எழுத்தாளர் கு,அழகிரிசாமி பற்றிய சிறப்பானதோர் ஆவணக்காணொளி. அவரை எழுத்தாளராக மட்டுமே அறிந்திருந்த எனக்கு 'கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை' என்னும் இக்காணொளி அவரது பன்முக ஆளுமையை அறிய வைத்தது. இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தைச் சிறப்பாகச் செய்திருப்பவர் அ.சாரங்கராஜன். வாழ்த்துகள்.
ஓவியம், கர்நாடக இசை, பழந்தமிழ் இலக்கியம் குறிப்பாகக் கம்ப ராமாயணம், மொழிபெயர்ப்பாற்றல், மேனாட்டு இலக்கியப் புலமை, ருஷ்ய இலக்கியம் மீதான ஆர்வமும், புலமை என கு.அழகிரிசாமியின் பன்முக ஆளுமையை இலக்கிய ஆளுமைகள் பலரின் கூற்றுகள் வாயிலாகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆவணம்.
முதன் முதலாக மாக்சிம் கார்க்கியின் படைப்பைத் தமிழில் மொழிபெயர்த்தவர் கு.அழகிரிசாமியே என்பதை இக்காணொளி மூலம் அறிந்துகொண்டேன். மேலும் காவடிச்சிந்தை இவர் பதிப்பித்துள்ளார் என்பதையும் அது அறிஞர்கள் பலரின் மதிப்பைப் பெற்றுள்ளது என்பதையும் அறிந்தேன். கம்பராமாயணம் பற்றிய இவரது விமர்சனத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன என்பதையும், அவற்றின் சிறப்பு பற்றிய எழுத்தாளர் பிரபஞ்சனின் பார்வையினையும் அறிந்துகொண்டேன். 'கவிச்சக்கரவர்த்தி', 'வஞ்சமகள்' போன்ற இவரது நாடகப் பங்களிப்புகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.
இசைக்கலைஞர்களான காரைக்குடி அருணாசலம், டி.ஆர்.ராஜரட்னம் பிள்ளை ஆகியோர் மீதான அழகிரிசாமியின் ஈடுபாடு, மானுடரை அவதானிக்கும் அவரது விருப்பமான பண்பு, சம்பவங்களைச் சுவையாக விபரிக்கும் அவரது ஆற்றல் எனப் பலவற்றை இலக்கிய ஆளுமைகள் பலர் இக்காணொளியில் வெளிப்படுத்துகின்றார்கள்.
எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், வண்ணநிலவன், வெளி ரங்கராஜன், தமிழச்சி பாண்டியன், அசோகமித்திரன், ஆ.மாதவன் , சா.கந்தசாமி, பூமணி, திருப்பூர் கிருஷ்ணன், கோணங்கி எனப்பலர் அழகிரிசாமியைப்பற்றி நினைவு கூர்கின்றார்கள்.
கு.அழகிரிசாமி அவர்களின் மனைவியார் அமரர் சீதாலட்சுமி அழகிரிசாமியும் தம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இந்த ஆவணத்தை அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கின்றார்கள்.
அவரது கைப்பட எழுதிய குறிப்புகளையும் ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.
எழுத்தாளர் கு.அழகிரிசாமியை அவரது சிறுகதைகள், 'தீராத விளையாட்டு' தொடர்கதை மூலம் அறிந்திருந்த எனக்கு கு.அழகிரிசாமியென்னும் இலக்கிய யானையின் முழுமையான பக்கங்களையும் அறியும் வகை செய்த ஆவணமிது.
எழுத்தாளர் கு.அழகிரிசாமி பற்றி அறிய விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய காணொளியிது. பாருங்கள்
- அழகிரிசாமியின் ஓவியமொன்று. -
எழுத்தாளர் ஶ்ரீரங்கனின் கேள்வியொன்று பற்றி...
எழுத்தாளர் டானியல் அன்ரனி பற்றிய எனது பதிவுக்காக எதிர்வினையாற்றிய எழுத்தாளர் ஶ்ரீரங்கன் 'கிரி, இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டங் குறித்து சரியான வரலாற்று ஆய்வுகளையே முன்வைக்க முடியாதவொரு இனத்திடம் இலங்கையில் வெளியான கலை இலக்கியச் சஞ்சிகை வரலாறா முக்கியம் ?' என்றொரு கேள்வியினை எழுப்பியிருந்தார்.
ஶ்ரீரங்கன், கலை, இலக்கியச் சஞ்சிகை வரலாறும் முக்கியமானதுதான். அவற்றில் வெளியான படைப்புகளூடு அக்காலகட்ட சமூக,அரசியல் வரலாற்றினை அறிய முடியும். அதற்கு மட்டுமல்ல, தமிழர்களின் கலை, இலக்கியச் செயற்பாடுகளின் வரலாற்றை அறிவதற்கு அவை அவசியம். வரலாறென்பது வெறும் அரசியல் வரலாறு மட்டுமல்ல. சமூக, அரசியல் சூழல்கள் எவையாகவிருந்தபோதும் மக்கள் வாழ்ந்துகொண்டுதானிருந்தார்கள். கலை, இலக்கியம் படைத்துக்கொண்டுதானிருந்தார்கள்.
ஶ்ரீரங்கன் அன்று நாம் சேரர், சோழர், பாண்டியர் என்று முட்டி மோதிக்கொண்டிருந்தபோதுதான் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று சங்க இலக்கியப்படைப்புகளை, சங்கமருவிய இலக்கியப் படைப்புகளை, பக்தி இலக்கியப்படைப்புகளை ஆவணப்படுத்தினோம். நூற்றுக்கணக்கான சங்கக்கவிஞர்களை அதனால்தான் இன்றும் அறிந்துகொள்ள முடிகின்றது. மரணத்தில் வாழ்வதொன்றும் நமக்கு மட்டுமல்ல , மானுடர்கள் அனைவருக்கும் பொதுவானதுதான். நீங்கள் உங்களால் முடிந்ததை ஆவணப்படுத்துங்கள். எல்லோர் பார்வைகளும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உங்கள் பார்வையில் சரியென்று படுவதை ஏனையவரும் அவ்விதமே எண்ண வேண்டுமென்று எண்ணி அவ்விதமே ஏனையோரும் நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. உங்களுக்குச் சரியென்று பட்டதை நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்காமல் ஏன் தொடங்கக் கூடாது?
தமிழர் விடுதலைப்போராட்டம் குறித்து நூல்கள் பலவேறு கோண்ங்களில் வெளியாகவில்லையென்று கூற முடியாது. நூல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சிகைகளில்,. பத்திரிகைகளில் தொடர்கள் வெளியாகியுள்ளன. போராசியவர்கள் பலர் தம் பார்வைகளில் தம் பார்வைகளை எழுதியிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் உள் வாங்கி நூல்கள் பல நிச்சயம் எழுதப்படும். ஶ்ரீரங்கனே தன் பார்வையில் இது பற்றிய ஆய்வுக்கண்ணோட்டத்தை எழுதலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.