- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவாக 17.11.2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய நினைவுப் பேருரையின் எழுத்துவடிவமே இக்கட்டுரை. இக்கட்டுரையாசிரியர் முனைவர் செல்லத்துரை சுதர்சன் - சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். -
அறிமுகம்
பருத்தித்துறைச் சந்தையில் இருந்த புளியமரம் ஒன்றின் கதை சுவாரசியமானது. வரலாற்று நூல்களில் பதிவான அந்தப் புளியமரத்தின் கதையைக் கூறுவதோடு, இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பது பொருத்தம் என எண்ணுகிறேன். 1548 இல் சவேரியார் என்னும் பெயருடைய கத்தோலிக்க மதகுரு யாழ்ப்பாணம் வந்து, சங்கிலி அரசனைச் சந்தித்த பின்னர், பருத்தித்துறை வழியாகத் திரும்பிச் சென்றபொழுது, இந்தப் புளியமர நிழலில் நின்று சமயப் பிரசங்கம் செய்தார் என்ற செவிவழிக் கதையோடு இதன் புகழ் பரவ ஆரம்பிக்கிறது. ஒல்லாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பால்டியஸ் (Baldaeus) என்ற புரட்டஸ்தாந்து மதகுரு, 1658 இல் நான்கு புறமும் சடைவிரித்துப் பரந்த, கடலோரக் காற்று இதமாகத் தழுவிய, இந்தப் புளியமர நிழலில் நின்று வேதாகம சுவிஷேசத்தைப் பிரசங்கம் செய்து மக்களைச் சுவீகரித்தார். இந்த வரலாற்றுச் செய்தி புளியமரத்தின் புகழை மேலும் ஓங்கச் செய்தது. எவ்வாறெனில், இது பால்டியஸ் செய்த முதல் பிரசங்கம் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் புரட்டஸ்தாந்து சமயத்தின் முதல் பிரங்கமாகவும், இந்தப் புளியமர நிழலில் நிகழ்த்திய முதலாவது பிரசங்கமாகவும் வரலாற்று எழுத்துகளில் பதிவுபெற்றுள்ளது. இதன் பின்னர், தென்னிந்தியாவின் தரங்கம் பாடி மிஷனைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற மிஷனரியுமாகிய பிரடெரிக் வார்ச் என்பார், 1760 இல் இந்தப் புளியமர நிழலில் நின்று, கிறிஸ்தவப் பிரசாரம் செய்து சென்றார் என்பதும் எழுத்துமூல வரலாறு. (வேலுப்பிள்ளை, சி.டி. 1984:25-26). முன்னர் குறிப்பிட்ட பால்டியஸ் என்பார், தெல்லிப்பளையிலிருந்து பலகாலம் கிறிஸ்தவத்தைப் பரப்பியும், ‘கொறமண்டலும் இலங்கையும்’ எனும் வரலாற்று நூலை எழுதியுமிருந்த காலத்தில்தான், புளியமர நிழலிலே, கடலோரக் காற்றில் கலந்த அவரது பிரசங்கம், அவ்வாறு கலவாதிருக்க, அச்செழுத்துக்களை வேண்டியிருந்தது! முதன் முதலில் தமிழ் அட்சரங்களை ஐரோப்பாவில் அச்சிடுவதற்குக் காரண கர்த்தாவான பால்டியஸ் என்பவரால், அவர் முதலில் நின்று பிரசங்கித்த புளியமரம், ‘பால்டியஸ் புளியமரம்’ (வேலுப்பிள்ளை, சி.டி. 1984:25-26) என்ற பெருமையையும் சூடிக்கொண்டது.