உலக சிறுவர் புத்தக தினமும் , குழந்தை இலக்கியமும்! - ஐங்கரன் விக்கினேஸ்வரா -
- உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது. -
உலக சிறுவர் புத்தக தினம் (International Children´s Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் பிறந்த நாளே உலக சிறுவர் நூல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய வேகமான வாழ்க்கையின் நகர்வில் மனிதர்களிடமிருந்து மறைந்து வரும் பழக்கவழக்கங்களில் ஒன்று வாசிப்பு பழக்கம். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பத்திரிகைகளையோ அல்லது நல்ல நூல்களையோ காசுகொடுத்து வாங்கி வீட்டில் படிப்பவர்களை விட நூலகங்களுக்கு சென்று படிப்பவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.
ஆனால் இன்று இணைய வளர்ச்சியின் காரணமாக அந்த நூலகங்களுக்கு செல்லும் பழக்கம் கூட மறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் இருக்கின்றதா என்பதே சந்தேகம்தான். வாசிப்புதான் ஒரு மனிதனை பூரணமாக்க கூடியது. முடிந்தளவு நல்ல நூல்களை வாசிப்பதும், நமது எதிர்கால குழந்தைகளுக்கும் அந்த வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவும் அவசியமாகும்.
சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. IPPY ஐ.பி.பி.ஒய்., (இளைஞர்களுக்கான உலக புத்தக அமைப்பு) இத்தினத்தை கடைபிடிக்கிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில் ஏப்ரல் 2 ஆம் திகதி உலக சிறுவர் புத்தக தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.