சிறுகதை: முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? - வ. ந.கிரிதரன் -
- 7.5.2023 ஈழநாடு வாரமலரில் வெளியான சிறுகதை -
"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
அலமரல் அசை வளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?" - "குறுந்தொகை 28, ஔவையார் -
'டொராண்டோ மாநகரின் 'தோர்ன்கிளிவ் பார்க் டிரை'விலிருந்த தொடர்மாடிக்கட்டடங்களிலொன்றில்தான் கடந்த ஆறுவருடங்களாக அமுதா வசித்து வருகின்றாள். இலங்கையிலிருந்து முள்ளிவாய்க்காலில் யுத்தம் மெளனிக்கப்பட்டதற்குப்பின்னால் கனடா வந்த தமிழர்களில் அவளும் ஒருத்தி. அவளது நல்ல காலம் அவளுக்கு அவளது இருப்பிடத்துக்கு அண்மையில் எக்ளிண்டன் வீதியும், டொன்மில்ஸ் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையிலிருந்த 'புளூ ஷிப்' நிறுவனங்களிலொன்றான 'கலக்டிகா'வில் வேலை கிடைத்திருந்தது. உலகின் பல பாகங்களில் கிளைகளைக்கொண்ட பெரியதொரு தொழிற்சாலை. கணனிக்குரிய 'பவர் சப்ளை', 'மெமரி கார்ட்' போன்ற பல பொருட்களைத்தயாரிக்கும் நிறுவனம். ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மூன்று 'ஷிவ்ட்டு'களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அமுதா வேலை செய்வது மாலை நேர 'ஷிவ்ட்'. மூன்று மணிக்குத் தொடங்கும் வேலை இரவு பதினொரு மணிக்கு முடிவடையும். வேலை முடிந்ததும் டொன் மில்ஸ் வழியாகச் செல்லும் நம்பர் 25 பஸ்ஸில் தோர்ன்கிளிவ் பார்க் சென்று அவளது இருப்பிடத்துக்கு அண்மையிலிறங்கிச் செல்வது அவளது வழக்கம்.