NetFlix இல் வெளியாகியிருக்கும் Adolescence என்ற குறுகிய தொலைக்காட்சித் தொடரைப் பதின்மவயதினருடன் தொடர்பாக இருக்கும் அனைவரும் பார்க்கவேண்டும். நான்கு பகுதிகளைக் கொண்ட இதன் முதல் தொடர் தொடர் என் ஆசிரியர் வேலையுடனும், மொழிபெயர்ப்பாளர் வேலையுடனும் தொடர்பானதாகவும், நான் பார்த்திருந்த காட்சிகளைக் கொண்டதாகவும் இருந்ததால், ஒரேயடியாக இருந்து முழுவதையும் பார்த்துமுடித்தேன்.
வன்முறையின் உச்சக்கட்டம்தான் கொலை. ஆனால், வன்முறையாளர்கள் எல்லோரும் கொலைசெய்வதில்லை. கொலைசெய்வதற்கு உளவியல்ரீதியான காரணங்கள்தான் ஏதுவாக இருக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள். சக மாணவி ஒருவரைக் கொலைசெய்வதற்கு ஒரு 13 வயதுச் சிறுவனுக்கு எவை உந்துதலாக இருந்தன என்பதைச் சொல்லும் இந்தத் தொடர் சமூக ஊடகங்களின் செல்வாக்குப் பற்றியும் எச்சரிக்கிறது.
பொதுவில், தன் செயல்களுக்குப் பொறுப்பெடுக்காத, சமூக விரோதக்குணம் கொண்ட psychopathஆக இருப்பவர்கள்தான் கொலைசெய்கிறார்களெனக் கூறப்பட்டாலும்கூட, அந்த மாணவன் அப்படியானவன் என்பதற்கான அறிகுறிகள் இதில் காட்டப்படவில்லை, அப்படியிருந்திருந்தால், அதனைக் குணப்படுத்த முடியாது என்றாலும், நேரத்துடன் கண்டறியப்பட்டால் சிகிச்சைகளால் அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இதில் அச் சிறுவனுக்கு சுயமதிப்பின்மை, தன் உணர்சிகளைக் கையாளத் தெரியாமை என்பன இருந்தமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இவ்வகையான பிரச்சினைகளுக்கு உதவக்கூடிய தொடர்பாடலைச் சந்ததி இடைவெளி முன்னெப்போதையும்விட அதிகமாக இப்போது தடைசெய்கிறது. அதுவும் ஆண் பிள்ளைகள் பொதுவில் தங்களைப் பற்றிக் கதைப்பதேயில்லை. எனவே உரையாடல்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டியது பெற்றோரின் கடமையாகும் என்பதையும் இது விளங்கவைக்கிறது.
30 வருடங்களாக ரொறன்ரோவில் தமிழ் கற்பிக்கும் என் அனுபவத்தில், மாணவர்களின் கற்கும் ஆர்வம், மற்றவர்களுக்கு மரியாதைசெலுத்தும் பண்பு, பணிவாக நடக்கும் தன்மை எல்லாமே காலத்துடன் மாறிக்கொண்டிருப்பதையும், அம்மா, அப்பா பிஸி, அவைக்கு எங்களோடை கதைக்கநேரமில்லை என்ற குற்றச்சாட்டு/தவிப்பு மட்டும் மாறாமலிருப்பதையும் பார்க்கிறேன். அம்மா சமைக்கும்போது அவவுடன் கதையுங்களேன், சாப்பிடும்போதாவது அப்பாவுடன் கதைக்க முயற்சியுங்களேன், வகுப்புக்குக் கூட்டிவரும்போதாவது அவையோடை கதைக்கலாம்தானே என்றால் அப்போதும் கதைக்கமுடியாது என்பதற்கு ஏதோ ஒரு காரணம் அவர்கள் சொல்வார்கள். பிள்ளைகளுக்காக உழைக்கிறோமென ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான பெற்றோருக்குப் பிள்ளைகளின் வாழ்வில் என்ன நடக்கிறதென்பது தெரிவதில்லை.
இதைத்தான், அந்தச் சிறுவனின் பெற்றோர் காலம்கடந்து உணர்கிறார்கள். “He wanted a computer, so we got him the computer (கொம்பியூட்டர் வேணுமெண்டான், வாங்கிக்குடுத்தம்)” இப்படியாகப் பலதைச் சொல்லிச்சொல்லி இறுதியில் “I used to play with him. Then the business took off. I had to leave at 6 and wouldn’t get back till 8 (முந்தியெல்லாம் அவனோடை விளையாடுறனான், பிறகு வியாபாரம் சூடுபிடிச்சுது. 6 மணிக்கே நான் போகவேண்டியிருந்துது, 8 மணி வரைக்கும் திரும்பி வாறதில்லை).” என அப்பாவும் “I was home earlier but I did no better (நான் நேரத்தோடை வீட்டுக்கு வந்திருந்தன் ஆனாலும் எதையும் செய்ததில்லை)” என அம்மாவும் கவலைப்படுகின்றனர். பிள்ளைகள் விரும்பியதெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோருக்கு நேரத்தைக் கொடுக்க மட்டும் முடியாமலிருக்கிறது.
மகன் அறைக்குள் இருக்கிறான், என்ன தீங்கு வரப்போகிறதென நினைத்ததாகவும் பேசிக்கொள்கிறார்கள். நேரம்கெட்ட நேரத்தில் வெளியில் இருக்கும்போது ஏற்படும் தீங்குகள் வீட்டுக்குள் சமூக ஊடகங்களில் இருக்கும்போதும் ஏற்படலாம். சமூக ஊடகங்களில் பிள்ளைகளின் செயல்பாடுகளை நாங்கள் எவ்வளவுதான் கண்காணிக்க முடியுமென்ற கேள்வி எழுந்தாலும்கூட, எது சரி, எது பிழை என்பதைப் பிள்ளைகள் அறிந்திருக்கச் செய்வதும், ஏனையவர்களின் அபிப்பிராயங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாமலிருக்கப் பழக்குவதும், அடாவடித்தனத்திலிருந்து விலகியிருப்பதற்கான வழிவகைகளைச் சொல்லிக்கொடுப்பதும் சமூக ஊடகங்களின் செல்வாக்கு மிகுந்த இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதவையாகவுள்ளன. அத்துடன் திரைகள் எதுவும் பிள்ளைகளின் படுக்கையறையில் இருக்காமல் பார்ப்பதும் முக்கியமானது.
இதில் காட்டப்பட்டிருந்ததுபோல ஆசிரியர்களுக்கு, ஏன் பொலிசுக்குக்கூட மரியாதைகாட்டாத மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்குப் பங்கிருப்பதுபோல, பெற்றோருக்கும் பங்கிருக்கிறது. மேலும், மகன் இரவில் எங்கு செல்கிறான், அவனுக்கென்ன பிரச்சினைகள் இருந்தன என்பது எதுவுமே பெற்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட 13 மாதங்களின் பின்னர், குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போகிறேன் என மகன் சொன்னபோதுகூட, குடும்பத்தவர் எவருமே உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தமை அந்தக் குடும்பத்தில் உணர்ச்சிகள் பேசப்படுவதில்லை என்பதைக் காட்டியது. கடைசியில்தான் யதார்த்தம்புரிந்த மகளைப் பெற்ற நாங்களா, கொலையாளியான மகனையும் பெற்றோம் எனக் கவலையுறும் தந்தை, மகனின் கட்டிலிலிருந்து. “I’m sorry, son. I should’ve done better (மன்னிச்சுக்கொள் மகனே. நான் உன்னிலை இன்னும் கரிசனை செலுத்தியிருக்கவேணும்)” எனத் தான் குற்றம்செய்து விட்டதாக உணர்கிறார். பிள்ளைக்குப் பிள்ளை தேவைகள் வேறுபடுகின்றன என்பதையும் இது உணரவைக்கிறது.
Instagramஐ நான் அதிகம் பயன்படுத்துவதில்லை என்பதால், புண்படுத்துவதற்கென பயன்படுத்தப்படுவதாக இதில் கூறப்பட்டிருந்த பல்வகைமையான heart emojis Instagramஇல் இருக்கின்றதாவெனச் சின்ன மகளிடம் கேட்டேன். Instagramஐ இன்னும் update செய்யாததால் தனக்குத் தெரியவில்லை என்றவவிடம், Incel என்பதும் பிரச்சினையா என்றபோது, என் நோயாளரின் சிறுநீரகம் வேலைசெய்யவில்லை என்பதுதான் எனக்கு இப்போது பிரச்சினையாயிருக்கு என்றா. நல்லவேளையாகக் கரிசனைப்பட வேண்டிய விடயத்துக்குக் கரிசனைப்படும் நிலைக்குப் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என்பதில் எனக்கு ஆசுவாசமாக இருந்தது.
Incelஆக இருப்பதை, அதாவது பெண்களைத் தங்களால் கவரமுடியவில்லை என்பதை ஆண் என்பதன் கர்வம் ஏற்றுக்கொள்ள விடுவதில்லை. அதனால்தான் காதலை ஏற்றுக்கொள்ளாதபோது, பிரிந்துசெல்ல முற்படும்போது பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இப்போது மிக இளமையிலேயே அது நிகழுமளவுக்கு, சமூக ஊடகங்கள் சிறுவர்களைப் பிஞ்சிலேயே வெம்பிப் பழுக்கவைக்கின்றன என்பது வருத்தத்துக்குரியது. Instagram emojiகளைத் தேடிப்பார்த்தபோது, Adolescenceஇல் சொல்லப்பட்டதுபோன்ற emojis இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அவையும் வரக்கூடும். தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் உலகில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு, toxic masculinity இன் தாக்கம் உருவாகாமல் தடுப்பதற்கு அதிகம் உழைக்கவேண்டித்தானிருக்கிறது.
இந்தத் தொடரில் கூறப்பட்டிருந்த வெறுப்பைக் கக்கும் Instagram heart emoji பற்றி இணையத்தில் தேடிப்பார்த்தபோது, இதில் சொல்லப்பட்டதுபோன்ற emojis இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதுவும் விரைவில் வரக்கூடும். யாருக்குத் தெரியும். பிள்ளை ஒருவரின் நல்வாழ்வில் சூழலுக்கும் பங்கிருக்கிறது என்பதால் சமூக ஊடகங்களை உருவாக்குபவர்களும் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியமானது.
பதின்மவயதினரிடையேயான முக்கியமான பிரச்சினைகளையும், குற்றம்செய்யும் ஒருவரால் அவரின் குடும்பத்தினரதும், அதனால் பாதிக்கப்பட்டவர்களினதும் வாழ்க்கை எப்படிப் பிரட்டிப்போடப்படுகிறது என்பதையும் இந்தத் தொடர் காட்டுகிறது. One takeஆக எடுக்கப்பட்டதால், தொடரில் தொய்வும், சில விடயங்களில் லொஜிக்கும் இல்லாமலிருப்பதுடன், அந்தச் சிறுமி கொல்லப்படுவது வீடியோவில் பதியப்பட்டிருந்தபோதும் கொலையாளி charge பண்ணப்படவில்லை, accused ஆகவே பார்க்கப்படுகிறார். இப்படிச் சில குறைகள் இதிலிருந்தாலும், வேறுபட்ட interpretationகளைத் தரக்கூடிய காட்சிகளையும் உரையாடல்களையும் கொண்டிருக்கும் Adolescence பார்ப்பவர்களின் மனங்களை நிச்சயமாகத் தொந்தரவுசெய்யும். இந்தத் தொடரில் பிரச்சினைகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டிருந்தாலும், பிரச்சினைகள் இருக்கின்றன என்ற விழிப்புணர்வை இது தந்துள்ளது. இதனூடாக நல்ல விடயங்கள் நடக்குமென நம்புவோம். பதின்மவயதுப் பிள்ளைகளுக்கு நண்பர்களின் சகவாசம் முக்கியமானது, என்பதால், அவர்கள் முகம்கொடுக்கும் சவால்கள், அழுத்தங்கள் பற்றி அவர்களை விளங்கிக்கொள்ளும், அவர்களுக்கு உதவிசெய்யும் மனப்பான்மையுடன் அவர்களுடன் பேச முயற்சிப்போம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.