முத்துமுத்துத் தேடலுண்டு முத்தம்மா உன்றன்
முன்னும் பின்னும் ஆடலுண்டு மொத்தமா
கத்தும்கடல் பாடலுண்டு கண்ணம்மா – அந்தக்
காதல்வரும் செந்தமிழே எண்ணம்மா
கானமுண்டு தேனுமுண்டு ககனமே – கன்னற்
கவிதை உண்டு தமிழ்வழங்கும் கணிதமே
மானமுண்டு வீரமுண்டு மனிதமே – கொஞ்சும்
மத்தளத்தில் மகிமையுண்டு புனிதமே
முந்துதமிழ் சிந்துதரும் முன்னமே – அங்கு
மொய்பவளம் அங்கையிடும் மன்றமே
சந்தமெனச் செந்தமிழும் சாற்றிடும் - அன்புச்
சாதனையில் சொந்தமெலாம் போற்றிடும்
காலமொடும் ஞாலமகள் காட்டுவாள் - கந்தக்
கருணையொடும் இன்பமெலாம் கூட்டுவாள்
தூலமென முத்தமிழும் துள்ளுவாள் - ஆடும்
தோகையவள் தொல்நடமும் மீட்டுவாள்
பூமழலை யாழினிது பெற்றிடும் - அந்தப்
பொன்மழலை தானமுது பொங்கிடும்
தேமதுரைத் தௌளமுது ஆர்த்திடும் - அன்புத்
தென்றலிடும் பூஞ்சோலை ஆக்கிடும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.