ஆச்சரியப்பட வைத்த வானொலி அறிவிப்பாளர் தர்சினி உதயராஜா! - ஊருலாத்தி -
நான் கனடாவில் வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது குறைவு. இணையத்திலேயே என் முக்கியமான தேடல்கள், எழுத்துப்பணி இருப்பதால் எனக்கு இவற்றில் நிகழ்வுகளைக் கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் பதின்மப் பருவத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் நிகழ்ச்சிகளைப் பல திறமை மிகு ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்களூடாகக் கேட்டு மகிழ்ந்த எனக்கு அவர்களைப்போன்ற பன்மிகு துறைகளில் ஆளுமை மிக்க, புலமை மிக்கவர்களை இங்கு என்னால் எளிதாக இனங்காண முடியவில்லை என்பதும் ஒரு காரணம். இருந்தாலும் இரவு வேளைகளில் 9 மணிக்குப் பிறகு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் கனடிய பல்லினக் கலாச்சார வானொலியான CMR 101.3 வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதுண்டு. தொடர்ச்சியாக அல்ல. இதனால் செந்தில்நாதன், பாலா, தர்சினி உதயராஜா போன்றவர்களின் குரல்கள் எனக்கு அறிமுகமாகின.
இவர்களில் தர்சினி உதயராஜாவின் குரல் நேயர்களை மிகவும் கவர்ந்து விட்டதை அறிய முடிந்தது. பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் நிகழ்ச்சியை கேட்டு விட்டு மீண்டும் பல வருடங்களின் பின் கேட்டபோது அன்றிருந்த பல வாசகர்கள் மீண்டும் அவரது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ராஜவர்மன், அப்பன் என்று சில பெயர்கள் நினைவில் நிற்கும் வகையில் மீண்டும் மீண்டும் வானலையில் ஒலித்தன.இவர்களைப் போன்ற பல நேயர்கள் இவர் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காகக் காத்திருந்து பங்கு பற்றினார்கள் என்பதையும் அவர்களது கூற்றுக்களிலிருந்து அறிய முடிந்தது. இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் நேயர்களை அன்பொழுக அழைத்துச் செல்லும் அவரது குரல் என்பதை உணர முடிந்தது. நேயர்கள் இவரைச் சகோதரியாக, சிநேகிதியாக, ஆசிரியையாக , சிறந்ததோர் ஊடகவியலாளராக, வானொலி அறிவிப்பாளராகப் பார்த்தார்கள் என்பதையும் உணர முடிந்தது.