முன்னுரை
கம்பராமாயணத்தில் விலங்குகள், பறவைகள்,நீர்வாழ்வன குறித்துக் கூறியுள்ளதைப் போல சில பூச்சிகள் குறித்தும் கம்பர் கூறியுள்ளார். அவற்றுள் குழவி,விளக்கு விட்டில் பூச்சி,மின்மினிப்பூச்சி,சிலந்திப் பூச்சி, வண்டு,தும்பி, மிஞிறு,இந்திரகோபப்பூச்சி,ஈ, எறும்பு, சிவப்பு எறும்பு,சிற்றெறும்பு,கரையான் முதலிய பூச்சிகள் குறித்து கம்பர், தம் இராமாயணத்தில் கூறியுள்ள பூச்சிகள் குறித்து ஆராய்வோம்.
குளவி
குளவியானது புழுக்களைப் பிடித்துக் கொட்டிக் கொட்டி தன் வடிவம் ஆக்குதல் போல, இராமன் தன் சரங்களால் அரக்கர்களை அழித்து, தேவர்கள் ஆக்கினான். இராமபாணம் பட்டோர் எல்லாம் தேவரானார்கள்..
"அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன் மயம் ஆக்கும் தன்மை போல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தன்
. செஞ் சரத் தூய்மையால் தேவர் ஆக்கினான்"
(கரன் வதைப் படலம் 484)
இது கர-தூடணருடன் நிகழ்த்தியப் போரில் நடந்தது.
விளக்கு விட்டில் பூச்சி
விளக்கு எரியும்பொழுது தானாகச் சென்று அதன்மேல் விழுந்தழியும் விட்டில்பூச்சி, கம்பரில், ஒரு கதைமாந்தர்மேல் பிறர் செல்லும் விரைவுக்கும். அவ்வாறு சென்றபின் அவரோடு மோதியழிதலுக்கும் உவமையாகியுள்ளது.
மாயமானின் பேரழகு கண்டு, ஊர்வனவும் பறப்பனவுமாகிய உயிர்களெல்லாம் "விரிசுடர் விளக்கங்கண்ட விட்டிலின் வீழ்கின்றன".
மாயச்சீதையை இராவணன் கொன்றபிறகு இராமன் முதலான அனைவரும் செய்வதறியாது திகைத்த வேளையில். சுக்கிரீவன் தலையிட்டு, நாமெல்லாம்.
"வினை இனி உண்டோ வல்லை விளக்கின்வீழ் விட்டிலென்ன
மனையுறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்மின் என்றான் "
( மாயா சீதைப் படலம் 2850)
என்கின்றான்.
அரக்கர்கள் போருடற்ற, இராமன்மேல், விளக்கின்மேல் விழும் விட்டிலெனப் பாய்கின்றார்கள். விளக்கின்மேல் விட்டில் பாய்ந்து அழிந்துபடும் நிலையைக் கம்பர் ஈரிடங்களில் உவமிப்பர்.
மாயாசனகன் வழிச் சீதையைத் தன் ஆசைக்கு உட்படுத்த விரும்பிய இராவணன், சீதையிடம்,
" இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம்
விளக்கு எதிர் வீழ்ந்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா"
(மாயா சனகப் படலம் 1600)
என்று சினவுரை பகர்வான்.
சீதை, இராவணனிடம் நாயைக் காட்டிலும் இழிந்தவனே, கட்டமைந்த வில்லை உடைய இராமனைத் தவிர, என் அருகே வந்த ஆடவர்கள், தீயிலே விழுந்த விட்டில் பூச்சிகள் அல்லரோ? விலங்குகளுக்கு வேந்தனான ஆண் சிங்கத்தோடு கூடி வாழ்ந்த பெண் சிங்கம் சாக்கடையில் உள்ள அழுக்குப் பொருளைத் தின்னும் நரியுடன் வாழ்வது எங்கனும் நடக்குமோ? என்கிறாள்.
சீதை, அதற்கு, மாயசனகன், இராவணன் ஆகிய இருவர் முன்னும்,
"வரிசிலை யொருவ னல்லால், மைந்தரென் மருங்குவந்தார்,
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ"
(மாயா சனகப்படலம் 1641)
மின்மினிப் பூச்சிகள்
ஆண் குருவிகள் ஒளி வீசும் மின்மினிப் பூச்சியான அழகிய விளக்கின் வெளிச்சத்திலே இனிய என் வாழ்க்கைக்குத் துணையான பெண் குருவிகளோடு தம் கூடுகளில் இனிதாய் உறங்குகின்றன. நானோ மன்மதனால் தேர்ந்தெடுக்கப்பெற்று வீசப்பட்ட மலர் அம்புகளால் பிளவுண்ட மனத்துடன் பெறுதற்கரிய கொடிய துன்பத்துடன் என் சீதையைப் பிரிந்து காட்டில் வாழ்கின்றேன்.
"எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணைக்
குரிஇனம் பெடையொடும் துயில்வ கூட்டினுள்"
(கார்காலப்படலம் 526)
சிலந்திப்பூச்சி
சிலந்திப் பூச்சி நுட்பமாக இழைத்த சிலந்திக்கூடு போன்ற மெல்லிய ஆடைகளை அணிந்த வண்டுகள் மொய்த்து ஒலிக்கும் கருங்கூந்தலை உடைய மகளிர் கூட்டம் தம் கால்களில் அணிந்துள்ள சிலம்புகளின் உள்ளேயிருக்கும் அன்னப்பறவைகள் ஒலிக்கும் குளத்தை ஒத்திருந்தது.
"நுண் சிலம்பி வலந்தன நுண் துகில்
கள் சிலம்பு கருங் குழலார் குழு "
(எழுச்சிப்படலம் 725)
வண்டு, தும்பி, மிஞிறு
ஒருவர்க்கு ஒருவர் உடம்பும் உயிரும் போலக் காதல் கொண்ட மைந்தரும், மகளிரும், ஆண் யானைகளும்-பெண் யானைகளும்-வலிமை மிகுந்த ஆண் சிங்கங்களும்-பெண் சிங்கங்களும்போல-மிஞிறு-சிறு தும்பி என்னும் பல் வகையான வண்டுகளும் நெருங்கி ஆரவாரிக்கும் பெரிய அடிவாரத்திற்கு வந்து தங்கினார்கள்.
"ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்
தேனும் மிஞிறும்சிறு தம்பியும் பம்பி ஆர்ப்ப "
(வரைக்காட்சிப்படலம் 830)
இந்திரகோபம்
சந்திரசயிலப் படலத்தில் காட்டிலே உள்ள மயில்கள், மான் போலும் மருண்ட பார்வை பெற்ற மகளிரின் கோவைப்பழம் போலச் சிவந்த வாய்களைப் பார்த்து, இந்திரக்கோபம் என்னும் செந்நிறப் பூச்சிகள் அவ்வாய்ப்பகுதிகளைப் பற்றிக்கொண்டு தம்மைப் பார்க்கின்றன என்று கருதின.
"கொவ்வை நோக்கிய வாய்களை இந்திரகோபம்
கவ்வி நோக்கின என்று கொல் காட்டு இளமயில்கள்"
(சந்திரசயிலப் படலம் 770)
ஈ இனம்
கள்ளை மொய்க்கும். அமிழ்தத்தை மொய்க்கும்.இரத்தம் படிந்ததை மொய்க்கும்.
சீதையை மணப்பதற்காக இராமன் உலா வருவதைக்கண்ட பெண்கள் அவன் வரும் வழியில் திரளும் மகளிர், ஆரவாரத்தோடு அமிழ்தத்தில் வந்து மொய்க்கும் ஈக்களின் கூட்டம் என்று சொல்லும்படி இருந்தனர்.
"வரைத் தடந்தோளும் காணமறுகினில் வீழும் மாதர்
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈஇனம் என்னல் ஆனார்
(உலாவியற்படலம் 1014)
எறும்பு
கவந்தன் தன் இரு கரங்களை நீட்டி, இணைத்து அணைத்தபோது, அங்கு அகப்பட்ட யானைக் கூட்டங்கள் முதல் எறும்புக் கூட்டங்கள் வரை உள்ள உறுப்புகளைப்பெற்ற எல்லாப் பிராணிகளும் வரை உள்ள உறுப்புகளைப் பெற்ற எல்லாப் பிராணிகளும் வருந்தி அழிந்தன.
"எறும்புஇனம் கடையுற யானையே முதல்
உறுப்புடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன"
(கவந்தன் படலம் 1128)
முயிறு
முயிறு என்ற ஒருவகை எறும்பு இருந்தது என்பர் கம்பர்.
"முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்புதோள்
. கயிறு அலைப் புண்டது கண்டும் காண்கிலாது
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர்"
(பிணிவீட்டுப்படலம் 1052)
எறும்புகள் துன்புறுத்தி மேலே செல்லும் ஒரு பழைய மரத்தைப் போன்ற அனுமானின் வலிய தோள்கள் நாகபாசத்தால் கட்டுண்டு வருத்தியது.
சிற்றெறும்பு
எறும்பில் ஒரு வகையான சிற்றெறும்புகள் குறித்தும் கம்பராமாயணத்தில் செய்திகள் காணப்படுகின்றன.
“தினைத்துணை வயிறி லாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளும் வருந்தி வாழ்வன”
(அயோத்தியா காண்டம்- சித்திரக்கூடப்படலம்- மிகைப்பாடல்-2-8-55-1)
யானையை, சிற்றெறும்புகள் வருத்தும் என்பது பெறப்படுகிறது.
கரையான்
காட்சிப்படலத்தில் சீதை தான் இருந்த இடம் கறையான் அரிக்கவும், அவ்விடத்தை விட்டு எழுந்திடாத சீதை, மெல்லிய இலை உணவு முதலியவற்றை யார் பறிமாற உண்பான் என்றெண்ணி வருந்துவாள்.
“மருந்து உண்டுகொல் யான் கண்ட நோய்க்கு என்று மயங்கும்
இருந்த மாநிலம் செல் அரித்திடவும் ஆண்டுஎழாதாள்”
(காட்சிப்படலம் 343)
முடிவுரை
கம்பர் தன் நூலில் பல்வேறு உயிர்கள், பயிர்கள் குறித்துப் பாடியுள்ளார். அவற்றுள் பூச்சி வகைகளான குளவி, விளக்கு விட்டில் பூச்சி, மின்மினிப்பூச்சி,சிலந்திப்பூச்சி, வண்டு, தும்பி, மிஞிறு, இந்திரக்கோபம்,ஈ, எறும்பு, முயிறு, சிற்றெறும்பு,கரையான்.ஆகியப் பூச்சிகள் குறித்தப் பதிவுகளை நாம் கம்பராமாயணத்தின் வழி அறியமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. ஞானசம்பந்தன் அ.ச, இராமன் பன்முகநோக்கில் சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2. ஞானசந்தரத்தரசு அ. அ,கம்பன் புதிய தேடல் ,தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3. தமிழ்நேசன் கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, வள்ளி பதிப்பகம், சென்னை,2019.
4. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
5. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011
6. சித்திரகூடப் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் (tamilsurangam.in)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.