பதிற்றுப்பத்தில் சேரநாட்டு வளம் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி - 2), குரு நானக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை. -
முன்னுரைசங்க இலக்கியத் நூல்களான எட்டுத்தொகையில் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும். 'ஒத்த பதிற்றுப்பத்து’ என்ற அடைமொழி கொண்ட பதிற்றுப்பத்து சேரர் மன்னர்களின் வாழ்க்கையையும், அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. புறப்பொருள் பற்றிய செய்திகளைத் தொகுத்துரைப்பது அகவற்பாக்களால் ஆனது. புறநானூறுக்கும், பதிற்றுப்பத்துக்கும் ஒரு வேற்றுமை உண்டு. முடி மன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும் பற்றிய பாடல்களின் தொகுதி கொண்டது புறநானூறு. ஆனால் பதிற்றுப்பத்தோ சேரமன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி எனலாம். அத்தகைய சேரநாட்டின் வளம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பதிற்றுப்பத்து
பத்துப் பத்துப் பகுதிகளைக் கொண்ட நூலாதலின் இது 'பதிற்றுப்பத்து' என்று பெயர் பெறலாயிற்று. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவரால் ஒவ்வொரு சேர மன்னரைக் குறித்துப் பாடப் பெற்றமையின் இந்நூல் பத்துப் பத்துப் பகுதியாகக் கொள்ளத்தக்கது. இதிலுள்ள பத்துப் பத்துகளும் 'முதற்பத்து’, ’இரண்டாம் பத்து’ என்று எண்ணால் பெயர் பெற்றுள்ளன. தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றி யாதொரு செய்தியும் அறிய இயலவில்லை ஒவ்வொரு பாட்டும் இறுதியில் துறை. வண்ணம், தூக்கு, பெயர் என்பவற்றைப் புலப்படுத்தும் பழங்குறிப்புகள் உள்ளன.
ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தைப் பாடினார் புலவர். அதன் பாட்டுடைத் தலைவர், அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள் புலவர்க்கு அவர்கள் அளித்த பரிசில் முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம் உள்ளது. இப்பதிகங்கள் ஆசிரியப்பாவில் தொடங்கி, கட்டுரையாக முடிவு பெறுகின்றன. இவை சாசுலங்களில் கனைப்பெறும் மெய்க்கீர்த்திகளைப் போன்ற அமைப்பை உடையன.
சேரநாட்டு வளம்
சேரநாடு பொதுவாகச் சிறந்த வளம் பெற்ற நாடு. இருப்பினும் அந்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலத்துப் பொருளும் ஒருங்கே விளைந்து மலிந்திருந்தது என்பதை இரண்டாம் பத்தில் குமட்டூர்க் கண்ணனார் குறிப்பிடுகின்றார்.