அன்பு மகளுக்கு அப்பாவின் கீதை !
மகளே ,
வாழ்க்கை பல வண்ணங்கள்
நிறைந்தது ,அதனை ரசிக்கவும்
அதன் அர்த்தங்களைப் புரிந்து
கொள்ளவும் என்றும்
முயற்சித்துக் கொண்டே இரு !
விஞ்ஞானம் சொல்லாத
கோணங்களில் வாழ்வு பல
பரிமாணங்களை கொண்டது
அவை காலத்தோடு புரிந்தும்
சில கடந்தும் போய் விடும் .
கலைகளில் என்றும் ஈடுபாட்டை
வைத்துக் கொள் அவை உனக்கு
தெரியாமலே ஒரு தியான நிலையை
ஏற்படுத்திச் செல்லும் .
நல்ல ரசிககர்களே சிறந்த
கலைஞர்கள் ஆக முடியும் என்பதை
புரிந்து கொள் .
மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகம்
என்று சிறிதாகக்
கருதி விடாதே , அங்கே தான்
பண்பாட்டு விழுமியங்கள் மிகுந்து
புதைந்து கிடக்கின்றன .
சிலவேளைகளில் மெளனமே
சிறந்த மொழியாகி விடுகிறது
சொல்லாத சொற்களுக்கே
பல்வேறு அர்த்தங்கள் உண்டு
மனதால் பேசும் போது தான்
மகத்தான உறவு அங்கே நிலைக்கிறது !
இலக்கியங்களை தேடி வாசிக்கும்
போது தான் பல மனிதர்களின்
வாழ்வுக்குள் நீயும் வாழ்ந்து
அனுபவம் பெற முடியும் .
ஆன்மீகம் என்பது உன்னை
உனக்குள்ளே தேடுவது ,அதற்கு பல
வகை தொடர்புகளையும் கடந்து
போக வேண்டும் .
கடமை உணர்வையும் கருணை
உள்ளத்தையும் வளர்த்துக்
கொண்டால் மனித வாழ்வு
மகத்துவம் பெறும் .
எந்த வீணையும் ஒலியை தனக்கு
புதைத்து வைத்துக்
கொள்வதில்லை , அவை கேட்பவர்
காதுகளிற்கு இன்பம் அளிக்கிறது .
எந்த முத்தும் கடலில் கிடந்தே
வாழ்வை முடித்துக் கொள்வதில்லை
அது மற்றவர்கள் கரங்களில் தான்
அலங்காரம் பெறுகிறது .
இயற்கை பல புதினங்களை
உனக்கு என்றும் காட்டிக்
கொண்டே இருக்கும் , புரிய
முயற்சித்துக் கொண்டே இரு .
உண்மை நிலையை புரிந்து நன்மை
பல புரிந்து
நாளும் வளமுடன் வாழ்க !
சிலம்பரசி
அண்ணன் மன்னன் கல்லினாலும்
தம்பி புலவன்
சொல்லினாலும் கண்ணகியை கோவிலிலும்
காப்பியத்திலும் தீட்டி வைத்தனர்
வாழ வழி காட்டி வைத்தனர் .
கால் சிலம்பு எமக்கு
ஒரு நூல் தந்தது
கலைகளின் சிறப்பை அது
சொல்லி நின்றது .
வாழ்வு
ஏதோ சில இருப்புக்களை தக்க
வைத்துக் கொள்ள
இயங்க வேண்டியிருக்கிறது
அது தான் இங்கே
'வாழ்வு ' என வரையறுக்கப் படுகிறது .
துரத்தும் நினைவு
என்னை அத்தியாயம்
அத்தியாயமாக தொகுத்தும் பார்க்க நீ இருக்கும் போது
நான் மட்டும் ஏனோ
விலகிப் பார்க்கத் துடிக்கிறேன் .
நானோ வாழ்க்கைச் சமன்பாட்டை
எழுதத் துடிக்கிறேன்
நீ ஏனோ சமனிலிகளை மட்டும்
நிலை நிறுத்தப் பார்க்கிறாய் .
தேய்பிறை
இவள் சிரிப்பில் உலகமே
மயங்கி நின்றது ஒரு காலம்
இவளைப் பார்த்து சிரித்து
நிற்கிறது நிகழ்காலம்
ஏன் இந்த மயக்கமும் ,
வெறுப்பும் , இறுமார்ப்பும் .
வாலிபம் மட்டுமா வசந்தமானது ,
வயோதிபமும் ஒரு வரப்பிரசாதமே
தெளிந்த ஓடைக்கு
தெரு விளக்கு எதற்கு !
ஒளிக்கு நிறை இருக்கலாம்
இல்லை என்று கணக்குப் போட்டே
காலம் பல கடந்து விட்டோம் , இனியும்
கருத்துக்கள் மாறலாம்
காரணம் தொடரலாம்
ஒளியியல் ஒரு அற்புதமான
புதையல்.
தேடிக் கொண்டே இருப்போம் .
உன் துள்ளும் கண்களுக்குள்
புகுந்து தான் இதயம் இசைத்ததோ
என் எண்ணத்துள் நிறைந்து தான்
எல்லை தாண்டி
என்னைச் சேர்ந்தாயே
வானமே வேடிக்கை நிறைந்தது
அதில் நாமும் வேடிக்கைச்
செய்வோம் ,
வாழ்வே ஒரு வானவேடிக்கை தானே .
கம்யூனிசம்
மனிதன் இறந்த பின்பு தான்
பொதுவுடைமை ஆகிறான்
பேதமைகள் அகற்றிப் பிணம்
என்று பெயரிட்டு .
காதல்
அவன் ,
உடம்பெல்லாம் கண்ணாய்
உனைப் பார்க்க வேண்டும்
உன் உருவே
என் விழியின்
இமை காக்க வேண்டும் .
சுட்டு எரித்தாலும் சூரியனே
தாமரை உனைக் கண்டு தானே
மலர்கிறது .
பட்டு அழித்தாலும் மழையே
பயிர்கள் உனை நோக்கித்
தானே கிடக்கின்றன .
எல்லாவற்றையும் விட
காதல் மிக அழகான்து , ஆகவே
அதுவே காவியமாகி விடுகிறது !
அவள் ,
வருவான் என் மாளிகைக்கு
வண்ண மலர் கொண்டு
தருவான் என் கைகளிலே
தங்க மலர்ச் செண்டு
மருவில் கை தொட்டு
மங்கை எனை மீட்டு
உருவே உருகிடவே
உயிரை எனில் சேர்ப்பான்
பருவம் தடுமாற பாதை பலவாக
வருவான் என் மாளிகைக்கு
வண்ண மலர் கொண்டு ...!
நடை
வயதும் அனுபவமும் மனிதனை
வழி நடத்திச்
செல்கின்றது ,
அதனால் , உறவுகளில் அவனுக்கு
உள்ள
புரிந்துணர்வும் , தேவையும் வயதோடு
மாறிச் செல்கின்றது .
பிஞ்சு
அந்த இரு வயது சிறுமி காட்டிய
அன்பை வெளிப்படுத்தும்
கை அடையாளம்
கண்களை பனிக்கச் செய்து
நிற்கிறது
எப்படித் தான் இவற்றை
எல்லாம் இலகுவாகக்
கற்றுக் கொண்டு விடுகிறார்களோ ?
புலப்பெயர்வு
இந்த நாட்கள் இனிய நாட்களே !
புதிய பூமியில் கால்களை
பதித்த நினைவுகளைச்
சுமக்கும் இந்த நாட்கள்
இனிமையானவையே .
புதிய பல மாற்றங்களை
விதைத்து
இனிய பல நிகழ்வுகளை
இதயத்துக்கு
அளித்த
இந்த நாட்கள்
இனிமையானவையே .
அன்பைச் சொல்லி
அரவணைக்கவும்
அறிவை வளர்க்க அணைத்தும்
நிறைந்த
இந்த நாட்கள்
இனிமையானவையே .
அருகில் குடும்பலும்
ஆறுதலுக்கு நண்பர்களும்
பண்புடன் பழ்கும் பணித்
தோழர்களும் நிறைந்த
இந்த நாட்கள்
இனிமையானவையே .
இளமை இசை பாடவும் ரசித்து
இருந்து
முதுமையை மறக்கவும் மலர்ந்து
வரும்
இந்த நாட்கள்
இனிமையானவையே .
எதோ ஒன்றை புதிதாய் எந்நாளும்
கற்றுத் தரும் இதயங்கள் சூழ்ந்த
இந்த நாட்கள்
இனிமையானவையே !
(33 வருடங்கள் கடந்து விட்டன )
சங்கடம்
நீ அறத்துக்கு கட்டுப்பட்டு
நின்ற போது அவர்கள்
உன்னை கட்டி வைத்துப் பார்ப்பதில்
குறியாக நின்றார்கள்
திடீர் என எல்லாம் மாறி விடும்
என்ற மாயாவிக்
கதைகளுக்குள் கனவு கண்டு
நீயும் எம்மை விட்டுப் போய்
விடாதே .
உனது விளக்கை
நீயே தான் தேட வேண்டும் .
அனுப்பியவர் மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.