வருடமாய் இவர்கள் செய்ததென்ன என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கின்றது.
பகுதி 2
மலையக ஆசிரிய சமூகத்தை நாங்களே உருவாக்கிக் கட்டி காத்து, நடத்தி வந்திருக்கின்றோம் என்ற ஜீவனின் முழக்கம், இன்று, புரியாத புதிராகவே தென்படுகின்றது.
“ஸ்ரீபாத கல்லூரியின் மூலமாக ஆசிரியர்களை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம்” என்று ஜீவன் தொண்டமான் கூறுவது சற்றே கேள்விக்குறியாகவே படுகின்றது. இது மனதை வருடிக்கொடுத்தாலும், உண்மை யாதென்ற கேள்வி நெருடாமல் இல்லை. ஜெர்மன்-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே, செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே, ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியானது உருவாக்கப்பட்டது என்பது பதிவு. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எங்கிருந்து வந்தது என்பதும் கல்லூரியின் உருவாக்கத்தில் அது எந்த ஒரு பங்கினையும் வகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை என்பது ஒப்பந்தத்தின் சரத்துக்கள் முன்வைக்கும் விடயமாகின்றது.
1985இல் உருவாக்கப்பட்ட இக்கல்லூரியின் ஒப்பந்த சரத்துக்களுக்கு ஏற்ப 75 சதவீதமானோர், தோட்டபுற பிள்ளைகளை சார்ந்தவர்களுக்கும், மிஞ்சிய 25 சதவீதமானது ஏனைய சமூகத்தினருக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம் கூறும் அடிப்படை அம்சங்களாகும். ஆனால் இக்கல்லூரியானது, முதன் முதலாய் உயிர் பெற்று, நடைமுறைக்கு வந்தபோது கிட்டத்தட்ட 80 சதவீதம் பெரும்பான்மை இனத்தவர்க்கும், 20 சதவீதம் மாத்திரமே, தோட்ட பிள்ளைகளுக்கும் வழிவகை செய்யும் வகையில் இதன் விதிமுறைகள் பெருந்தேசியவாதிகளால் மீளமைப்பு செய்யப்பட்டு இருந்தன.
இச்சூழலில், ஹட்டனை சேர்ந்த இரண்டு முக்கிய தொழிற்சங்கங்களும் (வெள்ளையன்-வேலுபிள்ளையின் தொழிலாளர் தேசியசங்கம், செங்கொடிசங்கம் போன்றவற்றுடன்) சிறப்க்ச் சட்டத்தரணிகளும் (சச்சிதானந்தம் முதலானோர்) இணைந்து ஒரு மகஜரைத் தயாரித்து, பல்வேறு அமைப்புகளுக்கும் தந்து அவர்களைத் தனிப்படச் சந்தித்தனர். அவர்கள் அப்படி சந்தித்த முக்கிய ஸ்தாபனங்களில் ஜெர்மனின் ஜீடிசியும் (புவுணு), இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். ஆனால், திரு.தொண்டமான் அவர்களோ, இது பற்றி தான் முற்று முழுதாக அறிந்திருக்கவில்லை என ஒப்புக்கொண்டது மாத்திரமன்றி, குழுவினரின் அழுத்தம் காரணமாக, தேவையான குரலை தான் எழுப்ப போவதாக உறுதி கூற நேரிட்டது. இதேவேளை, ஜெர்மனிய ஜீடிசி (புவுணு), இத்தகவல்களின் பாரியதன்மையை உணர்ந்தபோது, ஒப்பந்தத்தின் சரத்துக்களுக்கு ஏற்ப அன்றி முரண்படும் இந்நடவடிக்கையானது, ஜெர்மனிய தூதரகத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டாம் என்றும், உடனடியாக அவர்கள் ஒப்பந்தத்தின் சரத்துக்கள் முழுமையாக அமுல்;படுத்த போவதாகவும் உறுதி கூறினர்.
ஆனால், கடந்த 50 வருடகாலத்தில் இதுவே கதையானது. அதாவது, மலையகத்தில் நடந்து முடிந்த அனைத்து நல்ல விடயங்களுக்கும், தங்களின் பெயரை எழுதிப் போட்டுக் கொள்வது, இதொகாவுக்கு, வழமையானதாகிவிட்டது. ஆனால் வரலாறானது மோசமாகவே காட்சி தருகின்றது. உதாரணமாக, வாக்காளர் பறிப்பு அல்லது ஸ்ரீமா-சாஸ்த்திரி நாடு கடத்தல் ஒப்பந்தம் அல்லது நட்சா போன்ற நிலப்பறிப்பு திட்டங்கள், போன்றவற்றை கணக்கிலெடுக்கும் போது ஒன்று பாராமுகம் கொண்டு இருக்க இந்தத் தலைமைகள் தலைபட்டன அல்லது மறைமுகமாக இச்செயல்களில், பங்கேற்றன. இது விரிவாக ஆய்வுக்குரிய ஒன்றேயாகும். இந்நிலையில், பித்தளை வெங்கலத்தை பார்த்து இளிக்கும் இளிப்பும், இங்கே இடம்பெறவே செய்கின்றது. இச்சூழ்நிலையில்தான் நாளாந்த ரூபாய் 1700 சம்பளம் என்ற அறிவிப்பும் இன்று மேடையேற தொடங்கி உள்ளது.
பகுதி 3
ரணில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவேன் என்று சில காலத்தின் முன்னர் முழங்கியிருந்தார். இப்படி முழங்கியதிலும் அவர் எந்த மேடையில் வைத்து இப்படி முழங்கினார் என்பது மிகுந்த சுவாரஸ்யமானது. திகாம்பரம், மனோ கணேசன் போன்றோரின் பிரசன்னத்தில் தான், அவர்களின் மேடையிலேயே இருந்து முழங்கியபோது சூழ்ந்திருந்த, சூதுவாதற்ற தொழிலாளர் பெருமக்கள், இவ்வறிவிப்பை கேட்டு, பெருத்த ஆரவாரத்தில் ஈடுபட்டனர் என்பதனையும் மறப்பதற்கில்லை. அதுவோ, ஜனாதிபதித் தேர்தல் காலம் வேறு. ஆகவே மேற்படி அறிவிப்பானது, ஓர் அரசியல் அறிவிப்பு என்பதை விட வேறில்லை என்பது வெளிப்படை. முக்கியம் யாதெனில், இப்படி மலையக மக்களை எப்படி ஏமாற்றினார்களோ அதற்கு சற்றும் குறைவுபடாமல், அதற்கு போதிய ஒத்தாசையை வழங்கியவர்கள் இதே ஜீவன்-திகாம்பரம்-மனோ கணேசன் கோஸ்டியினர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்கள் இன்று கூறுவது என்ன? 'உங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்” என இவர்கள் 'இன்று" அரசுக்கு யோசனை கூறுகின்றனர். விடயம் இப்படி என்றால், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இதே போன்று ரணிலுக்கும் பக்கபலமாய் இருப்பதும், யோசனை கூறுவதும் இவர்களே என்றாகின்றது. இப்படி இவர்கள் ரணிலின் உதவிக்கு வந்து சேர்ந்திருப்பதும் இதேப்போல் முதலாளிமார் சம்மேளனம் இன்று கூட்டுஒப்பந்தத்தை நினைவுபடுத்தி காட்டுவதும் உண்மையில் தற்செயலாக நடப்பதாய் இல்லை. இதற்குத்தான் இந்த மலையக அரசியல் கோஸ்டியும் இதற்கான பங்களிப்பை வழங்குகின்றனர் என்பதில் கருத்து வேறுபாடில்லை. இதேவேளை, இதற்கான மற்றொரு பங்களிப்பை மலையக புத்திஜீவி ஒருவர்தான் ஆற்றினார் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
இலங்கையின் உயர் நீதிமன்றத்தில், இப்புத்திஜீவியானவர் வழக்கொன்றை தாக்கல் செய்து, அதற்கூடு, இதுவரை சட்டவலுவற்றதாய் காணப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு சட்டவலு சேர்த்த பெருமை இவரையே சாரும் என்றால் அது மிகையாகாது. அதாவது சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த மதிப்பை இவர் பெற்றிருக்கின்றார் எனக்கூட கூறலாம். இது ஒருபுறம் இருக்க மலையகத்தின் பிரட்டு மீண்டும் அடிப்படுகின்றது. அதாவது மீண்டும் ஒரு சம்பள உயர்வு ஏறியுள்ளது. ரூபாய் 1700 கிட்டுமா-கிட்டாதா என்பதே கேள்வியாகின்றது.
பகுதி 4
1700 ரூபாய் சம்பள உயர்வானது, புதிதான ஒன்றல்ல. அதாவது, இது நேற்று அல்லது முன்தினம் முன்வைக்கப்பட்ட புதிதான ஒன்றல்ல. வாக்குறுதிகளுக்கு பேர் போன ரணில் விக்கிரமசிங்க அவர்களே இதனை முதன் முதலாய் முன்மொழிந்தவர் என்பது நினைவூட்டத்தக்கதே. தேர்தல் காலம் நெருங்க நெருங்க திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள், மலையக மக்களை வளைத்து போட இதனை முன்வைக்கவே செய்தார் (தேர்தல்: 21.09.2024). இதனை அவர், மக்களை நம்ப செய்யும் பொருட்டு, கெசட் (புயணநவவந) ஒன்றையும் அவிழ்த்துவிட்டதாக கதை வேறு அளந்திருந்தார். இதற்கு மேலாக, விடயத்துக்கு மேலும் சுதி சேர்ப்பது போல் இதனை, ஜீவன் தொண்டமான் பிரசன்னமாயிருந்த இதே மேடையிலேயே அறிவித்திருந்தார். மக்களும் கரகாட்டம் முதல் அனைத்து வகைப்பட்ட ஆட்டங்களையும் ஆடி தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர். ஆனால் வாக்குறுதிகளை வழங்குவது என்பது இலங்கை தொழிலாளர் காங்கிஸிற்கு கைவந்த கலையாகின்றது. உதாரணமாக எமது மதிப்பிற்குறிய முன்னால் கால்நடை அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் இதனை போன்றே ஒரு மேடையில் வைத்து மக்களுக்கு வீட்டு உறுதிகளை வழங்கி கௌரவித்திருந்தார். 'இன்றிலிருந்து, நீங்கள் குடியிருக்கும் வீடு, உங்களுக்கு சொந்தம்" என அதிரடி அறிவிப்பையும் செய்திருந்தார். இதே தாத்தாவின் தலைமுறையில் வந்த ஜிவன் தொண்டமான் அவர்களும் இந்த 1700 ரூபாய் அறிவிப்பை செய்திருந்தார் என கூறினால் அது மிகையாகாது. ஆனால், இன்று வரை இந்த தொகையும் தொழிலாளர் கைகளுக்கு கிட்டியதாக இல்லை. ஆனால் இன்று அவர்கள் கூறுவது எங்களை சற்றே தடுமாறத்தான் வைக்கின்றது. இந்த அரசு மலையக மக்களுக்கு ரூபாய் 1700 ஐ வழங்கியாக வேண்டும் என்ற யோசனையை அவர்கள் முன்வைக்கின்றார்கள். இதே வேளை 'நீங்கள்தான் 54 தொழிற்சாலைகளை எரித்தவர்கள்" என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள். இதெல்லாம் சூதுவாதற்ற பிரகடனங்கள்தான் என்று கொள்வதற்கில்லை. "நீங்கள் கம்பனிகளிடமிருந்து ஒரு ரூபாய் தன்னையும் கூட்டி பெற்றுக்காட்டுங்கள்" என சவாலும் விடுகின்றார்கள். இவை அனைத்தும் கம்பனிகளுக்கும், இவர்களுக்கும் இடையேயான அந்தரங்க உறவினை ஒருவகையில் எடுத்துக்காட்டுகின்றதா என்பதே கேள்வியாகின்றது. இதற்கு சற்றும் சோடை போகாத விதத்தில் எமது 'பெற்றோல் கலன் புகழ்" பதுளையின் சுரேஸ் வடிவேல் அவர்களும் பின்வருமாறு கூறியிருந்தார்: "மனுஷ நாணயக்காரத்தான் இவ்விடயத்தில் பாராட்டப்பட வேண்டியவர்" என்றார்.
இப்படியாக இவர்கள் ஆளுக்காள் 1700 ரூபாய் சம்பளம் தொடர்பில், தத்தம் நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். தேசிய வீரர்இ மனோ கணேசன் அவர்கள் தன்னளவில் ஒரு அறிக்கையை வெளியிடவும் தவறவில்லை: “இது இடம்பெற போவதில்லை. மலையக மக்களுக்கு, உடனடியாக வீடுகளை கட்டித் தர வேண்டும்!”(24.03.2024). இதேபோன்று, திகாம்பரம் அவர்களும் பின்வருமாறு கூறினார்: “முடிந்தால் செய்து காட்டுங்கள். எங்களை திட்டி தீட்டுவதால் பயனில்லை. மலையக வாழ்வில் மாற்றம் ஏதும் ஏற்படப் போவதில்லை.”
பகுதி 5
சர்வதேச ரீதியாக, தோட்ட தொழிலாளர்களின் வேதனம் என்பது, ஒரு பேசு பொருளாகவே இருந்திருக்கின்றது. இந்தியாவை பொறுத்தமட்டில் தோட்ட தொழிலாளர்கள் எனப்படுபவர் கேரளா, தமிழ்நாடு, அசாம், கர்நாட்டக என பல மாநிலங்களில் வாழ்கின்றார்கள். இதற்கேற்ப அவர்களின் தோட்ட தொழிலாளர் சம்பளமும் தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, கேரளாவை எடுத்துக் கொண்டால் அங்கே காணப்படும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளமானது அசாமுடன் அல்லது தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது வேறுபட்டே நிற்கின்றது. கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை எடுத்துக்கொண்டால், அங்கே தோட்ட தொழிலாளரின் வேதனம் சராசரியாக, நாளொன்றுக்கு ரூபாய் 500 ஆக காணப்படுகின்றது (இந்திய ரூபாயில்).
இத்தொகையானது இலங்கையில் தோட்ட தொழிலாளர் பெறும் சம்பளத்துடன் ஒப்பு நோக்கும் போது பாரிய வீழ்ச்சியை காட்டுவதாயுள்ளது. அதாவது, இந்திய தொழிலாளர் பெறும் வேதனமானது, கிட்டத்தட்ட நாளொன்றுக்கு ரூபாய் 1600 ஆக இருக்கும்போது, இலங்கை தொழிலாளர் பெறக்கூடிய வேதனமானது நளொன்றுக்கு 1300 ஐ தாண்டுவதில்லை. இதனுடன் அவ்வவ் நாடுகளின் வாழ்க்கை செலவை ஒப்பிட்டு நோக்கும் போது விடயத்தின் அரோகரா அம்பலமாகின்றது. இத்தனைக்கும் ஒரு காலத்தில் இலங்கையின் மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் ஒப்பீட்டளவில் மிக கூடியதாகவே காணப்பட்டது. காரணம் வேறு எந்த நாடுகளையும் விட இலங்கையின் மலையகத்தில், தொழிலாளர்களின் தொழிற்சங்க இயக்கமானது வலுவானதாகவும் நன்கு வேரூன்றியும் இருக்க காணப்பட்டதாகும். லங்கா சமசமாஜ கட்சியினரால் தொடங்கப்பட்ட தொழிற்சங்க இயக்கமானது பின்னர் நடேச ஐயராலும் அதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விட்டு பிரிந்த வெள்ளையன்-வேலுப்பிள்ளையாலும் (தொழிலாளர் தேசிய சங்கம்) அதன் பின்னர், செங்கொடி சங்கத்தாலும் வளர்த்தெடுக்கப்பட்ட உண்மை அடிப்படையானது. இதன்போது கொல்லப்பட்ட உயிர் நீத்த தியாகிகளும், சிறை சென்ற தொழிற்சங்க தியாகிகளும் நூற்றுக்கணக்கானோர். இதனாலேயே, மலையக தொழிற்சங்க இயக்கமானது வலு நிறைந்ததாய் அன்று காணப்பட்டது. அதாவது தோட்ட தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தி மிக உறுதியாய் நின்றது (இப்பின்னணியிலேயே தொண்டமான் சங்கத்தின் குரலும் கணிக்கத்தக்கது). ஆனால், மலையகத்தில், இன்று தொழிற்சங்க இயக்கமானது கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு பின் இன்று தனது சரிவு நிலையை எட்டியுள்ளது. இதற்கான காரணங்கள் நுணித்து நோக்கத்தக்கன. இப்பின்னிணியிலேயே ரூபாய் 1700 தொடர்பான பல்வேறு கதைகள் இதே தலைமைகளால் முன் வைக்கப்பட்டுள்ளன. இன்றைய அரசு, சட்டரீதியாக, 1700 ரூபாவை சிபாரிசு செய்திருந்தாலும் முதலாளிமார் சம்மேளனம் இதற்கு ஒன்றுபடுவதாக தெரியவில்லை. ஏனைய மலையக தொழிற்சங்க தலைமைகளோ, இதனை பார்த்து உள்ள+ர கொக்கரித்து கொண்டிருப்பதாய் கூட நாம் நம்ப துணியலாம். இச்சூழ்நிலைகளில் வேறு வழியின்றி ஜேவிபி அரசானது ஒரு பேச்சுவார்த்தையை நடத்த எம்மிடம் திட்டம் உண்டு என கூறியிருப்பதும் அவதானிக்கத்தக்கது.
பகுதி 6 - ஜேவிபியின் திட்டங்கள்.
பட்டலந்த படுகொலை அறிக்கையானது, பல அதிர்ச்சி தகவல்களை உள்ளடக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. அரசாலேயே நியமிக்கப்பட்டு நிபுணர்களை கொண்டு எழுதப்பட்டதாகக் கூறப்படும் இவ் பட்டலந்த அறிக்கையானது வருடக்கணக்கில், அதாவது 21 வருடங்களாய் கிடப்பில் போடப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டு இருந்த இவ் அறிக்கை இன்று புதிய அரசால், வெளியிடப்பட்டுள்ளது. இது யார் செய்த புண்ணியத்தாலேயோ 21 வருடங்கள் கழிந்த நிலையில் இன்று பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் திணைக்களத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இனி இதில் யார் யார் குற்றஞ்சாட்டப்படப் போகின்றார்கள் என்பதெல்லாம் கேள்வியாகின்றது. வருகின்ற செய்தி துணுக்குகளையெல்லாம் கவனமாக பார்க்கும் போது, திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொறுப்பானவர்தான் என குற்றஞ்சாட்டப்பட்டு இழுத்தெடுக்கப்படுவாரோ அறியோம். (இதனாலோ என்னவோ திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களை போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவும் சீனாவும் விருந்துக்கு வரவழைத்து மகிழ்கின்றன. (இவ்வகை விருந்துகளுக்கு பின்னால் என்ன இருக்க கூடும் என்பதும் வேறு கேள்வியாகின்றது). இச்சூழ்நிலையில்தான், அன்று தொழில் புரிந்திருக்ககூடிய, ஓர் அரச படப்பிடிப்பாளரின், பேட்டியும் பல்வேறு சமூக வலைத்தளங்களில் காணப்படுகின்றது. அவரது கூற்றின் பிரகாரம், கண்கள் கிழிப்பட்டு வெளிவந்த நிலையில், எலும்புகள் முறிபட்டு முடமாகிய நிலையில் பின்னர் நெற்றிகள் பிளக்கப்பட்டு சிதைவுற்ற நிலையில் பல்வேறு கைதிகளை தாம் பார்த்துள்ளதாக இவர் கூறுகின்றார். மேலும், இவர்களில் பலரும் இன்று கொல்லப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றார். இவை, மனதை அதிர வைக்கும் விடயங்கள்தாம். இதனை பட்டலந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதா இல்லையா என்பதே கேள்வியாகின்றது. ஆனால், இன்றைய இவரது கூற்றுகளை நிதானித்து, அவதானமாய் நோக்குமிடத்து இவரின் கூற்று பிரகாரமே ஒரு சிலரை குற்றவாளி கூண்டில் ஏற்ற போதிய விடயங்களை (சான்றுகளை) தருவதாய் உள்ளது எனலாம். இதனுடன் பட்டலந்த அறிக்கையும் சேரலாம் அல்லது சேராமலும் விடலாம்.
ஆனால், இவ்விடயங்கள் அனைத்தும் இரண்டு முன்று விடயங்களை முன்னிறுத்துவதாய் உள்ளன. அவற்றில் ஒன்று இவ்விடயங்கள் ஜேவிபியின் கடந்த காலத்தை அழுத்தம் திருத்தமாய் நினைவூட்டத்தக்கது என்பதுவே அதுவாகும். வேறு வார்த்தையில் கூறினால், ஜேவிபியினர் கடந்து வந்த பாதை, துயர் கலந்த பாதை என்பதனை இவை சந்தேகமற நினைப்பூட்டுகின்றன.
இதே போன்றதுதான் மலையக மக்களின் கடந்த காலமும் துயர் நிறைந்த துன்ப கேனியது அது. அவர்களின் வரவு, இருப்பு, மலையகத்தின் உருவாக்கமும் அவர்களின் வேர்வையுடனும் துயரத்துடனும் கண்ணீருடனும் தொடர்புபட்டது. இதற்கான எழுத்துக்கள் தேயிலை தோட்டம் முதல் அழுகை கோச்சி வரை காலம் காலமாய் பிரதிபலித்து நிற்கின்றன. இக் கேள்வியையே, இன்று, ஜேவிபி கையேந்தியுள்ளது.
பகுதி 7 - எதிர்வினைகள்
முதலாளிமார் சம்மேளனமும் மலையக தலைமைகளும் ரூபாய் 1700 விடயத்தை எப்படி, எவ்வடிப்படையில் நோக்குகின்றனர் என்பதனை மேலே பார்த்தோம்.
ஜீவன் தொண்டமான் முதல் மனோ கணேசன் முதல் இவர்கள் அனைவரும் எவ்வெவ்வழியில் 'வரவேற்கின்றோம்" என கூறுகின்றார்கள் என்பதனையும் மேலே வாதித்தோம். இவர்கள் அனைவரும் இதனை பேச்சளவிலேயே கூறுகின்றார்கள் அல்லது உள்நோக்கம் கொண்டதாய் இவர்களது பேச்சக்கள் அமைந்துள்ளன என்பதெல்லாம் இன்று வெட்ட வெளியாகியுள்ளது. இதுவரையில் வேதன உயர்வு தொடர்பாய் உருப்படியான ஒரு உண்ணாவிரதமோ அன்றி பாரிய தொழிற்சங்க போராட்டங்களோ நடந்ததாய் இல்லை. உண்மையில் வாக்கு-குடியுரிமை பறிப்பு சட்டங்கள் அல்லது ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் அல்லது நட்சா திட்டம் போன்ற கேவலமான, மக்கள் விரோத திட்டங்களின் போது கூட மலையக தொழிற்சங்க போராட்டங்கள் யாதொன்றும் இடம்பெற்றதாய் இல்லை. பாரியளவில் எதிர்ப்புணர்வை காட்ட மக்கள் இறங்கியதாயும் இல்லை (அவர்கள் தயாராக இருந்த போதிலும். இத்தகைய கேவலமான திட்டங்களுக்கு தங்கள் மௌனங்களின் மூலமாக அந்தரங்க ஆதரவை அரசுக்கு வழங்கினார்களோ என்பதும் கேள்வி. இதே போன்று பல்வேறு நாடுகளின் ஒப்புதல்களும் இதற்கு தேவைப்பட்டதா என்பது மறு கேள்வி). எனவே, இப்பின்னணியில்தான், 1700 ரூபாய் கேள்வியும், இன்று மலையகத்தில் மேடையேறியுள்ளது.
ஜேவிபியினர் இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அவர்களின் உள்நோக்கம் பேச்சுவார்த்தையில் அழுத்தங்கள் தருவதற்கூடு கம்பனிகளையும் ஏனைய சக்திகளையும் வளைத்து போடுவது. ஆனால் ஜேவிபி முகம்தருவது இரண்டு சவால்களாகும். ஒன்று, அதனது துயர் மிகுந்த கடந்த காலத்தில் இருந்து எழக்கூடிய நீதி சார்பான சிந்தனை. மற்றது மலையக மக்கள் இம்முறை ஜேவிபியை அங்கீகரித்து அவர்களது பிரதிநிதியை தமது பிரதிநிதிகளாக தேர்வு செய்த விடயமாகும். அதாவது, இப்போது, தமது குரல் ஜேவிபிக்கூடாக ஒலிக்கட்டும் என அவர்கள் சமிக்ஞை காட்டி உள்ளனர்.
இதனால், ஜேவிபி முன் இருப்பன இரண்டு கடமைகளாகின்றன. இச்சூழலில்தான், ஜேவிபி அரசானது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறக்கட்டளை தொடர்பில் ஒரு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. ஜீவனின் 54 தொழிற்சாலைகளை எரித்த குற்றச்சாட்டு இதற்கு பக்கபலமாய் இருந்திருக்கலாம். அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொருளாதார கணக்கு வழக்குகள் அவ்வளவு திருப்தி தராததாக இருந்திருக்கலாம். உதாரணமாக முன்னால் ஓய்வுபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கணக்காளர் ( இ.தம்பிராஜா, முன்னாள் கணக்காளர். அவரது கடிதம் - நந்தலாலா டிசம்பர் 94) முன்பு வைத்த முறைப்பாடுகள் நன்கு பதியப்பட்டே உள்ளன. இச்சூழலில் இலங்கை பொருளாதார கணக்குகள் சம்பந்தமாக ஒரு விசாரணை வேண்டுமென கடந்த காலத்தில் பல கோரிக்கைகள் எழாமலும் இல்லை. (வெளிநாட்டு நிதி முதல் உள்நாட்டில் விற்று தீர்த்த காங்கிரசின் பல்வேறு சொத்துக்கள் முதல் சந்தா கொடுப்பனவுகள் வரை பல கோரிக்கைகள் கடந்த காலங்களில் எழுந்துள்ளன). ஆனால், மலையக மக்கள் கோருவதோ சம்பள உயர்வு என்பதே.
தமது துயர் மிகுந்த கடந்த காலமானது, இதனை ஒத்த, மலையக மக்களின் துயர் மிகுந்த வரலாற்றில், நீதிக்கான ஆதரவை தந்து, கூடவே அவர்களை ஒன்றிணைக்க முனையும் வேட்கையும், மேலும் மலையக மக்களானவர் இன்று ஜே.வி;.பியினரை உள்ளுர அங்கீகரித்து அவர்களின் பிரதிநிதிகளை தமது பிரதிநிதிகளாக ஏற்றுள்ளதும், எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களில், உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்ற தேவைப்படும் மலையக மக்களின் ஆதரவும், 1700 ரூபாய் தொடர்பில், ஜேவிபியினரை ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வைத்து, ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்க செய்யக்கூடும். இருந்தாலும், இது தொடர்பில் நாம் பொறுத்திருந்து பார்ப்பது நல்லது எனலாம்.