எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய 'காலம் அறுபது ' வாசித்தேன். மேலோட்டமாக வாசித்தபோது காலம் சஞ்சிகையின் வரலாறு பற்றிய தகவற் பிழைகளை அவதானிக்க முடிந்தது.
கட்டுரையின் ஓரிடத்தில் "செல்வம் என்ற ஆசிரியர் கனடாவில் வாழ்கின்ற இளைஞர்களின் ஆர்வத்தால் சஞ்சிகை வெளி வருவதாக ஒற்றை வசனத்தில் ஆசிரிய தலையங்கத்தை பதிவு செய்திருந்தார்." என்றொரு குறிப்பு வருகிறது. பொதுவாக இவ்விதம் கூறாமல் யார் அவர்கள் என்பதையும் கூறியிருந்திருக்கலாம். உண்மையில் செல்வம் காலம் சஞ்சிகையை ஆரம்பித்தவர்கள் நான்கு பேர் என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் செல்வம். அடுத்தவர் குமார் மூர்த்தி. மேலுமிருவர். அவர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. அவ்விருவரும் ஒதுங்கிவிட செல்வமும், குமார் மூர்த்தியும் தொடர்ந்து பத்தாண்டுகளாகக் காலம் இதழை நடத்தி வந்திருக்கின்றார்கள் என்னும் தகவலைக் 'காலம்' செல்வம் நவம்பர் 2001 வெளியான குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழின் ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இன்னுமோரிடத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"'நான் ஒரு இலக்கிய சஞ்சிகை ஆரம்பிக்க விரும்புகிறேன். கூட வருவீர்களா 'செல்வத்தின் கேள்வி இது, 'உங்களுடன் கூட நம்மோட செல்வம் அண்ணை' இது செழியனின் பதில் (காலம் 53, பக்கம் 01, 2019). காலம் என்ற நந்தவனத்துக்கு விதை நடவும் நீரூற்றவும்; வேலி போடவும் நல்லதோர் சான்றோர் கூட்டத்தை கட்டியணைக்கிறார் செல்வம். குமார் மூர்த்தி, செழியன் ,அருண்மொழிவர்மன், NKமகாலிங்கம், ஆனந்த பிரசாத், மு. புஷ்பராஜன், ஹம்சத்வனி போன்ற துடிப்புமிகு இளைஞர்கள் கை கொடுக்கிறார்கள். மிகு கல்வியும் மேலான இலக்கிய படைப்பாற்றளும் கொண்ட அ. முத்துலிங்கம், நுஃமான், சேரன், மணிவேலுப்பிள்ளை, அமுது ஜோசப் சந்திர காந்தன், செல்வா கதை நாடகம் போன்றோரும் வலக்கரம் நீட்டுகின்றனர். நீட்டிக் கரங்களை கோர்த்தபடியே மூன்று தசாப்தங்கள் பலம் சேர்க்கின்றனர். புதியன புனையும் பேராற்றலும், பன்முகப்பட்ட பார்வையும் கொண்ட ஜெயமோகன், ஷோபா சக்தி, சிவத்தம்பி, கதைசபாபதி, வெங்கட் சாமிநாதன், வெங்கட் ரமணன், ஏஜே கனகாட்னா, நாஞ்சில் நாடன் போன்றோரின் பங்களிப்பு பற்றிப் படர்கிறது."
காலம் செல்வம் சஞ்சிகையை ஆரம்பித்தபோது இருந்தவர்கள் காலம் செல்வம், குமார் மூர்த்தி மேலுமிருவர். இதில் எங்கே செழியன் வந்தார்? அப்படியென்றால் காலம் செல்வம் குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழில் கூறியது உண்மையா அல்லது 2019இல் வெளியான காலம் 53இல் கூறியது உண்மையா? எழுத்தாளர் அருண்மொழிவர்மனும் கைகொடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் எப்பொழுதிலிருந்து கை கொடுத்தார்? அருண்மொழிவர்மன்தான் இதற்கு விளக்கம் தர வேண்டும். ' அ. முத்துலிங்கம், நுஃமான், சேரன், மணிவேலுப்பிள்ளை, அமுது ஜோசப் சந்திர காந்தன், செல்வா கதை நாடகம் போன்றோரும் வலக்கரம் நீட்டுகின்றனர்.' என்று பேராசிரியர் சின்னத்தம்பி குறிப்பிடுகின்றார். இது தவறான தகவல். முதல் பத்து வருடங்கள் வரையில் காலம் செல்வமும், குமார் மூர்த்தியுமே காலம் சஞ்சிகையை வெளியிட்டு வந்ததாக நவம்பர் 2001இல் வெளியான குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழில் காலம் செல்வமே குறிப்பிடுகின்றார்.
- குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழில் -
இன்னுமோரிடத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி 'பலதரப்பட்ட அரசியல் பண்பாட்டு பின்னணிகளிலிருந்து உருவான பல இதழ்களிடையே சில பொதுப்பண்புகள் இருந்தன. புலிகளின் அரசியலை விமர்சிப்பவையாக இருந்தன. தமிழக அறிவுலகை கூர்ந்து கவனிப்பவையாகவுமிருந்தன. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் தீவிர இலக்கியம், சிந்தனைகளுக்கான அடித்தளத்தை இவை ஏற்படுத்தின. விரைவிலேயே இத்தகைய இதழ்கள் பலவும் நின்று போயின. காலம் மேற்படி பின்னணியிலிருந்து உருவான இதழ். பிற இதழ்கள் பலவும் நின்று விட்ட பின்னரும் காலம் வெளிவந்து கொண்டிருக்கிறது.' என்றும் குறிப்பிடுகின்றார். காலம் சஞ்சிகையை ஒருபோதும் விடுதலைப்புலிகளை விமர்சித்த சஞ்சிகையாகக் கருத முடியாது. உண்மையில் காலம் செல்வத்தின் கட்டிடக்காட்டினிலே கவிதைத் தொகுப்பை வெளியிட்ட , காலம் சஞ்சிகையின் ஆரம்பக் காலகட்டத்தில் அதனைப் பாரிசில் விநியோகித்த சபாலிங்கம் அவர்களின் படுகொலையைப் பற்றி எதுவுமே எழுதாத சஞ்சிகை காலம். சபாலிங்கத்தை நினைவு கூராத சஞ்சிகை காலம்.
- காலம் 8இன் ஆசிரியத் தலையங்கத்தில் -
காலம் அறுபது கட்டுரையில் காலம் சஞ்சிகையை வெளியிட உதவி புரிந்தவர்கள் பெயர்களையும் (ஆரம்பத்தில் குமார் மூர்த்தி, பின்னர் சில வருடங்கள் பாபு பரதராஜா, தனா பாபு ஆகியோர் வெளியீட்டாளர்களாக இருந்த விபரங்களையும் அறிய முடிகின்றது.), வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சிக்கு உதவியவர்களைப்பற்றியும் (எல்லாளன், குகன், நவரஞ்சன் ஆகியோர் உதவியதைச் செல்வம் காலம் 8இன் ஆசிரியத் தலையங்கத்தில் பதிவு செய்துள்ளார்.) மேற்படி கட்டுரை உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். காலம் சஞ்சிகையின் உருவாக்கத்திற்குச் சம்பந்தமில்லாதவர்களையெல்லாம் குறிப்பிட்ட பேராசிரியர் சம்பந்தப்பட்டவர்களை நிச்சயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.