இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 2 - ஶ்ரீரஞ்சனி -
ஊதா நிற மண்ணுள்ள அந்தக் கடற்கரையைப் பார்க்காமல் திரும்புவதற்கு எனக்கோ மனமிருக்கவில்லை. தேசிய பூங்கா ஒன்றுக்கு ஊடாகச் சென்று, காடு போன்ற பிரதேசமொன்றைத் தாண்டி Pfeiffer Beachஐத் தேடினோம். அதற்கான பாதையென மிகவும் ஒடுங்கிய வழியொன்றை google map காட்டியது. அதற்குள்ளால் கார் போய்வர முடியுமா என்பது பெரும் சந்தேகமாக இருந்ததால், அது சரியான வழிதானா என மகளுக்குக் குழப்பமாக இருந்தது. எனவே அதனைத் தாண்டிச் சற்றுத் தூரம் போய் வழியிலிருந்த கடை ஒன்றில் Pfeiffer Beachக்கு எப்படிப் போவதெனக் கேட்டோம். அந்த ஒடுங்கிய வழிதான் அதற்கான வழியென்றார்கள். இருட்டத் தொடங்கிவிட்டது, இப்படி ரிஸ்க் எடுத்து அங்கு போகத்தான் வேண்டுமா என்பது மகளின் கேள்வியாக இருந்தது. நானோ போய்த்தான் பார்ப்போமே என அடம்பிடித்து ஒருவாறாக அங்கு போய்ச் சேர்ந்தோம். அப்போது, அங்கிருந்தவர்கள் எல்லோரும் விலகிக்கொண்டிருந்தார்கள். அதனால் கொஞ்சம் பயம் பிடித்துக்கொண்டது. இந்த மண் ஊதாவாக இருக்கிறதா, வந்ததற்குப் பிரயோசனமா என்றா மகள். ஆனால் எனக்குப் பிடித்திருந்தது, இருப்பினும் நீண்ட நேரம் அங்கிருக்க முடியவில்லை. நன்கு இருட்ட முன்பாக அவசரமாக வெளியேற வேண்டியிருந்தது. வழியில் சூரியன் மறைவதைப் பார்த்தபின் நகருக்குள் நுழைந்தோம்.
அடுத்ததாக இன்னொரு இடத்துக்கும் போகவேண்டுமென்றிருந்தது. அன்று காலை Big Sur போகும் வழியில், Santa Cruz என்ற நகரைக் கடந்து சென்றபோது, ஓரிடத்தில் strawberry விற்றுக் கொண்டிருந்தனர். California strawberriesக்குப் பெயர்பெற்றது என்றா மகள். பழங்கள் மிகவும் பெரியனவாகவும், அடர் சிவப்பாகவும், அழகாகவும் இருந்தன. மாதிரிக்கு ஒன்றைச் சாப்பிட்டுப் பார்க்கலாமென்றிருந்தது. அப்படிக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களில் ஒன்றை எடுக்கட்டுமா என அருகே நின்ற ஒருவரிடம் கேட்டேன். அவர் தன் கையிலிருந்த கூடைகளிலிருந்த பழங்களில் ஒன்றை எடுக்கச்சொன்னார். “மிகவும் சுவையாக இருக்கிறது, என்ன விலை?” என்றேன். “இது உங்களுக்குத்தான்!” என சிறியதொரு கூடை நிறைந்த பழங்களை அவர் எனக்குத் தந்தார். “இல்லை, வேண்டாம், நாங்கள் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறோம்,” என்றோம். அது தன் அன்பளிப்பு என்றார் அவர். பின்னர் தான் ஒரு கடை வைத்திருப்பதாகவும் அங்கு வந்து தங்களின் strawberry பானத்தைக் குடித்துப் பார்க்கவேண்டுமெனவும் அன்பாகக் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் அவரும் அந்தப் பழக்கடையின் ஒரு வாடிக்கையாளர் என்பது தெரிந்தது. என்னுடன் சேர்த்து தன்னை ஒரு படம் எடுக்கும்படியும், அந்தப் படத்தைக் காட்டினால் கடையில் நாங்கள் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாமென்றும் மகளிடம் சொன்னார். அதனால் திரும்பிவரும்போது, அந்த மனிதரின் அன்புக்கு மரியாதை செலுத்தும்முகமாக, நேரமானாலும் கட்டாயம் அங்கு செல்லவேண்டுமென முடிவெடுத்திருந்தோம்.